ஞானம் என்பது 'உள் திரும்புதலுக்கான' திறவு கோள் மட்டுமல்ல... 'உலக வாழ்க்கைக்கு' பயன் படும் ஒரு உன்னதக் கருவியும் கூட. அதனால்தான், 'கேது பகவானை', 'ஞானக்காரகன்' என்று வருணிக்கிறது ஜோதிடக் கலை.
ஞானம் என்பது தேடுதலில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அது உள் வாழ்விற்கான தேடலாக இருந்தாலும்... வெளி உலக வாழ்வின் தேடுதலாக இருந்தாலும்... அந்தப் பாதை, ஞானத்தில்தான் முடிவடைகிறது.
உள் வாழ்வின் தேடலுக்கு, 'இறைவனின் மீதான பக்திதான்' முதல் படி. அதில் படிப் படியாக பயணிக்கும் போது, அந்த இறைவனே, ஞானத்தின் பாதையில் பயணிக்க வழி காட்டுகிறான். அந்தப் பாதை நேரடியாக இறைவனிடமே கொண்டும் சேர்க்கும் படியாகவும்... அமையலாம் அல்லது ஒரு சத் குருவின் வழிகாட்டுதலால், அவரிடம் சென்று கலந்து விடும்படியாகவும்... அமையலாம். அது அவரவர்களின், ஆன்மீக முன்னேற்றத்தைப் பொருத்தது.
வெளி உலக வாழ்வின் தேடலுக்கு, 'அறிவு' தான் முதல் படியாகிறது. அந்த அறிவு தேடலும் அவரவர்களின் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றத்தைக் கொடுக்கிறது. அது உலக வாழ்வின் மகிழ்ச்சிக்காக இருக்கும் போது, அத்துடன் முடிந்து விடும் தேடல்... அது தொடர் அறிவுத் தேடலாக தொடரும் போது, ஞானத்தில்தான் முடிவடைகிறது.
இவ்வாறு, உள் வாழ்வின் தேடலும்... உலக வாழ்வின் தேடலும்... ஞானத்தை நோக்கியதாக இருந்தாலும், அதில் வெற்றி பெறுவது, நமது முயற்சியில்தான் இருக்கிறது. அதைத்தான், ஒவ்வொருவரது 'ஜாதகச் சித்திரத்திலும்', 'கேது பகவானின்' அமைவு சுட்டிக் காட்டுகிறது.
உதாரணமாக, அறிவுத் தேடலில் ஈடுபட்ட ஒருவர், அதன் உச்சத்தில் நின்று தவிக்கும் போது, அவர் ஓய்வாக குளியறையில் குளித்துக் கொண்டிருக்கும் வேளையில்... அவருக்கு உள்ளேயிருந்து தானாக வெளிப்பட்டு பூரணமாகிறது. ஆனந்தத்தில் திளைத்தவர்... தன்னிலை மறந்து... அரை குறை ஆடையுடன்... 'யுரேகா, யுரேகா' (கண்டு கொண்டேன்) என்று ஓடி வந்த வரலாறை.. நாம் அறிவோம். இதுதான், அறிவுத் தேடலின் முடிவில் வெளிப்படும் ஞானத்தின் வெளிப்பாடு.
அதுவே, உள் வாழ்வின் தேடலில் ஈடுபட்ட ஒருவர், அதன் பயிற்சியின் உச்சத்தில் நின்று தவிக்கும் போது, அவர் எதிர்பார்க்காத வேளையில், அந்த 'அருளாற்றல்' தானாக வெளிப்பட்டு பூரணமாகிறது. ஆனந்தத்தில் திளைத்தவர்... தனது ஆடை முதல் அனைத்தையும் துறந்து... இடைக் கச்சையுடன் மட்டும் தனது எஞ்சிய வாழ்வை பூரணமாக்கிய வரலாறையும் நாம் அறிவோம். இதுதான். உள் வாழ்வின் தேடலின் முடிவில் வெளிப்படும் ஞானத்தின் வெளிப்பாடு.
அறிவுத் தேடலின் முயற்சியில் ஞானத்தை அடைந்தவரை 'விஞ்ஞானி' என்றும்... பக்தியின் வழியான தேடலில் ஞானத்தை அடைந்தவரை 'ஞானி' என்றும்... அழைக்கிறோம்.
இவ்வாறு, ஒருவரை 'ஞானியா... ?' அல்லது 'விஞ்ஞானியா... ?' என்று மட்டுமல்ல... அந்தப் பாதைகளில் எதைத் தேர்ந்தெடுக்கிறார்... ? என்பதையும்... 'கேது பகவான்தான்' சுட்டிக் காட்டுகிறார். அதனால்தான், அவரை 'ஞானக் காரகன்' என்று அழைக்கிறது 'ஜோதிடக் கலை'.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment