Wednesday, February 24, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 157. 'சிறு மாற்றம் தரும் பெரும் விளைவுகள்' - பகுதி 1.




ஒரு 'பாகைமானியில்','0' த்திலிருந்து '180' வரையிலான டிகிரிகள், அரை வட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அதில், '0' லிருந்து '1' ஆவது டிகிரியை, ஒரு புள்ளியாகக் குறித்தால், அதன் அளவு மிக, மிகச் சிறியதாக இருக்கும். அதையே பாகை மானியின் மத்தியப் புள்ளியிலிருந்து, இரு கோடுகளாக 10 சென்டி மீட்டர்களுக்கு நீட்டும் போது, அதன் நுனியில் '0' வுக்கும், '1' டிகிரிக்குமான இடைவெளி சற்று பெரியதாக இருக்கும். அதையே 1 மீட்டர் தொலைவிற்கு நீட்டினால், இன்னும் பெரியதாகிவிடும்.

அது போலத்தான் நமது வாழ்விலும், நாம் மேற்கொள்ளும் முறையான ஒரு சிறிய முயற்சியும்... இறுதியில் ஒரு பெரும் மாற்றத்திற்கான பாதையைத் திறந்து விடும்.

நம்மை இந்த உலகில் அடையாளப் படுத்திக் காட்டுவது... 'நமது ரூபமும்... நமது நாமமும்தான்'. ரூபம் என்பது நமக்கு வழங்கப்பட்டிருக்கும் உடல் அடையாளம். நமது குழந்தைப் பருவத்திலிருந்து, முதியப் பருவம் வரை, இந்த உடலின் தோற்றம் மாறிக் கொண்டே இருந்தாலும், நமது அடையாளங்கள் மாறுவதில்லை.நாமே முயற்சி செய்தாலும், நமது அடிப்படை அமைப்புகளை நம்மால் மாற்றிக் கொள்ள முடியாது.

ஆனால், 'நாமம்' என்ற 'பெயர் அடையாளத்தை' நாம் விரும்பினால், சிறிய திருத்தங்களுடனோ அல்லது முழுவதுமாகவோ மாற்றிக்  கொள்ளும் வாய்ப்பு நம் கைகளில் இருக்கிறது.

உதாரணமாக, ஆங்கில எழுத்துக்களின் இறுதியில் வரும் 'S, T, U, V'... என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் நமது பெயர்கள்... பள்ளிகளிலோ, கல்லுரிகளிலோ... வருகைப் பதிவேட்டின் போதும், பரீட்சைகளின் போதும், பின்னால் வேலை வாய்ப்பிற்கான நேர்க் காணல்களிலும்... இறுதியாகத்தான் இருக்கும். அதனால், நாம் எல்லாவற்றிற்கும் காத்திருக்க நேரிடும். அதையே, முதல் தொகுப்பான ''A, B, C, D' என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் போது, அனைத்திலும் முதன்மையாக அழைக்கப்படுபவர்களாக இருப்போம்.

இவ்வாறு வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பை, முறையாக எவ்வாறு கையாள்வது...? என்ற கேள்விக்கு, நமது புரதான 'ஜோதிடக் கலை', ஒரு அடிப்படையாக... ஆதாரமாக... இருக்கின்றது. அதன் வழியேயான கணிப்புகளுக்கு ஏற்ப, இரண்டு விதமாக, நமது பெயரில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

1. நியூமராலஜி என்ற எண் கணித முறையிலான மாற்றம் :

   ... இதில் நமக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயரை மாற்றாமல்... அதன் எழுத்துக்களிலோ... அல்லது, பெயருக்கும் முன்னோ, பின்னோ, சிறிய இணைப் பெயரை சேர்த்தோ... ஒரு மாற்றத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த மாற்றங்களுக்கு அடிப்படையாக இருப்பது, நமது பெயரின் ஆங்கில எழுத்துக்களும், அவற்றிற்கு வழங்கப்பட்டிருக்கும் மதிப்பு எண்களும்தான்.

2. நேமாலஜி என்ற பெயரையே மாற்றிக் கொள்ளும் முறை :

... இதற்கு, நமது நட்சத்திரங்களின் பாதங்களுக்கு ஏற்ற 'நாம எழுத்துக்களும்'... நமது குலம், குடி, குடும்ப வழக்கப்படியான பெயர் சூட்டலும்.... அடிப்படையாக இருக்கிறது.

இந்த இரண்டு முறைகளையும்... ஜோதிடக் கலையின் ஆதாரமான 'ஜாதகங்களின்' வழி காட்டுதலுடன், கையாண்டு, நமது பெயர்களில் சிறிய மாற்றங்களை மேற்கொண்டு... அதன் வழியே, வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றை, பரிசிலின் துணை கொண்டு கடப்பது போல... விதியின் வழியேயான வாழ்வை, மதியைக் கொண்டு கடந்து விடலாம். இறைவனின் அருளோடும், துணையோடும்... !

அடுதடுத்த பகுதிகளில், இந்த இரண்டு முறைகளையும் விரிவாக ஆய்ந்து பார்க்கலாம்.

ஸாய்ராம்.




No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...