'சுக்கிர பகவானை', சுக போகக்காரகன் என்றே வருணிப்பது ஜோதிடத் துறையில் வழக்கமாக இருக்கும் ஒன்றுதான், ஆனால், அவரை, அசுரத்தன்மையின், 'குரு' என்பதாகத்தான், புராணங்கள் வருணிக்கின்றன.
எவ்வாறு, தேவர்களுக்கான குருவாக, 'குரு பகவானை' குறிப்பிடுகிறோமோ, அது போல, அசுரர்களுக்கு குருவாக, 'சுக்கிர பகவானை' குறிப்பிடுகிறோம்.
'விஷ்ணு பகவான்', 'வாமன அவதாரத்தை' எடுத்து, 'மகாபலி அரசரின்' யாகம் பூர்த்தியாவதைத் தடுக்க, 'மூன்றடி மண் கேட்கும் போது...' மகாபலி, தனது பத்னி சமேதமாக, நீர் விட்டு, தானத்தை கொடுக்கும் க்ஷணத்தில், அந்த நீர்ப்பாத்திரத்தின் வாயிலில், ஒரு வண்டுருவமாக உருவம் கொண்டு 'சுக்கிர பகவான் தடுத்ததும், வாமனனான பெருமாள், தனது 'தர்ப்பைப் புல்லின்' நுனியினால், 'சுக்கிர பகவானின்' கண்ணைத் துளைத்ததும், நாம் அறிந்த சரித்திரம்தான்.
தனது பக்தர்களைக் காப்பதற்காக, தனது கண்ணையே இழந்தவர்தான் 'சுக்கிர பகவான்'.
ஞானத்தின் மூலமாக ஜீவர்களைத் தன்னில் ஈர்த்துக் கொள்ளும் 'ஈஸ்வரன்', கர்மத்தின் வழியேயான வாழ்விலிருந்து, ஜீவர்களைத் தன்னில் ஈர்த்துக் கொள்ள 'சுக்கிர பகவானின்' வழிகாட்டுதல்களை, ஜீவர்களுக்கு அளித்தருள்கிறான்.
இந்த உண்மையை வெளிப்படுத்தும் ஸ்தலமாக, கும்பகோணத்திற்கு அருகில், கஞ்சனூரில், 'அக்னீஸ்வரராக' எழுந்தருளி அருள் பாலிக்கிறார், சர்வேஸ்வரன். 'தாயார் கற்பகாம்பாள் சமேதமாக, அக்னீஸ்வரர்' எழுந்தருளியிருக்கும் இந்த ஸ்தலத்தின் உற்சவரான 'சர்வேஸ்வரரே'... 'சுக்கிர பகவானின்' அம்சமாக காட்சியருள்கிறார்.
அசுரர்களின் துணை கொண்டு, தேவர்கள் பாற்கடலைக் கடைந்து, அமுதத்தினை தாங்கள் மட்டுமே அனுபவித்ததிற்காக... தேவர்களை 'சுக்கிர பகவான்' சபித்துவிட்டார். தேவர்கள், அந்த சாபத்தினை நீக்குவதற்காக, இந்த ஆலயத்திற்கு வந்து 'அக்னித் தீர்த்தத்தில்' நீராடி, 'கற்பகாம்பாள் தாயார் சமேத அக்னீஸ்வரை' வணங்கி வழிபட... கருணையுள்ளம் கொண்ட சர்வேஸ்வரன், தானே, 'சுக்கிர பகவானாக'... உற்சவத் திருமேனியில் எழுந்தருளி... தேவர்களின் சாபத்தைத் நீக்கி அருளினார்.
ஜாதகத்தில், சுக்கிர பகவானின் நிலை, 'பாதகமாகவோ'... 'மாரகமாகவோ'... 'நீசமாகவோ'...'காரகோப நாஸ்தியாகவோ'... 'அசுப ஆதிபத்தியாமாகவோ'... அமைந்திருந்தால், இந்த ஆலயம் வந்து, அக்னி தீர்த்தத்தில் நீராடி, தாயார், சர்வேஸ்வரன், உற்சவரான 'சுக்கிர பகவானை' தரிசனம் செய்துவர... 'சுக்கிர பகவான் உணர்த்தும், 'கர்ம வினைக் கட்டுகளிலிருந்து' ஜாதகர்கள் விடுபட வழி பிறக்கும் என்பது திண்ணம்.
தொடர்ந்து பயணிப்போம்... இறயருளாலே...!
ஸாய்ராம்.



No comments:
Post a Comment