'முப்பது வருட' முழு சுழற்சியாக இராசி மண்டலத்தில் பவனி வரும் 'சனி பகவானின்' காலத்தை', ஏழரைக் காலம்... அர்த்தாஷ்டம காலம்... கண்ட காலம்... அஷ்டம காலம்... என, 'பதினைந்து வருட காலங்களாக' பகுத்து, அந்தக் காலங்களைக் கண்டு அஞ்சி... அஞ்சி... கடந்து போவது, காலம் காலமாக நடந்து வரும் அனுபவம்தான்..
அதைப் பற்றிய ஒரு ஞானத்தை வளர்த்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கைக் காலமான 'அறுபது வருட காலங்களில்', 'முப்பது வருடங்களை' தனது சுழற்சியால் கடந்து போகிறார் 'சனி பகவான்.
'ஒரு இராசி வீட்டை கடப்பதற்கு, 'ஒன்றரை வருடத்தை' எடுத்துக் கொள்ளும் 'ராகு பகவான்'...'ஒரு வருடத்தை எடுத்துக் கொள்ளும் 'குரு பகவான்'... என இவர்களது பெயர்ச்சி காலங்களை 'இராசியை' மூலமாக வைத்து அணுகுவதில் சிக்கல்கள் இருக்கின்றன.
காரணம், ஒவ்வொரு ஜாதகத்தையும் 'லக்னத்தை' மூலமாக வைத்துதான் அணுகுகிறோம். லக்னத்தில் இருந்து எந்த பாவத்தில் ஒரு கிரகம் அமைந்திருக்கிறதோ, அது பெரும் ஆதிபத்தியம்... அதன் ஸ்தான பலம்... நவாம்ஸ பலம்... நட்சத்திர சாரம்...சேர்ந்திருக்கும் கிரகம்... பார்க்கும் மற்றும் பார்க்கப்படும் கிரகம்... என, அந்த கிரகத்தின் அமைவை வைத்து, அது அளிக்கும் 'கர்ம வினைப் பயன்களை' அணுமானிக்கிறோம்.
அது போலத்தான் அந்தக் குறிப்பிட்ட கிரகம், கோள்சாரத்தில் இடம் பெறும் போதும் அணுகப் பட வேண்டும். அதுதானே முறையானதாக இருக்கும். உதாரணமாக,'கடக லக்னத்தையும்'... 'கும்ப இராசியையும்'... கொண்ட ஒரு ஜாதகத்தில், 'சனி பகவான்' நான்காம் பாவமான 'துலா இராசியில்' ராகு பகவானின் சாரத்தைக் கொண்ட 'சுவாதி நட்சத்திரத்தின்' மூன்றாம் பாதத்தில் அமர்கிறார் எனில் ;
- லக்னத்திற்கு 7 ஆம் பாவம், 8 ஆம் பாவம் என இரண்டு ஆதிபத்தியங்களைக் கொண்ட 'சனி பகவான்' 4 ஆம் பாவத்தில் உச்ச நிலை பெற்று வலுப்பது, ஜாதகரின் 'வாழ்க்கைத் துணை' மற்றும் 'ஆயுள் பாவங்களின்' சுபத்துவத்தை வலுப்படுத்துகிறது.
- 4 ஆம் பாவத்தில் வலுத்திருக்கிற 'சனி பகவானின்' பார்வை, 6 ஆம் பாவத்திற்கும்... 10 ஆம் பாவத்திற்கும்... லக்னத்திற்கும் விழுகிறது.
- ஆகவே, தன்னோடு இணைபவர்களால் சுகம் பெறுவதும்... ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவதும்...தனது கடமைகள் அனைத்தையும் வெற்றிகரமாக, பூரணத்துவம் செய்வதும்... நிறைவான வாழ்வைப் பெறுபவராகவும்... ஜாதகரின் வாழ்வின் புண்ணிய கர்ம வினைப் பலன்களை 'சனி பகவான்' அளிப்பவராக அமைகிறார்.
- எனவே, கோள்சாரத்தில் 'சனி பகவானின்' சுழற்சி 'கடக லக்னத்திற்கு', திரி கோணங்களிலும் (1-5-9)... கேந்திரங்களிலும் (1-4-7-10)... பணபர ஸ்தானங்களிலும் (2-11) அமையும் போது, சனி பகவானின், தசாவோ, புத்தியோ, அந்தரமோ நடக்கும் பட்சத்தில், ஜாதகர் மேற்கண்ட பலன்களை முழுமையாக அனுபவிக்கும் பேற்றைப் பெறுகிறார்.
- அதுவே, 'மறைவு ஸ்தானங்களில் (3-6-8-12) அமையும் போது, ஜாதகரின் 'கர்ம வினைகளின் புண்ணிய பலன்களை' முழுமையாக அனுபவிப்பதில் தடைகள் ஏற்படுகின்றன.
இவ்வாறாக, கோள்சாரத்தில் இடம் பெயரும் கிரகங்களை அணுகுவதுதான் முறையானதாக இருக்கும். 'சனி பகவான்' உட்பட...
ஸாய்ராம்
No comments:
Post a Comment