சூழினும் தான்முந் துறும்'
'விதியை விட வலிமையானது வேறு எதுவுமில்லை. நாம் ஒரு மாற்று சூழலை ஏற்படுத்திக் கொண்டாலும், அந்த சூழலிலும், அதே விதி முன் வந்து நிற்கும்'. இது வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு.
இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும், அதன் 'பூர்வ கர்ம வினைகளுக்கு' ஏற்ப, ஓர் உடலையும்... அதற்கு ஒப்பான வாழ்வையும்... அடைகிறது. அந்தப் பிறவிக்கான 'கர்ம வினைகளை' முழுமையாக அனுபவித்தபின், எஞ்சிய 'கர்ம வினைகளை' அனுபவிக்க மீண்டும் ஒரு பிறவியை அடைகிறது. இவ்வாறு, தனது 'மொத்த பூர்வ கர்ம வினைகளின் விளைவுகளை' அனுபவிக்கும் வரை, பிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கிறது. இதைத்தான் 'விதி' என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கிவிடுகிறது 'ஜோதிடக் கலை'.
ஒரு ஜீவன் எண்ணற்ற பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள 'கர்ம வினைகளின்' மொத்தத் தொகுப்பை...'சஞ்சித கர்மா' என்றும், இந்தப் பிறவியில் அனுபவிப்பதற்காக கொண்டு வந்துள்ள 'பாப - புண்ணியங்களின்' சம விகிதமான கலவையை... 'பிராரப்த கர்மா' என்றும், இந்தப் பிறவியில் சேர்க்கக் கூடிய வினைகளின் விளைவை... 'ஆகாமிய கர்மா', என்றும், வகைப்படுத்துகிறது வேதம்.
நாம் அனுபவிக்கும் இந்தப் பிறவியில், சம விகிதமாக இருக்கும் 'பாப - புண்ணியங்களின்' தொகுப்புகள்தான்... இன்பத்தையும் - துன்பத்தையும் மாறி, மாறி அனுபவங்களாக அளிக்கிறது. இதில் ஏனைய உயிரினங்களுக்கு வழங்கப்படாத ஒரு 'அரிய வாய்ப்பு' மானுட இனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதுதான்... 'தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு'... இந்த வாய்ப்பைத்தான், 'மதி' என்று வழங்குகிறது 'ஜோதிடக் கலை'. ஒவ்வொரு மானுடனின் 'ஜாதக சித்திரமும்'... இந்த 'விதி - மதி' என்ற இரட்டைச் சூழலை சுட்டிக் காட்டத் தவறுவதில்லை. தனது பிறவியையும்... தனது மறைவையும்... அறியாத ஜீவன், தனது வாழ்வின் போக்கு எவ்வாறான பாதையில் செல்கிறது... ? என்பதைத்தான்... இந்த 'ஜாதக சித்திரத்தின்' வாயிலாக அறிந்து கொள்கிறான்.
உதாரணமாக, 'சீதா தேவியாரின்' முன் வந்து ஒரு 'மாய மான்' தனது பொன் மயமான உடலைக் காட்டி விளையாட்டில் ஈடுபடுகிறது. அதைத் தனக்கு பிடித்துக் கொடுக்கும்படி 'பகவான் ஸ்ரீ இராமரைக்' கேட்கிறார் தாயார். இப்போது பகவான் முன் வந்து 'விதி', ஓர் மானுருவில் நிற்கிறது. பகவானுக்கு காலம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது... அதுதான் மதி'.
ஒன்று, அந்த மானின் பின் சென்று மானை அடையலாம்... மற்றொன்று, தனது தம்பியான 'லக்ஷ்மணரின்' அறிவுரையின்படி, இருக்கும் இடத்திலிருந்தே அந்த மாய மானான 'மாரீசனை' கொன்று விடலாம். இந்த இரண்டு வாய்ப்பின் பின்னேயும்... அவரது விதிதான் தொடரும் என்றாலும், வாய்ப்பு ஒன்று வழங்கப் பட்டிருக்கிறது அல்லவா...!. அந்த இரண்டு வாய்ப்பில், பகவான் எதைத் தேர்ந்தெடுத்தார் என்பதும்... அதற்குப் பின் விளைந்த 'விதியின்' பயணத்தையும் நாமனைவரும் அறிவோம்.
அது போலத்தான், நமது ஒவ்வொருவரின் வாழ்விலும், நமது விதிக்கு அடிப்படையான 'கர்ம வினைகளை', நமது ஜாதகத்தில், ஒவ்வொரு பாவங்களிலும் அமைந்திருக்கிற 'கிரக நிலைகள்' துல்லியமாகச் சுட்டிக் காட்டுகின்றன. அந்த விதியின் வழியேயான பாதையை... நமது 'தசா - புத்தி - அந்தரங்கள்' சுட்டிக் காட்டுகின்றன.
அந்த 'விதியையும்' (கிரகங்களின் அமைவுகள்)... அதன் 'விதி வழியேயான பாதையையும்' (தசா - புத்தி - அந்தரங்கள்)... சுட்டிக் காட்டுபவராக இருப்பவர்தான்... ஜோதிடர். அவர், இதுவரை நாம் கடந்து வந்த பாதையையும்... இனிமேல், நாம் கடக்க விருக்கும் பாதையையும்... அதில் நமக்கு ஏற்படும் 'இன்ப-துன்பங்கள்' என்ற இரட்டைச் சூழல்களையும்... ஒரு காட்சியாக விவரிக்கிறார். அந்தப் பாதையில் நாம் மேற்கொள்ள வேண்டிய நிலைகளை, நம் முன், 'ஒரு வாய்ப்பாக' வைக்கிறார். அந்த 'வாய்ப்பில்' இருக்கும் சூட்சுமங்களை அறிந்து கொண்டு, முடிவை எடுக்க வேண்டியது நாம்தான். 'அதுதான் மதி'.
நமக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த 'மதி' என்ற அரிய வாய்ப்பான 'தேர்ந்தெடுத்தலுக்குப் பின்'... மறைந்து இருப்பது, நமது 'பாப - புண்ணியங்கள்' என்ற 'கர்ம வினைத் தொகுப்புதான் என்றாலும்... ஒரு இக்கட்டான சூழலில், நமது 'தெர்ந்தெடுத்தலுக்கு ஏற்ப'... அது புண்ணிய பலன்களாக தொடர வாய்ப்பு உள்ளதல்லவா... !
இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக... நம்மை இறைவனின் திருவடியில், 'தெய்வப் பரிகாரங்கள்' என்ற 'இறை வழிபாட்டில்', கொண்டு சேர்ப்பதுதான் ஒரு ஜோதிடரின் கடமையாக இருக்க வேண்டும். ஏனெனில், 'விதியையும் - மதியையும்' ஒன்று சேர்க்கும் இடம்... அந்த 'இறைவனின் திருவடிகளாகத்தானே' இருக்க முடியும்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment