Sunday, February 28, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : 160. தசா, புத்தி, அந்தரங்களுக்குள் அடங்கியிருக்கும் சூட்சுமங்கள்... உதாரணங்களுடன். பகுதி - 1.


 ஜாதகத்தில் அமைந்திருக்கிற, 'கிரகங்களின் அமைவுகள்', அந்த ஜாதகரின், இந்தப் பிறவிக்கான, 'கர்ம வினைகள்' எவ்வாறு வெளிப்படப் போகின்றன... என்பவற்றை, சுட்டிக் காட்டுகின்றன.

அந்தக் கர்ம வினைகள், ஜாதகரின் வாழ்வில், எந்தெந்தக் கட்டங்களில், எவ்வாறெல்லாம் வெளிப்படப் போகின்றன என்பதை, அவரது 'தசா, புத்தி மற்றும் அந்தரத்தை' நடத்தும், கிரகங்கள்தான் தீர்மானிக்கின்றன. ஆதலால்தான், தசாக்களை, 'வாழ்வை கடந்து போகும் பாதை' ( Direction of life ) என்கிறோம்.

இந்த தசா, புத்தி, அந்தரத்தை நடத்தும் கிரகங்கள், ஜாதரின் கர்ம வினைகளின் விளைவுகளைத்தான், தங்களுக்கான காலங்களில் வெளிப்படுத்துகின்றன. என்ற போதும்... இவை மூன்றுக்கும் இடையேயான தொடர்புகளும், ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. அவற்றை... ;

* அவைகளளின், 'ஆதிபத்தியங்கள்'.

* அவைகளுக்கு இடையேயான 'நட்பு மற்றும் பகை நிலைகள்.

* அவைகளின் கோள் சார நிலைகள்.

... என்று பகுக்கலாம்.

# தசா - புத்தி - அந்தரங்களின் ஆதிபத்தியங்கள் :

உதாரணமாக, 'மேஷ லகன' ஜாதகருக்கு, 'செவ்வாய் பகவானின் தசாவில்... குரு பகவான் புத்தியில்... சூரிய பகவானின் அந்தரம்' நடப்பதாகக் கொள்வோம்.

ஜாதகத்தில், இந்த மூன்று கிரகங்களின் ஆதிபத்தியங்களும், மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன. 'செவ்வாய் பகவான்'... லக்னாதிபதியாகிறார். 'குரு பகவான்'... பாக்கியாதிபதியாகிறார். 'சூரிய பகவான்' பூர்வ புண்ணியாதிபதியாகிறார்.

இவர்களின் 'ஸ்தான பலங்கள்' ஜாதகத்தில், எவ்வாறாக அமைந்திருப்பினும்... அவைகளின் 'ஆதிபத்திய பலங்களினால், இந்த மூன்று கிரகங்களின் தசா - புத்தி - அந்தரக் காலங்கள்', ஜாதகரின் வாழ்வில், அவர் தனது, 'புண்ணிய பலன்களை, அனுபவிப்பார் என்பது நிச்சயம்.

அது போலவே, அதே ,மேஷ லக்ன ஜாதகர்', 'புத பகவானின் தசாவில்...சனி பகவானின் புத்தியில்... சுக்கிர பகவானின் அந்தரம்' நடப்பதாகக் கொண்டால்... அவர்களின் 'ஸ்தான பலங்கள்' எவ்வாறாக அமைந்திருந்தாலும்... அவர்களின் 'ஆதிபத்தியங்களின்' நிலைகளினால், பெரும்பாலும், ஜாதகர் தனது பாப வினைகளை அனுபவிக்க நேரிடும் என்பதும் நிதர்சனம்தான்.

தொடரும் பகுதிகளில்... 'நட்பு  மற்றும் பகை நிலைகளையும்... கோள் சாரங்களைப் பற்றியும்... தொடர்ந்து ஆய்ந்து அறிவோம்.

ஸாய்ராம்.


Saturday, February 27, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : 159. 'சிறு மாற்றம் தரும் பெரும் விளைவுகள்' - பகுதி 3. பெயரியல் 'Namology'


... சென்ற பகுதியின் தொடர்ச்சி...

(... இந்த இரண்டு முறைகளையும்... 'ஜோதிடக் கலையின்' ஆதாரமான 'ஜாதகங்களின்' வழி காட்டுதலுடன் கையாண்டு நமது பெயர்களில் சிறிய மாற்றங்களை மேற்கொண்டு... அதன் வழியே வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்...)

2. நேமாலஜி ( Namology) என்ற பெயரையே மாற்றிக் கொள்ளும் 'பெயரியல்                    கலை' முறை :

நமது பெயரை மாற்றிக் கொள்வதற்கு, இந்தக் கலை வாய்ப்பை அளிக்கிறது. ஆனால், அதற்கான வழி முறைகள்... 'எண் கணிதத்தைப்' ( Numerology )  போன்றே பிறந்த தேதி எண் மற்றும் மாத, வருடத்தின் கூட்டு எண், இவற்றை மூலமாகக் கொண்டே அமைக்கப் படுகிறது.

ஆனால், இந்தக் கலைக்கான அடிப்படை அம்சங்கள், 

- நமது புரதான 'ஜோதிடக் கலையிலும்'...

- நமது, 'குலம் - குடி - குடும்பம்' என்ற, ஒரு கட்டமைப்பிலும்...

... இருப்பதால், இவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒரு பெயரை மாற்றும் போது, அது வாழ்வின் தடங்கலை நீக்கி... பயணத்தை நிறைவாக்குகிறது.

உதாரணமாக...

ஒருவருக்குத் திருமண வாழ்வு மிகவும் தாமதமாகிக் கொண்டே இருந்தது. ஜாதக ரீதியாகக் கணித்தக் காலங்களும் கடந்து கொண்டே இருந்தன. இறை வழிபாடுகள்... முயற்சிகள்... என எண்ணற்ற வழி முறைகளை கையாண்டும், தாமதம் நீண்டு கொண்டே இருந்தது.

J. SARAVANAN - 1 + 3 + 1 + 2 + 1 + 6 + 1 + 5 + 1 + 5 = 26 = 8 

அப்போதுதான், 

* அவரது பெயர் எண்ணின் கூட்டுத் தொகை '8' என்பதாக அமைந்திருந்ததைக் கவனித்தோம். 

* மேலும், அவர் பெயரின், முதல் எழுத்து, அவரது நட்சத்திரத்திற்கான எழுத்துக்களில், அமையாததையும் கவனித்தோம்.

* அது மட்டுமல்ல... குலமும், குடியும், குடும்பமும்... 'விஷ்ணு குலமாகவும், அவரையொட்டிய திருநாமமிடும் சுவாமிகளை வணங்கும் குடி மக்களாகவும், அவரின் குடும்ப மூதாதையர்களின் பெயர்கள், பெருமாளைக் குறிக்கும்... 'ராஜ கோபாலன், ஜெகநாதன், ரெங்கநாதன், கிருஷ்ண முர்த்தி...' என்பதாக இருப்பதையும் கவனித்தோம்.

இந்த மூன்று நிலைகளையும், முறையாக மாற்றியமைத்தோம்.

# பெயரின் கூட்டுத் தொகையை, 'எண் கணித முறையை' ( Numerolgy ) பயன் படுத்தி, அவரின் யோகாதிபதியாகிய 'புத பகவானின்' எண்ணான '5' என்ற எண்ணிற்கு வருமாறு மாற்றியமைத்தோம்.

# அவரின் நட்சத்திர எழுத்துக்களில் ஒன்றான 'தி' என்ற எழுத்தில் பெயரமையுமாறும் பார்த்துக் கொண்டோம்.

# இறுதியாக... அவரின், 'குல-குடி-குடும்ப வழக்கத்தின வழியாக', விஷ்ணு பகவானின் நாமங்களில் ஒன்றைக் குறிப்பதையும் உறுதி செய்து கொண்டோம்.

இவ்வாறு அமைக்கப் பட்ட பெயர்தான், 

J. THIRU NARAYANAN ( ஜெ. திரு நாரயணன் ) 

    1 + 4 + 5 + 1 + 2 + 6 + 5 + 1 + 2 + 1 + 1 + 1 + 5 + 1 + 5 = 41 = 5. புத பகவான்.

இந்தப் பெயருக்கு மாறி. அதை அவர் தொடர்ந்து எழுதி வந்து கொண்டிருக்கும் போது, அது வரை அமையாத திருமண வாழ்வும், தானே வந்து அமைந்தது. அதில், ஆச்சிரியம் என்னவெண்றால்... அந்தப். பெண்ணின் பெயர், விஷ்ணு பகவானின் குலத்திற்கே ஏற்ப, DHANALAKSHMI (தனலக்ஷ்மி) என்றே அமைந்ததுதான்.

இன்று, இரு குழந்தைச் செல்வங்களுடன், அவர்களின் வாழ்வு இனிதே தொடர்கிறது.

அதற்குக் காரணம், 'எண் கணித மாற்றமோ'... 'பெயரியல் மாற்றமோ'... அல்ல, இந்த இரண்டு கலைகளையும்... 'நமது புரதான ஜோதிடக் கலையின்' அடிப்படைகளைக் கொண்டு அணுகியதுதான்.

இது போலவே, சில இக்கட்டன சூழல்களில், இந்த இரண்டு முறைகளையும், ஜொதிட ரீதியான அணுகுமுறையைக் கையாண்டு... அதன் வழியே பெரும் மாற்றங்களை அனுபவிக்கலாம். 

'ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றை, பரிசிலின் துணை கொண்டு கடப்பதைப் போல, விதியின் வழியேயான வாழ்வை, மதியைக் கொண்டு கடந்து விடலாம்'.

ஸாய்ராம்.


Friday, February 26, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : 158. 'சிறு மாற்றம் தரும் பெரும் விளைவுகள்' - பகுதி 2. எண் கணிதம் (Numerology)


 

... சென்ற பகுதியின் தொடர்ச்சி...

(...இந்த இரண்டு முறைகளையும்... 'ஜோதிடக் கலையின்' ஆதாரமான 'ஜாதகங்களின்' வழி காட்டுதலுடன் கையாண்டு, நமது பெயர்களில் சிறிய மாற்றங்களை மேற்கொண்டு... அதன் வழியே வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்...)

1. நியூமராலஜி என்ற எண் கணித முறையிலான மாற்றம் :

இந்த எண் கணித முறை, மேலை நாட்டு மொழியான 'ஆங்கில எழுத்துக்களை' மூலமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கில எழுத்துக்கள் 26 ஐயும், 1 முதல் 8 வரையிலின எண்களின் வரிசைக்குள் கொண்டு வந்து, A, I, J, Q, Y -1... B, K, R - 2... C, G, L, S - 3... T, D, M - 4... E, H, N, X - 5... U, V, W - 6... O, Z - 7... F, P - 8... பெயரின் ஆங்கில எழுத்துக்களின் மதிப்புகளைக் கூட்டி வரும் எண்களுக்கு ஏற்ப பலன்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இதே, எண் கணித முறையை, நமது ஜோதிட அறிஞர்கள், ஜோதிடக் கலையின் வழியாக, கிரகங்களின் வழியே முறைப் படுத்தும் ஆய்வில் ஈடுபட்டு... வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டில், தமிழகத்தின் புகழ் பெற்ற எண் கணித நிபுணரான, 'பண்டிட் சேதுராமன்' அவர்களின் ஆய்வுகள்... அவரின் பிரபலமான 'அதிர்ஷ்ட விஞானம்' என்ற புத்தகத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஜோதிடக் கலைக்கு ஏற்ப, இந்த எண் கணித முறையை முறைப்படுத்தி...1 முதல் 8 வரையிலான எண்களை...

சூரிய பகவான் - 1, சந்திர பகவான் - 2, குரு பகவான் - 3, ராகு பகவான் - 4, புத பகவான் - 5, சுக்கிர பகவான் - 6, கேது பகவான் - 7, சனி பகவான் - 8, செவ்வாய் பகவான் - 9

... என வகைப்படுத்தி, பெயர்களின் ஆங்கில எழுத்துக்களின் கூட்டுத் தொகையுடன்... முறையாக அமைத்துக் கொள்வதற்கு, இந்தக் கலையை பயன்படுமாறு வைத்திருக்கிறார்.

இதில், அடியேன் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தி பயன் படுத்தி வருகிறேன். அது, கிரகங்களின் எண்கள்... பெயர்களின் கூட்டு எண்கள்... இவற்றுடன், அவரவர் ஜாதகங்களின் 'யோகாதிபதிகளான' கிரகங்களுக்கான எண்களையும்... சேர்த்து, பெயரமைக்கும் முறையைக் கையாண்டு, வெற்றியும் பெற்றிருக்கிறேன்.

உதாரணமாக, 

'R. THILAKA' - 2 + 4 + 5 + 1 + 3 + 1 + 2 + 1 = 19 = 1 ( சூரிய பகவான் ) என்ற பெண்ணின் பருவ கால வாழ்க்கை, கல்லூரி படிப்பு சேரும் வரை கடந்து போய்க் கொண்டே இருந்தது. இது, அந்தப் பெண்ணின் மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி...மேல் நிலைக் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல்... மன நிம்மதியற்று தவித்து வந்தார்.

 அவரின் குடும்பத்தினர், மருத்துவம், ஜோதிடம், வழிபாடுகள், என அனைத்து முறைகளையும் கையாண்டு தீர்வு வராத சூழலில்... ஜாதகத்தை ஆய்ந்து, தசா புத்தி அந்தரங்களுக்கு ஏற்ப, 'கடக லக்னத்திற்கு' மாராகதிபதியான  'சூரிய பகவானின்' ஆதிக்கத்திலிருந்து விடுவித்து... 'யோகாதிபதியான', 'செவ்வாய் பகவானின்' ஆதிக்க எண்ணான 9 க்கு, ஒரு சிறு திருத்தத்துடன்,  பரீட்சார்த்தமாக மாற்றியமைத்தோம்.

R. THILAKAVATHY - 2 + 4 + 5 + 1 + 3 + 1 + 2 + 1 + 6 + 1 + 4 + 5 + 1 = 36 = 9 ( செவ்வாய் பகவான் ) 

இந்த சிறிய மாறுதல், அவரின் வாழ்வில் மன நிம்மதியையும்... சந்தோஷத்தையும்... மீட்டெடுத்தது. கல்லுரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து, திருமண வாழ்வும் அமைந்து, குழந்தை பாக்கியங்களுடன் நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறார்.

எண் கணித முறையிலான மாற்றம் மட்டுமே, இதை நிகழ்த்தி விடவில்லை. ஜோதிட ரீதியான அணுகுமுறையே, இதற்கு பேருதவி புரிந்திருக்கிறது. 

இறைவனின் அனுக்கிரகமும்...நமது ;பக்தியும்... நம்பிக்கையும்... இந்த 'எண் கணிதம்' என்ற Numerology என்ற கலையையும், தேவையான போது, பயன்படுத்தும் உள்ளுணர்வைத் தூண்டும்.

ஸாய்ராம்.



Wednesday, February 24, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 157. 'சிறு மாற்றம் தரும் பெரும் விளைவுகள்' - பகுதி 1.




ஒரு 'பாகைமானியில்','0' த்திலிருந்து '180' வரையிலான டிகிரிகள், அரை வட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அதில், '0' லிருந்து '1' ஆவது டிகிரியை, ஒரு புள்ளியாகக் குறித்தால், அதன் அளவு மிக, மிகச் சிறியதாக இருக்கும். அதையே பாகை மானியின் மத்தியப் புள்ளியிலிருந்து, இரு கோடுகளாக 10 சென்டி மீட்டர்களுக்கு நீட்டும் போது, அதன் நுனியில் '0' வுக்கும், '1' டிகிரிக்குமான இடைவெளி சற்று பெரியதாக இருக்கும். அதையே 1 மீட்டர் தொலைவிற்கு நீட்டினால், இன்னும் பெரியதாகிவிடும்.

அது போலத்தான் நமது வாழ்விலும், நாம் மேற்கொள்ளும் முறையான ஒரு சிறிய முயற்சியும்... இறுதியில் ஒரு பெரும் மாற்றத்திற்கான பாதையைத் திறந்து விடும்.

நம்மை இந்த உலகில் அடையாளப் படுத்திக் காட்டுவது... 'நமது ரூபமும்... நமது நாமமும்தான்'. ரூபம் என்பது நமக்கு வழங்கப்பட்டிருக்கும் உடல் அடையாளம். நமது குழந்தைப் பருவத்திலிருந்து, முதியப் பருவம் வரை, இந்த உடலின் தோற்றம் மாறிக் கொண்டே இருந்தாலும், நமது அடையாளங்கள் மாறுவதில்லை.நாமே முயற்சி செய்தாலும், நமது அடிப்படை அமைப்புகளை நம்மால் மாற்றிக் கொள்ள முடியாது.

ஆனால், 'நாமம்' என்ற 'பெயர் அடையாளத்தை' நாம் விரும்பினால், சிறிய திருத்தங்களுடனோ அல்லது முழுவதுமாகவோ மாற்றிக்  கொள்ளும் வாய்ப்பு நம் கைகளில் இருக்கிறது.

உதாரணமாக, ஆங்கில எழுத்துக்களின் இறுதியில் வரும் 'S, T, U, V'... என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் நமது பெயர்கள்... பள்ளிகளிலோ, கல்லுரிகளிலோ... வருகைப் பதிவேட்டின் போதும், பரீட்சைகளின் போதும், பின்னால் வேலை வாய்ப்பிற்கான நேர்க் காணல்களிலும்... இறுதியாகத்தான் இருக்கும். அதனால், நாம் எல்லாவற்றிற்கும் காத்திருக்க நேரிடும். அதையே, முதல் தொகுப்பான ''A, B, C, D' என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் போது, அனைத்திலும் முதன்மையாக அழைக்கப்படுபவர்களாக இருப்போம்.

இவ்வாறு வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பை, முறையாக எவ்வாறு கையாள்வது...? என்ற கேள்விக்கு, நமது புரதான 'ஜோதிடக் கலை', ஒரு அடிப்படையாக... ஆதாரமாக... இருக்கின்றது. அதன் வழியேயான கணிப்புகளுக்கு ஏற்ப, இரண்டு விதமாக, நமது பெயரில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

1. நியூமராலஜி என்ற எண் கணித முறையிலான மாற்றம் :

   ... இதில் நமக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயரை மாற்றாமல்... அதன் எழுத்துக்களிலோ... அல்லது, பெயருக்கும் முன்னோ, பின்னோ, சிறிய இணைப் பெயரை சேர்த்தோ... ஒரு மாற்றத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த மாற்றங்களுக்கு அடிப்படையாக இருப்பது, நமது பெயரின் ஆங்கில எழுத்துக்களும், அவற்றிற்கு வழங்கப்பட்டிருக்கும் மதிப்பு எண்களும்தான்.

2. நேமாலஜி என்ற பெயரையே மாற்றிக் கொள்ளும் முறை :

... இதற்கு, நமது நட்சத்திரங்களின் பாதங்களுக்கு ஏற்ற 'நாம எழுத்துக்களும்'... நமது குலம், குடி, குடும்ப வழக்கப்படியான பெயர் சூட்டலும்.... அடிப்படையாக இருக்கிறது.

இந்த இரண்டு முறைகளையும்... ஜோதிடக் கலையின் ஆதாரமான 'ஜாதகங்களின்' வழி காட்டுதலுடன், கையாண்டு, நமது பெயர்களில் சிறிய மாற்றங்களை மேற்கொண்டு... அதன் வழியே, வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றை, பரிசிலின் துணை கொண்டு கடப்பது போல... விதியின் வழியேயான வாழ்வை, மதியைக் கொண்டு கடந்து விடலாம். இறைவனின் அருளோடும், துணையோடும்... !

அடுதடுத்த பகுதிகளில், இந்த இரண்டு முறைகளையும் விரிவாக ஆய்ந்து பார்க்கலாம்.

ஸாய்ராம்.




Friday, February 19, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 156. 'தர்ம ஸ்தானம்' உணர்த்தும் சூட்சுமங்கள்.


 'தர்மம்' என்ற ஒற்றைச் சொல்லில்தான், இந்த பிரபஞ்சமமே இயங்கிக் கொண்டிருக்கிறது. 

கிரகங்களின் சுழற்சிகளும்... இயற்கையின் தவறாத மாறுபாடுகளும்... ஐம்பூதங்களின் கட்டுப்பாடுகளும்... உயிர்களின் தோற்றங்களும், மறைவுகளும்... இந்த தர்மம் என்ற கட்டுக்குள் அடங்கியிருக்குமாறுதான் படைக்கப் பட்டிருக்கிறது.

அதை நமக்கு உணர்த்துவதற்காகத்தான், ஜோதிடக் கலை... 'தர்ம ஸ்தானம்' என்ற உன்னத ஸ்தானத்தை, காலத்தைக் குறிக்கும் 'கால புருஷ இராசியில், 'ஞானக் கிரகமான' குரு பகவானின், வீடான தனுர் இராசியில் அமையுமாறு அமைத்திருக்கிறது.

ஒவ்வொரு ஜீவனும், தனது பிறவிக்கான 'கர்ம வினைகளை' சுமந்து கொண்டுதான் பிறவியை அடைகிறது. அந்தக் கர்ம வினைகளின் விளைவுகளான 'இன்ப - துன்ப நிகழ்வுகளைத்தான்', ஜீவன் தனது வாழ்வில் எதிர் கொள்கிறது. அது, தான் மேற்கொள்ளும் செயல்களாகவும்... தான் எதிர் கொள்ளும் செயல்களாகவும்... அமைகிறது. 

அவற்றை எவ்வாறு, அந்த ஜீவன் எதிர்கொள்கிறதோ, அதற்கேற்ப அந்த செயல்கள் விளைவிக்கும் விளைவுகள்... ஜீவனின் 'கர்ம வினைகளின்' தொகுப்பில், 'புண்ணியங்களாகவோ - பாபங்களாகவோ...' சேர்ந்து கொள்கிறது. அந்த 'பாப - புண்ணியங்களுக்கு' ஏற்ப, ஜீவன் மீண்டும் பிறவியை அடைகிறது. இவ்வாறு, 'பாப - புண்ணியங்களின்' கணக்குகள் தீரும் வரை, இந்தப் 'பிறவித் தொடர்' தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்தச் சுழலை நிறுத்தும் உபாயத்தைத்தான்... கால புருஷ இராசியின், 9 ஆம் பாவமான... 'தர்ம ஸ்தானம்' உணர்த்துகிறது. அதனால்தான், ஜீவன், தான் மேற்கொள்ளும் கடமைகள் என்ற செயல்களைக் குறிக்கும் 10 ஆம் பாவமான, 'சனி பகவானின்' மகர இராசிக்கு, முன்பாக தர்மத்தின் குணாதிபதியான 'குரு பகவானின்' வீட்டை 'தரம் ஸ்தானமாக' அமைத்திருக்கிறார்கள் போலும் !

ஒவ்வொரு கடமையையும் மேற்கொள்ளும் போதோ அல்லது எதிர் கொள்ளும் போதோ... அந்தக் கடமை விளைவுக்கும் விளைவுகளில் பற்று வைக்காமல்... அந்தச் செயலை பூரணமாக்கும் போது... அந்தச் செய்லகளின் விளைவுகளான  புண்ணியங்களோ, பாவங்களோ... ஜீவனின் 'கர்ம வினைகளின் கணக்குகளில்' சேர்வதில்லை. இவ்வாறு, ஒவ்வொரு செயலையும் 'தர்மத்துடன்' மேற்கொள்ள ஆரம்பித்தால், படிப்படியாக 'கர்ம வினைகளின்' கட்டுகளிலிருந்து விடுபட்டுவிடலாம்.

இதைத்தான், அனைவரும் அறிந்த, 'கடமையைச் செய்... பலனை எதிர் பார்க்காதே !' என்ற பிரபலமான 'கிதா வாக்கியம்' பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. அது, சரியான விளக்கமாக இருக்க முடியாது. காரணம், பலனை எதிர் பார்க்காது... எந்தக் கடமையையும் மேற்கொள்ள முடியாது. அதன் விளக்கம் இவ்வாறாகத்தான் இருக்க முடியும். அது, 'கடமையைச் செய்... அதன் பலன்களில் பற்று வைக்காதே !'... என்பதாகத்தான் இருக்கும். அதைத்தான் 'பகவானும்' உணர்த்தியிருப்பார். அதனால்தான், அதற்கு 'கர்ம யோகம்' என்றும் பெயரிட்டார்.

ஒவ்வொரு ஜீவனின் ஜாதகத்திலும்... இந்த 'தர்ம ஸ்தானம்' மிகவும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இந்த ஸ்தானத்தைப் பொருத்துதான்... ஜீவனின் வாழ்வு... உலக வாழ்வாக இருந்தாலும்... உள் வாழ்வாக இருந்தாலும்... அது ஒரு உன்னத வாழ்வாக அமையுமா ? என்ற கேள்விக்கான பதிலும் கிடைக்கும்.

ஸாய்ராம்.



Thursday, February 18, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 155. 'விதியும்... மதியும்...'


' ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்'


'விதியை விட வலிமையானது வேறு எதுவுமில்லை. நாம் ஒரு மாற்று சூழலை ஏற்படுத்திக் கொண்டாலும், அந்த சூழலிலும், அதே விதி முன் வந்து நிற்கும்'. இது வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு.

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும், அதன் 'பூர்வ கர்ம வினைகளுக்கு' ஏற்ப, ஓர் உடலையும்... அதற்கு ஒப்பான வாழ்வையும்... அடைகிறது. அந்தப் பிறவிக்கான 'கர்ம வினைகளை' முழுமையாக அனுபவித்தபின், எஞ்சிய 'கர்ம வினைகளை' அனுபவிக்க மீண்டும் ஒரு பிறவியை அடைகிறது. இவ்வாறு, தனது 'மொத்த பூர்வ கர்ம வினைகளின் விளைவுகளை' அனுபவிக்கும் வரை, பிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கிறது. இதைத்தான் 'விதி' என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கிவிடுகிறது 'ஜோதிடக் கலை'.

ஒரு ஜீவன் எண்ணற்ற பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள 'கர்ம வினைகளின்' மொத்தத் தொகுப்பை...'சஞ்சித கர்மா' என்றும், இந்தப் பிறவியில் அனுபவிப்பதற்காக கொண்டு வந்துள்ள 'பாப - புண்ணியங்களின்' சம விகிதமான கலவையை... 'பிராரப்த கர்மா' என்றும், இந்தப் பிறவியில் சேர்க்கக் கூடிய வினைகளின் விளைவை... 'ஆகாமிய கர்மா', என்றும், வகைப்படுத்துகிறது வேதம்.

நாம் அனுபவிக்கும் இந்தப் பிறவியில், சம விகிதமாக இருக்கும் 'பாப - புண்ணியங்களின்' தொகுப்புகள்தான்... இன்பத்தையும் - துன்பத்தையும் மாறி, மாறி அனுபவங்களாக அளிக்கிறது. இதில் ஏனைய உயிரினங்களுக்கு வழங்கப்படாத ஒரு 'அரிய வாய்ப்பு' மானுட இனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதுதான்... 'தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு'... இந்த வாய்ப்பைத்தான், 'மதி' என்று வழங்குகிறது 'ஜோதிடக் கலை'. ஒவ்வொரு மானுடனின் 'ஜாதக சித்திரமும்'... இந்த 'விதி - மதி' என்ற இரட்டைச் சூழலை சுட்டிக் காட்டத் தவறுவதில்லை. தனது பிறவியையும்... தனது மறைவையும்... அறியாத ஜீவன், தனது வாழ்வின் போக்கு எவ்வாறான பாதையில் செல்கிறது... ? என்பதைத்தான்... இந்த 'ஜாதக சித்திரத்தின்' வாயிலாக அறிந்து கொள்கிறான்.

