Friday, February 19, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 156. 'தர்ம ஸ்தானம்' உணர்த்தும் சூட்சுமங்கள்.


 'தர்மம்' என்ற ஒற்றைச் சொல்லில்தான், இந்த பிரபஞ்சமமே இயங்கிக் கொண்டிருக்கிறது. 

கிரகங்களின் சுழற்சிகளும்... இயற்கையின் தவறாத மாறுபாடுகளும்... ஐம்பூதங்களின் கட்டுப்பாடுகளும்... உயிர்களின் தோற்றங்களும், மறைவுகளும்... இந்த தர்மம் என்ற கட்டுக்குள் அடங்கியிருக்குமாறுதான் படைக்கப் பட்டிருக்கிறது.

அதை நமக்கு உணர்த்துவதற்காகத்தான், ஜோதிடக் கலை... 'தர்ம ஸ்தானம்' என்ற உன்னத ஸ்தானத்தை, காலத்தைக் குறிக்கும் 'கால புருஷ இராசியில், 'ஞானக் கிரகமான' குரு பகவானின், வீடான தனுர் இராசியில் அமையுமாறு அமைத்திருக்கிறது.

ஒவ்வொரு ஜீவனும், தனது பிறவிக்கான 'கர்ம வினைகளை' சுமந்து கொண்டுதான் பிறவியை அடைகிறது. அந்தக் கர்ம வினைகளின் விளைவுகளான 'இன்ப - துன்ப நிகழ்வுகளைத்தான்', ஜீவன் தனது வாழ்வில் எதிர் கொள்கிறது. அது, தான் மேற்கொள்ளும் செயல்களாகவும்... தான் எதிர் கொள்ளும் செயல்களாகவும்... அமைகிறது. 

அவற்றை எவ்வாறு, அந்த ஜீவன் எதிர்கொள்கிறதோ, அதற்கேற்ப அந்த செயல்கள் விளைவிக்கும் விளைவுகள்... ஜீவனின் 'கர்ம வினைகளின்' தொகுப்பில், 'புண்ணியங்களாகவோ - பாபங்களாகவோ...' சேர்ந்து கொள்கிறது. அந்த 'பாப - புண்ணியங்களுக்கு' ஏற்ப, ஜீவன் மீண்டும் பிறவியை அடைகிறது. இவ்வாறு, 'பாப - புண்ணியங்களின்' கணக்குகள் தீரும் வரை, இந்தப் 'பிறவித் தொடர்' தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்தச் சுழலை நிறுத்தும் உபாயத்தைத்தான்... கால புருஷ இராசியின், 9 ஆம் பாவமான... 'தர்ம ஸ்தானம்' உணர்த்துகிறது. அதனால்தான், ஜீவன், தான் மேற்கொள்ளும் கடமைகள் என்ற செயல்களைக் குறிக்கும் 10 ஆம் பாவமான, 'சனி பகவானின்' மகர இராசிக்கு, முன்பாக தர்மத்தின் குணாதிபதியான 'குரு பகவானின்' வீட்டை 'தரம் ஸ்தானமாக' அமைத்திருக்கிறார்கள் போலும் !

ஒவ்வொரு கடமையையும் மேற்கொள்ளும் போதோ அல்லது எதிர் கொள்ளும் போதோ... அந்தக் கடமை விளைவுக்கும் விளைவுகளில் பற்று வைக்காமல்... அந்தச் செயலை பூரணமாக்கும் போது... அந்தச் செய்லகளின் விளைவுகளான  புண்ணியங்களோ, பாவங்களோ... ஜீவனின் 'கர்ம வினைகளின் கணக்குகளில்' சேர்வதில்லை. இவ்வாறு, ஒவ்வொரு செயலையும் 'தர்மத்துடன்' மேற்கொள்ள ஆரம்பித்தால், படிப்படியாக 'கர்ம வினைகளின்' கட்டுகளிலிருந்து விடுபட்டுவிடலாம்.

இதைத்தான், அனைவரும் அறிந்த, 'கடமையைச் செய்... பலனை எதிர் பார்க்காதே !' என்ற பிரபலமான 'கிதா வாக்கியம்' பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. அது, சரியான விளக்கமாக இருக்க முடியாது. காரணம், பலனை எதிர் பார்க்காது... எந்தக் கடமையையும் மேற்கொள்ள முடியாது. அதன் விளக்கம் இவ்வாறாகத்தான் இருக்க முடியும். அது, 'கடமையைச் செய்... அதன் பலன்களில் பற்று வைக்காதே !'... என்பதாகத்தான் இருக்கும். அதைத்தான் 'பகவானும்' உணர்த்தியிருப்பார். அதனால்தான், அதற்கு 'கர்ம யோகம்' என்றும் பெயரிட்டார்.

ஒவ்வொரு ஜீவனின் ஜாதகத்திலும்... இந்த 'தர்ம ஸ்தானம்' மிகவும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இந்த ஸ்தானத்தைப் பொருத்துதான்... ஜீவனின் வாழ்வு... உலக வாழ்வாக இருந்தாலும்... உள் வாழ்வாக இருந்தாலும்... அது ஒரு உன்னத வாழ்வாக அமையுமா ? என்ற கேள்விக்கான பதிலும் கிடைக்கும்.

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...