Monday, March 30, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 112. 'எண்கணிதம் (Numerology) மற்றும் பெயரியலின் (Nameology) சூட்சுமம். - பகுதி 5.



முன் தொடர்ச்சி...

... பாரதத்தின் புதல்வர்கள் அனைவ்ரும் 'சப்தரிஷிகளின் கோத்திரத்தில் பிறந்தவர்களாகிறோம்...

தொடர்கிறது...

கோத்திரம்... குலம்... குடி வழியாக 'பெயரிடுதலில்' இருந்த முக்கியத்தை அன்றைய சமூகம் உணர்ந்திருந்தது. அதற்கான வழிமுறைகளையும் வகுத்திருந்தது.

'சிவ குலத்தில்' பிறந்திருப்பவர்கள், திருநீற்றை அணிபவராக இருப்பார்கள். அவர்களது குடும்பப் பெயர்கள் பெரும்பாலும், ஆண்களானால், 'சிவபெருமானார்... விநாயகர்... முருகன்...' என்பதை அடிப்படையாகக் கொண்டு... அவர்களுக்கு வழங்கும் எண்ணற்ற பெயர்களில் ஒன்றைத் தாங்கி இருப்பார்கள். பெண்களானால், தாயார் பராசக்தியை முன்னிட்டும்... தாயாரின் எண்ணற்ற வடிவங்களின் பெயர்களில் ஒன்றைத் தாங்கி இருப்பார்கள்.

அது போல, 'விஷ்ணு குலத்தில்' பிறந்திருப்பவர்கள், 'திருமண் காப்பிடுபவர்களாகவும்'... 'திருச் சூரணம்' சாற்றிக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது குடும்பப் பெயர்கள் பெரும்பாலும், ஆண்களானால், 'பகவான் நாரயணரது' திருநாமங்களில் ஒன்றைத் தாங்கி இருப்பார்கள். பெண்களானால், 'தாயார் லக்ஷ்மீ தேவியரின்' திரு நாமங்களில் ஒன்றைத் தாங்கி இருப்பார்கள்.

இந்த 'இரண்டு குலங்களும்', அன்றைய சமூகத்தின் வழக்கத்திலிருந்த ஒவ்வொரு 'வர்ணங்களிலும்' ( அந்தணர் ; ஷத்திரியர் ; வைசியர் ; சூத்திரர்) விரவி இருந்தது. அது மட்டுமல்ல... அந்தந்த வர்ணங்களின் உட்பிரிவுகளுக்குள்ளும் ( வடகலை, தென்கலை மற்றும் இதர வர்ணங்களின் ஜாதி உட்பிரிவுகள்) விரவி இருந்தது.

கோத்திரங்களாகவும்... குடிகளாகவும்... வர்ணங்களாகவும்... பிரிந்து நின்ற ஒட்டுமொத்த சமூகத்தை... இந்த 'இரண்டு குல பிரிவுகளில்' கொண்டு வந்து இணைத்ததுதான்... நம் முன்னோர்களின் 'அனுபவமும்... புத்திசாலித்தனமும்'.

இந்த நடைமுறையால்... 'திருமணம் என்ற இணைப்பு' வெகு எளிதாக நடந்தேறியது. அது எவ்வாறென்றால், 'ஒரே கோத்திரத்திலும்... ஒரே குலத்திலும்... ஒரே குடியிலும்...' ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்வதில்லை... என்ற ஒரு வரை முறையை வகுத்திருந்தார்கள்.

ஆதாலால், எந்த 'ஒரு உட்பிரிவைச் சேர்ந்தவர்களும்'... ஒரே குலமான... 'சிவ குலத்திற்குள்ளோ' அல்லது 'விஷ்ணு குலத்திற்குள்ளோ'... ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருந்தார்கள்.எனவே, சிவகுலத்தில் பிறந்தவர்கள்... விஷ்ணு குலத்தில் பிறந்தவர்களை மணந்தார்கள். இவ்விதத்தில் ''ஹரியும்... சிவனும்...' ஒன்றாகிப் போனார்கள்.

இந்த இணைப்பிற்காக... அனைத்துப் பிரிவைச் சேர்ந்தவர்களும்... 'பெயரியலில்' ஒரு சூட்சுமத்தைக் கையாண்டார்கள்... அது என்னவெனில், 'சிவகுலத்தில்' பிறக்கும் ஆணுக்கு... 'பரமேஸ்வரன்' என்று பெயரிட்டால், பெண்ணுக்கு... 'மகாலட்சுமி' என்ற 'விஷ்ணு குலப்' பெயரைச் சூட்டினார்கள். அதுபோல, 'விஷ்ணு குலத்தில்' பிறக்கும் ஆணுக்கு... 'ஸ்ரீநிவாஸன்' என்று பெயரிட்டால், பெண்ணுக்கு 'மகேஸ்வரி' என்ற 'சிவ குலத்துப்' பெயரைச் சூட்டினார்கள்.

காலக் கிரமத்தில்... 'சிவ குலத்தில்' பிறந்த 'பரமேஸ்வரன்', 'விஷ்ணு குலத்தில்' பிறந்த 'மகேஸ்வரியை' மணந்தான். அது போல... 'விஷ்ணு குலத்தில்' பிறந்த 'ஸ்ரீநிவாஸன்', 'சிவ குலத்தில்' பிறந்த 'மகாலட்சுமியை' மணந்தான். இவ்வாறாக... 'பெயரியல் பொருத்தமே'... ஒவ்வொரு வர்ணத்தின் உட்பிரிவுத் திருமணங்களிலும் கோலோச்சியது.

காலத்தின் மாற்றங்கள்... இந்த 'பாரம்பரிய வழி முறையையும்' விட்டு வைக்கவில்லை. கோத்திரங்களிலும்... குலத்திலும்... குடியிலும்... 'கலப்பு' ஏற்பட்டதால், 'வர்ணங்களின் பகுப்புகள்' மறக்கப் பட்டது. அதன் விளைவாக... 'குடிகளின் உட்பிரிவுகளை' வெளிக்காட்டிக் கொள்வதில் தயக்கமும்... அதனால்... காலக் கிரமத்தில்... 'குடிகளுக்கு ஆதாரமான 'குல தெய்வ வழிபாடும்' அரிதாக்கிவிட்டது மட்டுமல்ல... வெகுவானவர்கள் 'குல தெய்வம்' எது என்பதைக் கூட அறியாத நிலையில் தத்தளிக்க வேண்டியுள்ளது.

இந்தச் சூழலில்... இந்தப் 'பாரம்பரிய பெயரிடலை' மீட்டெடுப்பது என்பது ஒரு சவாலான முயற்சிதான். அதனால், இருக்கும் சூழலைக் கொண்டு அந்த முறையை எவ்வாறு கையாளலாம் என்பதைத் தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Sunday, March 29, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 111. 'எண்கணிதம் (Numerology) மற்றும் பெயரியலின் (Nameology) சூட்சுமம். - பகுதி 4.





முன் தொடர்ச்சி...

... இவ்வாறு... எண் கணிதத்தையும்... பெயரியல் கலையையும்... ஜோதிடக் கலையுடன் ஒப்புமைப் படுத்தி ஆய்ந்து பார்ப்பதும்... ஜோதிடக் கலையின் சூட்சுமங்களில் ஒன்றுதான்.

தொடர்கிறது...

பெயரியல் கலை ( Namology )  என்பது புதிதானதல்ல. நம் பாரம்பரியக் கலையான 'ஜோதிடக் கலையுடன்' தொடர்பு பெற்றதுதான்.

இந்த புவி வாழ்வில் மனிதனை அடையாளப்படுத்துவதற்கு இரண்டு காரணிகள் தேவைப்படுகின்றன. ஒன்று... 'நாமம்' (பெயர்), மற்றொன்று... 'ரூபம்' (தோற்றம்).

ரூபம்... மாறுதல்களுக்கு உள்ளாகிறது. ஆனாலும்... அறிந்தவர்களால் அடையாளமும் காணப்படுகிறது. நாமம்... நம்மால் மாற்றிக் கொள்ளாதவரை... மாறுதல் இல்லாமல்... நம் வாழ்வு முழுவதுமாகத் தொடர்கிறது.