உதாரணமாக, 'சீதா தேவியாரின்' முன் வந்து ஒரு 'மாய மான்' தனது பொன் மயமான உடலைக் காட்டி விளையாட்டில் ஈடுபடுகிறது. அதைத் தனக்கு பிடித்துக் கொடுக்கும்படி 'பகவான் ஸ்ரீ இராமரைக்' கேட்கிறார் தாயார். இப்போது பகவான் முன் வந்து 'விதி', ஓர் மானுருவில் நிற்கிறது. பகவானுக்கு காலம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது... அதுதான் மதி'. 

ஒன்று, அந்த மானின் பின் சென்று மானை அடையலாம்... மற்றொன்று, தனது தம்பியான 'லக்ஷ்மணரின்' அறிவுரையின்படி, இருக்கும் இடத்திலிருந்தே அந்த மாய மானான 'மாரீசனை' கொன்று விடலாம். இந்த இரண்டு வாய்ப்பின் பின்னேயும்... அவரது விதிதான் தொடரும் என்றாலும், வாய்ப்பு ஒன்று வழங்கப் பட்டிருக்கிறது அல்லவா...!. அந்த இரண்டு வாய்ப்பில், பகவான் எதைத் தேர்ந்தெடுத்தார் என்பதும்... அதற்குப் பின் விளைந்த 'விதியின்' பயணத்தையும் நாமனைவரும் அறிவோம்.

அது போலத்தான், நமது ஒவ்வொருவரின் வாழ்விலும், நமது விதிக்கு அடிப்படையான 'கர்ம வினைகளை', நமது ஜாதகத்தில், ஒவ்வொரு பாவங்களிலும் அமைந்திருக்கிற 'கிரக நிலைகள்' துல்லியமாகச் சுட்டிக் காட்டுகின்றன. அந்த விதியின் வழியேயான பாதையை... நமது 'தசா - புத்தி - அந்தரங்கள்' சுட்டிக் காட்டுகின்றன.

அந்த 'விதியையும்' (கிரகங்களின் அமைவுகள்)... அதன் 'விதி வழியேயான பாதையையும்' (தசா - புத்தி - அந்தரங்கள்)... சுட்டிக் காட்டுபவராக இருப்பவர்தான்... ஜோதிடர். அவர், இதுவரை நாம் கடந்து வந்த பாதையையும்... இனிமேல், நாம் கடக்க விருக்கும் பாதையையும்... அதில் நமக்கு ஏற்படும் 'இன்ப-துன்பங்கள்' என்ற இரட்டைச் சூழல்களையும்... ஒரு காட்சியாக விவரிக்கிறார். அந்தப் பாதையில் நாம் மேற்கொள்ள வேண்டிய நிலைகளை, நம் முன், 'ஒரு வாய்ப்பாக' வைக்கிறார். அந்த 'வாய்ப்பில்' இருக்கும் சூட்சுமங்களை அறிந்து கொண்டு, முடிவை எடுக்க வேண்டியது நாம்தான். 'அதுதான் மதி'.

நமக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த 'மதி' என்ற அரிய வாய்ப்பான 'தேர்ந்தெடுத்தலுக்குப் பின்'... மறைந்து இருப்பது, நமது 'பாப - புண்ணியங்கள்' என்ற 'கர்ம வினைத் தொகுப்புதான் என்றாலும்... ஒரு இக்கட்டான சூழலில், நமது 'தெர்ந்தெடுத்தலுக்கு ஏற்ப'... அது புண்ணிய பலன்களாக தொடர வாய்ப்பு உள்ளதல்லவா... ! 

இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக... நம்மை இறைவனின் திருவடியில், 'தெய்வப் பரிகாரங்கள்' என்ற 'இறை வழிபாட்டில்', கொண்டு சேர்ப்பதுதான் ஒரு ஜோதிடரின் கடமையாக இருக்க வேண்டும். ஏனெனில், 'விதியையும் - மதியையும்' ஒன்று சேர்க்கும் இடம்... அந்த 'இறைவனின் திருவடிகளாகத்தானே' இருக்க முடியும்.

ஸாய்ராம்.



Tuesday, February 16, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 154. 'கேது பகவான்' அளிக்கும் ஞானம் எவ்வாறு இருக்கும்...!

'கேது பகவான்'

ஞானம் என்பது 'உள் திரும்புதலுக்கான' திறவு கோள் மட்டுமல்ல... 'உலக வாழ்க்கைக்கு' பயன் படும் ஒரு உன்னதக் கருவியும் கூட. அதனால்தான், 'கேது பகவானை', 'ஞானக்காரகன்' என்று வருணிக்கிறது ஜோதிடக் கலை.

ஞானம் என்பது தேடுதலில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அது உள் வாழ்விற்கான தேடலாக இருந்தாலும்... வெளி உலக வாழ்வின் தேடுதலாக இருந்தாலும்... அந்தப் பாதை, ஞானத்தில்தான் முடிவடைகிறது.

உள் வாழ்வின் தேடலுக்கு, 'இறைவனின் மீதான பக்திதான்' முதல் படி. அதில் படிப் படியாக பயணிக்கும் போது, அந்த இறைவனே, ஞானத்தின் பாதையில் பயணிக்க வழி காட்டுகிறான். அந்தப் பாதை நேரடியாக இறைவனிடமே கொண்டும் சேர்க்கும் படியாகவும்... அமையலாம் அல்லது  ஒரு சத் குருவின் வழிகாட்டுதலால், அவரிடம் சென்று கலந்து விடும்படியாகவும்... அமையலாம். அது அவரவர்களின், ஆன்மீக முன்னேற்றத்தைப் பொருத்தது.

வெளி உலக வாழ்வின் தேடலுக்கு, 'அறிவு' தான் முதல் படியாகிறது. அந்த அறிவு தேடலும் அவரவர்களின் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றத்தைக் கொடுக்கிறது. அது உலக வாழ்வின் மகிழ்ச்சிக்காக இருக்கும் போது, அத்துடன் முடிந்து விடும் தேடல்... அது தொடர் அறிவுத் தேடலாக தொடரும் போது, ஞானத்தில்தான் முடிவடைகிறது.

இவ்வாறு, உள் வாழ்வின் தேடலும்... உலக வாழ்வின் தேடலும்... ஞானத்தை நோக்கியதாக இருந்தாலும், அதில் வெற்றி பெறுவது, நமது முயற்சியில்தான் இருக்கிறது. அதைத்தான், ஒவ்வொருவரது 'ஜாதகச் சித்திரத்திலும்', 'கேது பகவானின்' அமைவு சுட்டிக் காட்டுகிறது.

உதாரணமாக, அறிவுத் தேடலில் ஈடுபட்ட ஒருவர், அதன் உச்சத்தில் நின்று தவிக்கும் போது, அவர் ஓய்வாக குளியறையில் குளித்துக் கொண்டிருக்கும் வேளையில்... அவருக்கு உள்ளேயிருந்து தானாக வெளிப்பட்டு பூரணமாகிறது. ஆனந்தத்தில் திளைத்தவர்... தன்னிலை மறந்து... அரை குறை ஆடையுடன்... 'யுரேகா, யுரேகா' (கண்டு கொண்டேன்) என்று ஓடி வந்த வரலாறை.. நாம் அறிவோம். இதுதான், அறிவுத் தேடலின் முடிவில் வெளிப்படும் ஞானத்தின் வெளிப்பாடு.

அதுவே, உள் வாழ்வின் தேடலில் ஈடுபட்ட ஒருவர், அதன் பயிற்சியின் உச்சத்தில் நின்று தவிக்கும் போது, அவர் எதிர்பார்க்காத வேளையில், அந்த 'அருளாற்றல்' தானாக வெளிப்பட்டு பூரணமாகிறது. ஆனந்தத்தில் திளைத்தவர்... தனது ஆடை முதல் அனைத்தையும் துறந்து... இடைக் கச்சையுடன் மட்டும் தனது எஞ்சிய வாழ்வை பூரணமாக்கிய வரலாறையும் நாம் அறிவோம். இதுதான். உள் வாழ்வின் தேடலின் முடிவில் வெளிப்படும் ஞானத்தின் வெளிப்பாடு.

அறிவுத் தேடலின் முயற்சியில் ஞானத்தை அடைந்தவரை 'விஞ்ஞானி' என்றும்... பக்தியின் வழியான தேடலில் ஞானத்தை அடைந்தவரை 'ஞானி' என்றும்... அழைக்கிறோம். 

இவ்வாறு, ஒருவரை 'ஞானியா... ?' அல்லது 'விஞ்ஞானியா... ?' என்று மட்டுமல்ல... அந்தப் பாதைகளில் எதைத் தேர்ந்தெடுக்கிறார்... ? என்பதையும்... 'கேது பகவான்தான்' சுட்டிக் காட்டுகிறார். அதனால்தான், அவரை 'ஞானக் காரகன்' என்று அழைக்கிறது 'ஜோதிடக் கலை'.

ஸாய்ராம்.



Wednesday, February 10, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 153. 'கிரகங்களின் சேர்க்கைக்குப் பின் இருக்கும் சூட்சுமங்கள்'


'ஜோதிட விதிகளை' வகுத்தளிக்கும் ரிஷிகள், 'கிரகங்களின் சேர்க்கைக்கு' மிகவும் முக்கியத்துவத்தை அளித்திருக்கிறார்கள். கிரகங்களின் சேர்க்கைதான், 'யோகங்களுக்கு' வித்திடுகிறது.

ஒரு ஜீவனின் வாழ்க்கையில் ஏற்படும் முக்கியமான மாற்றங்களை, இந்த 'கிரக சேர்க்கைகள்' துல்லியமாக வெளிப்படுத்திவிடும். ஆகையால்தான், கிரக சேர்க்கைகளை மூலமாகக் கொண்டு, எண்ணற்ற யோகங்களை வகுத்தளித்திருக்கிறது 'ஜோதிடக் கலை'. 

'சூரிய - புத பகவான்கள்' இணைந்த 'நிபுண யோகம்'... 'சந்திர - செவ்வாய் பகவான்கள்' இணைந்த, 'சந்திர மங்கள யோகம்'... 'சந்திர - குரு பகவான்கள்' இணைந்த, 'குரு சந்திர யோகம்'... 'செவ்வாய் - குரு பகவான்கள்' இணைந்த, 'குரு மங்கள யோகம்'... என, வாழ்வின் சுப மாற்றங்களைக் குறிக்கும் எண்ணற்ற யோகங்களை வகுத்தளித்திருக்கும் ரிஷிகள்... 

வாழ்வில், எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தும், கிரக சேர்க்கைகளையும் எண்ணற்ற யோகங்களாக வகுத்தளித்திருக்கிறார்கள். உதரணமாக... 'குரு - ராகு பகவான்கள்' இணைவு... 'சந்திர - சனி பகவான்களின்' இணைவு... 'சூரிய - சந்திர பகவான்களின்' இணைவு... 'சூரிய - சனி பகவான்களின்' இணைவு... 'செவ்வாய் - சனி பகவான்களின்' இணைவு... 'சந்திர - ராகு பகவான்களின்' இணைவு... 'சந்திர - கேது பகவான்களின் இணைவு... 'சூரிய - ராகு பகவான்களின்' இணைவு... 'சூரிய - கேது பகவான்களின்' இணைவு... 'சனி - கேது பகவான்களின்' இணைவு... 'சனி - ராகு பகவான்களின்' இணைவுகள்.

இந்த இணைவுகள் ஒவ்வொன்றிற்கும், ஒரு 'பொதுவான பலனை' அளிக்கும் ரிஷிகள்... முடிவில் ஒரு 'சூட்சுமத்தை' வைக்கிறார்கள்... அது, 'இந்த இணைவுகள் அமைந்திருக்கும் இடத்தை வைத்து பலனை சொல்வாய்...!' என்பதுதான். 

'சனி - கேது பகவான்களின்' இணைவு, பொதுவாக... 'துறவு மனப்பான்மையையும்... விரக்தியையும்... தடைகளையும்... முட்டுக்கட்டைகளையும்...' வெளிப்படுத்தும், என்பதாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், 'இந்த இணைவு அமையும் இடத்தை' வைத்து பலனளிக்கும் போது... பலன்களின் தன்மையே, மாறி விடுவதை அனுபவத்தில்தான் உணர்ந்து கொள்ள முடியும்.

உதாரணமாக... மேஷ லக்னத்திற்கு, 10 ஆம் பாவத்தில், அமையும் 'சனி - கேது பகவான்கள்'.. அவர்களின் 'தசா - புத்திக் காலங்கள்'... கல்வி பயிலும் நேரத்திலோ, அல்லது தொழில் அமையும் நேரத்திலோ, தடைகளை ஏற்படுத்தி... வாழ்வின் பாதையையே மாற்றி விடும்... அபாயம் உண்டு.

அதுவே, ரிஷப லக்னமாக அமையும் போது, 10 ஆம் பாவத்தில் அமையும் 'சனி - கேது பகவான்களின்' இணைவு... அவர்களின் தசா - புத்திக் காலங்கள்... கல்வி பயிலும் நேரத்தில் அமையும் போது, 'மருத்துவத் துறையின்' ஏதாவது ஒரு பிரிவில், கல்வி பயிலும் சூழலையும்... தொழில் அமையும் நேரத்தில், மருத்துவம் சார்ந்த ஏதாவது ஒரு பிரிவில் பணியோ அல்லது தொழிலோ அமையும் வாய்ப்பையோ உருவாக்கும்.

இவ்வாறாகத்தான், ஒவ்வொரு இணைவும்... அவை, அமையும் 'ஆதிபத்தியங்களுக்கு' ஏற்ப, 'வெவ்வேறு மாறுபட்ட பலன்களை' அளித்து விடுகின்றன. இந்த 'ஆதிபத்தியங்களின்' அமைவைத் தீர்மானிப்பது... ஒவ்வொரு ஜீவனின் 'பூர்வ பாப - புண்ணியங்கள்' என்ற 'கர்ம வினைகள்தான்'. இந்த 'கர்ம வினைகள்' என்ற 'சூட்சும வலைப் பின்னல்தான்', கிரகங்களின் சேர்க்கைகள் மூலம்... ஜீவனின் 'பாப - புண்ணிய விளைவுகளை' வெளிப்படுத்துகின்றன.

ஸாய்ராம்.


Tuesday, February 9, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 152. 'தாயும், தந்தையும்'


 ஜோதிடம் என்ற 'வாழ்வின் வழிகாட்டி', எண்ணற்ற சூட்சுமங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது.

12 பாவங்களை உள்ளடக்கிய 'இராசிக் கட்டம்', ஒரு ஜீவனின், வாழ்க்கைச் சுழற்சியை விவரிக்கிறது. அதில் 'தாயைக் குறிப்பிடும்' 4 ஆம் பாவத்தையும்'... 'தந்தையைக் குறிப்பிடும்'  9 ஆம் பாவத்தையும்... சற்று ஆழ்ந்து பார்ப்போம்.

'4 ஆம் பாவம்' :

4 ஆம் பாவம் என்பது, தாய் - சுகம் - வண்டி - வீடு - வாகனம் - உயர் கல்வி... என 'வாழ்வின் சுகங்களை' அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்த உலக வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஜீவனின், சுகத்தைப் பேணிப் பாதுகாப்பதில், தாயன்புக்கு 'நிகராக வேறு எந்த உறவும் இருப்பதில்லை.

இந்த உலகத்தையும், அதில் தன்னோடு இணைந்து பயணிக்கும் அனைத்து உறவுகளையும், தந்தை உட்பட... நமக்கு அறிமுகப் படுத்துபவராக தாயார்தான் இருக்கிறார். அன்பு என்ற உயரிய பண்பை கற்றுத் தருவது மட்டுமல்ல... அந்த ஜீவனுக்கு தாயின் மடிதான் வீடு... தாயின் அரவணைப்புதான் சுகம்... தாயின் இடைதான் வாகனம்...தாயின் அன்பு மொழிதான் கல்வி.

அதனால்தான், '4 ஆம் பாவமான', 'சுக பாவத்தை', தாயாருக்கு உரியதாகவும்... குளிர்ச்சியை அள்ளித் தரும் 'சந்திர பகவானை', தாயாரைக் குறிக்கும், 'மாதுர் காரகநாகவும்' வகைப் படுத்துகிறது, ஜோதிடக் கலை.

'9 ஆம் பாவம்' :

9 ஆம் பாவமென்பது, தந்தை - பாக்கியம் - தர்மம்... என, 'வாழ்வின் நியதிகளை' நிர்ணயப்படுத்தும் பாவமாக இருக்கிறது. 'தர்மம்' என்பதுதான், இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கே மூலமாக இருக்கிறது. பிர்பஞ்சத்தின் அமைவும்... அதில் சுழலும் கிரகங்களும்... புவியின் அமைவும்... இரவும், பகலும்... ஐம்பூதங்களின் கட்டுப்பாடும்... தர்மத்தை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன.

 ஒரு ஜீவனுக்கு தந்தை என்ற அந்தஸ்த்தை வகிக்கின்றவர், தர்மத்துடன் இருந்தால்தான், அந்த ஜீவனும் தர்மத்தின் பாதையில் பயணிக்கும். இவ்வுலகில் எண்ணற்ற சுகானுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதையெல்லாம் அனுபவிப்பது 'பாக்கியம்' அல்ல... அதில், 'சுய தர்மத்துடன்', எதை அனுபவிக்க வேண்டுமோ, எது நமக்கு விதிக்கப் பட்டிருக்கிறதோ, அதை அனுபவிப்பதுதான் தர்மம்.

அந்தப் பாதையில் நம்மை வழி நடத்தும் பொறுப்பு, தந்தைக்கு இருப்பதால்தான்... ஜீவன் அனுபவிக்க வேண்டிய 'தர்மத்தை' அடிப்படையாகக் கொண்ட 'பாக்கிய பாவமான'...'9 ஆம் பாவத்தையும்', பாரபட்சமின்றி அனைத்தின் மீதும், தனது இன்னொளியைப் பரப்பும் 'சூரிய பகவானை'... 'பிதுர்க் காரகர்' என்றும், வகைப் படுத்துகிறது ஜோதிடக் கலை.

இவ்வாறு, சுகமும் - பாக்கியமும்... இக லோக வாழ்வும் - தர்மமும்... தாயும் - தந்தையும்... இணைந்தே பயணிக்க வேண்டும் என்பதால்தான், நமது தேகத்தையே இடம் - வலம், எனப் பகுத்து, சூரியன் - சந்திரன் என்ற, பிரிக்க முடியாத 'அர்த்தநாரி' ரூபமாக்கியிருக்கிறான் இறைவன்.

ஸாய்ராம்.

 


   

Wednesday, February 3, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 151. 'திருமணம்'



 'கடவுள் அமைத்து வைத்த மேடை... இணைக்கும் கல்யாண மாலை

 இன்னார்க்கு இன்னாரென்று... எழுதி வைத்தானே தேவன் அன்று...'


என்ற பாடல் வரிகளில், எண்ணற்ற சூட்சுமங்கள் பொதிந்திருக்கின்றன. இந்த புவி வாழ்வில், ஜீவனின் அனைத்து நிகழ்வுகளும், அந்த ஜீவனின் 'முன் வினைப் பயன்களின்' விளைவுகளாக மட்டுமே நடந்தேறுகின்றன. 'திருமணமும்' இதற்கு விதி விலக்கல்ல.

நமது 'பூர்வ கர்ம வினைகளில்' தொடர்புடைய 'பந்தங்கள்தான்'... இந்தப் பிறவியிலும் தொடர்கின்றன. அனால், அவை அந்த வினைகளின் விளைவாக 'வெவ்வேறு உறவு முறைகளை' ஏற்றுக் கொள்கின்றன. சென்ற பிறவியில் நமக்குத் தந்தையாக இருந்தவர், இந்தப் பிறவியில் மகனாகவோ, சகோதரனாகவோ அல்லது ஏனைய, ஒரு நெருங்கிய உறவாகவோ அமைந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அது போலத்தான்,' வாழ்க்கைத் துணையும்'. நமது முன் பிறவியில் இருந்த 'நெருங்கிய பந்தமும்'... 'அதன் மீதான பற்றும்தான்'... இந்தப் பிறவியில் 'நம் வாழ்க்கைத் துணையாக' வந்து அமைகிறது. அந்த வாழ்க்கைத் துணையின் வழியாக நாம் அனுபவிக்கும் அனுபவங்களும்...இருவரின் 'முன் வினைப் பயன்களின் விளைவுகளாகவே' அமைந்தும் விடுகிறது.

மேலோட்டமாகப் பார்க்கும் போது, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமது கைகளில் இருப்பது போல் தோன்றும். அதை அனுபவித்துக் கடக்கும் போதுதான்... இதுவும் தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான், என்ற நிதர்சனம் நமக்குப் புரிய வரும். 

வரன்களைத் தேடும் போது, எண்ணற்ற வரன்களை, ஒன்றோடு ஒன்றை இணைத்துப் பார்த்து, அவற்றை நிராகரிக்கும் சூழல்களும் ஏற்படும். அந்த வரன்கள் யாவும், நம்மோடு, நமது பூர்வ ஜென்மங்களில் தொடர்பு உடையதாகவே இருந்திருக்கும். ஆனால், இந்த ஜென்மாவில், இணைந்து வாழும் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும்.

நமது தேடுதல்களெல்லாம், இந்தக் கர்ம வினைகளைக் கடந்து போக வைப்பதற்கான காரணங்களாகவே அமைந்திருக்கும். இந்தப் பிறவியில், யாரை... எப்போது...எந்த சூழலில்... சந்திக்க வேண்டும்... என்ற தீர்மானத்தின் படியே, அந்த சந்திப்பும், அதன் வழியாக வாழ்வும், அமைந்து விடுகிறது. இதில், நாம் அனைவருமே 'கருவிகளே' அன்றி 'கர்த்தாக்கள்' இல்லை.

அந்த அனுபவத்தைத்தான் கவிஞர்,

 'கடவுள் அமைத்து வைத்த மேடை... இணைக்கும் கல்யாண மாலை

 இன்னார்க்கு இன்னாரென்று... எழுதி வைத்தானே தேவன் அன்று...'

... எனற அனுபவ வரிகளில் வடித்திருக்கிறார்.

ஸாய்ராம்.



Tuesday, February 2, 2021

அட்டாங்க யோகம் : 'தியானமும் - சமாதியும்'



'பதஞ்சலி முனிவர்' அனுபவித்து அறிந்த 'யோக நிலையை', அனைவருக்குமான எளிய வழி முறையாக, எட்டு படி நிலைகளாக வகுத்த அளிக்கப்பட்டதுதான்... 'அட்டாங்க யோகம்' என்ற யோகப் பயிற்சி முறை.

சாதகர்களி வழி நடத்த, இந்த எட்டு படி நிலைகளும், 'தன் முனைப்புப் பயிற்சிகளாக'... பக்தி என்ற 'இயமமாகவும்', சுய ஒழுக்கம் என்ற 'நியமமாகவும்'... தனக்கு இயல்பாகும் 'ஆசனமாகவும்'... அமைகின்றன.

இந்தப் படி நிலைகளில் சாதகரின் முயற்சிகள் சிரத்தையாக அமையும் போது, 'இறைவனின்' அருள் கருணை, 'ஒரு சத்குருவின்' 'வழி காட்டுதல்' என்ற 'தீக்ஷைக்கு' வழி காட்டுகிறது. அந்த வழிகாட்டுதல், சாதகரை, ஜீவ சக்தியான வாயுவை சீராக்கும் 'பிரணாயாமமாகவும்'... வெளி உலக சிந்தனைகளிலிருந்து விடுவிக்கும் 'பிரத்யாகாரமாகவும்'... தொடர்ந்து, இடைவிடாமல் தொடர வைக்கும் 'தாரணையாகவும்'... 'தியானம்' என்ற இருப்பு நிலையாகவும்... இறுதியாக பூரணத்துவமான ஒன்று கலத்தல் என்ற 'சாமாதியாகவும்'... மலர்ந்து விடுகிறது.

'தாரணையாக' தொடர்ந்து செய்யப்படும் 'பிரணாயாமம்', ஜீவ சக்தியான மூச்சுக் காற்றை அதன் முலத்தில் கொண்டு சேர்க்கிறது. அசையாது அங்கிருக்கும், இருப்பு நிலைதான் 'தியானம்' என்ற யோக நிலையின் ஏழாவது படி நிலையாகிறது.

தொடர்ந்து, அந்த மூலத்தில் இருப்பதுதான் சாதகரால் செய்யப்படும் இறுதி முயற்சி. அதற்குப் பின் நடப்பது எதுவும் சாதகரின் கை வசம் இருப்பதில்லை  அந்த பூரணத்துவமான 'சமாதி நிலை' என்பது, அந்த 'பரம் பொருளின்' கைகளில்தான் இருக்கிறது. அவரின் அருள் கருணை எப்போது, அந்தத் திரையை விலக்குகிறதோ... அந்தக் கணமே... ஒன்று கலத்தல் என்ற 'சமாதி நிலை'... அதுவாகவே நிறைவேறி விடுகிறது.

ஸாய்ராம்.


Monday, February 1, 2021

அட்டாங்க யோகம் : 'தாரணை'


'அட்டாங்க யோகத்தின்' ஆறாவது படி நிலை, 'தாரணை'.

நமது முயற்சியினாலும் , முனைப்பினாலும், இறைவனிடம் பக்தியை (இயமம்) வளர்த்து... வாழ்வை ஓர் ஒழுங்குக்குள் (நியமம்) கொண்டு வந்து... நமக்கியல்பான ஒரு இருப்பு நிலையில் (ஆசனம்) அமரும் போது, 'இறைவனின் கருணை' நம்மீது கனிகிறது.

அந்தக் கருணையினால், 'ஒரு சத்குருவின்' திருவடிகளுக்குள் கொண்டு நம்மை சேர்க்கும் 'இறையருள்', நமது சுவாசத்தை பிரம்மாந்திரத்தை நோக்கியதாக (பிராணாயாமம்) திருப்புகிறது. அப்போது, நம்மை உலக வாழ்விலிருந்து திருப்பும் வண்ணமாக, வெளி உலக வாழ்விற்கான எண்ணங்கள் அற்ற நிலை (பிரத்யாகாரம்) அனுபவமாகிறது.

இந்த படி நிலையில் இருக்கும் போது, நமது 'ஜீவ சக்தியான' வாயுவை, அதன் பூர்வ... இயல்பான... பாதையில் 'இடைவிடாது' செலுத்துவதற்கான ஆற்றல் வந்து சேர்கிறது. இந்த ஆறாவது படி நிலைதான் 'தாரணை' என்பதாகிறது.

'இடைவிடாது...'என்பது, தொடர்ந்து செயல்படுதல்... எனப்துதான். பாத்திரத்தில் இருக்கும் நெய்யை, ஒரு கரண்டியில் எடுத்து, ஒரு குவளையில் விடும் போது... கரண்டியிலிருந்து வழிய ஆரம்பிக்கும் நெய்... இடைவிடாது தொடர்ந்து வழிந்து... அந்த குவளையில் சேரும் வரை... ஒரு நூல் போல இடைவிடாது வழிவதைப் போன்றதுதான் 'தாரணை' யாகும்.

இந்தத் 'தாரணை' என்ற படிநிலைதான் அட்டாங்க யோகத்தின் ஆறாவது படி நிலையாகிறது.

ஸாய்ராம்.



ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...