உங்களது 'கர்மவினைகளை' உங்கள் உடல் பார்த்துக் கொள்ளும்... நீங்கள் உங்களுக்குள் உறையும் 'இறைவனைப்' பாருங்கள்... அதற்கு எந்தக் 'கர்மவினைத் தடையும்' இல்லை. ( பகவான் ரமணர் )
ஒரு ஜீவனின் ஜோதிடச் சித்திரம், லக்னம் என்ற 1 ஆம் இடமான 'ஜீவாத்மா வின் பிறப்பு' என்பதில் இருந்து ஆரம்பித்து... அவரின் 12 ஆமிடமான 'ஜீவாத்மாவின் மறைவு' என்பது வரையில் பயணிக்கும்... ஜீவ வாழ்வின் ரகசியமாகும்.
அந்த ரகசியத்தை, அந்த ஜீவனே அறியாதபடி, அதை, அந்த ஜீவனின் வாழ்வின் பாதையின் ஒவ்வொரு நொடியிலும் மலர வைக்கிறார்... இறைவன். அந்த ரகசியத்தைத்தான்... ஜீவனின் 'கர்ம வினைகள்' என்று வகைப்படுத்துகிறது... ஜோதிடக் கலை.
இந்தக் 'கர்மவினைகளைத்' தீர்மானிப்பதே... அந்த ஜீவன்தான். ஜீவனின் முற்பிறப்புகளில், அது மேற்கொள்ளும் செயல்களின் விளைவுகள் புண்ணியமாகவும்... பாபமாகவும்... 'கர்ம வினைக் கட்டுகளில்' (சஞ்சித கர்மா) சேர்கிறது.
அதில், இந்தப் பிறவிக்கான 'கர்ம வினைகளை' (பிராரர்த்த கர்மா) புண்ணியங்கள், பாபங்கள் என்ற ஒரு 'சம அளவுக் கலவையாக' தேர்ந்தெடுத்து... அதை அனுபவிக்கவே ஒரு பிறவியை அளிக்கிறான் இறைவன்.
அதை, இந்தப் பிறவியில் அனுபவிக்கும் ஜீவன்... அந்த 'கர்ம வினைகள்' விளைவிக்கும் விளைவுகளை (ஆகாமிய கர்மா), மீண்டும் தனது மொத்த கர்ம வினைக் கட்டுக்குள் கொண்டு சேர்க்கிறது.
'ஆத்மாவின்' அனுக்கிரகத்துடன் ஒரு 'உடலை' எடுக்கும் 'ஜீவன்'... அந்த உடலை ஆதாரமாகக் கொண்டுதான்... தனது கர்ம வினைகளை இந்த உலகில் கடந்து போகிறது.
'உடலுடன் இணையும் ஜீவன்'... 'கர்மத்தின் தளைகளில்' சிக்குறுவதையும்... 'ஆத்மாவுடன் இணையும் ஜீவன்'... 'கர்மத்தின் தளைகளில்' இருந்து விடுபடுவதையும்தான்... 'ரமண மகிரிஷி' இவ்வாறு அருள்கிறார்...
உங்களது 'கர்மவினைகளை' உங்கள் உடல் பார்த்துக் கொள்ளும்... நீங்கள் உங்களுக்குள் உறையும் 'இறைவனைப்' பாருங்கள்... அதற்கு எந்தக் 'கர்மவினைத் தடையும்' இல்லை. ( பகவான் ரமணர் )
தொடர்ந்து பயணிப்போம்... மகான்களின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment