ஞானிகளின் ஞானோபதேசம், அவ்வளவு எளிதாக ஜீரணிக்கப் படுவதில்லை. அதுதான், அந்த ஊரிலும் நிகழ்ந்தது. உலக வாழ்வின் மோகத்திலேயே மூழ்கியிருந்த அந்த மக்களுக்கு, அந்த ஊரிலேயே வசித்து வந்த ஒரு ஞானியின் உபதேசங்கள், பொருள்படாமல் போயின. ஆதலால் அவரை, அவர்கள் அனைவரும் கற்களால் அடித்து விரட்டி விட்டனர்.
சிறிது காலம் கடந்த பின், ஒரு சந்நியாசி அந்த ஊருக்கு வந்து, கோவில் மண்டபத்தில் தங்கினார். அவர் தன்னிடம் 'சந்திர காந்தக்கல்' ஒன்று இருப்பதாகக் கூறினார்.அந்தக் கல், ஒரு நிறைந்த பௌர்ணமியன்று, சந்திரனிலிருந்து விழுந்ததாகவும், அதைப் பார்க்கும் ஒவ்வொருவரின் துன்பங்களும் முழுமையாகத் தீர்ந்து விடுவதாகவும் கூறினார்.
பாவங்கள் நீங்கி, நோய்கள் விலகி, எதிர்ப்புகள் பயந்தோடி, கர்ம வினைகளின் பாவங்களனைத்தும் முழுமையாக கரைந்து போய் விடும் என்றும்... அதனைப் பார்ப்பதற்கு ஒரு கட்டணத்தையும் நிர்ணயித்தார். சிறிது நேரத்திலேயே கிராமத்தில் இருக்கும் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு, அந்த அபூர்வ கல்லைப் பார்க்கக் கூடி விட்டனர்.
வரிசையாக வந்து, அந்தக் கல்லைப் பார்த்த கிராமத்தினர்கள், அருகிலிருக்கும் பெட்டியில் காணிக்கைகளை செலுத்தி விட்டு, மண்டபத்தில் ஆவலுடன் அமர்ந்தார்கள். அவர்களுக்கு முன்னால் வந்த சந்நியாசி, அவர்கள் கொடுத்த பணம் நிறைந்திருந்த பெட்டியை தலை கீழாகக் கொட்டினார்.
ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மக்களிடம், ' இதோ உங்கள் பணம் அனைத்தும் இங்கே கொட்டியிருக்கிறது... அதை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். ஏனெனில், நீங்கள் பார்த்தது 'சந்திர காந்தக்கல்' அல்ல... அது, நீங்கள் என் மீது வீசிச் எறிந்த கருங்கற்கலில் ஒன்று... நான் ஞானத்தை அருளிய போது அதை ஏற்றுக் கொள்ளாத நீங்கள், வெறும் ஆசை வார்த்தைகள் கூறிய உடன், உங்களின் கவனத்தை மட்டுமல்ல, உங்கள் பொக்கிஷங்களையும் கொட்டித் தீர்க்கிறிர்கள்...!' என்று கூறி விட்டு, தனது சந்நியாசி வேஷத்தைக் கலைத்து விட்டுச் சென்றார்.
ஸாய்ராம்.
'
No comments:
Post a Comment