அதனால்தான், என்றோ... சிறிய வயதில் நம்மைப் பார்த்தவர்கள்... நம்மைப் பார்த்தவுடன்...'நீங்கள் 'சரவணன்தானே...!' என்று முதலில் கேட்பதும், பின்னர்... ' உங்கள் தோற்றத்தை வைத்துதான்... கண்டு பிடித்தேன்...!' என்று பின்னர் கூறுவதையும்... நடைமுறையில் அனுபவிக்கிறோம்.

தோற்றம் என்ற 'ரூபம்' மாறிக்கொண்டெ இருந்தாலும்... அதன் வளர்ச்சியிலும், மாற்றத்திலும், நமது பங்கு ஒன்றுமில்லாததாகிறது. ஆனால், 'பெயரைப் பொருத்தவரை', அதை தீர்மானிக்கும் உரிமை, நமக்கு இல்லாவிட்டாலும்... நமது பெற்றோருக்குக் வழங்கப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை அறிந்து கொண்டால்தான்... அதன் மகத்துவம் நமக்குப் புரியவரும்.

பாரதத்தின் புதல்வர்கள் அனைவரும் 'சப்த ரிஷிகளின்' கோத்திரத்தில் பிறந்தவர்களாகிறோம்.(மூலம் : ஸ்ரீ மத் பாகவதம்). அந்த கோத்திரத்திலிருந்து... குலமும் (சிவகுலம்... விஷ்ணு குலம்)... அதிலிருந்து குடிகளும் (குல தெய்வப் பிரிவுகள்) வகுக்கப்பட்டன.

மேற்கண்ட வழிமுறைகளைக் கொண்டே 'பெயர்கள் சூட்டப்பட்டன'. பெயர்களைக் கொண்டே... முற்காலத்தில் கோத்திரங்களையும்... குலத்தையும்... குடியையும்... அறிந்து கொள்ள முடிந்தது.

'பரத்வாஜ்... கௌதமன்...' போன்ற பெயர்கள் 'கோத்திரங்களை' அறிந்து கொள்ளுமாறு அமைந்தன.

'பரமேஸ்வரன்... அருணாசலம்...' போன்ற பெயர்கள்... 'குலத்தை' அதாவது 'சிவ குலத்தைப்' பிரதிபலிப்பவைகளாக அமைந்தன.

'ரெங்கநாதன்... ஸ்ரீநிவாஸன்...' போன்ற பெயர்கள்...'குலத்தை' அதாவது 'விஷ்ணு குலத்தைப்' பிரதிபலிப்பைவைகளாக அமைந்தன.

'இருளன்... வீரபத்திரன்... கருப்பண்ணன்... பெரியண்ணன்...' போன்ற பெயர்கள்... 'குடியை' அதாவது 'குல தெய்வப் பிரிவுகளை' பிரதிபலிப்பைவைகளாக அமைந்தன.

இவ்வாறு அமைந்த பெயர்களின் வழியாகத்தான்... மனிதனின் நாகரீகம் என்ற பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டது.

இந்த பாரம்பரியம் எவ்வாறு பரம்பரை... பரம்பரையாகத் தொடர்ந்தது என்பதை... இனி வரும் பகுதியில் தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளுடனே...

ஸாய்ராம்.



Saturday, March 28, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 110. 'எண்கணிதம் (Numerology) மற்றும் பெயரியலின் (Nameology) சூட்சுமம். - பகுதி 3.




முன் தொடர்ச்சி ...

ஒரு உதாரண ஜாதகரின்..

பெயர் : G. THIRUMURUGAN.
பிறந்த தேதி : 2.11.1991.
நட்சத்திரம் : பூரம் 3 ஆம் பாதம்.

பிறவி எண் : 2 ( சந்திர பகவான் )
விதி எண் : 6 ( சுக்கிர பகவான் )
பெயர் எண் : 3 ( குரு பகவான் )

என்று அமைவதாகக் கொள்ளலாம்.

தொடர்கிறது ... 

அந்த உதாரண ஜாதகரின்... ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.





ஜாதகர் பிறந்த போது... அவரது ஜனன கால தசா இருப்பு... 'சுக்கிர பகவானது தசாவில்'... கர்ப்ப செல் போக மீதி... 'வருடம் : 8... மாதம் : 0... நாள் : 21' ஆக அமைகிறது.

29 ஆவது வயதைக் கடந்து கொண்டிருக்கிற இந்த ஜாதகருக்கு... 8 வது வரையில் 'சுக்கிர பகவானது' தசாவும்... 14 வயது வரையில் 'சூரிய பகவானது' தசாவும்... 24 வயது வரையில் 'சந்திர பகவானது' தசாவும்... தற்போது, 31 வயது வரைக்கான 'செவ்வாய் பகவானது' தசாவும் நடந்து கொண்டிருக்கிறது.

இவரது லக்னாதியாகிய... 'செவ்வாய் பகவான்', 12 ஆமிடத்தில் மறைந்திருக்கிறார். பூர்வ புண்ணியாதிபதியாகிய... 'குரு பகவான்' 10 ஆமிடத்தில் வலுத்து இருக்கிறார். பாக்கியாதிபதியாகிய 'சந்திர பகவானும்' 10 ஆமிடத்தில் வலுத்து இருக்கிறார்.

எண் கணிதத்தின் படி... இவரது பிறவி எண்ணான...2 ஐக் குறிக்கும் 'சந்திர பகவான்' 10 ஆமிடத்தில் வலுத்து ...பூர்வ புண்ணியாதிபதி 'குரு பகவானுடன்' இணைந்திருக்கிறார். ஆனால், அவர்கள் அமர்ந்த வீட்டதிபதியாகிய 'சூரிய பகவான்' 12 ஆமிடத்தில் 'நீசமடைந்தது' மட்டுமல்ல... அந்த வீட்டதிபதியாகிய 'சுக்கிர பகவானுடன்'... 'பரிவர்த்தனை' பெற்றுள்ளார்.

மேலும், இந்த 'சுக்கிர பகவானின்' நட்சத்திர சாரத்தில்தான்... இந்த 'சந்திர பகவான்' அமைந்துள்ளார். அதுமட்டுமல்ல... இவரின் 'விதி எண்ணான'... 6 ஐக் குறிப்பதும்'... இந்த 'சுக்கிர பகவான்தான்'.

ஆகவே... இவரது வாழ்வை... இவரின் விதி எண்ணுக்குறிய... 'சுக்கிர பகவானே' சூட்சுமமாக வழி நடத்துகிறார் என்பது தெளிவாகிறது.

இந்த 'சுக்கிர பகவான்' ஜாதகரின் விரயாதிபதியாக அமைந்து... ஜீவன ஸ்தானாதிபதியுடன் 'பரிவர்த்தனை' பெற்று... லக்ன, பூர்வ, பாக்கியாதிபதிகளுடன் ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதிலேயே... ஜாதகரை... இந்த 'சுக்கிர பகவான்தான்' சூட்சுமமாக வழி நடத்துகிறார் என்பது தெளிவாகிறது.

இந்த 'சுக்கிர பகவானின்' ஆளுமையிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி... இவரின் 'பெயர் எண்ணை' ராசியில் பூர்வ புண்ணியாதிபதியாகவும்... அம்ஸத்தில் பாக்கியாதிபதியாகவும்... இராசியிலும், அம்ஸத்திலும்... வர்க்கோத்துமம் பெற்ற 'குரு பகவானின்' எண்ணில் அமைப்பது ஒன்றே உத்தமமான வழி.

ஆதலால்தான்... இவரது பெயர் எண்ணை... 3 என்ற 'குரு பகவானைக்' குறிக்கும் எண்ணில் அமைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு... எண் கணிதத்தையும்... பெயரியல் கலையையும்... ஜோதிடக் கலையுடன் ஒப்புமைப் படுத்தி ஆய்ந்து பார்ப்பதும்... ஜோதிடக் கலையின் சூட்சுமங்களில் ஒன்றுதான்.

ஆய்வுகள் தொடரும்... இறைவனின் அருளுடன்...

ஸாய்ராம்.

Tuesday, March 24, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 109. 'எண்கணிதம் (Numerology) மற்றும் பெயரியல் (Nameology) ஒரு முன்னோட்டம்' - பகுதி 2.




முன் தொடர்ச்சி...

...இந்தப் புவியில் வாழும் மாந்தர்களுக்கு, 'எண்களை அடிப்படையாகக் கொண்ட கலையும்'... 'எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கலையும்'... இரு கண்களைப் போன்றதாக இருக்கிறது.

தொடர்கிறது...

பெயரியல் (Nameology) கலை... எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டது.

எவ்வாறு, எண்கள் 'ஜோதிடக் கலையுடன்'... 'கிரகங்களின் வழியாக' இணைக்கப்பட்டதோ... அது போல, எழுத்துக்களும் 'ஜோதிடக் கலையுடன்'... 'ஆங்கில எழுத்துக்களின் வழியாக' இணைக்கப்படுகிறது.

26 எழுத்துக்களைக் கொண்ட ஆங்கில மொழியை மூலமாகக் கொண்டு... அந்த எழுத்துக்களின் 'அலைவரிசைக்கு' ஏற்றபடி... அந்த எழுத்துக்கான 'எண்களை' வகைப்படுத்தினர்... 'எண் கணிதவியலாளர்கள்'.

A, I, J, Q, Y - 1

B, K, L, R - 2

C, G, S - 3

D, M, T - 4

E, H, N, X - 5

U, V, W - 6

O, Z - 7

F, P - 8



'எண்கணிதத்தை' உருவாக்கியவர்கள், 'பிறவி எண்' மற்றும் 'விதி எண்' என்பதில் கவனம் செலுத்தி... ஒரு ஜீவனை ஆய்வுக்கு உட்படுத்தும் போது... அந்த ஆய்வு, அந்த ஜீவனின் 'குணாதிசியங்களையும், வாழ்வியல் பாதையையும் காட்டியதே தவிர... அதிலிருந்து விடுபடும் மார்க்கத்தைக் காட்டவில்லை.

'பிறவி எண்ணையும்'... 'விதி எண்ணையும்'... மாற்ற முடியாத சூழலில்... மாற்றக் கூடியது எது... என்னும் போது... 'பெயரைக் கூட்டி வரும் எண்ணை' மாற்றினால்... 'கர்ம வினைகளான'... 'விதியின் பாதையை'... எளிதாகக் கடந்து போக வாய்ப்பு உண்டு என்பதைக் கண்டறிந்தனர்.

அந்த வாய்ப்பைத்தான்... 'பெயரியல் கலை' என்ற எழுத்துக்களை மூலமாகக் கொண்ட கலையின் வழியாக... எண் கணிதம்... இந்தக் கலையை 'ஜோதிடக் கலையுடன்' இணைத்தது.

இந்தப் 'பெயரியல் கலைக்கு' மூலமாக, ஜோதிடக் கலையின்... 'பஞ்சாங்கம்' துணைக்கு வருகிறது. பஞ்சாங்கத்தில்... ஒவ்வொரு ஜீவனும்... அது பிறக்கும் 'நட்சத்திரத்தின் பாதசாரங்களுக்கு' ஏற்ப... அதற்கான 'பெயர் எழுத்துக்கள்' வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

அந்தப் பெயர் எழுத்துக்களின் ஓசைக்கு ஏற்ப... ஆங்கில எழுத்தை மூலமாகக் கொண்டு எழுதப்படும் பெயருக்கு... அந்த எழுத்துக்களின் எண்களைக் கூட்டி... அந்த கூட்டு எண்ணை... 'பெயரியல் எண்ணாகக்' கொண்டு... அதை 'பிறவி எண்ணுக்கும்', 'விதி எண்ணுக்கும்' ஏற்ப அமைக்கும் பக்ஷத்தில்... வாழ்வில் மாறுதல் ஏற்படுவதைக் அனுபவத்தில் காண முடிகிறது.

உதாரணமாக... 'பூரம் நட்சத்திரத்தின் 3 ஆம் பாதத்தில்'... 2.11.1991 ல் பிறந்த ஒருவருக்கான பெயர் எழுத்து... 'டி' என்றும்... அதற்கான ஆங்கில எழுத்து பொதுவாக ' T '  என்றும் குறிக்கப்படுகிறது.

'கோ. திருமுருகன்' என்ற பெயரை, ஆங்கிலத்தில்... G. THIRUMURUGAN. என்று எழுதலாம்.

இந்தப் பெயருக்கான ஆங்கில எழுத்தின் எண்ணிக்கையை... 3. 4 + 5 + 1 +2 + 6 + 4 +6 + 2+ 6 + 3 + 1 + 5 = 3 + 45 = 48 ; 4 + 8 = 12 ; 1 + 2 = 3 என்று கூட்டிக் கொள்ளலாம். இவ்வாறாக... இந்த ஜாதகரின் 'பெரியல் எண்' : 3. என்பதாகக் கணிக்கப்படுகிறது.

எனவே 'எண் கணிதத்தின்' மூலமாக... இந்த ஜாதகரின் ;

பிறவி எண் :  2

விதி எண் : 6

'பெயரியல்' வழியாக...

பெயர் எண் : 3

... என்பதாக வருகிறது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு, எவ்வாறு இந்த ஜாதகரின் நிலைகள் அமையும்... அல்லது... இதில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டியிருக்குமா... என்பதையெல்லாம்... தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Monday, March 23, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 108. 'எண்கணிதம் (Numerology) மற்றும் பெயரியல் (Nameology) ஒரு முன்னோட்டம்' - பகுதி 1.





'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.' (திருக்குறல் - அதிகாரம் : அரசியல் - 392

இந்தப் புவியில் வாழும் மாந்தர்களுக்கு, 'எண்களை அடிப்படையாகக் கொண்ட கலையும்'... 'எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கலையும்'... இரு கண்களைப் போன்றதாக இருக்கிறது.

ஜோதிடக் கலை... இந்த இரண்டு கலைகளையும் தன்னகத்தே வசப்படுத்தி... ஜீவனை, சூட்சுமமாக வழி நடத்துகிறது.

ஜோதிடக் கலை 'கணிதத்தை அடிப்படையாகக்' கொண்டது. ஆதலால், இயல்பாகவே, 'எண்கள்' இந்தக் கலைக்கு மூலமாக இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

1 லிருந்து ஆரம்பிக்கும் எண்களின் வரிசை 9 தைக் கடந்த பின்... மீண்டும் 1 லிருந்து 9 வரையிலான எண்களின், முறையான வரிசை மாற்றங்களின் மூலம்... எண்ணிலடங்காத (infinite) எண்வரிசையின் எல்லைகளைக் கடக்கிறது. ஆனால், '1 லிருந்து 9 வரையிலான எண்களே'... இந்த பெரும் எண்ணிலடங்கா, 'எண்களின் கலைக்கு' மூலமாக இருக்கிறது.

இதை அடிப்படையாகக் கொண்டு, '1 லிருந்து 9 வரையிலான எண்களை'... ஜோதிடக் கலையின் ஆளுமைகளான கிரகங்களுடன்... ஓர் ஒப்புமையான இணைப்புக்குள் கொண்டு வந்தனர். எண்ணியலாளர்கள்.

அதன்படி...

1. சூரிய பகவான்.
2. சந்திர பகவான்.
3. குரு பகவான்.
4. ராகு பகவான்.
5. புத பகவான்.
6. சுக்கிர பகவான்.
7. கேது பகவான்.
8. சனி பகவான்
9. செவ்வாய் பகவான்.

1 முதலான 9 வரையிலான எண்களை... 9 கிரகங்களுடன், ஓர் ஒப்புமை நோக்கோடு இணைத்தனர். இந்த எண்களை மூலமாகக் கொண்டு, ஜீவனின் வாழ்வியலை ஆய்வதற்கான கலையை... 'எண்கணித ஜோதிடம்' (Numerology) என்று வகைப்படுத்தினர்.

'ஜோதிடக் கலை' ஒரு ஜீவனின், வாழ்வியலை, அதன் பிறப்பிலிருந்து... அந்த பிறப்பு நேரத்தை லக்னமாகக் கொண்டு... 12 இராசிகளுக்குள்... 12 பாவங்களாக... கிரகங்களின் அமைவைக் கொண்டு... ஆதிபத்திய ரீதியாக... விளக்குகிறது.

'எண் கணித முறையிலான ஜோதிடக்கலை (Numerology) யில்'... பிறந்த தேதியை 'பிறவி எண்ணாகவும்'... பிறந்த தேதி, மாதம், வருடம் இவற்றைக் கூட்டி வரும் எண்ணிக்கையை 'விதி எண்ணாகவும்' வகைப்படுத்தி... அதன் வழியாக... அந்த ஜீவனின் குண நலன்களையும், அதன் வாழ்வியல் வழி முறைகளையும் விளக்கப் படுகிறது.

உதாரணமாக... 2.11.1991 ல் பிறந்த ஒருவருக்கான எண் கணித முறையிலான ஜோதிட ஆய்வுக்கு...

அவரது பிறந்த தேதியைக் கூட்டி வரும் எண்ணான 2 என்பதை அவரது பிறவி எண்ணாகக் கொள்ளலாம். இந்த எண்ணான 2 க்கான குண நலன்களை... 2 ஆம் எண்ணைக் குறிக்கும் 'சந்திர பகவானின்' காரகத்துவத்துங்களை மையமாகக் கொண்டு விளக்கப்படுகிறது.

அது போல, அவரது பிறந்த தேதி 2, மாதம் 11 மற்றும் வருடமான 1991 ஐக் கூட்டி...

தேதி : 2 = 2

மாதம் : 11 =  1 + 1 = 2

வருடம் :1+9+9+1= 20 ; 2+0 = 2,

எனவே, விதி எண் :2+2+2 = ஆக அமைகிறது.

இந்த 6 என்ற விதி எண்ணைக் குறிக்கும் 'சுக்கிர பகவானின்' காரகத்துவங்களை மையாமாகக் கொண்டு... ஜாதகரின் வாழ்வின் போக்கு விளக்கப்படுகிறது.

கிரகங்களின் காரகத்துவங்களை மட்டும் காரணிகளாகக் கொண்டு விளக்கப்படும் ஜாதகரின் குண நலன்களும்... வாழ்வின் போக்கும் பெரும்பாலும்... பொதுவானதாகவே இருப்பது தவிர்க்க முடியததுதான்.

ஆனால், இந்தக் கணிப்புகள், ஜோதிடக் கலையுடன் இணைத்துக் கணிப்புக்குள்ளாக்கும் போது... மிகத் துல்லியமான பலன்களை அளிப்பது கண் கூடாகிறது.

இந்தக் கணித முறை விளக்கும் சில சூட்சுமங்களை தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.


Friday, March 20, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 107. 'கிரகங்கள் சுட்டிக் காட்டும் கர்மவினைகளைக் களைந்து போக வைப்பதில், மகான்களின் பங்கு' - பகுதி-25.




உங்களது 'கர்மவினைகளை' உங்கள் உடல் பார்த்துக் கொள்ளும்... நீங்கள் உங்களுக்குள் உறையும் 'இறைவனைப்' பாருங்கள்... அதற்கு எந்தக் 'கர்மவினைத் தடையும்' இல்லை. ( பகவான் ரமணர் )

ஒரு ஜீவனின் ஜோதிடச் சித்திரம், லக்னம் என்ற 1 ஆம் இடமான 'ஜீவாத்மா வின் பிறப்பு' என்பதில் இருந்து ஆரம்பித்து... அவரின்  12 ஆமிடமான 'ஜீவாத்மாவின் மறைவு' என்பது வரையில் பயணிக்கும்... ஜீவ வாழ்வின் ரகசியமாகும்.

அந்த ரகசியத்தை, அந்த ஜீவனே அறியாதபடி, அதை, அந்த ஜீவனின் வாழ்வின் பாதையின் ஒவ்வொரு நொடியிலும் மலர வைக்கிறார்... இறைவன். அந்த ரகசியத்தைத்தான்... ஜீவனின் 'கர்ம வினைகள்' என்று வகைப்படுத்துகிறது... ஜோதிடக் கலை.

இந்தக் 'கர்மவினைகளைத்' தீர்மானிப்பதே... அந்த ஜீவன்தான். ஜீவனின் முற்பிறப்புகளில், அது மேற்கொள்ளும் செயல்களின் விளைவுகள் புண்ணியமாகவும்... பாபமாகவும்... 'கர்ம வினைக் கட்டுகளில்' (சஞ்சித கர்மா) சேர்கிறது.

அதில், இந்தப் பிறவிக்கான 'கர்ம வினைகளை' (பிராரர்த்த கர்மா) புண்ணியங்கள், பாபங்கள் என்ற ஒரு 'சம அளவுக் கலவையாக' தேர்ந்தெடுத்து... அதை அனுபவிக்கவே ஒரு பிறவியை அளிக்கிறான் இறைவன்.

அதை, இந்தப் பிறவியில் அனுபவிக்கும் ஜீவன்... அந்த 'கர்ம வினைகள்' விளைவிக்கும் விளைவுகளை (ஆகாமிய கர்மா), மீண்டும் தனது மொத்த கர்ம வினைக் கட்டுக்குள் கொண்டு சேர்க்கிறது.

'ஆத்மாவின்' அனுக்கிரகத்துடன் ஒரு 'உடலை' எடுக்கும் 'ஜீவன்'... அந்த உடலை ஆதாரமாகக் கொண்டுதான்... தனது கர்ம வினைகளை இந்த உலகில் கடந்து போகிறது.

'உடலுடன் இணையும் ஜீவன்'... 'கர்மத்தின் தளைகளில்' சிக்குறுவதையும்... 'ஆத்மாவுடன் இணையும் ஜீவன்'... 'கர்மத்தின் தளைகளில்' இருந்து விடுபடுவதையும்தான்... 'ரமண மகிரிஷி' இவ்வாறு அருள்கிறார்...

உங்களது 'கர்மவினைகளை' உங்கள் உடல் பார்த்துக் கொள்ளும்... நீங்கள் உங்களுக்குள் உறையும் 'இறைவனைப்' பாருங்கள்... அதற்கு எந்தக் 'கர்மவினைத் தடையும்' இல்லை. ( பகவான் ரமணர் )

தொடர்ந்து பயணிப்போம்... மகான்களின் அருளோடு...

ஸாய்ராம்.



Monday, March 16, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 106. 'கிரகங்கள் சுட்டிக் காட்டும் கர்மவினைகளைத் தீர்க்கும் ஆலயங்கள் - 'ராகு-கேது பகவான்கள்' - பகுதி-24.


ஸ்ரீ ராமானுஜர் :



'திருவாதிரை நட்சத்திரத்தில்' ஸ்ரீ பெரும்புதூரில் அவதரித்த மகான். இவர்  'பகவான் லக்ஷ்மணரின்' அவதாரமாகப் போற்றப்படுகிறார். லக்ஷ்மணரோ... 'திருவரங்கன் 'பள்ளி கொண்டிருக்கும் 'ஆதிஷேஷனின்' அவதாரமாகக் கொண்டாடப்படுபவர்.

ஆதலால், ஸ்ரீ ராமானுஜர்... ஆதிஷேஷனின் அவதாரமாகக் கொண்டாடப் படுபவராகிறார்.

வைணவம் தளைத்தோங்கவும்... 'பகவான் ஆதிசங்கரருக்குப்' பிறகு, 'அத்வைத' சித்தாந்தங்கள் சற்று நீர்த்துப் போகும்படியாக காரியங்கள் நடந்து கொண்டிருந்த போது... வைணவ ஆச்சர்யர்களான, 'ஸ்ரீ நாதமுனிகள்', 'ஸ்ரீ ஆளவந்தார்' ஆகியோர்களுக்குப் பிறகு, 'வைணவர்களுக்கு வழிகாட்டியாகவும்'... பெருமாளுக்குப் பெரும் தொண்டாற்றும் அடியவராகவும். பக்தராகவும்... காஞ்சிபுரத்து 'பேரருளாளனான' வரதராஜப் பெருமாளது தூதுவராக... 'திருவரங்கத்து இன்னமுதனின் திருவடிகளுக்கு' வந்து... 'அத்வைதத்தின்' நிலை மாறாமலும்... 'துவைதத்தின்' நிலையைத் தெளிவாக்கியும்... 'பக்தியும், ஞானமும்' ஒன்றாக  இணைந்த... 'விசிஷ்டாவைதத் தத்துவத்தை' நிறுவினார்.

தனது 30 ஆவது வயதில் திருவரங்கத்துக்கு வந்த ஆச்சார்யார்... தமது 120 தாவது வயது வரை... 'அரங்கனுக்கும்'... இந்த உலகமெங்கும் எழுந்தருளும் 'பெருமாள் உறையும்' அனைத்து ஆலயங்களுக்குமான... 'நியமங்களை' வகுத்து அருளினார்.

'வைணவர்' என்ற சொல்லுக்கு... ஆச்சார்யர் வழங்கிய விளக்கம்... 'எவனொருவன், பிரிதொருவனின் துன்பத்தை... தன் துன்பமாகக் கருதி துயருருகிறானோ... அவனே உண்மையான வைணவன்' என்ற சொல்லமுதமாக்கினார். அதன் படி தானும்... தனது 74 சீடர்களையும் வழி நடத்தி அருளினார்.

நாதமுனிகளால் உயிர் பெற்ற... ஆழ்வார்களின் அமுதங்களான... 'நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள்' முன் செல்ல... அடியவர்களின் பின்னால். 'அரங்கனும்' அவனருளும் 'வேதங்களும்' பெருமையுடன் பின் தொடர வைத்த பெருமை 'ராமானுஜரையே' சாரும்.

இந்த பாரத தேசம் முழுவதும்... அவரது காலடிகள் பதிந்தன. அவரின் திக்விஜயத்தை ஒரு வரைபடமாக்கினால்... அது 'ஆதிஷேஷன்' செல்வதைப் போல வளைந்து, வளைந்துதான் காணப்படும.




'கர்ம வினைகள்' என்ற துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிற ஜீவர்கள் அனைவருக்கும்... ஆறுதலாகவும், தேறுதலாகவும். அதனின்று விடுபடும் ஞானத்தை அருளும் 'சத்குருவாகவும்' இன்றும் 'திருவரங்கத்தில்', அரங்கநாதரின் அருளாலயத்தின் பிரகாரத்தில், 'உடையவர் சன்னதியில்' எழுந்தருளி...


இன்றும் மாறாத... புடம் போட்ட உருவத்துடன்... தன் சொந்தத் திருமேனியின் வடிவமாகவே... இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார்... ஸ்ரீ ராமானுஜர்.


'ராகு-கேது பகவான்கள்' குறிப்பிடும், 'கர்ம வினைகளையும்'... அதைக் கடந்து போகும் 'ஞானத்தையும்' பெற விரும்பும், ஜீவர்களுக்கெனவே, திருவரங்கத்தில், 'ரெங்கநாயகித் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கநாதரையும்' அவரின் செல்வக் குழந்தையான 'ஸ்ரீ ராமானுஜரையும்' சென்று தரிசித்து, 'அருள் ஞானத்தைப்' பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்ந்து பயணிப்போம்... இறைவனின் திருவருளோடு...

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 105. 'கிரகங்கள் சுட்டிக் காட்டும் கர்மவினைகளைத் தீர்க்கும் ஆலயங்கள் - 'கேது பகவான்' - பகுதி-23.





'பாற்கடலைக்' கடையும் போது, 'மகாமேரு மலையை' மத்தாக்கி, 'வாசுகி' என்ற சர்ப்பத்தைக் கயறாக்கித்தான்... தேவர்கள் வால் புறமும்... அசுரர்கள் தலைப் புறமும்... இழுத்துக் கடைந்தார்கள்.

பாற்கடலிலிருந்து பவித்திரமான வஸ்துக்கள் வருவதற்கு முன், வெளிவந்தது 'ஆலகால விஷம்தான்'. அதைத்தான் 'சர்வேஸ்வரன்' உண்டு... நீலகண்டனானார்.

அந்த நிகழ்வுக்குத் தானும் ஒரு காரணம் என்பதை உணர்ந்த 'வாசுகி' தான் வந்து தவமியற்ற ஒரு ஸ்தலத்தித் தேர்ந்தெடுத்தது. அந்த ஸ்தலம்தான்... கும்பகோணத்திற்கு அருகிலிருக்கும் 'கீழப் பெரும்பள்ளம்.



இந்த மூங்கில் காடுகள் சூழ்ந்திருக்கும் ஸ்தலத்திற்கு வந்திருந்து, தாயார் 'சௌந்தர்ய நாயகி சமேத நாகநாதர் சுவாமியை' வழிபட்டு, தனக்கு ஏற்பட்ட மனக்குறையைத் தீர்த்து, தனக்கு அருளியவாறே, இங்கு வந்து வழிபடும் அனைவருக்கும் அருளிட வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார்.


வாசுகியின் பிரார்த்தனைக்கு மனமிரங்கிய சர்வேஸ்வரன், வாசுகிக்கும், வாசுகியின் துணையால் கிடைத்த அமுதத்தை உண்டு, வால் வேறான சுவர்ண்பானுக்கு, 'கேது பகவானாக' பிரகாரத்தில் இடமுமளித்து, ஆலய சேத்திர பாலகனாக நியமித்து அனுக்கிரஹிக்கிறார்.


'ஞானக்காரகரான'... கேது பகவானை, இங்கு வந்து வழிபடுவோருக்கு, 'கர்மவினைகளைக் கடந்து போகும்படியான' ஞானத்தை அருளுமாரு சர்வேஸ்வரன் பணித்துள்ளார்,

இந்த நிகழ்வை நினைவுபடுத்தும்படியாக, ஒவ்வொரு பங்குனி மாதத்திலும், வாசுகி உட்சவமும்... தொடர்ந்து மூன்றாம் நாள், கேது பகவானுக்கு, நாகநாதர், தாயார் சௌந்தர்யநாயகி சமேதமாக' காட்சி அருளும் திரு உற்சவமும் நடந்தேருகிறது.

'கர்ம வினைகளின் கடுமையால்' துன்புற்று வருந்துபவர்கள், அதைக் கடந்து போகும் வல்லமையையும்... அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும்... கொடுத்து 'ஞானவானாக' மாற்றும் ஸ்தலமாக... இந்தக் கீழப்பெரும்பள்ளம் அமைகிறது என்றால்... அது மிகையில்லை.

தொடர்ந்து பயணிப்போம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Saturday, March 14, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 104. 'கிரகங்கள் சுட்டிக் காட்டும் கர்மவினைகளைத் தீர்க்கும் ஆலயங்கள் - 'ராகு பகவான்' - பகுதி-22.





'சுவர்பானு', அசுரர்களில் ஒருவனாக இருந்தாலும், 'மஹாவிஷ்ணு',மோகினி அவதாரம் எடுத்து, தேவர்களுக்கு அமிர்தத்தைப் பரிமாறும் போது, தேவர்களில் ஒருவனாக அமர்ந்து அதைப் பெற்று உண்டான்.

 சுவர்பானு, ஒரு அசுரன் என்ற உண்மையை, சூரிய, சந்திர பகவான்கள், மோகினி அவதாரத்திலிருந்க்கும், மஹா விஷ்ணுவிடம் சுட்டிக் காட்ட, மஹாவிஷ்ணு, தனது சக்ராதயத்தால், சுவர்பானுவின் தலையைத் துண்டித்தார்.

துண்டிக்காப்பட்ட தலையுடன் இருந்த சுவர்பானு, அமிர்தத்தை உண்ட காரணத்தால், தலைவேறு உடல் வேறாக துடிக்க, பிரம்ம பகவானின் அருளினால், 'ராகு பகவானாகவும், கேது பகவானாகவும்' உருவம் பெற்றான். அவர்களின் தீவிர தவத்தால், 'சர்வேஸ்வரனின்' கருணையினால், நவக்கிரகங்களில், ஜீவர்களின் 'கர்மவினைகளைக்' குறிப்பிடும் 'ராகு பகவானாகவும், அந்தக் கர்மவினைகளிலிருந்து விடுபடும் 'ஞானத்தை அருளும்  கேது பகவானாகவும், தங்களது கடமைகளை, நிழலாக இருந்து  அருள்கிறார்கள்.

இந்த ராகு பகவான்,


செண்பக மரங்கள் சூழ்ந்த 'சண்பகராண்ய ஷேத்திரம்' என்றழைக்கப்படும், கும்பகோணத்திற்கு அருகிலிருக்கும் திருநாகேஸ்வரம் வந்து, 'தாயார் பிரையணிந்துதலால் சமேத நாகநாத சுவாமிகளிடம்' சரணடைந்து, தவமியற்றினான்.



ராகு பகவானின் தவத்திற்கு மனமிரங்கிய சர்வேஸ்வரன், தனது கோவிலின் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில், நாகவல்லி, நாகக்கன்னி சமேதராய் ராகு பகவானுக்குத் தனிச் சன்னதியை அருளியிருக்கிறார்.


இந்தச் சன்னிதானத்தில் எழுந்தருளியிருக்கும் ராகு பகவானுக்கு, தினம் நடக்கும் ராகு கால பூஜையில், அபிஷேகம் நடைபெறும். அபிஷேகத்தின் போது, ராகு பகவானின் மீது ஊற்றும் பால், அவரின் உடல் மீது பட்டு வழியும் போது 'நீல நிறமாக' மாறுவதை, இன்றும் நம்மால் காணமுடியும்.


'கர்ம வினைகளால்' துன்புறும் ஜீவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, தாயார், சுவாமிகளை தரிசனம் செய்து, பிரகாரத்திலிருந்து அருளும் 'நாகவால்லி, நாகக்கன்னிகள் சமேத ராகு பகவானை' வழிபட்டு வர, கர்மவினைகளின் கடுமை குறைவதும், அதன் தாத்பர்யங்களை அறிந்து கொள்ளும் ஜீவன், அதற்கேற்ப தனது வாழ்வை கடந்து போவதும், நிகழும்.



இறைவனின் அருளோடு... தொடர்ந்து பயணிப்போம்.

ஸாயிராம்.

Wednesday, March 11, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 103. 'கிரகங்கள் சுட்டிக் காட்டும் கர்மவினைகளைத் தீர்க்கும் ஆலயங்கள் - 'சனி பகவான்' - பகுதி-21.





'சனி பகவான்' ஜாதகத்தில் பெற்றிருக்கும் அமைப்பு, உணர்த்தும் 'கர்மவினைகளைக் களைவதில்', 'இறைவழிபாடு' பெரும் பங்கை வகிக்கிறது.

ஜீவன், தனது 'கர்ம வினைகளைக்' களைவதற்காகவே, பிறப்பை அடைகிறது. ஆனால், துரதிருஷ்ட வசமாக 'கர்ம வினைகளைக் களைவதைத் தவிர்த்து' அதைச் சேர்த்துக் கொள்ளும் வழிகளைத்தான், இந்த உலக வாழ்வில், மேற்கொள்கிறது.

அதனால், எண்ணற்ற பிறவிகளை எடுத்து, ஜீவன், துன்பத்தில் உழலுகிறது. ஒவ்வொரு பிறவியும், மனிதப் பிறவியாக அமைந்து விடும் என்பது கட்டாயமில்லாததால், ஏதாவது ஒரு பிறவியாவது, 'மனிதப் பிறவியாக' அமையாதா...! என்ற ஏக்கத்துடனேயே, அது தனது முடிவான மரணத்தைச் சந்திக்கிறது.

அதனால்தான், 'அரிது... அரிது... மானிடராய்ப் பிறத்தல் அரிது...!' என்று 'பிராட்டியார்' அனுபவித்து அமுத மொழியாகப் பகர்ந்தார். கிடைக்கும் மனிதப் பிறவியை, முழுமையாகப் பயன்படுத்தி, தனது கடமைகளை பூர்த்தி செய்து, மீண்டும் 'பிறப்பில்லா நிலையை' அடைய செய்யும் முயற்சியே... 'ஆன்மீகப் பயிற்சியாகிறது'

இந்த ஜீவனின், 'ஆயுளையும்'... அது அனுபவிக்கும் 'கர்ம வினைகளின் விளைவுகளான'... இன்ப-துன்பங்களையும்... 'தர்ம பரிபாலனம்' செய்யும் பணியைத்தான்... 'ஆயுள் காரகராக'... 'சனி பகவான்' மேற்கொள்கிறார்.

'கர்ம வினைகளைக் களையும்' பாதையில்... தனது ஆயுளுக்கு ஒரு பங்கம் ஏற்படும் போது... அது, தனது பிறவிகளின் எண்ணிக்கைகளை நீட்டி விடுமோ...! என்ற பயத்தில் உலவும் 'ஞானவான்களுக்கும்' ;

மரணத்தின் விளிம்பில் நின்று தவிக்கும்... கர்மவான்களை, மரண பயத்திலிருந்து  நீக்கி, மரணத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் ;

'சனி பகவானின்' அதிதேவதையாகிய 'எம பகவான்' அருள்கிறார்.

* 'கர்ம வினைகளைக் களையும்' பாதையில்... தனது ஆயுளுக்கு ஒரு பங்கம் ஏற்படும் போது... அது, தனது பிறவிகளின் எண்ணிக்கைகளை நீட்டி விடுமோ...! என்ற பயத்தில் உலவும் 'ஞானவான்களுக்கு' அருள் செய்யும் இறைவனாக,

திருவாரூருக்கு அருகே, ஸ்ரீ வாஞ்சியம் என்ற ஊரில், பக்தர்களுக்கு அருள் பாலிக்க எழுந்தருளியிருக்கிறார்... 'மங்களாம்பிகைத் தாயார் சமேத வாஞ்சிநாத சுவாமி'.


'திருவாரூர் தியாகராஜரிடம்' சென்று, 'என்னைக் கண்டு இந்த உலக மக்கள் யாவரும் அஞ்சுகிறார்களே சுவாமி...! உங்களின் திருவுள்ளப்படிதானே எனது பணியும் இருக்கிறது...! ஆனால், எட்டுத் திக்குப் பாலகர்களில் எனக்கு மட்டும் ஏன் இந்த வெறுப்பை உன்ண்டாக்கும் கடமையை அளித்திருக்கிறீர்கள்...?' என்று 'எம தர்மர்' முறையிட்டார்.

அவரது, முறையீட்டைக் கேட்ட சர்வேஸ்வரன், மனமிரங்கி, 'நீ சென்று வாஞ்சிநாதரை சரணடைவாக...!' என்று அருள்கிறார். 'வாஞ்சிநாதரை' சரணடைந்த எமப் பிரபுவை, ஆசுவாசப் படுத்தும் 'வாஞ்சிநாதர்' அவரை தனது ஆலயத்தின் 'ஷேத்திர பாலகனாக' நியமித்து, அவருக்கு ஒரு தனிச் சன்னதியையும், அவரை ஒரு வாகனமாக்கி, அதில் பவனியும் செய்து அருளினார்.


இந்த 'ஸ்ரீ வாஞ்சிய நாதர்' ஆலயத்திற்கு வந்து தாயார், சுவாமி, எமபகவானை வழிபடுவோர்க்கு, ஞானமும் கைகூடி, தனது கடமைகளை இந்தப் பிறவியில் பூரணமாக்கும் வல்லமையும் கூடிவரும்.

* மரணத்தின் விளிம்பில் நின்று தவிக்கும்... கர்மவான்களை, மரண பயத்திலிருந்து  நீக்கி, மரணத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அளிக்கும் சுவாமியாக,



திருச்சிக்கு அருகில், திருப்பைஞ்சலியில், 'தாயார் நீல்நெடுங்கண் நாயகி, விசாலாட்சியார் சமேத ஞீலிவனேஸ்வரராக' சுவாமி எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.


திருக்கடையூரில், தண்டிக்கப்பட்டு தன்னை இழந்த 'எமபகவான்' தான் மீண்டும் உயிர் பெற்ற ஸ்தலாமாக, குழந்தை வடிவில் உயிர் பெற்ற ஸ்தலாமக, திருப்பைஞ்சலி ஸ்தலம் அமைகிறது.

இங்கு அவருக்கு தனிக் கோவிலும், தீர்த்தமும் அமைந்திருக்கிறது. 'மரண பயத்தால்' தவிக்கும் ஜீவர்களுக்கும், மரணத்தை நோக்கிய பயணத்தில் தவித்து நிற்கும் ஜீவர்களுக்கும், அருள் நிழல் குடையாக... 'எமலிங்கமாக' எமதர்மப் பிரபு எழுந்தருள்கிறார்.



இந்த ஆலயம் வந்து, தாயார், சுவாமி, எம பகவானை தரிசித்து, பைஞ்சலீஸ்வரரின் திருநீறுடன், எமதீர்த்தத்தைப் பருகுவோர்க்கு, எமயாதனை தீரும் என்பது கண்கூடு.

தொடர்ந்து பயணிப்போம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்

Tuesday, March 10, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 102. 'கிரகங்கள் சுட்டிக் காட்டும் கர்மவினைகளைத் தீர்க்கும் ஆலயங்கள் - 'சனி பகவான்' - பகுதி-20.





'சனி பகவான்'... 'ஜோதிடக் கலையில்', ஜீவனின் 'தர்ம வாழ்வை' பரிபாலனம் செய்யும் கடமையைச் செய்பவர்.

ஜீவனின் ஆயுள் காலத்தையும், அந்த ஆயுள் காலத்தில், ஜீவன் 'எதிர்கொள்ளும்' அல்லது 'விளைவிக்கும் விளைவுகளையும்', தர்மத்திற்கு உட்பட்டு பரிபாலனம் செய்து, அதற்கான விளைவுகளை, அந்த ஜீவனின் 'கர்ம வினைகளிலிருந்து' எடுத்து அளிப்பவராக... தனது கடமையை ஆற்றுகிறார்.

ஒரு ஜீவனின் வாழ்வில் ஏறக்குறைய 19 முழு வருடங்களையோ... அல்லது பகுதியையோ... தசாவாகவும், நீண்ட நெடிய புத்திக் காலங்களையும், அந்தரங்களையும் ஆட்கொண்டு... தர்ம பரிபாலனம் செய்வதால்... அனைவராலும் ஆழ்ந்து நோக்கப்படுபவராக 'சனி பகவான்' அமைகிறார்.

'தர்மம்' என்பது மிகவும் சூட்சுமமானது. நமது பார்வைக்கு 'நியாயமாகப்' படுபவைகள், தர்மத்தின் பார்வைக்குள், 'நியாயமற்றது' என தீர்ப்பாகும் போதும்... நமக்கு 'நியாயமற்றது' என்பது தர்மத்தின் பார்வைக்குள், 'நியாயமானது' என தீர்ப்பாகும் போதுதான்.. இந்த 'தர்ம முடிச்சின் சூட்சுமம்' நமக்குப் புலனாகிறது.

ஒரு குறிப்பிட்ட 'கிரகத்தின்' காலம் ஜீவனுக்கு யோகமான பலன்களை அளிக்கக் கூடியதாக அமைந்து, அந்த யோக காலத்தில், சுக பாக்கியங்களை அந்த ஜீவன் இழக்கும் போதுதான்... அந்தக் கிரகத்தின் பின்னணியில்... 'சனி பகவானின்' ஆளுமை இருப்பது புலனாகும். அந்த ஆளுமையைக் கொண்டு, அந்த ஜீவனின் 'கர்ம வினைகளின் விளைவுகளுக்கு' ஏற்ப, 'தர்மத்தை' பரிபாலன்ம் செய்து விடுகிறார் 'சனி பகவான்'.

இவ்வாறு நிகழ்ந்த வரலாறுதான் 'நள மகராஜனின்' வாழ்வு.


மகாராஜாவான நளன், தனது 'கர்ம வினைகளின் விளைவால்', தனது ராஜ்ஜியம், குழந்தைகள், இறுதியாக தன்னையே, நம்பி வந்த துணைவியான 'தமயந்தியையும்', இழந்த கதைதான் 'நள தமயந்தி' வரலாறாக... தர்மத்தின் சூட்சுமங்களை அவிழ்க்கும்... இதிகாசமான... மஹாபாரதம் கூறுகிறது.

நளன் தனது புண்ணியங்களின் பலனை... இராஜாவாகவும், பாபங்களின் பலனை... சமையல் மற்றும் தேரோட்டியாகவும், மீண்டும் துன்பங்களைக் கடந்து இன்பங்களை நுகரும் புண்ணிய காலங்களில்... சக்கரவர்த்தியாகவும் மாற்றமடைவதே... இந்த 'கர்ம வினைகளின் சுழற்சிக்கு' ஒரு அத்தாட்சியாக நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த சூட்சுமத்தை விளக்கும் கோவிலாக அமைந்திருப்பதே... திருநள்ளாறு 'தர்பாரண்யேஸ்வரர் திருக்கோவில்'.


'தர்மத்திற்குக்' காவலாக... 'வாமன' அவதாரத்தின் போது, வாமனப் பெருமாளின் ஆயுதமாக... 'யாகங்களுக்கு' மூலமாக... 'நுண்மையான புத்தியைக்' குறிப்பதாக... அமையும் 'தர்ப்பைப் புல்லே' இந்த ஆலயத்தின் விருட்சமாக அமைகிறது.

தர்மத்தை ஒருவர் மீறும் போது, அந்த தர்மத்திற்குக் காவலாக இருக்கும் 'சனி பகவான்'... மீறுபவரின், கர்ம வினைகளின் பாபக் கணக்கு வரும் வரை காத்திருந்து... அந்தக் காலத்தை... இறைவனிடம் அர்ப்பணிக்கிறார். அந்த ஜீவனது, கர்ம வினைகளையும்... அந்த ஜீவனது தற்போதைய நடைமுறை வாழ்வையும்... கணக்கில் கொண்டு... இறைவன் அளிக்கும் 'விளைவுகளைத்தான்'... ஜீவன் தனது வாழ்வின் துன்பங்களாக அனுபவித்து வருகிறது.

இந்த உண்மையை விளக்கும் வண்ணம், இந்த ஸ்தலத்தில், தர்ப்பாரண்யேஸ்வரர், தமக்கு அன்புடன் அபிஷேகத்திற்கு பால் கொடுக்கும். ஒரு இடையருக்கு காட்சி கொடுத்த அற்புதமும் நிகழ்ந்திருக்கிறது.


அரசரின் ஆணைப்படி, தினமும் ஈஸ்வரரின் அபிஷேகத்திற்காக, பால் வழங்கிக் கொண்டிருந்தார் ஒரு இடையர் குலத்தைச் சேர்ந்தவர். ஆனால், கோவிலில் இருந்த 'கணக்கர்', அன்றாடம், அந்த பாலை தனது வீட்டிற்கு அனுப்பிவிட்டு, பாலின் அளவைக் குறைத்து கணக்கை எழுதிக் கொண்டிருந்தார். அந்தக் கணக்கைப் பார்வையிட்ட அரசர், தாம் கொடுக்கச் சொன்னதற்குக் குறைவாக பாலை அளித்தற்காக, அந்த இடையரை தண்டிக்க முற்பட்டான்.

மனம் கலங்கிய இடையர், சர்வேஸ்வரரிடம் முறையிட்டு கலங்கி நிற்க, ஈசனிடம் இருந்த சூலம், தாமாகவே புறப்பட்டு, நந்தி, பலிபீடங்கள் வழிவிட... அந்த கணக்கரை வந்து தாக்கியது. உண்மை வெளிப்பட்டு, நன்றியுடன் தாள் பணிந்த, இடையருக்கு 'காட்சி' கொடுத்தருளினார்... தர்ப்பாரண்யேஸ்வரர்.

இந்த தர்மத்தை ஸ்தாபிக்க உதவிய, 'சனி பகவானுக்கு' தனக்கு முன்பாகவே, ஒரு தனிச் சன்னதியைக் கொடுத்து அருளியிருக்கிறார் ஈசன்.

தர்மத்தின் வழியே செல்லும் போது ஏற்படும் தடங்கல்களை நீக்கவும்... அந்த தர்மத்தை நிலைநிறுத்தவும்... இந்த ஆலயத்திற்குச் சென்று,


நள தீர்த்தத்தில் நீராடி, 'தாயார் பிராணேஸ்வரி சமேத தர்ப்பாரண்யேஸ்வரை' தரிசனம் செய்து, இடையருக்குச் காட்சி கொடுத்த 'சர்வேஸ்வரரையும்'... 'சனி பகவானையும்' தரிசனம் செய்து வர... 'தர்மத்தின் வாழ்வுதனை கவ்விய சூதுகளைக் களைந்து... தர்மத்தை மீண்டும் ஸ்தாபிப்பார்... தர்ப்பாரண்யேஸ்வரர்'.

