'செய்யதெங்கி இளநீர் சேர்ந்த காரணங்கள் போல
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்ப தில்லையே.'
ஒரு விருந்து வைபவத்தைப் போலத்தான் நமது இறை தேடல்... என்று பகவான் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் வருணிப்பார்.
ஒரு விருந்து உண்ணும் கூடம், ஆரம்பத்தில் ஏக களேபரமாக இருக்கும். விருந்தினர்களை அமர வைப்பது... பரிமாறுவது... தேவைப்படும் பதார்த்தங்களை கேட்டு வாங்கி உண்பது... என்று ஆரம்பித்த களேபரம், மோர் பரிமாறும் போது, விருந்தினர்களின் வயிறு நிறைந்த நிலையில்... மோரை உறிந்து குடிக்கும் சப்தத்தைத் தவிர, வேறொன்றுமில்லாமல் அமைதியாக இருக்கும். அது போலத்தான் இறை தேடலின் ஆரம்பத்தில் அலை பாய்ந்து கொண்டிருக்கும் மனம்... தேடலின் முடிவில் ஆழ்ந்த கடலுக்கொப்ப... அமைதியாக இருக்கும்.
கடினமான நார்களால் இழைக்கப்பட்ட இளநீருக்குள்ளே... எவ்வாறு மாசு மருவற்ற, இதமான இனிப்பான நிர் நிறைந்து இருக்கிறதோ... அவ்வாறுதான், வளர்ச்சியும், மாற்றமும், தேய்மானமும், அழிவும் கொண்ட இந்த உடலுக்குள், அந்தப் 'பரம்பொருள்' நிறைந்து இருக்கின்றான்.
இதனை அறிந்து கொள்ளுப் போது, அலைபாய்ந்து கொண்டிருந்த மனம், ஆழ் கடலுக்கு ஒப்ப அமைதியில் ஆழ்ந்து விடுகிறது.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment