Friday, September 6, 2019

ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவான் - இந்த மூர்த்தத்தின் சூட்சுமம் - பகுதி 2 :

ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவான் - இந்த மூர்த்தத்தின் சூட்சுமம் - பகுதி 2:




'சத்துவ குணத்தின்' சாட்சியாக இருக்கும் 'சிவ பெருமானின்' 64 மூர்த்தங்களின் ஒன்றான... 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவான்'... ஆல மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார். அவர் காட்சி கொடுப்பதற்குக் காரணமான 'சனாதன முனிவர்கள்' அவரின் பாதத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார்கள்.

ஓசை தரும் 'உடுக்கு' ஒரு கையிலும்... அருள் ஜோதியை வெளிப்படுத்தும் 'ஜோதி' ஒரு கையிலும்... 'வேதச் சுவடிகள்' ஒரு கையிலும்... 'சின் முத்திரையைக்' காட்டிய படி ஒரு கையும் இருப்பதைக் காணலாம்.

'சின் முத்திரை'... இது இறைவனுடன் ஒன்றிய நிலை. 'சத்து... சித்து... ஆனந்தம்' என்ற ஜீவாத்ம நிலையில், 'இருப்பு' என்ற நிலையை உணர்த்தும் 'சித்தத்தில்தான்' இந்த ஜீவனின் இருப்பு வெளிப்படுத்தப்படுகிறது. சுட்டு விரல் சுட்டிக்காட்டுவது... 'சித்தத்தை'. மோதிர விரல் சுட்டிக் காட்டுவது... 'மனத்தை'. நடுவிரல் சுட்டிக் காட்டுவது... 'புத்தியை'. ஆள்காட்டி விரல் சுட்டிக் காட்டுவது... 'அஹங்காரத்தை'. பெருவிரல் சுட்டிக் காட்டுவது... இறைவனின் இருப்பையும்... அவன் தரும் ஆனந்தத்தையும்.

மனம் என்பது எழா நிலையில்... அதாவது தூக்கத்தின் போது... அப்போது 'மனம்'... 'ஆத்மாவில்' லயித்துப் போயிருக்கிறது. எப்போது விழிப்பு ஏற்படுகிறதோ... அப்போது மனதிற்கு ஒன்றும் புரியாது. தான் யார்... என்பது தெரியாமல் தவித்து நிற்கும். அந்த நிலையில் முதலில் தோன்றுவது...'நான்' என்ற நிலைதான். இந்நிலைக்குத்தான்... 'அகங்காரம்' என்று பெயர். 'நான்' இன்னார் என்று உணர்ந்த பின்தான்...சித்தம்... மனம்... புத்தி... இவை யாவற்றின் நிலையையும் மனம் அறிகிறது.

முதலில் தோன்றும் 'அகங்காரம்' என்ற 'நான்' என்பதன் நிலையை தோன்றாவண்ணம் செய்வதுதான்... ஜீவன் இந்தப் பிறவியில் செய்யக் கூடிய ஞான சாதனை. அது 'நான் யார்' என்ற விசாரிப்புத்தான். அந்த விசாரிப்பு என்ற தேடல்... மனதை அதன் முலமான ஆத்மாவில் கொன்டு போய் சேர்க்கும். அதைக் குறிப்பதற்காகவே... 'அகங்காரம்' என்ற ஆள்காட்டி விரலை... 'இறைவனின் இருப்பையும், அனந்தத்தையும்' சுட்டிக் காட்டும் பெருவிரலில் கொண்டு போய் சேர்த்து... ஒரு முத்திரையைக் காட்டியருள்கிறார்... குரு.

எப்போது அஹங்காரம் அழிந்து ஆத்மசடாக்ஷரத்தில் ஜீவன் லயித்தும் போகிறதோ... அப்போது, புத்தியோ... மனமோ... இல்லாத சித்தம் தெளிவாக இருக்கிறது... என்ற நிலையைக் குறிப்பதற்காகவே, ஆள்காட்டி விரல் வளைந்து பெரு விரலை நோக்கி வரும் பொது... ஏனைய மூன்று விரல்களும் தனித்துப் போய் விடுகின்றன. இந்த நிலைதான் 'தியானம்' என்ற 'ஞான விசாரத்தின்' இலக்கு.

இந்த இலக்கை ஒரு ஜீவன் அடைகிறபோது... அந்த ஜீவனின் அஹங்காரம் முற்றிலுமாக அழிந்து போவதைத்தான்... அவரின் காலுக்குக் கீழே மிதிபட்டுக்கிடக்கும்... 'முயலகன்' என்ற ரூபம் சுட்டிக் காட்டுகிறது.

அவரின் ரூபத்தில் அமைந்திருக்கிற... ஏனை சூட்சுமங்களைத் தொடர்ந்து பார்ப்போம்... அடுத்த பதிவில்.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...