இறைவனின் அருளோடு... மீண்டும் பயணிப்போம்...

ஸாய்ராம்.


Saturday, March 7, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 101. 'கிரகங்கள் சுட்டிக் காட்டும் கர்மவினைகளைத் தீர்க்கும் ஆலயங்கள் - 'சுக்கிர பகவான்' - பகுதி-19.


'சுக்கிர பகவான்' சுகத்தை அள்ளி வழங்குபவர்... என்ற பதம் நிதர்சனமானதுதான். அவரிடம் இருக்கும் 'அமிர்த சஞ்சீவினி திருமந்திரம்' இறவாமையை மட்டுமல்ல... மீண்டும் பிறவாமையயும்... அளிக்கும் திருமந்திரமாக இருக்கிறது.



அந்த ஆனந்த அனுபவத்தை அளிக்கும் ஸ்தலமாக அமைந்ததுதான்... திருவரங்கம், 'ஸ்ரீ ரெங்கநாதரின் திருக்கோவில்'. இந்த ஆலயத்தின் திருமூர்த்தி, 'சுக்கிர பகவானை' தனது அம்சத்தில் ஆட்கொள்கிறார்.

 திவ்யதேசங்களின் முதல் ஸ்தலமாகவும்... 'பெரிய' என்ற பதத்திற்கு ஏற்றவாறு, இங்கமைந்திருக்கும் அத்தனை அம்சங்களும் 'பெரிதுதான்'.




கோவில்... பெரிய கோவிலாகிறது. கோபுரம்... பெரிய கோபுரமாகிறது. பெருமாள்... பெரிய பெருமாளாகிறார். கருடன் பெரிய கருடனாகிறார். திவ்ய தேசக் கோவில்களிலேயே, வருடம் முழுவதும்... ஒவ்வொரு நாளும் 'திருநாளாககக்' கொண்டாடப்படுவது இந்த ஆலயத்தில் மட்டும்தான்.




ஆலய முர்த்தியான 'ஸ்ரீ ரெங்கநாதர்' அரவணைப் பள்ளி கொண்டு அருள் காட்சி அளிப்பதும், தான் உற்சவராக... 'நம்பெருமாளாக' எழுந்தருளி... திருவரங்கத்தை மட்டுமல்ல... இந்த ஈரேழு லோகங்களையும் ஆளும்... 'அரங்கராஜனாக' அருள் ராஜ்ஜியம் நடத்துவது... நாம் பெற்ற புண்ணியமன்றி வேறேதும் இல்லை.


'சுக்கிர பகவானின்' ஆளுமையைப் பெற்ற... அல்லது பெற வேண்டிய ஜாதகர்களின் ஒரே சரணாகதியாகத் திகழ்வது... இந்த 'பூலோக வைகுண்டமான' திருவரங்கமே.

இந்த ஆலயம் வந்து, அம்மாபண்டபக் கரையில் புரண்டோடும் காவேரியில் மூழ்கி எழுந்து... இராஜ கோபுரம், கல்கம்பம், ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக... கருடன்... ஆஞ்சநேயர்... 'தாயார் ஸ்ரீ ரெங்க நாச்சியாரை' தரிசித்து... பாற்கடலில் இருந்து தோன்றிய... விமானத்தின் கீழ் பள்ளி கொண்டிருக்கிற. ஸ்ரீ ரெங்கநாதரை தரிசித்து, உற்சவத் திருமேனியாக எழுந்தருளும்... நம்பெருமாளின் திருவடியில்... சரணடையும் யாவர்க்கும்... இந்த பூலோகத்தின் சுக வாழ்வு... குறவில்லாது கூடும் என்பது திண்ணமே.


தொடர்ந்து பயணிப்போம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 100. 'கிரகங்கள் சுட்டிக் காட்டும் கர்மவினைகளைத் தீர்க்கும் ஆலயங்கள் - 'சுக்கிர பகவான்' - பகுதி-18.


'சுக்கிர பகவானை', சுக போகக்காரகன் என்றே வருணிப்பது ஜோதிடத் துறையில் வழக்கமாக இருக்கும் ஒன்றுதான், ஆனால், அவரை, அசுரத்தன்மையின், 'குரு' என்பதாகத்தான், புராணங்கள் வருணிக்கின்றன.

எவ்வாறு, தேவர்களுக்கான குருவாக, 'குரு பகவானை' குறிப்பிடுகிறோமோ, அது போல, அசுரர்களுக்கு குருவாக, 'சுக்கிர பகவானை' குறிப்பிடுகிறோம்.

'விஷ்ணு பகவான்', 'வாமன அவதாரத்தை' எடுத்து, 'மகாபலி அரசரின்' யாகம் பூர்த்தியாவதைத் தடுக்க, 'மூன்றடி மண் கேட்கும் போது...' மகாபலி, தனது பத்னி சமேதமாக, நீர் விட்டு, தானத்தை கொடுக்கும் க்ஷணத்தில், அந்த நீர்ப்பாத்திரத்தின் வாயிலில், ஒரு வண்டுருவமாக உருவம் கொண்டு 'சுக்கிர பகவான் தடுத்ததும், வாமனனான பெருமாள், தனது 'தர்ப்பைப் புல்லின்' நுனியினால், 'சுக்கிர பகவானின்' கண்ணைத் துளைத்ததும், நாம் அறிந்த சரித்திரம்தான்.




தனது பக்தர்களைக் காப்பதற்காக, தனது கண்ணையே இழந்தவர்தான் 'சுக்கிர பகவான்'.

ஞானத்தின் மூலமாக ஜீவர்களைத் தன்னில் ஈர்த்துக் கொள்ளும் 'ஈஸ்வரன்', கர்மத்தின் வழியேயான வாழ்விலிருந்து, ஜீவர்களைத் தன்னில் ஈர்த்துக் கொள்ள 'சுக்கிர பகவானின்' வழிகாட்டுதல்களை, ஜீவர்களுக்கு அளித்தருள்கிறான்.

இந்த உண்மையை வெளிப்படுத்தும் ஸ்தலமாக, கும்பகோணத்திற்கு அருகில், கஞ்சனூரில், 'அக்னீஸ்வரராக' எழுந்தருளி அருள் பாலிக்கிறார், சர்வேஸ்வரன். 'தாயார் கற்பகாம்பாள் சமேதமாக, அக்னீஸ்வரர்' எழுந்தருளியிருக்கும் இந்த ஸ்தலத்தின் உற்சவரான 'சர்வேஸ்வரரே'... 'சுக்கிர பகவானின்' அம்சமாக காட்சியருள்கிறார்.




அசுரர்களின் துணை கொண்டு, தேவர்கள் பாற்கடலைக் கடைந்து, அமுதத்தினை தாங்கள் மட்டுமே அனுபவித்ததிற்காக... தேவர்களை 'சுக்கிர பகவான்' சபித்துவிட்டார். தேவர்கள், அந்த சாபத்தினை நீக்குவதற்காக, இந்த ஆலயத்திற்கு வந்து 'அக்னித் தீர்த்தத்தில்' நீராடி, 'கற்பகாம்பாள் தாயார் சமேத அக்னீஸ்வரை' வணங்கி வழிபட... கருணையுள்ளம் கொண்ட சர்வேஸ்வரன், தானே, 'சுக்கிர பகவானாக'... உற்சவத் திருமேனியில் எழுந்தருளி... தேவர்களின் சாபத்தைத் நீக்கி அருளினார்.

ஜாதகத்தில், சுக்கிர பகவானின் நிலை, 'பாதகமாகவோ'... 'மாரகமாகவோ'... 'நீசமாகவோ'...'காரகோப நாஸ்தியாகவோ'... 'அசுப ஆதிபத்தியாமாகவோ'... அமைந்திருந்தால், இந்த ஆலயம் வந்து, அக்னி தீர்த்தத்தில் நீராடி, தாயார், சர்வேஸ்வரன், உற்சவரான 'சுக்கிர பகவானை' தரிசனம் செய்துவர... 'சுக்கிர பகவான் உணர்த்தும், 'கர்ம வினைக் கட்டுகளிலிருந்து' ஜாதகர்கள் விடுபட வழி பிறக்கும் என்பது திண்ணம்.




தொடர்ந்து பயணிப்போம்... இறயருளாலே...!

ஸாய்ராம்.

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...