Friday, July 12, 2019

“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்ற மந்திர வாசகத்தின் சூட்சுமம்.

'காதற்ற ஊசியும் வாராது கான் கடைவழிக்கே...'

இது... காவேரிப்பூம் பட்டினத்து, பெரும் செல்வரான... திருவெண்காடரை... தனது அனைத்துப் பற்றுக்களிலிருந்தும்... விடுவித்து... பட்டினத்தார் என்ற பூரண ஆத்மாவாக மாற்றிய... மந்திரச் சொற்கள்.

இந்த மந்திரச் சொற்களை உதிர்த்தவர்... திருவிடை மருதூரின் ஈஸ்வரரான மருதூரார்தான். தாமே ஒரு குழந்தையாக அவதரித்து...  ஒரு அந்தணரின் வறுமையையும்... அதே நேரத்தில்... திருவெண்காடரின் குழந்தையின்மையையும்... 'மருதவாணன்' என்ற நாமம் கொண்டு... ஒரே நேரத்தில் தீர்த்துவைத்தார்.

செல்வச் செழிப்பில் வளர்ந்த மருதவாணனின் நோக்கம்... இந்த புற உலக வாழ்வில் அழன்று கொண்டிருக்கும்... இந்த செல்வந்தரை... ஜீவனுக்கே உண்டான... ஒரே கடமையாகிய... அக உலக வாழ்வில் ஈடுபடுத்துவதே.

தக்க வயதை அடைந்த மருதவாணனை... கடல் கடந்த வாணிபத்திற்கு... பெரும் செல்வத்துடன் அனுப்புகிறார் திருவெண்காடர். திரும்பி வரும் போது... மருதவாணன் கொண்டு வந்தது... மூட்டை மூட்டைகளாக 'விராட்டிகளையும்'... கையடக்கமான 'ஒரு சிறு பெட்டியையும்தான்'.

மகன் திரும்பி வந்த மகிழ்வைவிட... அவன் ஈட்டி வந்த பொருள்கள் மேல் கொண்ட மோகத்தால்... வேகமாகச் சென்று ... ஆர்வத்துடன் மூட்டைகளைப் பிரித்தப் பார்த்த திருவெண்காடருக்குக் காத்திருந்தது அதிர்ச்சி... அந்த மூட்டைகளில் நிறைந்திருந்தது அனைத்தும் விராட்டிகளே.

ஆத்திரம் அடைந்த திருவெண்காடர்... அந்த விராட்டிகளை... தரையில் வீச... அந்த விராட்டிகளுக்குள் இருந்து... நவரத்தினங்கள் சிதறி ஓடியதைக் கண்டு... ஒரு புறம் அதிர்ச்சியும்... மறு புறம் ஆனந்தமும் அடைந்தார். தம் வாழ்நாளில்... தான் இதுவரை, ஈட்டியிராத... இத்தனை பெரும் செல்வத்தை... தனது ஒரு வாணிபத்தால் ஈட்டிய... தனது அன்பு மகனைத் தேடி, விட்டுக்கு ஓடிவந்தவரின் கையில்... ஒரு சிறு பெட்டியைக் கொடுத்துவிட்டு... வெளியெ ஓடிச்சென்றான் மருதவாணன்.

அந்த பெட்டிக்குள் இருந்த மந்திர வாசகம்தான்... 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே...'. ஆம்... எதையும் கொண்டுவராத இந்தப் பிறப்பு... எதையும் கொண்டு போகாமல்தான் முடிகிறது. இந்த உண்மையை உணர்ந்த பின்... அவரின் ஓட்டம்... மருதவாணனின் கால்தடங்களைத் தேடித்தான் ஓடியது. அது அவரை... பட்டினத்தார் என்ற துறவியாக்கியது.

இந்த மந்திர வாசகத்திற்குப் பின் உள்ள சுட்சுமம்தான் என்ன...?

தனது உள் நிலைப் பிரவேசத்திற்குச் செல்லும் ஒரு ஜீவன்... தனது ஐம்புலன்களில்... தேகம் என்ற தனது உடலை மறந்து விடுகிறது. பார்வையிலிருந்து தனது கண்களை விலக்கிக் கொள்கிறது. முகர்ந்து பார்ப்பதிலிருந்து தனது... நுகர்ச்சியை விலக்கிக் கொள்கிறது. சுவைபடலிலிருந்து... தனது நாவை அடக்கிக் கொள்கிறது. ஆனால்... கேட்பது என்ற... சப்த ஒலிகளிலிருந்து விடுபடுவதுதான் இறுதியானதாகிறது.

நான்கு புலன்களிலிருந்தும் விடுபடும் ஜீவன்... இந்த கேட்டல்... என்ற நிலையிலிருந்து விடுபட பெரும் முயற்சியை மேற்கொள்ளும் வரை... இந்த உலகவாழ்வுடன் ஒட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கிறது. அந்த நிலையின் போராட்டமே... 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே...' என்ற நிலை.

எப்போது அந்த 'கேட்டல்'... என்ற நிலையில் ஒரு முன்னேற்றம் உண்டாகி... வெளியில் இருக்கும் சப்தங்கள்... முற்றிலுமாக அடங்குகிறதோ... அப்போது இந்த ஜீவனுக்கு... உள்ளிருக்கும் நாதத்துடன் உண்டான தொடர்பு உறுதியாகி... உள்ளொலிக்கும் 'ஓம்கார' நாதத்துடன்... ஜீவன் இணைந்து விடுகிறது.

ஜீவனின்... இறுதி முயற்சியான... தியான அவஸ்தையை... இதைவிட சிறந்த மந்திரச் சொற்காளால்... யாரால்தான்... விவரித்துவிட முடியும்...!

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...