Thursday, September 26, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 19. 'திருமணப் பொருத்தமும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 2. 'நட்சத்திரப் பொருத்தம்'

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 19.

'திருமணப் பொருத்தமும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 2.

'நட்சத்திரப் பொருத்தம்'

ஒரே சமூகத்தைச் சார்ந்து... குல வழியேயான திருமண அமைவுகளைப் பார்த்தோம். அதற்குப் 'பெயர் பொருத்தமே' போதுமானதாக இருந்தது. ஏனெனில் வரன்கள் யாவும் ஒன்றுக் கொன்று அறிமுகமானதாகவும்... உறவுக்குள் அமைந்ததாகவும் இருந்தது.

ஒரே சமூகத்தில்... குலங்கள் வேறுபட்டு... 'அறிமுகம் இல்லாத' குடும்பத்தினரிடையே... திருமண வாய்ப்பு நிகழும் போதுதான்... வரன்களைப் பற்றிய ஆய்வும்... அவர்களது திருமண வாழ்வு பற்றிய எதிர்பார்ப்பும்... எதிர்கால பயமும்... ஒன்று சேர ஆரம்பித்தது.

அந்தக் காலத்தில் மிகக் குறைந்த வயதிலேயே... திருமணம் நிகழ்த்துவதாக இருந்ததால்... இரு வரன்களின் 'நட்சத்திரங்களைப்' பற்றிய ஒரு ஒப்புமையை... ஆய்வாக எடுத்துக் கொண்டு... பெண்ணின் நட்சத்திரத்தை மூலமாகக் கொண்டு... அதையொட்டி... ஆணின் நட்சத்திர வழியேயான 'பொருத்தம் பார்க்கும் முறை' நடைமுறைக்கு வந்தது.

அந்த 'நட்சத்திரப் பொருத்தத்தின்' மூலம்... 'இராசிகளும்', 'இராசி அதிபதிகளும்' மட்டுமே ஆரம்பத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அது படிப்படியாக வளர்ந்து... வரன்களின் எதிர்கால வாழ்வு நிலைகளைக் குறிக்கும்... 'நீண்ட மண வாழ்வு... ஒற்றுமை... மகிழ்வான மணவாழ்வு... குழந்தைப் பேறு'... என 8, 10, 12, 14, 16 என பொருத்தங்களின் எண்ணிக்கை கூடுவதில் கொண்டு சேர்த்தது.

இருப்பினும்... 'இராசிப் பொருத்தமும்'... 'இராசியாதிபதிகளின் பொருத்தமுமே'... தலையான பொருத்தமாகக் கொண்டே... பல சூழல்களில் 'திருமண ஒப்பந்தம்' நடந்தேறியது.

மிகக் குறைந்த எதிர் பார்ப்புகளும்... நிறைவான வாழ்வு முறையும்... இருந்த அந்தக் கால சூழல்களில்... கூட்டுக் குடும்பமும்... உறவினர்கள் மத்தியில் வாழும் வாழ்க்கை சூழலும்... ஒரு சமூகக் கட்டுப் பாடும்... இருந்ததால்... திருமணமும்... அதையொட்டிய வாழ்வு நிலையும் சுமூகமாவே இருந்து வந்தது.

காலத்தின் சூழல் மாற ஆரம்பித்தது. பூர்வீகத்தை விட்டு பல சூழல்களில் குடும்பங்கள்... இடம் விட்டு இடம் நகர்ந்தன. பொருளாதாரம்... வாழ்க்கைச் சூழல்... பிழைப்பு... குழந்தைகளின் எதிர்காலம்... வேலை வாய்ப்பு... என 'காலச் சூழல்களுக்குள்' சிக்கிக் கொண்ட குடும்பங்கள்... எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து தமது கிளைகளைப் பரப்ப ஆரம்பித்தன.

உறவுகள் எல்லாம் ஒன்றையொன்று பார்ப்பதும்... கொண்டாடுவதும்... மகிழ்ந்திருப்பதும்... ஊர்த் திருவிழாக்களிலும்... குடும்ப நிகழ்வுகளில் மட்டுமே என்றானது. ஒருவரை ஒருவர் நேரடியாக அறிந்து கொள்ளும் நிலை மாறி, ஒருவரை மற்றொருவர் 'செய்தித் துணுக்குகளாக மட்டுமே' அறிந்து கொள்ளும் சூழல் உருவானது.

காலத்தின் போக்குகளால்... ஆண்களுக்கு நிகராக பெண்களின் கல்வியும்... வேலை வாய்ப்பும்... அதையொட்டிய வாழ்வு நிலைகளும் மேம்பட ஆரம்பித்தன. உறவுகள் பல இடங்களில் சிதறிப் போனதால்... அவர்களின் வாழ்வு நிலைகளைப் பற்றிய அறிதல்கள் குறைந்து போயின.

குலம்... குடி... குடும்பம்... என வாழ்ந்து வந்த சமூகங்களிடையே... காலத்தின் தேவையைக் கருதியும்... வரன்களின் விருப்பங்களுக்கு ஏற்பவும்... திருமணங்கள் நடக்க ஆரம்பித்தன.

குறைந்த வயதில் ஆரம்பித்த திருமணம் தற்போது ஆணுக்கு 21 லிருந்து  40 வயது வரை தொடர்கிறது. 18 வயதில் ஆரம்பித்த பெண்ணின் திருமணம் தற்போது 35 வயது வரையிலும் தொடர்கிறது. 'திருமணம்' ஒரு 'இழ்வாழ்வின் கடமை' என்ற நிலை மாறி... 'சுக வாழ்வின் அங்கம்' என்ற நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டது. பொருளாதார சூழல்களை காரணமாக்கி... திருமணத்தை... தள்ளி வைக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு 'சுகமான' நிகழ்வாக இருந்த திருமண வாழ்வு... ஒரு 'சுமையாக' கருதப்படும் நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டது.

இந்த நிலையில்... 'குல ரீதியான பெயர் பொருத்தம்'... 'நட்சத்திர ரீதியான பொருத்தம்'... இவற்றைத் தாண்டி... 'ஜாதக ரீதியான பொருத்தம்' என்பது மிக முக்கியமான 'பொருத்த முறையாக' மலர்ந்திருக்கிறது.

அந்த 'ஜாதகப் பொருத்த முறையைப்' பற்றி வரும் பகுதியில் அலசி ஆய்வோம். இறைவனின் அருளினால்.

ஸாய்ராம்.




No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...