Monday, September 30, 2019

சிவ சக்தி அம்மையாருக்கான பாமாலை சமர்ப்பணம்

'சிவ சக்தி அம்மையாருக்கான'... பாமாலை சமர்ப்பணம் :





( ஏறத்தாள 16 வருட ஆத்ம ஞான பாதையின் வழி நடத்துதல்களுக்குப் பின்... தாயாரின் அனுக்கிரகத்தினால்... 28.8.2019 அன்று மனதில் உருவான ஒரு பாமாலை. )

ஆதியும் அந்தமும் இல்லா ஜோதியே
அருணையில் அசலமாய் அமர்பவள் நீயே...
அடிமுடி அறிந்திடா அடியவர் மனதினில்
அருந்தவ தபசியாய் உறைபவள் நீயே...               ( ... ஆதியும் )

வினைகளின் சுமையை சுமந்திடும் அடியவர்
தொடர்ந்திடும் பிறவியின் தொடர் அறுப்பாயே...
இருளினில் தனிமையில் தவிப்பவர் மனதினில்
உள்ளொளியாக ஒளிர்பவள் நீயே...                        ( ... ஆதியும் )

புலன் வழியாக புறம் செல்லும் மனதினை
அகத்திலிருந்து இழுப்பவள் நீயே...
மனத்தினில் தோன்றும் வினைகளின் விளைவை
முளைவிடும் முன்னே முறிப்பவள் நீயே...       ( ... ஆதியும் )

கடமைகள் யாவும் கடந்திங்கு போக
கருவியாய் என்னை மாற்றிடு தாயே...
தாமரை போலே நிரினில் வாழும்
நிலையதை எனக்கு அருளிடு நீயே...                    ( ... ஆதியும் )

உள்ளொளி காட்டி உணர்வினை ஊட்டி
இருமையை அழிக்கும் அரும் பெரும் சுடரே
நான் என்பதழிந்து தான் என்பதாகி
தன்னுள் நிலைக்கும் நிலையருள்வாயே...        ( ... ஆதியும் )

அருணையின் ஜோதி நீ... ஆத்ம ஸ்வருபிணீ...
பர்வத வர்த்தினீ... மேருவின் சக்தி நீ...
நினைத்ததும் முக்தியை அளித்திடும் மலைதனில்
நிலைத்திடும் சிவனின் சக்தியும் நீ...

                                                                      ஸாய்ராம்.





ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 22. 'திருமணப் பொருத்தங்களும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 5. 'ஜாதகப் பொருத்தம்'

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 22. 

'திருமணப் பொருத்தங்களும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 5. 

'ஜாதகப் பொருத்தம்'

'ஜாதக ரீதியான பொருத்த முறைதான்' சிறந்தாக இருக்க முடியும்... காரணம் :

- ஒவ்வொருவருக்கும் 'தனித்தனியான ஜாதகம்' இருப்பது.

ஆண், பெண் இருவருக்கான ஜாதகங்களை 'திருமணப் பொருத்தம்' இருக்கிறதா...? என்று ஆய்வதற்கு முன்... கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை :

- இரு ஜாதகங்களையும் முதலில் தனித்தனியாக, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

- ஆய்வுக்கு எடுக்கும் ஜாதகத்தின் வயது... தசா-புத்தி-அந்தரம், இவற்றைக் கணித்துக் கொள்ள வேண்டும்.

- இராசி, நவாம்ஸம் அடங்கிய ஜாதக ஆய்வில்... ஜாதகருக்கு திருமணத்திற்கு ஏற்ற தசாவோ , புத்தியோ அல்லது அந்தரமோ நடக்கிறதா...? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

- 7 ஆம் அதிபதியின் காலம், 7 ஆம் அதிபதியுடன் தொடர்புடைய திரிகோணாதிபதிகளின் காலம், இவற்றின்... தசாவோ, புத்தியோ அல்லது அந்தரமோ நடப்பில் இருப்பது உத்தமம்.

- ஆண் ஜாதகருக்கு, லக்னம், குடும்பம், பூர்வம், களத்திரம், ஆயுள் மற்றும் ஜீவனம்... ஆகிய ஸ்தானங்களின் நிலைகளை ஆய்ந்து... அதன் நிலைகள் எவ்வாறு அமைந்திருக்கிறது...? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

- பெண் ஜாதகருக்கு, லக்னம், குடும்பம், தைர்யம், சுகம், பூர்வம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம்... ஆகிய ஸ்தானங்களின் நிலைகளை ஆய்ந்து... அதன் நிலைகள் எவ்வாறு அமைந்திருக்கிறது...? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இந்த 'அடிப்படை' நிலைகளின் ஆய்வுகள்தான், ஜாதக பொருத்த முறையின் மூலமாகக் கொள்ளப்படும்.

இதனடிப்படையில்... இரு ஜாதகங்களுக்கும், 'பொருத்தம்' என்ற நிலையில் எவ்வாறு அணுகுவது...?

- இரு ஜாதகங்களின் வயதுகளை ஒப்பிட்டுக் கொள்வது. உதரணமாக ஆணுக்கான வயது... பெண்ணை விட சற்றுக் கூடுதலாக இருப்பின் உத்தமம்.

- இரு ஜாதகங்களின் தசாக்கள். ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரது நடப்பு தசாக்காலம், அதாவது திருமண பொருத்தம் பார்க்கும் வேளையில்... திரிகோணமாகவோ, கேந்திரமாகவோ, நல்ல ஆதிபத்தியத்தில் அமைந்த கிரகத்தின் தசாவாகவோ இருப்பது உத்தமம். அந்த தசாக் காலம், இருவருக்கும் 5 வருடமாவது, தொடர் திருமணவாழ்வில் சுபமாக இருப்பது... இனிமையான மண வாழ்வுக்கு ஏதுவாக இருக்கும்.

- இருவரது லக்னமும் ஒன்றுக்கொன்று... திரிகோணமாகவோ, கேந்திரமாகவோ, பண பரமாகவோ இருப்பது உத்தமம்.

- இருவரது இராசிகளும் ஒன்றுக்கொன்று... திரிகோணமாகவோ, கேந்திரமாகவோ, பண பரமாகவோ இருப்பது உத்தமம்.

இந்த 'அடிப்படை அம்ஸங்கள்' ஒத்திருந்தால்தான்...இரு ஜாதகங்களையும் ஆழ்ந்த அணுகுமுறைக்குள் கொண்டு செல்ல வேண்டும்.

அந்த ஆழ்ந்த அணுகுமுறையை... இறைவனின் அருளால் அலசி ஆய்வோம்... வரும் பகுதிகளில்,

ஸாய்ராம்.


Saturday, September 28, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 21. 'திருமணப் பொருத்தங்களும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 4. 'ஜாதகப் பொருத்தம்'

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 21.

 'திருமணப் பொருத்தங்களும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 4. 

'ஜாதகப் பொருத்தம்'

நாம் ஏற்கனவே விவரித்த படி... 'இல்வாழ்வு' ஜீவர்கள் கடந்து போக வேண்டிய 'வாழ்வியல் கடமை' என்ற நிலை மாறி... அது ஒரு 'சுகத்தையும்... இடைவிடா மகிழ்வையும்...' தேடும் ஒரு வாய்ப்பு, என்பதான எதிர்பார்ப்பாக மாறியிருப்பதனால்...

1. இன்றைய சூழலில்... புரதான முறையிலான 'பெயர் பொருத்த முறையில்' இதற்குத் தீர்வு காண முடியாது.

ஏனெனில்... தற்போது சூட்டப் பட்டுக் கொண்டிருக்கும் பெயர்களைக் கொண்டு 'குல - குடி - குடும்பம் - குலதெய்வம்' என்பதை நிர்த்தாரணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

2. மற்றொரு முறையான 'நட்சத்திரப் பொருத்த முறையிலும்' இதற்கான தீர்வை அளிக்க முடியாது.

ஏனெனில்... உலக மாந்தர் எண்ணிக்கை 700 கோடியைத் தாண்டி விட்டது. அதில் நமது மாநிலத்தின் மக்கள் தொகை 7 கோடியைத் தாண்டி விட்டது. நமது மாநிலத்தில் மட்டும், ஏறத்தாள 25 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள்... ஒரே நட்சத்திரத்தில் உலவ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

25 லட்சத்தில் இருக்கும் ஒரு நபர்... மிகுதி இருக்கும் 6. 3/4 கோடியில்... ஒரு வரனைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் தனக்குப் பொருந்துவதாகக் கொண்டாலும்... அதுவும் 25 லட்சத்திற்குள்தான் இருக்கும். இது... 'ஒரு வைக்கோலுக்குள் ஊசியைத் தேடும் நிலைதான்'.

இந்த 'நட்சத்திரப் பொருத்த முறையிலும்'... 'இதுதான் உங்களுக்கான வரன்...' என்பதை உறுதியிட்டுக் கூற முடிவதில்லை. ஒரு வரனுக்கு வரும் 10 ஜாதகங்களை 'நட்சத்திர ரீதியான பொருத்த முறையில்' இணைக்க முற்படும் போது... 3 அல்லது 4 ஜாதகங்களாவது பொருந்தி வரும் வாய்ப்பு கூடி வரும். மீண்டும் அதில் எதைத் தேடுவது என்ற குழப்பங்கள்தான் மிஞ்சி நிற்கும்.

அப்போது... நட்சத்திர ரீதியான பொருத்த முறைகளை பின் தள்ளி... வரனின் 'பொருளாதாரம்... செல்வ செழிப்பு... வசதியான வாழ்வு...' என்பவைதான் முன் வந்து நிற்கிறது.

இந்த ரீதியான பொருத்த முறைகளால்... தவறான 'எதிர்பார்ப்புகள்' கொண்ட மாந்தர்களைத் தட்டி எழுப்பி... சரியான பாதைக்கு இட்டுச் செல்ல முடிவதில்லை.

இந்த சூழலில்... நமக்குத் தேவை ஒரு சரியான 'பொருத்த முறை'. அது ஒரு வரனுக்கு வரும் அத்தனை ஜாதகங்களிலிருந்தும்... 'ஒரே ஒரு' ஜாதகத்தை மட்டும்தான் பொருந்துகிறது... என்று,எடுத்து வைக்க வேண்டும். அதற்கான வலுவான காரணங்களையும் கூற வேண்டும்.

அந்த முறை... 'ஜாதக ரீதியான பொருத்த முறை' தான்.

இனி வரும் பகுதிகளில்... 'ஜாதக ரீதியான பொருத்த முறையை' எவ்வாறு கையாளலாம்... என்பதை அலசி ஆய்வோம்... இறைவனின் அருளால்.

ஸாய்ராம்.


Friday, September 27, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 20. 'திருமணப் பொருத்தங்களும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 3. 'ஜாதகப் பொருத்தம்'

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 20. 

'திருமணப் பொருத்தங்களும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 3.

'ஜாதகப் பொருத்தம்'

'ஜாதகப் பொருத்த முறையை' ஆய்வதற்கு முன்... ஜீவ வாழ்வைப் பற்றிய அடிப்படை சூட்சுமங்களைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு ஜீவனின் பிறப்பிலேயே அதன் தாய், தந்தை, உடன் பிறப்பு, உறவு என அனைத்தும்... அதனதன் 'கர்ம வினைகளுக்கேற்ப' தீர்மானிக்கப் பட்டுவிடுகிறது.

ஜீவனின் வாழ்வு நிலையின் போதுதான் அது ஏற்படுத்திக் கொள்ளும் 'தொடர்பு... துணை' என்ற அமைவு ஏற்படுகிறது. இதுவும் 'கர்ம வினைகளின்' அடிப்படையில்தான் ஏற்படுகின்றன. ஆனால்... அதை தீர்மானிக்கும் இடத்தில் இந்த ஜீவன் இருக்கிறது. அதுதான் இறைவன் இந்த 'மனித இனத்திற்கு' மட்டும் கொடுத்திருக்கும் 'வரமும் - சாபமும்'... 'CHOICE' ம் CHANCE' ம்'.

இந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளாமலேயே... ஜீவனால், தனது வாழ்வை கடந்து விட முடியும். ஆனால் தனது 'கர்ம வினைகள்' என்ற முடிச்சை அவிழ்க்க 'இந்த இல்வாழ்வு' என்ற 'வாழ்வியல் முறை' சிறந்தது என்பதால் அதை ஜீவர்கள் ஏற்று... அதன்வழி நடந்து... கடமைகளைப் பற்றற்று முடித்து... கர்ம வினைகளைக் களைந்து... 'இறைவனின் திருவடியில்' கலந்து விடும் வாய்ப்பாகக் கருதினார்கள்.

சென்ற பிறவியின் நெருங்கிய தொடர்புகளும்... அதனுடனான நமது பந்தமும்தான், இப்பிறவியில் அது ஒரு 'நட்பாகவோ' அல்லது 'வாழ்க்கைத் துணையாகவோ' அமைகிறது.

இந்த இணைவு 'நட்பாக' அமையும் போது அதில் ஒரு 'பந்தம்' இருக்கிறது... ஆனால் 'பற்று' இருப்பதில்லை. அதனால் தான் அந்த 'பந்தத்தில்' எப்போதும் ஒரு 'சுகமும், மகிழ்வும்' இருக்கிறது. இணையும் போதும்... கால சூழல்களால் பிரியும் போதும்... அதனால் விளையும் மகிழ்ச்சியும்... துயரமும்... ஒரு கட்டுக்குள் இருக்கிறது. இது ஒரு 'Commitment' இல்லாத பந்தம்.

அதுவே இந்த இணவு 'ஒரு இழ்வாழ்வுத் துணையாக' அமையும் போது... அது ஒரு 'பந்தமாகவும்'... பெரும்  'பற்றுக்குள்ளும்' நம்மை இழுத்துச் செல்கிறது. துணை என்னும் 'பந்தம்' என்றும் நம்மை விட்டும் பிரிய முடியாத 'பற்றாக' மாறும் போதுதான்... அது ஒரு  'Commitment' ஆக மாறிவிடுகிறது. இந்த உறவால் விளையும் 'மகிழ்வும்' ... 'துயரமும்' அந்த ஜீவனின் வாழ்வின் நிலையையே புரட்டிப் போட்டு விடுகிறது.

இன்றைய சூழலில்... நாம் ஏற்கனவே விவரித்த படி... 'இல்வாழ்வு' ஜீவர்கள் கடந்து போக வேண்டிய 'வாழ்வியல் கடமை' என்ற நிலை மாறி... அது ஒரு 'சுகத்தையும்... இடைவிடா மகிழ்வையும்' தேடும் ஒரு வாய்ப்பு என்பதான, 'எதிர்பார்ப்புகள் நிறைந்த' நிகழ்வாக மாறியிருக்கிறது.

இந்தக் 'கருத்தியலை' மாற்றுவதற்கும்... அந்த 'எதிர் பார்ப்புகள்' எப்போதும் வாழ்வியலில் அமைந்து விடுவதில்லை என்ற உண்மையை உணரவைப்பதற்கும்... 'ஜாதகப் பொருத்தம்' என்ற வழிமுறையன்றி பிரிதொரு உகந்த வழிமுறை நம் வசம் இல்லை.

வரும் பகுதிகளில்... இந்த 'ஜாதகப் பொருத்த முறையின்' சூட்சுமங்களை... 'இறைவன் அருளினால்'... தொடர்ந்து அணுகுவோம்.

ஸாய்ராம்.


Thursday, September 26, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 19. 'திருமணப் பொருத்தமும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 2. 'நட்சத்திரப் பொருத்தம்'

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 19.

'திருமணப் பொருத்தமும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 2.

'நட்சத்திரப் பொருத்தம்'

ஒரே சமூகத்தைச் சார்ந்து... குல வழியேயான திருமண அமைவுகளைப் பார்த்தோம். அதற்குப் 'பெயர் பொருத்தமே' போதுமானதாக இருந்தது. ஏனெனில் வரன்கள் யாவும் ஒன்றுக் கொன்று அறிமுகமானதாகவும்... உறவுக்குள் அமைந்ததாகவும் இருந்தது.

ஒரே சமூகத்தில்... குலங்கள் வேறுபட்டு... 'அறிமுகம் இல்லாத' குடும்பத்தினரிடையே... திருமண வாய்ப்பு நிகழும் போதுதான்... வரன்களைப் பற்றிய ஆய்வும்... அவர்களது திருமண வாழ்வு பற்றிய எதிர்பார்ப்பும்... எதிர்கால பயமும்... ஒன்று சேர ஆரம்பித்தது.

அந்தக் காலத்தில் மிகக் குறைந்த வயதிலேயே... திருமணம் நிகழ்த்துவதாக இருந்ததால்... இரு வரன்களின் 'நட்சத்திரங்களைப்' பற்றிய ஒரு ஒப்புமையை... ஆய்வாக எடுத்துக் கொண்டு... பெண்ணின் நட்சத்திரத்தை மூலமாகக் கொண்டு... அதையொட்டி... ஆணின் நட்சத்திர வழியேயான 'பொருத்தம் பார்க்கும் முறை' நடைமுறைக்கு வந்தது.

அந்த 'நட்சத்திரப் பொருத்தத்தின்' மூலம்... 'இராசிகளும்', 'இராசி அதிபதிகளும்' மட்டுமே ஆரம்பத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அது படிப்படியாக வளர்ந்து... வரன்களின் எதிர்கால வாழ்வு நிலைகளைக் குறிக்கும்... 'நீண்ட மண வாழ்வு... ஒற்றுமை... மகிழ்வான மணவாழ்வு... குழந்தைப் பேறு'... என 8, 10, 12, 14, 16 என பொருத்தங்களின் எண்ணிக்கை கூடுவதில் கொண்டு சேர்த்தது.

இருப்பினும்... 'இராசிப் பொருத்தமும்'... 'இராசியாதிபதிகளின் பொருத்தமுமே'... தலையான பொருத்தமாகக் கொண்டே... பல சூழல்களில் 'திருமண ஒப்பந்தம்' நடந்தேறியது.

மிகக் குறைந்த எதிர் பார்ப்புகளும்... நிறைவான வாழ்வு முறையும்... இருந்த அந்தக் கால சூழல்களில்... கூட்டுக் குடும்பமும்... உறவினர்கள் மத்தியில் வாழும் வாழ்க்கை சூழலும்... ஒரு சமூகக் கட்டுப் பாடும்... இருந்ததால்... திருமணமும்... அதையொட்டிய வாழ்வு நிலையும் சுமூகமாவே இருந்து வந்தது.

காலத்தின் சூழல் மாற ஆரம்பித்தது. பூர்வீகத்தை விட்டு பல சூழல்களில் குடும்பங்கள்... இடம் விட்டு இடம் நகர்ந்தன. பொருளாதாரம்... வாழ்க்கைச் சூழல்... பிழைப்பு... குழந்தைகளின் எதிர்காலம்... வேலை வாய்ப்பு... என 'காலச் சூழல்களுக்குள்' சிக்கிக் கொண்ட குடும்பங்கள்... எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து தமது கிளைகளைப் பரப்ப ஆரம்பித்தன.

உறவுகள் எல்லாம் ஒன்றையொன்று பார்ப்பதும்... கொண்டாடுவதும்... மகிழ்ந்திருப்பதும்... ஊர்த் திருவிழாக்களிலும்... குடும்ப நிகழ்வுகளில் மட்டுமே என்றானது. ஒருவரை ஒருவர் நேரடியாக அறிந்து கொள்ளும் நிலை மாறி, ஒருவரை மற்றொருவர் 'செய்தித் துணுக்குகளாக மட்டுமே' அறிந்து கொள்ளும் சூழல் உருவானது.

காலத்தின் போக்குகளால்... ஆண்களுக்கு நிகராக பெண்களின் கல்வியும்... வேலை வாய்ப்பும்... அதையொட்டிய வாழ்வு நிலைகளும் மேம்பட ஆரம்பித்தன. உறவுகள் பல இடங்களில் சிதறிப் போனதால்... அவர்களின் வாழ்வு நிலைகளைப் பற்றிய அறிதல்கள் குறைந்து போயின.

குலம்... குடி... குடும்பம்... என வாழ்ந்து வந்த சமூகங்களிடையே... காலத்தின் தேவையைக் கருதியும்... வரன்களின் விருப்பங்களுக்கு ஏற்பவும்... திருமணங்கள் நடக்க ஆரம்பித்தன.

குறைந்த வயதில் ஆரம்பித்த திருமணம் தற்போது ஆணுக்கு 21 லிருந்து  40 வயது வரை தொடர்கிறது. 18 வயதில் ஆரம்பித்த பெண்ணின் திருமணம் தற்போது 35 வயது வரையிலும் தொடர்கிறது. 'திருமணம்' ஒரு 'இழ்வாழ்வின் கடமை' என்ற நிலை மாறி... 'சுக வாழ்வின் அங்கம்' என்ற நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டது. பொருளாதார சூழல்களை காரணமாக்கி... திருமணத்தை... தள்ளி வைக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு 'சுகமான' நிகழ்வாக இருந்த திருமண வாழ்வு... ஒரு 'சுமையாக' கருதப்படும் நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டது.

இந்த நிலையில்... 'குல ரீதியான பெயர் பொருத்தம்'... 'நட்சத்திர ரீதியான பொருத்தம்'... இவற்றைத் தாண்டி... 'ஜாதக ரீதியான பொருத்தம்' என்பது மிக முக்கியமான 'பொருத்த முறையாக' மலர்ந்திருக்கிறது.

அந்த 'ஜாதகப் பொருத்த முறையைப்' பற்றி வரும் பகுதியில் அலசி ஆய்வோம். இறைவனின் அருளினால்.

ஸாய்ராம்.




Saturday, September 14, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 18. 'திருமணப் பொருத்தமும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 1. 'பெயர் பொருத்தம்'

ஜோதிடமும் அதன் சூட்சுமங்களும் : பகுதி 18.

'திருமணப் பொருத்தமும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 1.

'பெயர் பொருத்தம்'

நமது 'சனாதன தர்ம வாழ்வியல்' முறையில்... ஒவ்வொரு ஜீவனும் கடந்து போக வேண்டிய 'வாழ்வியல் முறைகள்' என்ற 'நான்கு புருஷார்த்தங்களை'... அறம், பொருள்,இன்பம்,வீடு என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

இதைக் கடந்து போகும் 'வாழ்வின் நிலைகளை', பிரம்மச்சர்யம்... இல்வாழ்வு ... வானப்பிரஸ்தம்... சந்யாசம்' என்ற வாழ்வியல் முறைகளாக வரையறுத்திருக்கிறார்கள்.

இதில்... பிரம்மச்சர்யம் - வானப்பிரஸ்தம் - சந்யாசம்... என்ற வரிசையிலேயே ஒரு ஜீவன் தனது வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் இவ்வாறான வரிசை... அந்த ஜீவனின் 'கர்ம வினைக் கட்டுகளை' அவிழ்த்துவிடுமா...? என்பது சந்தேகம்தான். ஏனெனில் அதற்கான 'புண்ணிய வினைகளை' அந்த ஜீவன் இந்தப் பிறவியில் பெற்றிருக்க வேண்டுமே...!
பெற்றிருக்காவிட்டால், இந்த ஒவ்வொரு நிலையிலும் சறுக்கல் ஏற்படும்.

ஆனால், 'இல்வாழ்வு' என்ற நிலையில்... 'கர்ம வினைகளின் ' பூரணத்துவத்தை அடைந்தே ஆகவேண்டும். அதனை அனுபவித்துத்தான் கடந்தும் போக வேண்டும். கடந்து, அனுபவிக்காமல் 'கர்ம வினைகள்' களைந்து போவதில்லை என்பதுதான்... வாழ்வு முறையின் அடிப்படைத் தத்துவமே.

ஆதலால்தான்... பிறவியின் தொடராக... இனத்தை பெருக்கும் ஒரு வழிமுறையாக... கர்ம வினைகளை களைந்து போகும் மார்க்கமாக... இந்த 'இல்வாழ்வு' என்ற வாழ்வு முறை... பெரும்பாலாகக் கடைபிடிக்கப் படுகிறது.

ஆரம்பக் காலங்களில்... ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு இனப்பெருக்கத்துக்காக மட்டுமே இருந்தது. காலத்தின் மாற்றமும்... வளர்ச்சியும்... மனித இனத்தை நாகரீக வளர்ச்சியை நோக்கி நடத்திக் கொண்டு வந்தது. அப்போது 'சமூகக் கட்டமைப்பு' உருவானது. அதற்கான விதிகளும்... கட்டுப்பாடுகளும் கடைப்பிடிக்கப்பட்டன. இருந்தாலும், ஆரம்பக் காலங்களில் இந்த இணைவான 'திருமணம்' உறவுகளுக்குள்தான் நடந்தது.

உறவுகளுக்குள் நடந்த திருமணங்களில்... அது 'ஒரு குடும்பத்துக்குள்ளான' அத்தை மகன் - மகள் ; மாமா மகள் - மகன் ; அக்கா மகள் - மகன் ; திருமணங்களாக அமையும் பக்ஷத்தில் அதில் 'ஜாதகத்தின்' பங்களிப்பு இல்லாமல்தான் இருந்தது.

ஒரே குடும்பத்துக்குள்ளான திருமணம் என்பதிலிருந்து... உறவுகளுக்குள்ளான திருமணம் என்று விரிந்த போது... 'குல தெய்வத்தை' அடிப்படையாகக் கொண்டும்... மணமக்களின் 'பெயரின் பொருத்தங்களை' அடிப்படையாகக் கொண்டும் திருமணங்கள் நிச்சியக்கப்பட்டன.

உதாரணமாக 'சிவ அம்சமான' குலதெய்வ வழிபாட்டு வரனுக்கு, 'விஷ்ணு அம்ஸமான' குல தெய்வ வழிபாட்டு வரன் நிச்சியக்கப்பட்டது. அதற்கான விதைகள் சமூகக் கட்டமைப்புகளில் ஆரம்ப காலத்திலேயே விதிக்கப்பட்டும் இருந்தது.

 'சிவ அம்சத்தில்' பிறந்திருக்கும் ஒரு ஆணுக்கு சிவ அம்சமான... 'பரமேஸ்வரன், சிவலிங்கம்' போன்ற பெயர்களை சூட்டினார்கள். பெண்ணாக பிறந்திருப்பவருக்கு... அவர் எதிர் காலத்தில் 'விஷ்ணு குலத்திற்கு' வாழச் செல்வதால்... அந்தக் குலத்திற்கேற்ப... 'மஹாலக்ஷ்மி, ரெங்கநாயகி' போன்ற பெயர்களைச் சூட்டினார்கள்.

அதுபோல, 'விஷ்ணு அம்சத்தில்' பிறந்திருக்கும் ஒரு ஆணுக்கு விஷ்ணு அம்சமான... 'ஸ்ரீனிவாசன், ரெங்கநாதன்' போன்ற பெயர்களை சூட்டினார்கள். அந்தக் குலத்தில் பிறக்கும் பெண்... எதிர்காலத்தில் 'சிவ குலத்திற்கு' வாழச் செல்வதால்... அந்த குலத்திற்கேற்ப... 'பரமேஸ்வரி, லிங்கேஸ்வரி' போன்ற பெயர்களை சூட்டினார்கள்.

'பெயர் பொருத்தத்தின்' வழியாகவும்... 'குலதெய்வ' வழியாகவும் இந்த வரன்கள் இணையும் போது...

'சிவ குலத்தில்' பிறந்திருந்த 'பரமேஸ்வரன், 'விஷ்ணு குலத்தில்' பிறந்திருந்த 'பரமேஸ்வரியுடனும்'...'சிவலிங்கம்' 'லிங்கேஸ்வரியுடனும்' இணைந்தார்கள்.

அதுபோல... 'விஷ்ணு குலத்தில்' பிறந்திருந்த 'ஸ்ரீநிவாசன்' 'சிவ குலத்தில்' பிறந்திருந்த 'மஹாலக்ஷ்மியுடனும்'... 'ரெங்கநாதன்', 'ரெங்கநாயகியுடனும்' இணைந்தார்கள்.

இந்த அருமையான 'சமுக வழக்கம்' காலத்தின் மாற்றத்தினாலும்... அதை கடைப்பிடிப்பவர்களின் அறியாமையினாலும்... சிறிது, சிறிதாக கைவிடப்படும் போதுதான்... 'ஜோதிடத்தின்' வழியேயான 'ஜாதகப் பொருத்த முறைகள்' நடைமுறைக்கு வந்தது.

ஜோதிடத்தின் வழியேயான... இந்த 'ஜாதகப் பொருத்த முறைகள்' பற்றியும்... அதன் வழியேயான வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் பற்றியும்... இன்றைய நிலையில்... இந்த பொருத்த முறைகளில் கடைப்பிடிக்க வேண்டிய 'சூட்சுமங்கள்' பற்றியும் ஆய்வோம்... இறைவனைன் அருளால்...

ஸாய்ராம்.


Friday, September 6, 2019

ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவான் - இந்த மூர்த்தத்தின் சூட்சுமம் - பகுதி 3 :

ஸ்ரீ தக்ஷ்ணாமுர்த்தி பகவான் - இந்த மூர்த்தத்தின் சூட்சுமம் - பகுதி 3 :

'சத்துவ குணத்தின்' சாட்சியாக இருக்கும் 'சிவபெருமானின்' 64 மூர்த்தங்களின் ஒன்றான... 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவான்' ... ஆல மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார். அவர் காட்சிக் கொடுப்பதற்கான காரணமான 'சனாதன முனிவர்கள்' அவரின் பாதத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார்கள்.

'இறை அருள் நிலையைக்' குறிக்கும் 'சின் முத்திரை' மற்றும் 'அகங்காரம்' என்ற நிலையை அழிக்கும் வண்ணமாக... குருவின் திருவடியில் அமிழ்ந்து இருக்கும்... 'முயலகன்' பற்றிய நிலைகளை ஆய்ந்தோம்.

இப்போது அவர் அமர்ந்திருக்கும் 'ஆலமரத்திற்கும்'... அவருக்குமான சம்பந்தம் பற்றிய நிலைகளை ஆய்வோம்.



                                     'கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
                                        ஆறு அங்கம் முதல் கற்ற கேள்வி
                                    வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
                                        பூரணமாய் மறைக்கும் அப்பாலாய்
                                    எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை
                                             இருந்து காட்டி சொல்லாமல்
                                             சொன்னவரை நினையாமல்'
                                     நினைந்து பவத் தொடக்க வெல்வாம்.'

என்ற பாடலில்... 'கல்லாலின் புடையமர்ந்து...' என்ற வரியில், குறிப்பிடப்படும் ஆலமரத்தின் சூட்சுமம்தான் என்ன...?

வேதத்தில்... ஒரு ஜீவனின் தொடர் பிறவிகளுக்கான மூலமான 'கர்ம வினைகளை' குறிப்பிடும் போது, அதை அந்த ஜீவனுக்குள்ளிருந்து வளரும் 'ஒரு ஆலமரத்திற்கு' ஒப்பாக வருணிக்கப்படுகிறது. அது ஒரு தலைகீழான ஆலமரம். அதன் வேர்கள் அந்த ஜீவனின் சிரசுக்குள் இருப்பதாக அதன் வருணனை தொடர்கிறது.

ஒரு ஜீவனின் வாழ்வில் அது அந்தப் பிறவியில் சுமந்து கொண்டு வரும் கர்மவினைகளையும் (பிராரப்த கர்மா)... அதன் மொத்த வினைகளின் தொகுப்பான கர்ம வினைகளையும் (சஞ்சித கர்மா)... இந்தப் பிறவிகளில் எதிர்கொள்ளும் வினைகளின் விளைவுகளுக்கான கர்ம வினைகளையும் (ஆகாமிய கர்மா) சுமந்து கொண்டு, இந்தப் பிறவி என்னும் பெரும் கடலைக் கடந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கர்ம வினைகளின் தொகுப்பான மூலத்தைத்தான் (சஞ்சித கர்மா)... தலைக்குள் இருக்கும் வேர்களாகவும்... அதன் இந்தப் பிறவிக்கான வினைகளின் தொகுப்பை (பிராரப்த கர்மா) மரத்தின் மரம் மற்றும் அதன் கிளைகளாகவும்... இந்தப் பிறவியில் நாம் அனுபவித்துச் சேர்க்கும் வினைகளின் தொகுப்பை (ஆகாமிய கர்மா) புடை விட்டு பரப்பும் மொட்டு... மலர்... காய்கள்... கனிகள் எனவும் வருணிக்கிறது வேதம்.

இவ்வாறு என்றுமே அழிக்க முடியாது பெருகிக் கொண்டும்... அதன் விழுதுகளை ஊன்றி நிலைத்து நிற்கும்... பிரமாண்ட மரமாகத் தோன்றினாலும்... அதன் தோற்றம் உலகம் என்ற மாயையில்தான் நிலை கொண்டிருக்கிறது. அதன் வேர்களை உள்ளேயே அழித்துவிட்டால்... அந்த மரத்தின் மூலம் அழிந்துவிடுவதால்... அந்த மரமே வேரொடு சாய்ந்து விடும்.

அதை வேரோடு அழித்து விடும் அந்த மூலத்தில்தான்... ஸ்ரீ தக்ஷ்ணா முர்த்தி பகவான் அமர்ந்திருக்கிறார்.

இந்த 'ஞான சொருபமான மூர்த்தத்தின்' ஒரு சிறு துளி ஞானத்தை இந்த மூன்று சிறு பகுதிகளில் பகிர்ந்து கொள்ள முடிந்தது... அவரின் அருள் கருணையன்றி வேறேது...!

ஸாய்ராம்.

ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவான் - இந்த மூர்த்தத்தின் சூட்சுமம் - பகுதி 2 :

ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவான் - இந்த மூர்த்தத்தின் சூட்சுமம் - பகுதி 2:




'சத்துவ குணத்தின்' சாட்சியாக இருக்கும் 'சிவ பெருமானின்' 64 மூர்த்தங்களின் ஒன்றான... 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவான்'... ஆல மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார். அவர் காட்சி கொடுப்பதற்குக் காரணமான 'சனாதன முனிவர்கள்' அவரின் பாதத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார்கள்.

ஓசை தரும் 'உடுக்கு' ஒரு கையிலும்... அருள் ஜோதியை வெளிப்படுத்தும் 'ஜோதி' ஒரு கையிலும்... 'வேதச் சுவடிகள்' ஒரு கையிலும்... 'சின் முத்திரையைக்' காட்டிய படி ஒரு கையும் இருப்பதைக் காணலாம்.

