'அரியுமல்ல அயனுமல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிரியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.'
நாம் கண்ணால் காணும் இந்த உலகத்திற்கும்... அதையும் கடந்து நிற்கும் எண்ணற்ற கோள்கள் அடங்கிய பிரபஞ்சத்திற்கும்... அப்பால் இருந்து அருளும் அந்தப் 'பரம் பொருள்' தான், இவையனைத்திற்கும் 'காரணமாகிறது'. அந்தக் காரணத்தைத்தான், நாம் 'அரி'...'அயன்' என்ற திவ்ய உருவங்களாக, அதை உணர்ந்த ஞானிகள் உருவாக்கிய ஆலயங்களில் தரிசித்து மகிழ்கிறோம்.
நம் கண்களுக்கு அப்பால்... வெகு தூரத்தில்... நமது புலன்கள் கடந்து நிற்கும் அந்தப் பரம் பொருள்தான் நமக்குள்ளே, நமது உடலுக்கும், உயிருக்கும் மூலமாய் 'ஆத்ம சொரூபமாய்' எழுந்தருளியிருக்கிறது. நாம் நமது விழிப்பு நிலையில் அதைக் காணமுடியாது தவிக்கிறோம்.உறக்கத்தில் கனவுகளில் சஞ்சரித்து அதை அறியாமல் இருந்து விடுகிறோம்..எப்போது, நம்மை அறியாமல் ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்கிறோமோ... அப்போது, அந்த 'ஆத்ம சொரூபத்தில்' ஒன்று கலந்து விடுகிறோம். அந்த நிலைதான்... 'துரிய நிலை' என்ற உன்னத நிலை.
எப்போது, மிக மிக தூரத்தில் இருக்கிறது என்ற அந்தக் 'காரண நிலை', நமக்குள்ளே 'துரிய நிலை' என்ற வெகு அருகிலே இருக்கிறது, என்ற ஞானம் புலப்படுகிறதோ... அப்போது நமது விழிப்பு நிலையிலேயே அந்தப் 'பரம் பொருளை' தேடும் முயற்சியில் ஈடுபடுகிறோம். அப்போது, அந்தப் பரம் பொருள் நமக்கு அனுபவமாகிறது...'அரியும்' சிவனும்' ஒன்றாகிப் போகிறது.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment