Tuesday, February 9, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 152. 'தாயும், தந்தையும்'


 ஜோதிடம் என்ற 'வாழ்வின் வழிகாட்டி', எண்ணற்ற சூட்சுமங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது.

12 பாவங்களை உள்ளடக்கிய 'இராசிக் கட்டம்', ஒரு ஜீவனின், வாழ்க்கைச் சுழற்சியை விவரிக்கிறது. அதில் 'தாயைக் குறிப்பிடும்' 4 ஆம் பாவத்தையும்'... 'தந்தையைக் குறிப்பிடும்'  9 ஆம் பாவத்தையும்... சற்று ஆழ்ந்து பார்ப்போம்.

'4 ஆம் பாவம்' :

4 ஆம் பாவம் என்பது, தாய் - சுகம் - வண்டி - வீடு - வாகனம் - உயர் கல்வி... என 'வாழ்வின் சுகங்களை' அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்த உலக வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஜீவனின், சுகத்தைப் பேணிப் பாதுகாப்பதில், தாயன்புக்கு 'நிகராக வேறு எந்த உறவும் இருப்பதில்லை.

இந்த உலகத்தையும், அதில் தன்னோடு இணைந்து பயணிக்கும் அனைத்து உறவுகளையும், தந்தை உட்பட... நமக்கு அறிமுகப் படுத்துபவராக தாயார்தான் இருக்கிறார். அன்பு என்ற உயரிய பண்பை கற்றுத் தருவது மட்டுமல்ல... அந்த ஜீவனுக்கு தாயின் மடிதான் வீடு... தாயின் அரவணைப்புதான் சுகம்... தாயின் இடைதான் வாகனம்...தாயின் அன்பு மொழிதான் கல்வி.

அதனால்தான், '4 ஆம் பாவமான', 'சுக பாவத்தை', தாயாருக்கு உரியதாகவும்... குளிர்ச்சியை அள்ளித் தரும் 'சந்திர பகவானை', தாயாரைக் குறிக்கும், 'மாதுர் காரகநாகவும்' வகைப் படுத்துகிறது, ஜோதிடக் கலை.

'9 ஆம் பாவம்' :

9 ஆம் பாவமென்பது, தந்தை - பாக்கியம் - தர்மம்... என, 'வாழ்வின் நியதிகளை' நிர்ணயப்படுத்தும் பாவமாக இருக்கிறது. 'தர்மம்' என்பதுதான், இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கே மூலமாக இருக்கிறது. பிர்பஞ்சத்தின் அமைவும்... அதில் சுழலும் கிரகங்களும்... புவியின் அமைவும்... இரவும், பகலும்... ஐம்பூதங்களின் கட்டுப்பாடும்... தர்மத்தை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன.

 ஒரு ஜீவனுக்கு தந்தை என்ற அந்தஸ்த்தை வகிக்கின்றவர், தர்மத்துடன் இருந்தால்தான், அந்த ஜீவனும் தர்மத்தின் பாதையில் பயணிக்கும். இவ்வுலகில் எண்ணற்ற சுகானுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதையெல்லாம் அனுபவிப்பது 'பாக்கியம்' அல்ல... அதில், 'சுய தர்மத்துடன்', எதை அனுபவிக்க வேண்டுமோ, எது நமக்கு விதிக்கப் பட்டிருக்கிறதோ, அதை அனுபவிப்பதுதான் தர்மம்.

அந்தப் பாதையில் நம்மை வழி நடத்தும் பொறுப்பு, தந்தைக்கு இருப்பதால்தான்... ஜீவன் அனுபவிக்க வேண்டிய 'தர்மத்தை' அடிப்படையாகக் கொண்ட 'பாக்கிய பாவமான'...'9 ஆம் பாவத்தையும்', பாரபட்சமின்றி அனைத்தின் மீதும், தனது இன்னொளியைப் பரப்பும் 'சூரிய பகவானை'... 'பிதுர்க் காரகர்' என்றும், வகைப் படுத்துகிறது ஜோதிடக் கலை.

இவ்வாறு, சுகமும் - பாக்கியமும்... இக லோக வாழ்வும் - தர்மமும்... தாயும் - தந்தையும்... இணைந்தே பயணிக்க வேண்டும் என்பதால்தான், நமது தேகத்தையே இடம் - வலம், எனப் பகுத்து, சூரியன் - சந்திரன் என்ற, பிரிக்க முடியாத 'அர்த்தநாரி' ரூபமாக்கியிருக்கிறான் இறைவன்.

ஸாய்ராம்.

 


   

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...