Saturday, September 14, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 18. 'திருமணப் பொருத்தமும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 1. 'பெயர் பொருத்தம்'

ஜோதிடமும் அதன் சூட்சுமங்களும் : பகுதி 18.

'திருமணப் பொருத்தமும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 1.

'பெயர் பொருத்தம்'

நமது 'சனாதன தர்ம வாழ்வியல்' முறையில்... ஒவ்வொரு ஜீவனும் கடந்து போக வேண்டிய 'வாழ்வியல் முறைகள்' என்ற 'நான்கு புருஷார்த்தங்களை'... அறம், பொருள்,இன்பம்,வீடு என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

இதைக் கடந்து போகும் 'வாழ்வின் நிலைகளை', பிரம்மச்சர்யம்... இல்வாழ்வு ... வானப்பிரஸ்தம்... சந்யாசம்' என்ற வாழ்வியல் முறைகளாக வரையறுத்திருக்கிறார்கள்.

இதில்... பிரம்மச்சர்யம் - வானப்பிரஸ்தம் - சந்யாசம்... என்ற வரிசையிலேயே ஒரு ஜீவன் தனது வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் இவ்வாறான வரிசை... அந்த ஜீவனின் 'கர்ம வினைக் கட்டுகளை' அவிழ்த்துவிடுமா...? என்பது சந்தேகம்தான். ஏனெனில் அதற்கான 'புண்ணிய வினைகளை' அந்த ஜீவன் இந்தப் பிறவியில் பெற்றிருக்க வேண்டுமே...!
பெற்றிருக்காவிட்டால், இந்த ஒவ்வொரு நிலையிலும் சறுக்கல் ஏற்படும்.

ஆனால், 'இல்வாழ்வு' என்ற நிலையில்... 'கர்ம வினைகளின் ' பூரணத்துவத்தை அடைந்தே ஆகவேண்டும். அதனை அனுபவித்துத்தான் கடந்தும் போக வேண்டும். கடந்து, அனுபவிக்காமல் 'கர்ம வினைகள்' களைந்து போவதில்லை என்பதுதான்... வாழ்வு முறையின் அடிப்படைத் தத்துவமே.

ஆதலால்தான்... பிறவியின் தொடராக... இனத்தை பெருக்கும் ஒரு வழிமுறையாக... கர்ம வினைகளை களைந்து போகும் மார்க்கமாக... இந்த 'இல்வாழ்வு' என்ற வாழ்வு முறை... பெரும்பாலாகக் கடைபிடிக்கப் படுகிறது.

ஆரம்பக் காலங்களில்... ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு இனப்பெருக்கத்துக்காக மட்டுமே இருந்தது. காலத்தின் மாற்றமும்... வளர்ச்சியும்... மனித இனத்தை நாகரீக வளர்ச்சியை நோக்கி நடத்திக் கொண்டு வந்தது. அப்போது 'சமூகக் கட்டமைப்பு' உருவானது. அதற்கான விதிகளும்... கட்டுப்பாடுகளும் கடைப்பிடிக்கப்பட்டன. இருந்தாலும், ஆரம்பக் காலங்களில் இந்த இணைவான 'திருமணம்' உறவுகளுக்குள்தான் நடந்தது.

உறவுகளுக்குள் நடந்த திருமணங்களில்... அது 'ஒரு குடும்பத்துக்குள்ளான' அத்தை மகன் - மகள் ; மாமா மகள் - மகன் ; அக்கா மகள் - மகன் ; திருமணங்களாக அமையும் பக்ஷத்தில் அதில் 'ஜாதகத்தின்' பங்களிப்பு இல்லாமல்தான் இருந்தது.

ஒரே குடும்பத்துக்குள்ளான திருமணம் என்பதிலிருந்து... உறவுகளுக்குள்ளான திருமணம் என்று விரிந்த போது... 'குல தெய்வத்தை' அடிப்படையாகக் கொண்டும்... மணமக்களின் 'பெயரின் பொருத்தங்களை' அடிப்படையாகக் கொண்டும் திருமணங்கள் நிச்சியக்கப்பட்டன.

உதாரணமாக 'சிவ அம்சமான' குலதெய்வ வழிபாட்டு வரனுக்கு, 'விஷ்ணு அம்ஸமான' குல தெய்வ வழிபாட்டு வரன் நிச்சியக்கப்பட்டது. அதற்கான விதைகள் சமூகக் கட்டமைப்புகளில் ஆரம்ப காலத்திலேயே விதிக்கப்பட்டும் இருந்தது.

 'சிவ அம்சத்தில்' பிறந்திருக்கும் ஒரு ஆணுக்கு சிவ அம்சமான... 'பரமேஸ்வரன், சிவலிங்கம்' போன்ற பெயர்களை சூட்டினார்கள். பெண்ணாக பிறந்திருப்பவருக்கு... அவர் எதிர் காலத்தில் 'விஷ்ணு குலத்திற்கு' வாழச் செல்வதால்... அந்தக் குலத்திற்கேற்ப... 'மஹாலக்ஷ்மி, ரெங்கநாயகி' போன்ற பெயர்களைச் சூட்டினார்கள்.

அதுபோல, 'விஷ்ணு அம்சத்தில்' பிறந்திருக்கும் ஒரு ஆணுக்கு விஷ்ணு அம்சமான... 'ஸ்ரீனிவாசன், ரெங்கநாதன்' போன்ற பெயர்களை சூட்டினார்கள். அந்தக் குலத்தில் பிறக்கும் பெண்... எதிர்காலத்தில் 'சிவ குலத்திற்கு' வாழச் செல்வதால்... அந்த குலத்திற்கேற்ப... 'பரமேஸ்வரி, லிங்கேஸ்வரி' போன்ற பெயர்களை சூட்டினார்கள்.

'பெயர் பொருத்தத்தின்' வழியாகவும்... 'குலதெய்வ' வழியாகவும் இந்த வரன்கள் இணையும் போது...

'சிவ குலத்தில்' பிறந்திருந்த 'பரமேஸ்வரன், 'விஷ்ணு குலத்தில்' பிறந்திருந்த 'பரமேஸ்வரியுடனும்'...'சிவலிங்கம்' 'லிங்கேஸ்வரியுடனும்' இணைந்தார்கள்.

அதுபோல... 'விஷ்ணு குலத்தில்' பிறந்திருந்த 'ஸ்ரீநிவாசன்' 'சிவ குலத்தில்' பிறந்திருந்த 'மஹாலக்ஷ்மியுடனும்'... 'ரெங்கநாதன்', 'ரெங்கநாயகியுடனும்' இணைந்தார்கள்.

இந்த அருமையான 'சமுக வழக்கம்' காலத்தின் மாற்றத்தினாலும்... அதை கடைப்பிடிப்பவர்களின் அறியாமையினாலும்... சிறிது, சிறிதாக கைவிடப்படும் போதுதான்... 'ஜோதிடத்தின்' வழியேயான 'ஜாதகப் பொருத்த முறைகள்' நடைமுறைக்கு வந்தது.

ஜோதிடத்தின் வழியேயான... இந்த 'ஜாதகப் பொருத்த முறைகள்' பற்றியும்... அதன் வழியேயான வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் பற்றியும்... இன்றைய நிலையில்... இந்த பொருத்த முறைகளில் கடைப்பிடிக்க வேண்டிய 'சூட்சுமங்கள்' பற்றியும் ஆய்வோம்... இறைவனைன் அருளால்...

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...