Monday, November 22, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 199. 'சனி பகவானின் சுழற்சி...'


'முப்பது வருட' முழு சுழற்சியாக இராசி மண்டலத்தில் பவனி வரும்  'சனி பகவானின்' காலத்தை', ஏழரைக் காலம்... அர்த்தாஷ்டம காலம்... கண்ட காலம்... அஷ்டம காலம்... என, 'பதினைந்து வருட காலங்களாக' பகுத்து, அந்தக் காலங்களைக் கண்டு அஞ்சி... அஞ்சி... கடந்து போவது, காலம் காலமாக நடந்து வரும் அனுபவம்தான்..

அதைப் பற்றிய ஒரு ஞானத்தை வளர்த்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கைக் காலமான 'அறுபது வருட காலங்களில்', 'முப்பது வருடங்களை' தனது சுழற்சியால் கடந்து போகிறார்  'சனி பகவான்.

'ஒரு இராசி வீட்டை கடப்பதற்கு, 'ஒன்றரை வருடத்தை' எடுத்துக் கொள்ளும் 'ராகு பகவான்'...'ஒரு வருடத்தை எடுத்துக் கொள்ளும் 'குரு பகவான்'... என இவர்களது பெயர்ச்சி காலங்களை 'இராசியை' மூலமாக வைத்து அணுகுவதில் சிக்கல்கள் இருக்கின்றன.

காரணம், ஒவ்வொரு ஜாதகத்தையும் 'லக்னத்தை' மூலமாக வைத்துதான் அணுகுகிறோம். லக்னத்தில் இருந்து எந்த பாவத்தில் ஒரு கிரகம் அமைந்திருக்கிறதோ, அது பெரும் ஆதிபத்தியம்... அதன் ஸ்தான பலம்... நவாம்ஸ பலம்... நட்சத்திர சாரம்...சேர்ந்திருக்கும் கிரகம்... பார்க்கும் மற்றும் பார்க்கப்படும் கிரகம்... என, அந்த கிரகத்தின் அமைவை வைத்து, அது அளிக்கும் 'கர்ம வினைப் பயன்களை' அணுமானிக்கிறோம்.

அது போலத்தான் அந்தக் குறிப்பிட்ட கிரகம், கோள்சாரத்தில் இடம் பெறும் போதும் அணுகப் பட வேண்டும். அதுதானே முறையானதாக இருக்கும். உதாரணமாக,'கடக லக்னத்தையும்'... 'கும்ப இராசியையும்'... கொண்ட ஒரு ஜாதகத்தில், 'சனி பகவான்' நான்காம் பாவமான 'துலா இராசியில்' ராகு பகவானின் சாரத்தைக் கொண்ட 'சுவாதி நட்சத்திரத்தின்' மூன்றாம் பாதத்தில் அமர்கிறார் எனில் ;

- லக்னத்திற்கு 7 ஆம் பாவம், 8 ஆம் பாவம் என இரண்டு ஆதிபத்தியங்களைக் கொண்ட 'சனி பகவான்' 4 ஆம் பாவத்தில் உச்ச நிலை பெற்று வலுப்பது, ஜாதகரின் 'வாழ்க்கைத் துணை' மற்றும் 'ஆயுள் பாவங்களின்' சுபத்துவத்தை வலுப்படுத்துகிறது.

- 4 ஆம் பாவத்தில் வலுத்திருக்கிற 'சனி பகவானின்' பார்வை, 6 ஆம் பாவத்திற்கும்... 10 ஆம் பாவத்திற்கும்... லக்னத்திற்கும் விழுகிறது.

- ஆகவே, தன்னோடு இணைபவர்களால் சுகம் பெறுவதும்... ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவதும்...தனது கடமைகள் அனைத்தையும் வெற்றிகரமாக, பூரணத்துவம் செய்வதும்... நிறைவான வாழ்வைப் பெறுபவராகவும்... ஜாதகரின் வாழ்வின் புண்ணிய கர்ம வினைப் பலன்களை 'சனி பகவான்' அளிப்பவராக அமைகிறார்.

- எனவே, கோள்சாரத்தில் 'சனி பகவானின்' சுழற்சி 'கடக லக்னத்திற்கு', திரி கோணங்களிலும் (1-5-9)... கேந்திரங்களிலும் (1-4-7-10)... பணபர ஸ்தானங்களிலும் (2-11) அமையும் போது, சனி பகவானின், தசாவோ, புத்தியோ, அந்தரமோ நடக்கும் பட்சத்தில், ஜாதகர் மேற்கண்ட பலன்களை முழுமையாக அனுபவிக்கும் பேற்றைப் பெறுகிறார்.

- அதுவே, 'மறைவு ஸ்தானங்களில் (3-6-8-12) அமையும் போது, ஜாதகரின் 'கர்ம வினைகளின் புண்ணிய பலன்களை' முழுமையாக அனுபவிப்பதில் தடைகள் ஏற்படுகின்றன.

இவ்வாறாக, கோள்சாரத்தில் இடம் பெயரும் கிரகங்களை அணுகுவதுதான் முறையானதாக இருக்கும். 'சனி பகவான்' உட்பட...

ஸாய்ராம்



Saturday, November 20, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 198. 'இதுவும் பரிகாரம்தான்...'


திருச்சியின் மையப் பகுதியில் அமைந்த ஒரு புரதானமான, 'சிவாலயத்திற்கு' அருகில் வசித்து வரும் ஒரு நண்பர், ஜாதக ரீதியான தனது சந்தேகங்களைத் திர்த்துக் கொள்ள ,எம்மை அணுகினார்.

தான், தனது குடுமம், சகோதர சகோதரிகள் மற்றும் குழந்தைகள் என, அனைத்து ஜாதகங்களையும் உள்ளடக்கிய சந்தேகங்களை, கேள்விகளாகத் தொகுத்து வைத்திருந்தார். அந்தக் கேள்விகள் அனைத்தும் அவரது குடும்பத்து அங்கத்தினர்களின் முழுமையற்ற வாழ்க்கையைப் பற்றியதாக இருந்தன.

தொழில் அமையாமை... குழந்தையின்மை... திருமணம் அமையாமை... உடல் உபாதைகள்...எதிர்ப்புகள்... கோர்ட் வழக்குகள்... என, குடும்பத்து அங்கத்தினர்கள் ஒவ்வொருக்கும், ஒவ்வொரு பிரச்சனையாக இருந்தது.

மிகவும் பக்தி சிரத்தையுள்ள குடும்பமாக இருந்தும், காரியங்கள் யாவிலும் தடைகள் ஏற்படுவதற்குக் காரணம் தெரியாமல் தவித்து வந்தார். ஒவ்வொரு செயலும் பெரிய முயற்சிக்குப் பின், கைகூடி வரும் வேளையில், கை விட்டுப் போவதை நினைத்து மனம் கலங்கி இருந்தார்.

நாம், மேலோட்டமாக ஒவ்வொரு கேள்விக்கும் உரிய ஜாதகத்தை எடுத்து பார்த்த போது, அந்தந்த ஜாதகங்களில், 'குரு பகவானின்' நிலை மிகவும் பலவீனமாக இருந்தது. குடும்பத்தின் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும், ஒன்று இராசியில் அல்லது நவாம்ஸாத்தில், 'குரு பகவான்' மறைந்தோ... நீச நிலையிலோ... பாதக, மாரக ஸ்தானங்களிலோ... அமைந்திருந்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அவரது பூர்வத்தைப் பற்றி விசாரித்த போது, இரண்டு தலைமுறைகளாக தற்போது வசிக்கும் வீட்டில் இருப்பதும்... அந்த வீட்டை இவரது தந்தையார் காலத்தில் புதுப்பித்ததும் தெரிந்தது. வீடட்டின் பூர்வத்தைப் பற்றி விசாரித்த போது, அது, சிவாலயத்தின் சொத்து என்பதும்... அந்த வீட்டைப் புதுப்பிக்கும் போதும், அதற்கான வாடகை நிர்ணயத்தின் போதும், அந்த சொத்தின் ஒரு பகுதியை ஆலய நிர்வாகம் திருப்பிக் கேட்ட போதும், சர்ச்சைகள் உருவாகி, இவ்ர்கள் நீதி மன்றம் சென்று தடையுத்தரவு பெற்றதும்... ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை மட்டும், தந்தையாரின் காலத்தில் இருந்து, நீதிமன்றத்தில் செலுத்தி வருவதும் தெரிய வந்தது. 

வழக்கு முடிவுக்கு வரும் வரை காத்திருப்பதாகக் கூறியவரிடம்... நாம், ஆலய நிர்வாகத்திடம் சென்று சமாதான முறையில் பேசி, இந்த சச்சரவுகளை முடிவுக்கு கொண்டு வருவதுதான், இந்த சூழல்களில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி, என்பதை உணர்த்தினோம். அவரும் அது போலவே, ஆலய நிர்வாகத்திடம் சமரசம் பேசி, தொடரும் காலங்களில் வாடகையை உயர்த்துவதற்கும்... காலியான ஒரு பகுதியை ஆலயத்திடம் ஒப்படைப்படப்பதற்கும்... சம்மதம் தெரிவித்தார்.

காலங்கள் கடந்தன... அவரின் கடமைகள் யாவும் தடங்கல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நீங்கப் பெற்று, முழுமையாக நிறைவேறின. அதே சிவாலயத்தில், அவரது குடும்பத்தினரின் தொண்டுகளும், இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஸாய்ராம்.



Wednesday, November 17, 2021

சிவாக்கிய சித்தர் பாடல்கள் : 'கலத்தில்வார்த்து வைத்தநீர்...'


 

'கலத்தில்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்

கலத்திலே கரந்ததோ கடுத்ததீ குடித்ததோ

நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ

மனத்தின் மாயை நீக்கியே மனத்துளே கரந்ததே.'


ஒரு கலம் நிறைந்த நீரினை, கொழுந்து விட்டு எரியும் அடுப்பின் மேல் வைக்கும் போது, நீர் கொதித்து, இறுதியில் ஒரு சொட்டு நீரும் கலத்தில் இல்லாது போகிறது. நீர் அதன் மூலமான பிரபஞ்ச சொரூபத்தில் கலந்து விடுகிறது.

அது போலவே, உடம்பு என்ற கலத்திற்குள் நிறைந்து இருக்கும்  ஜீவனை, அதன் மூலமான, 'ஆத்ம சொரூபத்தில்' கலந்து விட வைப்பதற்கு, அந்த 'ஆயிரம் கோடி சூரியப்பிரகாசமுள்ள' பரம் பொருளை, எரிதணலாக மூட்டவேண்டியிருக்கிறது.

ஸாய்ராம்.



சிவாக்கிய சித்தர் பாடல்கள் : 'செய்யதெங்கி இளநீர்...'


 

'செய்யதெங்கி இளநீர் சேர்ந்த காரணங்கள் போல

ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்

ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்

வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்ப தில்லையே.'


ஒரு விருந்து வைபவத்தைப்  போலத்தான் நமது இறை தேடல்... என்று பகவான் இராமகிருஷ்ண பரமஹம்ஸர்  வருணிப்பார். 

ஒரு விருந்து உண்ணும் கூடம், ஆரம்பத்தில் ஏக களேபரமாக இருக்கும். விருந்தினர்களை அமர வைப்பது... பரிமாறுவது... தேவைப்படும் பதார்த்தங்களை கேட்டு வாங்கி உண்பது...  என்று ஆரம்பித்த களேபரம், மோர் பரிமாறும் போது, விருந்தினர்களின் வயிறு நிறைந்த நிலையில்... மோரை உறிந்து குடிக்கும் சப்தத்தைத் தவிர, வேறொன்றுமில்லாமல் அமைதியாக இருக்கும். அது போலத்தான் இறை தேடலின் ஆரம்பத்தில் அலை பாய்ந்து கொண்டிருக்கும் மனம்... தேடலின் முடிவில் ஆழ்ந்த கடலுக்கொப்ப... அமைதியாக இருக்கும்.

கடினமான நார்களால் இழைக்கப்பட்ட இளநீருக்குள்ளே... எவ்வாறு மாசு மருவற்ற, இதமான இனிப்பான நிர் நிறைந்து இருக்கிறதோ... அவ்வாறுதான், வளர்ச்சியும், மாற்றமும், தேய்மானமும், அழிவும் கொண்ட இந்த உடலுக்குள், அந்தப் 'பரம்பொருள்' நிறைந்து இருக்கின்றான்.

இதனை அறிந்து கொள்ளுப் போது, அலைபாய்ந்து கொண்டிருந்த மனம், ஆழ் கடலுக்கு ஒப்ப அமைதியில் ஆழ்ந்து விடுகிறது.

ஸாய்ராம்.


சிவவாக்கிய சித்தர் பாடல்கள் : 'தூரம்தூரம் தூரம் என்று...'


 'தூரம்தூரம் தூரமென்று சொல்லுவார்கள் சோம்பர்கள்

பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஇப் பராபரம்

ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்

நேரதாக உம்முளே அறிந்தூணர்ந்து கொள்ளுமே.'


பிறப்பு... இறப்பு... என்ற இந்த சுழற்சிக்குள், எத்தனையோ பிறப்புகளை பிறந்து இளத்த பின்னரும், இந்த சுழற்சியில் இருந்து விடுபட முடியாது தவிக்கும் ஜீவர்களுக்கான பாதையைத்தான், சித்த புருஷர்கள் திறந்து விட்டார்கள்.

வீட்டு பூஜை அறைக்குள் ஆரம்பித்த தேடல்... அருகாமையிலிருந்த ஆலயம் தொடங்கி... என்றாவது ஒரு நாள் 'திருக்கைலாயம்' சென்று தரிசித்து விட வேண்டும்... என்ற ஆவல் வரை செல்லும் என்றால்... எங்குதான் இந்தப் பயணம் முடியப் போகிறது... ?

இந்த நெடியத் தேடலுக்கான காரணம்... இந்தப் பயணத்தின் ஏதாவது ஒரு கணத்தில்... நமது தேடலின் முடிவான 'பரம்பொருள்' நமக்குள்ளேயே இருந்து அருள் செய்து கொண்டிருக்கிறார்... என்ற உண்மையை உணர்ந்து கொள்வதற்காகவே.

ஸாய்ராம்.


Tuesday, November 16, 2021

சிவவாக்கிய சித்தர் பாடல்கள் : 'அரியுமல்ல... அயனுமல்ல...'


 

'அரியுமல்ல அயனுமல்ல அப்புறத்தில் அப்புறம்

கருமை செம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்

பெரியதல்ல சிரியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்

துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.'


நாம் கண்ணால் காணும் இந்த உலகத்திற்கும்... அதையும் கடந்து நிற்கும் எண்ணற்ற கோள்கள் அடங்கிய பிரபஞ்சத்திற்கும்... அப்பால் இருந்து அருளும் அந்தப் 'பரம் பொருள்' தான், இவையனைத்திற்கும் 'காரணமாகிறது'. அந்தக் காரணத்தைத்தான், நாம் 'அரி'...'அயன்' என்ற திவ்ய உருவங்களாக, அதை உணர்ந்த ஞானிகள் உருவாக்கிய ஆலயங்களில் தரிசித்து மகிழ்கிறோம்.

நம் கண்களுக்கு அப்பால்... வெகு தூரத்தில்... நமது புலன்கள் கடந்து நிற்கும் அந்தப் பரம் பொருள்தான் நமக்குள்ளே, நமது உடலுக்கும், உயிருக்கும் மூலமாய் 'ஆத்ம சொரூபமாய்' எழுந்தருளியிருக்கிறது. நாம் நமது விழிப்பு நிலையில் அதைக் காணமுடியாது தவிக்கிறோம்.உறக்கத்தில் கனவுகளில் சஞ்சரித்து அதை அறியாமல் இருந்து விடுகிறோம்..எப்போது, நம்மை அறியாமல் ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்கிறோமோ... அப்போது, அந்த 'ஆத்ம சொரூபத்தில்' ஒன்று கலந்து விடுகிறோம். அந்த நிலைதான்... 'துரிய நிலை' என்ற உன்னத நிலை.

எப்போது, மிக மிக தூரத்தில் இருக்கிறது என்ற அந்தக் 'காரண நிலை', நமக்குள்ளே 'துரிய நிலை' என்ற வெகு அருகிலே இருக்கிறது, என்ற ஞானம் புலப்படுகிறதோ... அப்போது நமது விழிப்பு நிலையிலேயே அந்தப் 'பரம் பொருளை' தேடும் முயற்சியில் ஈடுபடுகிறோம். அப்போது, அந்தப் பரம் பொருள் நமக்கு அனுபவமாகிறது...'அரியும்' சிவனும்' ஒன்றாகிப் போகிறது.

ஸாய்ராம்.


Friday, November 12, 2021

ஞானக் களஞ்சியம் : மணல் எழுத்தும்... கல் எழுத்தும்...


இரு நண்பர்கள், பாலைவனத்தின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டே செல்லும் போது, ஒரு விஷயத்தில் இருவருக்குள்ளும்  விவாதம் ஏற்பட்டது. விவாதம் முற்றி, ஒருவன் மற்றொருவனின் கன்னத்தில் அறைந்து விட்டான்.

அறை வாங்கியவன் மணலில் அமர்ந்து, தனது கை விரல்களால், 'இன்று என் நண்பன் என்னை அறைந்து விட்டான்...!' என்று  எழுதிவிட்டு, தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான். அவர்களது பயணம், ஒரு நீரூற்றுச் சோலையில் இளைப்பாறுவதற்காக நின்றது.

அந்த நீரூற்றில், தங்களது வெக்கையை குறைத்துக் கொள்வதற்காக நீந்த ஆரம்பித்தார்கள். அறை வாங்கிய நண்பனின் கால்கள், அந்த நீரூற்றின் புதை மணலில் சிக்கிக் கொண்டது. அதைப் பார்த்த நண்பன், பெரும் முயற்சி செய்து, தனது நண்பனை அந்த புதை மணலிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்தான்.

கரை சேர்ந்த நண்பன், அருகிலிருந்து பாறை ஒன்றில், கூரிய சிறு கல்லைக் கொண்டு, 'எனது நண்பன், புதை மணலில் மூழ்கவிருந்த என்னைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்' என்று எழுதினான்.

இவற்றைப் பார்த்த நண்பன், அன்று நான் உன்னை அறைந்த போது, அதை மணலில் எழுதினாய்... இன்று நான் உன்னைக் காப்பாற்றிய போது அதை கல்லில் எழுதினாய்... இவற்றிற்கெல்லாம் என்ன அர்த்தம் நண்பா ?' என்று கேட்டான்.

'எனது குருநாதர் சொன்னதைத்தான் நான் கடை பிடித்தேன். அவர், "யாராவது உன்னை காயப் படுத்தினால், அதை மணலில் எழுதி விடு. மன்னிப்பு என்ற காற்று அதை அழித்துவிடும். யாராவது உனக்கு நன்மை செய்தால், அதைக் கல்லில் எழுதி வை. அது காலத்திற்கும் நிலைத்து நிற்கும்" என்றார். அதைத்தான் நான் செய்தேன்', என்றான் நண்பன்.

ஸாய்ராம்.




Monday, November 8, 2021

'நான் யார்...?' என்ற விசாரணை எங்கு கொண்டு போய் சேர்க்கும்... ?


எண்ணங்களைக் கடந்து உள் செல்லும் போது, உதாசீனம் செய்யப்பட்ட எண்ணங்களின் அழிவு, நம்மை ஒரு அமைதிக்கு இட்டுச் செல்லும் என்பது அனுபவம்.

ஆனால், சாதாரன மனிதர்களாகிய நமக்கு, இவ்வாறான மனநிலை ஒரு கேள்விக்குறியதாக இருக்கிறது. 

அதெப்படி...எண்ணங்களற்ற மனநிலை என்பது எவ்வாறு சாத்தியமாகும்...? அவ்வாறு எண்ணங்களற்ற மன நிலையோடு வாழ்வைக் கடக்க முடியுமா...? எவ்வாறு இந்த மன நிலையோடு உலக வாழ்வை எதிர்கொள்ள முடியும்...?பகவானிடம் இந்தகைய கேள்விகள், வெவ்வேறு வகைகளில் கேட்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

இந்த நிலை எவ்வாறு இருக்கும்... ? என்பதை பகவானின் வாழ்வில் நிகழ்ந்த எண்ணற்ற நிகழ்வுகளின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு முறை, இரவு உணவின் போது பகவான், நார்த்தங்காய் ஊறுகாய் இருக்கிறதா...?' என்று கேட்க, அது இல்லாத சூழலில், அடுத்த நாளே, மதுரையில் இருக்கும் ஒரு பக்தரிடமிருந்து, நார்த்தங்காயை அனுப்பச் சொல்லி, ஆசிரமத்திலிருந்து கடிதம் எழுதப்பட்டது.

அந்தக் கடிதம், பகவானின் அனுமதிக்காக வந்த போது, 'நார்த்தங்காயில்தான் மோட்சம் இருக்குன்னு நினைக்கிறாங்க போல... அதனால்தான், அதற்காக இவ்வளவு பிரயாசப்படுறாங்க...' என்று கூறிய படி, அந்தக் கடிதத்தை நிராகரித்தார். அது மட்டுமல்ல 'நமக்கு அது பிராரப்தம்னா... அது தானா நம்ம தேடி வராதோ...!' என்றார்.

கடிதத்தை கொண்டு வந்தவர், மௌனமாக வெளியேறும் அதே வேளையில், ரயில்வே ஊழியர் ஒருவர் சீல் வைக்கப்பட்ட இரண்டு கூடைகளைக் கொண்டு வந்து பகவானின் முன் சமர்ப்பித்தார்.

வெளியேறிக் கொண்டிருந்த ஆசிரம ஊழியரை அழைத்த பகவான், 'அது நார்த்தங்காயா இருக்கப் போகுது... பிரிச்சு பாரும் !' என்றார். உள்ளே வந்த ஊழியர், அந்தக் கூடைகளில் ஒன்றைப் பிரித்தார். அனைவரும் ஆச்சரியப்பட... அந்தக் கூடை நிறைய 'நார்த்தங்காய்கள்' இருந்தன.

கூடைகளை எடுத்துச் சென்ற ஊழியரிடம், 'ஒரு கூடைதான் நார்த்தங்காயா இருக்கும்... இன்னொன்னில, ஆரஞ்சு இருக்கப் போகுது... பார்த்துக்கச் சொல்லு !' என்றார். பகவான் கூறிய படியே, இன்னொரு கூடை நிறைய ஆரஞ்சு பழங்கள் இருந்தன. ஹாலில் இருந்த அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதுதான் எண்ணங்களற்ற மன நிலை வெளிப்படுத்தும் அற்புதம். சதா நேரமும் எண்ணங்களின் மூலத்திலேயே திளைத்திருக்கும் மனம், சகஜ நிலைக்கு திரும்பும் போது, அதில் உதிக்கும் எண்ணம்... சொல்லாகவும், செயலாகவும் மாறிவிடுகிறது.

ஓம் நமோ பகவதே ரமணாய நமஹ.

ஸாய்ராம்.



Friday, November 5, 2021

ஞானக் களஞ்சியம் : 'எது பக்தி...?'


 பகவான் ரமணர், பழைய ஹாலில் அமைதியாக, ஆழ்ந்த மோன நிலையில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னதாக பக்தர்கள் சிலரும் அதே மௌனத்தில் கலந்திருந்தார்கள்

அப்போது, ஹாலுக்கு வெளியே 'டக்... டக்' என்ற ஒரு சப்தம் கேட்டது. யாரோ ஒரு பார்வையற்றவரின் கைத்தடியின் சப்தமாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், ஒரு பக்தர் வெளியே சென்று பார்த்த போது, பார்வையற்ற ஒரு இஸ்லாமிய பெரியவர் நிறபதைக் கண்டு அவரை உள்ளே அழைத்து வந்தார்.

உள்ளே நுழைந்த பெரியவர், 'பகவான் எங்கே இருக்கிறார்...?' என்று கேட்டார். அழைத்து வந்த பக்தர், 'பகவான் இங்கே உங்களின் முன்னால்தான் அமர்ந்திருக்கிறார். நமஸ்காரம் செய்து விட்டு அமர்ந்து கொள்ளலாம்.' என்றார். 

பகவானின் முன்னால அமர்ந்து, தன்னை அழைத்து வந்தவரிடம், தான் பெஷாவாரிலிருந்து வருவதாகவும், அங்கிருக்கும் மதரஸாவின் மௌளவி என்றும் அறிமுகப் படுத்திக் கொண்டார். ஒரு முறை பகவானைப் பற்றி யாரோ ஒருவர் படிக்கக் கேட்டதாகவும், அதிலிருந்து பகவானையே தனது தந்தையாக பாவிப்பதாகவும் கூறினார். அவரை தரிசனம் செய்வதற்காகவே, ரயிலகள் மாறி, மாறி இந்த ஆயிரக்கனக்கான மைல்களை கடந்து வந்திருப்பதாகவும் கூறினார்.

மோன தவத்திலிருந்து வெளிப்பட்ட பகவான், அந்தப் பெரியவர் பேசுவதை மௌனமாக கேட்டபடி அமர்ந்திருந்தார். 

பெரியவருக்கு உதவியத் தொண்டர், 'பகவானிடம் ஏதேனும் கேட்க வேண்டுமா...?' என்றார். அதற்கு அந்த பெரியவர், 'ஒண்ணும் இல்லை... பகவானைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை... பார்த்துட்டேன். பகவான் என்ன செய்யனும்னு சொல்றாரோ... அதை செய்யப் போறேன்... அவ்வளவுதான்.' என்றார்.

அவரின் பதிலைக் கேட்ட பகவானின் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.

ஓம் நமோ பகவதே ரமணாய நமஹ.

ஸாய்ராம்.



Tuesday, November 2, 2021

ஞானக் களஞ்சியம் : 'சுமப்பது யார்...?'


அழகிய பட்டு உடைகளை உடுத்தியிருந்த ஒரு இளம்பெண், சேறும் சகதியுமாக இருந்த சாலையைக் கடப்பதற்கு தயங்கியபடி நின்றிருந்தாள். 

அவ்வழியே வந்த இரு துறவிகளில் ஒருவரான இளம் துறவி, 'ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறாய்... ஏதேனும் உதவி தேவையா... ?' என்று கேட்டார். அதற்கு அந்த இளம்பெண், 'எனது தோழியின் திருமணத்திற்குச் செல்கிறேன். இந்த சகதி நிறைந்த சாலை, எனது உடைகளை அசுத்தப் படுத்தி விடும் என்ற அச்சத்தில், இதை கடப்பதற்கு பயந்து கொண்டு, இங்கேயே நின்று கொண்டிருக்கின்றேன்.' என்றாள்.

'கவலைப்படாதே... நான் உன்னை சுமநதபடியே, இந்தச் சாலையை கடக்க வைத்து விடுகிறேன்' என்று கூறி, அந்தப் பெண்ணை இரு கைகளிலும் சுமந்த படியே, சாலையைக் கடந்து, அடுத்தப் பகுதியில் இறக்கிவிட்டார். மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி விட்டு, ஒடி மறைந்தாள் அந்த இளம் பெண்.

தங்களது பயணத்தைத் தொடரும் போது, தன்னுடன் வந்த, தனது சகோதரத் துறவியின் முகத்தில் கோபத்தீ சுடர் விடுவதைக் கண்ட இளம் துறவி, 'உங்கள் முகத்தில் சிறு மாறுதல் தென்படுகிறதைப் போல இருக்கிறதே... காரணத்தை அறிந்து கொள்ளலாமா ?' என்று கேட்டார்.

' உங்களது செயல்தான் அதற்குக் காரணம்.' என்ற சகோதரத் துறவி, 'நமது பாதையில் குறுக்கிட்ட அந்த இளம் பெண்ணை, துறவியாகிய நீங்கள், தூக்கிச் சுமப்பது துறவுக்கு அடையாளமானதா ? என்று கேட்டார்.

புன்னகைத்த இளம் துறவி, 'அதை நான் அங்கேயே இறக்கி வைத்து விட்டேன். நீங்கள்தான் இன்னும் சுமந்து கொண்டிருக்கிறிர்கள் !' என்றபடியே, மௌனமாக பயணத்தைத் தொடர்ந்தார்.

ஸாய்ராம்.




ஞானக் களஞ்சியம் : 'எது திருப்தி ?'


'எனது வாழ்வில் திருப்தி இல்லை... சுவாமி !' என்று கேட்டு வந்த கல் உடைக்கும் தொழிலாளியிடம், 'இனி, நீ நினைக்கும் வாழ்வைப் பெறுவாய் !' என்ற வரத்தை அருளினார் ஞானி.

நகரில் நுழைந்தவுடன், அவர் கண்களில் பட்டவர் ஒரு வியாபாரி. அந்த வியாபாரியின் செல்வச் செழிப்பைப் பார்த்து, அவராக மாற வேண்டும் என்று நினைத்தவுடனேயே, ஞானியின் அருளால் ஒரு வியாபாரியாக மாறி விட்டார்.

வியாபாரியானபின், கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்கச் சென்ற போது, அரசாங்க அதிகாரி ஒருவரின் முன் கை கட்டி நிறக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த கணத்தில், தான் ஒரு அரசாங்க அதிகாரியாக மாற வேண்டும் என்று நினைத்தார், உடனே அதிகாரியாக மாறிவிட்டார்.

வெளியே கிளம்பி வீதியில் நடக்கும் நேரம், தலையைச் சுடும் அக்னியாக தகிக்கும் சூரியனைப் பார்த்து, அதன் வலிமையை நினைத்து, தான அந்த சூரியனாக மாறினால் என்ன... என்று நினைத்தவுடனேயே, தான் சூரிய பகனாகவே மாறி விட்டார்.

சற்று நேரத்தில், தன்னை ஒரு மேகம் மறைக்கவே, மேகத்தின் வலிமையில் ஆசைப்பட்டு, அந்த மேகமாக மாறினார். அந்த மேகத்தை ஒரு ,மலை தடுக்கவே, மலைதான் வலிமையானது என்று அந்த மலையாக மாறினார். 

திருப்தியாக அமர்ந்திருவருக்கு, தன்னிலிருந்து ஒரு பகுதி சரிந்து விழுவது தெரிந்தது. அந்தப் பகுதியை ஒரு கல் உடைக்கும் தொழிலாளி சுக்கு நூறாக உடைப்பதைக் கண்டதும்... மீண்டும் தனது இயல்பான கல் உடைக்கும் தொழிலே பலமானது என்ற உண்மை புரிந்தது.

தனக்குக் கிடைத்திருக்கும் பிறப்பே, உயர்வானது என்ற ஞானம் பிறந்ததும், பிறவியின் பயனுணர்ந்த மலர்ச்சியில், ஞானியின் திருவடிகளை நன்றியுடன் பணிந்தார்.

ஸாய்ராம்.


                                               

Monday, November 1, 2021

ஞானக் களஞ்சியம் : 'சந்திர காந்தக்கல்'


ஞானிகளின் ஞானோபதேசம், அவ்வளவு எளிதாக ஜீரணிக்கப் படுவதில்லை. அதுதான், அந்த ஊரிலும் நிகழ்ந்தது. உலக வாழ்வின் மோகத்திலேயே மூழ்கியிருந்த அந்த மக்களுக்கு, அந்த ஊரிலேயே வசித்து வந்த ஒரு ஞானியின் உபதேசங்கள், பொருள்படாமல் போயின. ஆதலால் அவரை, அவர்கள் அனைவரும் கற்களால் அடித்து விரட்டி விட்டனர்.

சிறிது காலம் கடந்த பின், ஒரு சந்நியாசி அந்த ஊருக்கு வந்து, கோவில் மண்டபத்தில் தங்கினார். அவர் தன்னிடம் 'சந்திர காந்தக்கல்' ஒன்று இருப்பதாகக் கூறினார்.அந்தக் கல், ஒரு நிறைந்த பௌர்ணமியன்று, சந்திரனிலிருந்து விழுந்ததாகவும், அதைப் பார்க்கும் ஒவ்வொருவரின் துன்பங்களும் முழுமையாகத் தீர்ந்து விடுவதாகவும் கூறினார்.

பாவங்கள் நீங்கி, நோய்கள் விலகி, எதிர்ப்புகள் பயந்தோடி, கர்ம வினைகளின் பாவங்களனைத்தும் முழுமையாக கரைந்து போய் விடும் என்றும்... அதனைப் பார்ப்பதற்கு ஒரு கட்டணத்தையும் நிர்ணயித்தார். சிறிது நேரத்திலேயே கிராமத்தில் இருக்கும் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு, அந்த அபூர்வ கல்லைப் பார்க்கக் கூடி விட்டனர்.

வரிசையாக வந்து, அந்தக் கல்லைப் பார்த்த கிராமத்தினர்கள்,  அருகிலிருக்கும் பெட்டியில் காணிக்கைகளை செலுத்தி விட்டு, மண்டபத்தில் ஆவலுடன் அமர்ந்தார்கள். அவர்களுக்கு முன்னால் வந்த சந்நியாசி, அவர்கள் கொடுத்த பணம் நிறைந்திருந்த பெட்டியை தலை கீழாகக் கொட்டினார். 

ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மக்களிடம், ' இதோ உங்கள் பணம் அனைத்தும் இங்கே கொட்டியிருக்கிறது... அதை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். ஏனெனில், நீங்கள் பார்த்தது 'சந்திர காந்தக்கல்' அல்ல... அது, நீங்கள் என் மீது வீசிச் எறிந்த கருங்கற்கலில் ஒன்று... நான் ஞானத்தை அருளிய போது அதை ஏற்றுக் கொள்ளாத நீங்கள், வெறும் ஆசை வார்த்தைகள் கூறிய உடன், உங்களின் கவனத்தை மட்டுமல்ல, உங்கள் பொக்கிஷங்களையும் கொட்டித் தீர்க்கிறிர்கள்...!' என்று கூறி விட்டு, தனது சந்நியாசி வேஷத்தைக் கலைத்து விட்டுச் சென்றார்.

ஸாய்ராம்.


 '


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...