'சின் முத்திரை'... இது இறைவனுடன் ஒன்றிய நிலை. 'சத்து... சித்து... ஆனந்தம்' என்ற ஜீவாத்ம நிலையில், 'இருப்பு' என்ற நிலையை உணர்த்தும் 'சித்தத்தில்தான்' இந்த ஜீவனின் இருப்பு வெளிப்படுத்தப்படுகிறது. சுட்டு விரல் சுட்டிக்காட்டுவது... 'சித்தத்தை'. மோதிர விரல் சுட்டிக் காட்டுவது... 'மனத்தை'. நடுவிரல் சுட்டிக் காட்டுவது... 'புத்தியை'. ஆள்காட்டி விரல் சுட்டிக் காட்டுவது... 'அஹங்காரத்தை'. பெருவிரல் சுட்டிக் காட்டுவது... இறைவனின் இருப்பையும்... அவன் தரும் ஆனந்தத்தையும்.

மனம் என்பது எழா நிலையில்... அதாவது தூக்கத்தின் போது... அப்போது 'மனம்'... 'ஆத்மாவில்' லயித்துப் போயிருக்கிறது. எப்போது விழிப்பு ஏற்படுகிறதோ... அப்போது மனதிற்கு ஒன்றும் புரியாது. தான் யார்... என்பது தெரியாமல் தவித்து நிற்கும். அந்த நிலையில் முதலில் தோன்றுவது...'நான்' என்ற நிலைதான். இந்நிலைக்குத்தான்... 'அகங்காரம்' என்று பெயர். 'நான்' இன்னார் என்று உணர்ந்த பின்தான்...சித்தம்... மனம்... புத்தி... இவை யாவற்றின் நிலையையும் மனம் அறிகிறது.

முதலில் தோன்றும் 'அகங்காரம்' என்ற 'நான்' என்பதன் நிலையை தோன்றாவண்ணம் செய்வதுதான்... ஜீவன் இந்தப் பிறவியில் செய்யக் கூடிய ஞான சாதனை. அது 'நான் யார்' என்ற விசாரிப்புத்தான். அந்த விசாரிப்பு என்ற தேடல்... மனதை அதன் முலமான ஆத்மாவில் கொன்டு போய் சேர்க்கும். அதைக் குறிப்பதற்காகவே... 'அகங்காரம்' என்ற ஆள்காட்டி விரலை... 'இறைவனின் இருப்பையும், அனந்தத்தையும்' சுட்டிக் காட்டும் பெருவிரலில் கொண்டு போய் சேர்த்து... ஒரு முத்திரையைக் காட்டியருள்கிறார்... குரு.

எப்போது அஹங்காரம் அழிந்து ஆத்மசடாக்ஷரத்தில் ஜீவன் லயித்தும் போகிறதோ... அப்போது, புத்தியோ... மனமோ... இல்லாத சித்தம் தெளிவாக இருக்கிறது... என்ற நிலையைக் குறிப்பதற்காகவே, ஆள்காட்டி விரல் வளைந்து பெரு விரலை நோக்கி வரும் பொது... ஏனைய மூன்று விரல்களும் தனித்துப் போய் விடுகின்றன. இந்த நிலைதான் 'தியானம்' என்ற 'ஞான விசாரத்தின்' இலக்கு.

இந்த இலக்கை ஒரு ஜீவன் அடைகிறபோது... அந்த ஜீவனின் அஹங்காரம் முற்றிலுமாக அழிந்து போவதைத்தான்... அவரின் காலுக்குக் கீழே மிதிபட்டுக்கிடக்கும்... 'முயலகன்' என்ற ரூபம் சுட்டிக் காட்டுகிறது.

அவரின் ரூபத்தில் அமைந்திருக்கிற... ஏனை சூட்சுமங்களைத் தொடர்ந்து பார்ப்போம்... அடுத்த பதிவில்.

ஸாய்ராம்.


ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவான் - இந்த மூர்த்தத்தின் சூட்சுமம் - பகுதி 1 :

ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவான் - இந்த மூர்த்தத்தின் சூட்சுமம் - பகுதி 1 :




சத்துவ குணத்தின் சாட்சியாக இருக்கும் 'சிவ பெருமானின்' அம்சமாக 64 மூர்த்தங்களை வகைப்படுத்துகிறது சைவம். அந்த மூர்த்தங்களில் ஒன்றுதான்... 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவானின்' ரூபம்.

எல்லா சிவாலயங்களிலும், பிரகாரத்தில் தெற்குமுகமாக அமைந்திருக்கும் ரூபம்தான்... தக்ஷ்ணாமுர்த்தி ரூபம். ஒரு ஆலமரத்தின் அடியில், தனது இடது காலைத் தூக்கி, வலது கால் மீது வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார். நான்கு திருக்கரங்களில், இரண்டு கரங்களில் உடுக்கு, ஜோதியோடும்... அடுத்த இரண்டு கரங்களில், ஒன்றில் வேதச் சுவடிகளும் மற்றொன்றில் 'சின் முத்திரையோடும்' காட்சி தருகிறார். அவரின் காலடியில் 'சனாதன முனிவர்கள்' நான்கு பேர்... ஆனந்த ஊணர்வோடு கூடிய நிலையில்... நான்கு விதமான நிலைகளில் இருப்பதையும் காணலாம்.

நவக்கிரகங்களின் அமைவிலும்... தெற்கு முகமாக அமைந்திருக்கும் ரூபம்தான் ... 'குரு பகவானின்' ரூபமாக வழிபடப்படுகிறது. ஆனால் நவக்கிரக 'குரு பகவானும்'... தெற்கு முகமாக, ஆலய பிரகாரத்தில் அமைந்திருக்கிற 'குரு தக்ஷ்ணாமுர்த்தியின்' அமைவும்... ஒன்றல்ல.

நவக்கிரக அமைவில் அமைந்திருக்கும் 'குரு பகவான்' நவக்கிரகங்களில் ஒருவர். பிரகாரத்தில் அமைந்திருக்கும் 'குரு தக்ஷ்ணாமூர்த்தி பகவான்' சர்வேஸ்வரரின் 64 ரூபங்களில் ஒன்றாகிறார்.

சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு 'பிரம்ம குமாரர்கள்' வேதங்கள், வேதத்தின் சிகரமான வேதாந்தங்கள் என்ற அனைத்து பிரம்ம ஆய்வுகளின் வழியாக பயணித்த பின்னரும்... 'ஆத்ம அனுபவம்' கைவராத நிலையில் கலங்கி நின்றனர். அவர்களது கலக்கத்தை நீக்கி... இந்தப் பாதையில்... அவர்களை அனுபவம் கைகூடியவர்களாக மாற்ற... அவரை 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவானிடம்' அனுப்புகிறார்... பிரம்ம தேவர்.

நிறைய கேள்விகளுடனும்... அதிக சந்தேகங்களுடனும்... 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தியின்' திருவடிக்கு வந்த போது... அவர், கண்களை மூடி, மௌனமாக, தவத்தில் ஆழ்ந்திருந்தார். வந்தவர்கள் நால்வரும்... அமைதியாக அவரின் திருவடியில் அமர்ந்துவிட்டனர். கண்களை மூடி... மௌனமாக அமர்ந்திருந்த அவர்களை, அவர்களுக்குள் இருந்து... உள் நோக்கிய வழியில்... 'ஆத்ம ஞானத்தை' நோக்கி வழி நடத்தி... அவர்கள் நால்வருக்கும் 'ஆதமானுபூதியை' அனுபவிக்க வைத்தார்... 'குரு தக்ஷ்ணாமூர்த்தி பகவான்'.

மிக நீண்ட நேரத்திற்குப் பின்... இந்த பிரபஞ்ச உணர்வுக்கு வந்த அந்த நால்வர் மனதிலும்... எந்த சந்தேகங்களும் இல்லை. எந்த கேள்விகளும் இல்லை. 'கைவல்ய நிலை' என்ற ஆத்மானுபவம் கிட்டிய நிலையில்... அந்த நால்வரும் பரமானந்த நிலைகளில்... அவரின் பாதங்களில் வீற்றிருக்கும் கோலங்களைத்தன்... நாம் அந்த ரூபத்தின் காலடியில் பார்க்கின்றோம்.

அவர்கள் நால்வருக்கும்... குருவாக இருந்து... 'தக்ஷ்ணாமூர்த்தி பகவான்' அவர்களுக்கு, காட்சி அளித்தைத்தான்... இன்றும் நாம்... சிவாலயங்களின், தென்முக பிரகாரத்தில் தரிசனம் செய்கிறோம்.

அவரின் ரூபத்தில் அமைந்திருக்கிற... ஏனைய சூட்சுமங்களை தொடர்ந்து பார்ப்போம்... அடுத்த பதிவில்...

ஸாய்ராம்.

Thursday, September 5, 2019

தாமரை மலரின் மீது இறைவன் எழுந்தருளியிருப்பதில் இருக்கும் சூட்சுமம்.

தாமரை மலரின் மீது இறைவன் எழுந்தருளியிருப்பதில் இருக்கும் சூட்சுமம்.

தாமரை மலர்வது சேற்றில்தான். ஆனால் அது சென்று சேரும் இடமோ... இறைவனின் திருவடி. இறைவனின் திருவடிக்கு 'திருவடிக் கமலம்' என்ற பெயரும் உண்டு. 'கமலம்' என்பது தாமரை மலரைக் குறிக்கும்.

ஓடும் நீரில் இல்லாமல்... சேர்ந்திருக்கும் நீரில்தான் தாமரை வளர்கிறது. சேர்ந்திருக்கும் நீர் நிலைக்குத்தான் 'குளம்' என்று பெயர். குளத்தின் அடிப்பகுதியில் மண்ணின் தன்மை மிகவும் இளகி... 'சேறு' என்ற நிலையில் இருக்கும். அந்த நிலையில்தான் அது தண்ணீரை உள் கொள்ளாமல்... குளத்தை ஒரு கொள்கலனாக வைத்திருப்பதற்கு உதவும்.

அந்த தண்ணீரின் மேல் பகுதியில் வளரும் பல நீர் வாழ் தாவர வகைகளில் ஒன்றுதான்... தாமரை.  ஏனைய நீர் வாழ் தாவரங்களிலேயே இப்படி ஒரு அழகான வண்ண மலரை விகசிக்க வைப்பதால்தான் இந்த தாமரையின் செடிக்கு ஒரு சிறப்பு.

இதன் தன்மையை ஆய்ந்தால்... தண்ணீரிலேயே வாழ்ந்தாலும்... தன் தேவைக்கு மேல் ஒரு சொட்டு நீரையும் தான் ஏற்றுக் கொள்வதில்லை. அதுமட்டுமல்ல... தன் மீதோ... தனது உறுப்பான இலைகளின் மீதோ... ஒரு சொட்டு நீரையும்... தக்கவைத்துக் கொள்வதும் இல்லை. குளம் நிறைந்து நீர் இருந்தாலும்... தன் தேவைக்கு அதிகமாக... ஒரு சொட்டு நீரை, உட்கொள்வதும் இல்லை... ஒட்ட வைத்துக் கொள்வதுமில்லை.

இந்தப் பற்றற்ற தன்மைக்கான பரிசுதான்... இறைவனின் திருவடி.

நமது மனமும் அது போலத்தான். எப்போது, நமது மனம் இந்த உலகம் என்ற நீர் நிலையில்... 'பற்று' என்ற நிலையில் சிக்கிக் கொள்ளாமலும்... 'பந்தம்' என்ற நிலையை ஒட்டிக் கொள்ளாமலும்... இருக்கும் 'பக்குவ' நிலக்கு உயர்கிறதோ... அப்போது மனம் என்ற மலர்... மலர்ந்து... தாமரை போல ஆகிறது. மனம் மலர்ந்து மலராகும் போது... அதில் தானாகவே வந்து அமர்ந்து விடுகிறான் 'பரம புருஷனான' பகவான்.

இந்த 'மனம் மலர்ந்து மலராகும்' நிலையைக் குறிப்பதற்காகவே... நாம் வழிபடும் 'இறைவனின் சித்திரங்களில்'... தாமரை மலரின் மீது இறைவன் அமர்ந்திருப்பதாகவும்... நிற்பதுவுமான... நிலைகளில் வழிபடுகிறோம்.

அதன் சூட்சுமம்...  நம் மனத்தில் இறைவன் எழுந்தருளியிருப்பதான நிலையின் வடிவமே.

ஸாய்ராம்.


Wednesday, September 4, 2019

மனம் என்பது என்ன ... பகுதி - 5.

மனம் என்பது என்ன ... பகுதி - 5.

இந்த மனதைக் கட்டுப்படுத்த முடியுமா... ?

முடியாது என்பதுதான் அனுபவம் கற்றுக் கொடுக்கும் பாடம். ஆனால் அதற்கான முயற்சிகள் காலம் காலமாய் தொடர்ந்து, நடந்து கொண்டே இருக்கிறது.

மனம் மட்டும் ஒரு உறுப்பாக இருந்திருந்தால்... இவ்வளவு குழப்பங்களுக்கு இடமே இருந்திருக்காது. அது ஒரு உறுப்பாக இல்லாமல்... எந்த வடிவங்களுக்கும் கட்டுப்படாமல்... அதன் இருப்பு, இந்த உடலின் எந்த பாகத்தில் என்பது தெரியாமல் இருந்து, நமது அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது... என்னும் போதுதான், மனதின் வல்லமையே... நமக்குப் புரியவருகிறது.

இவ்வளவு வல்லமையை மனம் எங்கிருந்து பெறுகிறது...?

மனம் இந்த வல்லமையை ஜீவனிடமிருந்து பெறுகிறது. ஜீவன் இந்த வல்லமையை ஆத்மாவிலிருந்து பெறுகிறது. ஆத்மா இந்த வல்லமையை பரமாத்மாவிடமிருந்து பெறுகிறது.

எல்லையற்ற பரமாத்ம சொரூபம்... ஒரு ஜீவனின் பிறப்புக்காக ஆத்ம வடிவத்தை ஏற்கிறது. அந்த ஆத்ம வடிவம் 'சத்து-சித்து-பரமானந்தம்' என்ற குண நிலையை வடிவமாகக் கொள்கிறது. இந்த ஆத்ம மூலத்தின் 'சித்து' என்ற சித்தத்தின்(இருப்பு) வழியாகத்தான் ஜீவன் தனது வாழ்வின் 'கர்ம வினைகள்' என்ற 'வினைகளின் விளைவை' அனுபவிக்க ஒரு பிறப்பை அடைகிறது. அந்த ஜீவனின் உற்பத்திதான் மனம்.

அந்த மனதின் வழியாகத்தான்... அந்த ஜீவன், தனது 'கர்ம வினைகளின் விளைவுகளை' எண்ணங்களாக வெளிப்படுத்துகிறது. இந்த கர்ம வினைகள் விளைவிக்கும் எண்ணங்கள் யாவும்... நம்மால் உருவாக்கப்பட்டதுதான். அந்த எண்ணங்கள் வெளிப்படுத்துவது யாவும் நமது கர்ம வினைகளின் மூலத்தைத்தான்.

எப்போது நமது கர்ம வினைகள் தீருகிறதோ... அப்போதுதான் இந்த எண்ணங்களின் உற்பத்தியும் மனதிலிருந்து தீரும்.

இப்போது புரிந்திருக்கும்... மனம் என்பது 'எண்ணங்கள் வெளிப்படும் இடம்' என்பது.

ஸாய்ராம்.

Monday, September 2, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 17. 'காலபுருஷ இராசியும்' ... அதன் சூட்சுமங்களும்-பகுதி 8. சனி பகவான்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 17.

 'கால புருஷ இராசியும்' ... அதன் சூட்சுமங்களும்-பகுதி 8.

சனி பகவான்.

காலபுருஷ இராசியின் மூலமாகக் காலத்தை ஆயும் போது... அதன் இறுதி அமைவாக 'சனி பகவானை' ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் பகுதியின் எண்ணிக்கைகளும் 8 ஆக வருவதே... அவரின் ஆளுமையையும்... அவரின் முக்கியத்துவத்தையும் நமக்கு விளக்கிவிடுகிறது.

இந்த உலகில் அவதரித்திருக்கிற ஜீவர்கள் அனைத்தும் 'காலத்தின்' கட்டுக்குள் இருந்துதான்... தமது வாழ்வு நாட்களைக் கடக்கின்றன. இதற்கு எதுவும் விதி விலக்கல்ல. ஆனால்... ஒவ்வொரு ஜீவனுக்குமான வாழ்வுக் காலம்தான்... ஜீவனுக்கு ஜீவன் மாறிகொண்டே இருக்கின்றது.

அதன் வாழ்வு காலங்களைக் கடந்து போக... அதற்கான கடமைகள் இருக்கின்றன. அந்தக் கடமைகளை எவ்வாறு எதிர்கொண்டு ஜீவன்கள் கடக்கிறது என்பதைத்தான்... கால புருஷ இராசியின் 10 ஆமிடமான 'ஜீவன ஸ்தானம்' சுட்டிக் காட்டுகிறது.

அந்த கடமையை செய்யும் ஜீவன்... அந்தக் கடமையிலிருந்து விளையும் எவ்வாறான விளைவுகளை அனுபவிக்கப் போகின்றது என்பதை... 'லாபம்' என்ற 11 ஆமிடம் சுட்டிக் காட்டுகிறது.

அந்த 11 ஆமிடம் சுட்டிக் காட்டும் 'வினைகளின் விளைவுகளைத்தான்'... அதற்கு 7 ஆமிடமான... கால புருஷ இராசிக்கு... 'பூர்வ புண்ணிய ஸ்தானமான' 5 ஆமிடம் சேமித்து வைத்துக் கொள்கிறது.

கடமைகளை எதிர் கொள்ளும் 10 ஆமிடமான 'ஜீவன ஸ்தானத்தில்' அந்த ஜீவனுக்கான ஆற்றலை வழங்கும் 'செவ்வாய் பகவான்' தனது 'உச்ச பலத்தைப்' பெறுகிறார். கடமைகளில் தனது கவனத்தை வைத்து அதீத ஆற்றலுடன் செயல்படும் போது... 'ஞானம் அற்றுப் போக வாய்ப்பிருப்பதைச்' சுட்டிக் காட்டுவதற்காகவே... அந்த ஸ்தானத்தில் 'குரு பகவான்' தனது ஆற்றலை இழந்து... 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார். இந்தக் கடமைக்கான போராட்டத்தில் ஈடுபடும் ஜீவன்... தான் அனுபவிக்கும் 'சுக-துக்கங்களை' வெளிப்படுத்தும் இடமாக... ஜீவன ஸ்தானத்திற்கு எதிரான... சுக ஸ்தானமான 4 ஆமிடம் அமைகிறது.

அந்த 4 ஆமிடத்தில்...சுக துக்கங்களுக்கு ஏற்ப தனது ஆற்றலை இழந்து தவிக்கும் நிலையை... 'செவ்வாய் பகவான்' தனது 'நீச நிலையை அடைந்தும்... அதனால் விளையும் 'ஞானத்தை'... 'குரு பகவான்' தனது 'உச்ச நிலையில்' பலத்துடனிருந்தும் அந்த ஜீவனுக்கு அருள்கிறார்கள்.

காலபுருஷ இராசியில் இராசியாதிபதியாகிய 'செவ்வாய் பகவான்'... தனது வீட்டில் பலத்துடன் அமர்ந்து... பூரவ பூண்ணியாதிபதியாகிய 'சூரிய பகவானின்' உச்ச பலத்துடன் சேரும் போது... 'கர்ம வினைகள்' என்ற வினைகளின் விளைவுகளை அந்தப் பிறவியிலேயே... அந்த ஜீவன் அனுபவித்து... பிறவிகளின் தொடர்களிலிருந்து விடுபடுவதை... 'நீச நிலையில்'... பலமற்று இருக்கும் 'சனி பகவான்' உணர்த்துகிறார்.

அதே நேரத்தில்... காலம் என்ற கட்டுக்குள் இருந்து வெளியேறி... உலக சுகம் என்ற மோகத்திலும்... போகத்திலும் சிக்கிக் கொள்ளும் ஜீவன்... தொடர்ந்து பிறவிகளை அனுபவிக்கப் போகிறது என்பதைச் சுட்டிக் காட்டவே... இராசிக்கு 7 ஆமிடமான ... தொடர்பு ஸ்தானத்தில்... 'சனி பகவான்' தனது உச்ச பலத்தைப் பெறுகிறார்.

இதுவரை... கால புருஷ இராசியின் வழியாக... காலம் ஒரு ஜீவனுக்கு உணர்த்தும் பாடங்களை... கிரகங்களின் ஸ்தான... ஆட்சி... உச்ச... நீச...நிலைகளைக் கொண்டு கடந்து வந்தோம்.

அவற்றின் சாரம் இதுதான்... 'ஒவ்வொரு ஜீவனும் அதனதன் கடமைகளைப் பற்றற்று முடித்து... அறம், பொருள், இன்பம், வீடு என்ற 'புருஷர்த்தங்களுக்கு' ஒப்ப... தர்மத்துடன் வாழ்ந்து... பிறவியில்லாப் பெருவாழ்வை அடைந்திட வேண்டும்'... என்பதுதான்.

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...