Friday, September 6, 2019

ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவான் - இந்த மூர்த்தத்தின் சூட்சுமம் - பகுதி 3 :

ஸ்ரீ தக்ஷ்ணாமுர்த்தி பகவான் - இந்த மூர்த்தத்தின் சூட்சுமம் - பகுதி 3 :

'சத்துவ குணத்தின்' சாட்சியாக இருக்கும் 'சிவபெருமானின்' 64 மூர்த்தங்களின் ஒன்றான... 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவான்' ... ஆல மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார். அவர் காட்சிக் கொடுப்பதற்கான காரணமான 'சனாதன முனிவர்கள்' அவரின் பாதத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார்கள்.

'இறை அருள் நிலையைக்' குறிக்கும் 'சின் முத்திரை' மற்றும் 'அகங்காரம்' என்ற நிலையை அழிக்கும் வண்ணமாக... குருவின் திருவடியில் அமிழ்ந்து இருக்கும்... 'முயலகன்' பற்றிய நிலைகளை ஆய்ந்தோம்.

இப்போது அவர் அமர்ந்திருக்கும் 'ஆலமரத்திற்கும்'... அவருக்குமான சம்பந்தம் பற்றிய நிலைகளை ஆய்வோம்.



                                     'கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
                                        ஆறு அங்கம் முதல் கற்ற கேள்வி
                                    வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
                                        பூரணமாய் மறைக்கும் அப்பாலாய்
                                    எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை
                                             இருந்து காட்டி சொல்லாமல்
                                             சொன்னவரை நினையாமல்'
                                     நினைந்து பவத் தொடக்க வெல்வாம்.'

என்ற பாடலில்... 'கல்லாலின் புடையமர்ந்து...' என்ற வரியில், குறிப்பிடப்படும் ஆலமரத்தின் சூட்சுமம்தான் என்ன...?

வேதத்தில்... ஒரு ஜீவனின் தொடர் பிறவிகளுக்கான மூலமான 'கர்ம வினைகளை' குறிப்பிடும் போது, அதை அந்த ஜீவனுக்குள்ளிருந்து வளரும் 'ஒரு ஆலமரத்திற்கு' ஒப்பாக வருணிக்கப்படுகிறது. அது ஒரு தலைகீழான ஆலமரம். அதன் வேர்கள் அந்த ஜீவனின் சிரசுக்குள் இருப்பதாக அதன் வருணனை தொடர்கிறது.

ஒரு ஜீவனின் வாழ்வில் அது அந்தப் பிறவியில் சுமந்து கொண்டு வரும் கர்மவினைகளையும் (பிராரப்த கர்மா)... அதன் மொத்த வினைகளின் தொகுப்பான கர்ம வினைகளையும் (சஞ்சித கர்மா)... இந்தப் பிறவிகளில் எதிர்கொள்ளும் வினைகளின் விளைவுகளுக்கான கர்ம வினைகளையும் (ஆகாமிய கர்மா) சுமந்து கொண்டு, இந்தப் பிறவி என்னும் பெரும் கடலைக் கடந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கர்ம வினைகளின் தொகுப்பான மூலத்தைத்தான் (சஞ்சித கர்மா)... தலைக்குள் இருக்கும் வேர்களாகவும்... அதன் இந்தப் பிறவிக்கான வினைகளின் தொகுப்பை (பிராரப்த கர்மா) மரத்தின் மரம் மற்றும் அதன் கிளைகளாகவும்... இந்தப் பிறவியில் நாம் அனுபவித்துச் சேர்க்கும் வினைகளின் தொகுப்பை (ஆகாமிய கர்மா) புடை விட்டு பரப்பும் மொட்டு... மலர்... காய்கள்... கனிகள் எனவும் வருணிக்கிறது வேதம்.

இவ்வாறு என்றுமே அழிக்க முடியாது பெருகிக் கொண்டும்... அதன் விழுதுகளை ஊன்றி நிலைத்து நிற்கும்... பிரமாண்ட மரமாகத் தோன்றினாலும்... அதன் தோற்றம் உலகம் என்ற மாயையில்தான் நிலை கொண்டிருக்கிறது. அதன் வேர்களை உள்ளேயே அழித்துவிட்டால்... அந்த மரத்தின் மூலம் அழிந்துவிடுவதால்... அந்த மரமே வேரொடு சாய்ந்து விடும்.

அதை வேரோடு அழித்து விடும் அந்த மூலத்தில்தான்... ஸ்ரீ தக்ஷ்ணா முர்த்தி பகவான் அமர்ந்திருக்கிறார்.

இந்த 'ஞான சொருபமான மூர்த்தத்தின்' ஒரு சிறு துளி ஞானத்தை இந்த மூன்று சிறு பகுதிகளில் பகிர்ந்து கொள்ள முடிந்தது... அவரின் அருள் கருணையன்றி வேறேது...!

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...