'கடவுள் அமைத்து வைத்த மேடை... இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று... எழுதி வைத்தானே தேவன் அன்று...'
என்ற பாடல் வரிகளில், எண்ணற்ற சூட்சுமங்கள் பொதிந்திருக்கின்றன. இந்த புவி வாழ்வில், ஜீவனின் அனைத்து நிகழ்வுகளும், அந்த ஜீவனின் 'முன் வினைப் பயன்களின்' விளைவுகளாக மட்டுமே நடந்தேறுகின்றன. 'திருமணமும்' இதற்கு விதி விலக்கல்ல.
நமது 'பூர்வ கர்ம வினைகளில்' தொடர்புடைய 'பந்தங்கள்தான்'... இந்தப் பிறவியிலும் தொடர்கின்றன. அனால், அவை அந்த வினைகளின் விளைவாக 'வெவ்வேறு உறவு முறைகளை' ஏற்றுக் கொள்கின்றன. சென்ற பிறவியில் நமக்குத் தந்தையாக இருந்தவர், இந்தப் பிறவியில் மகனாகவோ, சகோதரனாகவோ அல்லது ஏனைய, ஒரு நெருங்கிய உறவாகவோ அமைந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
அது போலத்தான்,' வாழ்க்கைத் துணையும்'. நமது முன் பிறவியில் இருந்த 'நெருங்கிய பந்தமும்'... 'அதன் மீதான பற்றும்தான்'... இந்தப் பிறவியில் 'நம் வாழ்க்கைத் துணையாக' வந்து அமைகிறது. அந்த வாழ்க்கைத் துணையின் வழியாக நாம் அனுபவிக்கும் அனுபவங்களும்...இருவரின் 'முன் வினைப் பயன்களின் விளைவுகளாகவே' அமைந்தும் விடுகிறது.
மேலோட்டமாகப் பார்க்கும் போது, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமது கைகளில் இருப்பது போல் தோன்றும். அதை அனுபவித்துக் கடக்கும் போதுதான்... இதுவும் தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான், என்ற நிதர்சனம் நமக்குப் புரிய வரும்.
வரன்களைத் தேடும் போது, எண்ணற்ற வரன்களை, ஒன்றோடு ஒன்றை இணைத்துப் பார்த்து, அவற்றை நிராகரிக்கும் சூழல்களும் ஏற்படும். அந்த வரன்கள் யாவும், நம்மோடு, நமது பூர்வ ஜென்மங்களில் தொடர்பு உடையதாகவே இருந்திருக்கும். ஆனால், இந்த ஜென்மாவில், இணைந்து வாழும் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும்.
நமது தேடுதல்களெல்லாம், இந்தக் கர்ம வினைகளைக் கடந்து போக வைப்பதற்கான காரணங்களாகவே அமைந்திருக்கும். இந்தப் பிறவியில், யாரை... எப்போது...எந்த சூழலில்... சந்திக்க வேண்டும்... என்ற தீர்மானத்தின் படியே, அந்த சந்திப்பும், அதன் வழியாக வாழ்வும், அமைந்து விடுகிறது. இதில், நாம் அனைவருமே 'கருவிகளே' அன்றி 'கர்த்தாக்கள்' இல்லை.
அந்த அனுபவத்தைத்தான் கவிஞர்,
'கடவுள் அமைத்து வைத்த மேடை... இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று... எழுதி வைத்தானே தேவன் அன்று...'
... எனற அனுபவ வரிகளில் வடித்திருக்கிறார்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment