Monday, November 8, 2021

'நான் யார்...?' என்ற விசாரணை எங்கு கொண்டு போய் சேர்க்கும்... ?


எண்ணங்களைக் கடந்து உள் செல்லும் போது, உதாசீனம் செய்யப்பட்ட எண்ணங்களின் அழிவு, நம்மை ஒரு அமைதிக்கு இட்டுச் செல்லும் என்பது அனுபவம்.

ஆனால், சாதாரன மனிதர்களாகிய நமக்கு, இவ்வாறான மனநிலை ஒரு கேள்விக்குறியதாக இருக்கிறது. 

அதெப்படி...எண்ணங்களற்ற மனநிலை என்பது எவ்வாறு சாத்தியமாகும்...? அவ்வாறு எண்ணங்களற்ற மன நிலையோடு வாழ்வைக் கடக்க முடியுமா...? எவ்வாறு இந்த மன நிலையோடு உலக வாழ்வை எதிர்கொள்ள முடியும்...?பகவானிடம் இந்தகைய கேள்விகள், வெவ்வேறு வகைகளில் கேட்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

இந்த நிலை எவ்வாறு இருக்கும்... ? என்பதை பகவானின் வாழ்வில் நிகழ்ந்த எண்ணற்ற நிகழ்வுகளின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு முறை, இரவு உணவின் போது பகவான், நார்த்தங்காய் ஊறுகாய் இருக்கிறதா...?' என்று கேட்க, அது இல்லாத சூழலில், அடுத்த நாளே, மதுரையில் இருக்கும் ஒரு பக்தரிடமிருந்து, நார்த்தங்காயை அனுப்பச் சொல்லி, ஆசிரமத்திலிருந்து கடிதம் எழுதப்பட்டது.

அந்தக் கடிதம், பகவானின் அனுமதிக்காக வந்த போது, 'நார்த்தங்காயில்தான் மோட்சம் இருக்குன்னு நினைக்கிறாங்க போல... அதனால்தான், அதற்காக இவ்வளவு பிரயாசப்படுறாங்க...' என்று கூறிய படி, அந்தக் கடிதத்தை நிராகரித்தார். அது மட்டுமல்ல 'நமக்கு அது பிராரப்தம்னா... அது தானா நம்ம தேடி வராதோ...!' என்றார்.

கடிதத்தை கொண்டு வந்தவர், மௌனமாக வெளியேறும் அதே வேளையில், ரயில்வே ஊழியர் ஒருவர் சீல் வைக்கப்பட்ட இரண்டு கூடைகளைக் கொண்டு வந்து பகவானின் முன் சமர்ப்பித்தார்.

வெளியேறிக் கொண்டிருந்த ஆசிரம ஊழியரை அழைத்த பகவான், 'அது நார்த்தங்காயா இருக்கப் போகுது... பிரிச்சு பாரும் !' என்றார். உள்ளே வந்த ஊழியர், அந்தக் கூடைகளில் ஒன்றைப் பிரித்தார். அனைவரும் ஆச்சரியப்பட... அந்தக் கூடை நிறைய 'நார்த்தங்காய்கள்' இருந்தன.

கூடைகளை எடுத்துச் சென்ற ஊழியரிடம், 'ஒரு கூடைதான் நார்த்தங்காயா இருக்கும்... இன்னொன்னில, ஆரஞ்சு இருக்கப் போகுது... பார்த்துக்கச் சொல்லு !' என்றார். பகவான் கூறிய படியே, இன்னொரு கூடை நிறைய ஆரஞ்சு பழங்கள் இருந்தன. ஹாலில் இருந்த அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதுதான் எண்ணங்களற்ற மன நிலை வெளிப்படுத்தும் அற்புதம். சதா நேரமும் எண்ணங்களின் மூலத்திலேயே திளைத்திருக்கும் மனம், சகஜ நிலைக்கு திரும்பும் போது, அதில் உதிக்கும் எண்ணம்... சொல்லாகவும், செயலாகவும் மாறிவிடுகிறது.

ஓம் நமோ பகவதே ரமணாய நமஹ.

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...