Thursday, July 25, 2019

முடிவு எடுக்கும் தன்மை பற்றிய (Decision Making) ஒரு பார்வை

முடிவு எடுக்கும் தன்மை பற்றிய (Decision Making) ஒரு பார்வை :

இந்த பூமியில் உயிர் வாழும் இனங்களிலேயே ஒரு தனிப்பட்ட இனமாக இருப்பது மனித இனமே. காரணம்... ஏனைய உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவாக இருப்பது, உண்பது... உறங்குவது... உயிர் பெருக்கம் செய்வது... என இந்த மூன்று நிலைகள்தான்.

இந்த நிலைகளைக் கடந்து, 'சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவு எடுக்கும்' ஒரு பிரத்தியோக அந்தஸ்து... இந்த மனித இனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பை... மனித இனம் பயன்படுத்திக் கொள்கிறதா...? என்பதுதான் கேள்வி.

பொதுவாகவே, ஒரு சூழ்நிலையில்... அதற்கு ஏற்றவாறு... ஒரு முடிவை எடுப்பதற்கு.. மனிதர்கள் தயங்கவே செய்கிறார்கள். வெற்றி-தோல்விகளை மனதில் கொண்டு... அதை எவ்வளவு தாமதப் படுத்த முடியுமோ... அந்த அளவிற்குத் தாமதப் படுத்துகிறார்கள். அதற்குள்ளாக, அந்த சூழலுக்கு... தானாகவெ ஒரு முடிவு வந்து விடும் என்றும் நம்ம்புகிறார்கள். சூழலுக்கு ஏற்றவாறு... பிரிதொருவர் முடிவு எடுக்கும் பக்ஷத்தில்... அந்த முடிவைப்பற்றிய விமரிசனங்களையும் எடுத்து வைக்கிறார்கள்.

இதிலிருந்தே... நாமறிந்து கொள்ளலாம்... முடிவு எடுப்பதின் முக்கியத்துவத்தைப் பற்றி.

கடமைகளை சுமந்து கொண்டு... அதனை பொறுப்புடன் செயல்படுத்துபவர்கள்தான் எப்போதும் இந்த 'முடிவு எடுக்கும்' சூழலை' எதிர் கொள்கிறார்கள். அவர்கள் எடுக்கும் முடிவு எப்போதும் அந்தக் கடமையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதன் 'வெற்றி- தோல்விகளுக்கு'... அவர்களே பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

முடிவு எடுக்கும் தன்மையைப் பற்றிய உலகளாவிய ஆய்வுகள் பல இருந்தாலும்... 'ஸ்காட் பெக்' என்ற மேலை நாட்டின் ஆய்வாளர் ஒருவரின் ஆய்வு... இதற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. இவரின் ஆய்வைப் பற்றி 'ரா.கி.ரெங்கராஜன்' அவர்களின் மொழிபெயர்ப்பு... ஆரம்ப காலத்து 'ஜூனியர் விகடன்' இதழ்களில் வெளிவந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஸ்காட் பெக்... ஏழு வரிசைகள் கொண்ட ஒரு அட்டவணையை உருவாக்குகிறார். அந்தக் கட்டங்களில்... ஒரு மனிதன், தன் வாழ்நாளில்... தான் எடுத்த முடிவுகளை வரிசைப்படுத்தச் சொல்கிறார். அந்த கட்டங்களை ஒவ்வொன்றாக பூர்த்தி செய்ய வழிகளையும் காட்டுகிறார். அவையாவன...

1. அந்த முடிவு 'தன்னால் மட்டுமே'... எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

2.அது தனது 'வாழ்வை மாற்றியதாக' இருக்க வேண்டும். (தனது வாழ்வை
       உயற்றியும் இருக்கலாம் தாழ்த்தியும் இருக்கலாம்)

3. அந்த முடிவின் விளைவைக் கொண்டு... 'வேறு எவரையும் குறை சொல்லாது' இருக்க வேண்டும்.

4. அந்த முடிவுக்கு 'தானே முழுமையாக' பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

இதனடிப்படையில்... இந்த அட்டவணையை நிரப்ப முயன்றவர்கள்...

'தன்னைத் தான்' உணர்ந்து கொண்டார்கள்.

முடிவு எடுக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டார்கள்.

முதல் முறை... தான் எப்போது... எந்த சூழலில்... முடிவு எடுத்தோம்... என்பதை அறிந்து கொண்டார்கள்.

தான் எடுத்த முதல் முடிவிற்குப் பின்னர்... தனது வாழ்வின் தொடர் முடிவுகளுக்குள்... தன்னைத் தவிர, வேறு எவரும் பங்கெடுத்துக் கொள்ள முடியாத சூழல் ஏற்படுவதையும்... புரிந்து கொண்டார்கள்.

தனது வாழ்வை மாற்றிய சூழல்கள் அனைத்தும்... இந்த ஏழு கட்டங்களுக்குள் அடங்கி விடுவதைக்' கண்டு ஆச்சரியப் பட்டுப் போனார்கள்.

தமது வாழ்வை பூரணமாக்கிக் கொண்டவர்கள் கூட... இந்த ஏழு கட்டங்களில்... கட்டங்கள் மிகுதியாக இருப்பதை அறிந்து கொண்டார்கள்.

இதைப் பூர்த்தி செய்யும் போதுதான்... முடிவு எடுக்கும் முக்கியத்துவம் பற்றிய ஒரு பூரணத்துவம் தெளிவாகிறது.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...