'சனி பகவான்' ஜாதகத்தில் பெற்றிருக்கும் அமைப்பு, உணர்த்தும் 'கர்மவினைகளைக் களைவதில்', 'இறைவழிபாடு' பெரும் பங்கை வகிக்கிறது.
ஜீவன், தனது 'கர்ம வினைகளைக்' களைவதற்காகவே, பிறப்பை அடைகிறது. ஆனால், துரதிருஷ்ட வசமாக 'கர்ம வினைகளைக் களைவதைத் தவிர்த்து' அதைச் சேர்த்துக் கொள்ளும் வழிகளைத்தான், இந்த உலக வாழ்வில், மேற்கொள்கிறது.
அதனால், எண்ணற்ற பிறவிகளை எடுத்து, ஜீவன், துன்பத்தில் உழலுகிறது. ஒவ்வொரு பிறவியும், மனிதப் பிறவியாக அமைந்து விடும் என்பது கட்டாயமில்லாததால், ஏதாவது ஒரு பிறவியாவது, 'மனிதப் பிறவியாக' அமையாதா...! என்ற ஏக்கத்துடனேயே, அது தனது முடிவான மரணத்தைச் சந்திக்கிறது.
அதனால்தான், 'அரிது... அரிது... மானிடராய்ப் பிறத்தல் அரிது...!' என்று 'பிராட்டியார்' அனுபவித்து அமுத மொழியாகப் பகர்ந்தார். கிடைக்கும் மனிதப் பிறவியை, முழுமையாகப் பயன்படுத்தி, தனது கடமைகளை பூர்த்தி செய்து, மீண்டும் 'பிறப்பில்லா நிலையை' அடைய செய்யும் முயற்சியே... 'ஆன்மீகப் பயிற்சியாகிறது'
இந்த ஜீவனின், 'ஆயுளையும்'... அது அனுபவிக்கும் 'கர்ம வினைகளின் விளைவுகளான'... இன்ப-துன்பங்களையும்... 'தர்ம பரிபாலனம்' செய்யும் பணியைத்தான்... 'ஆயுள் காரகராக'... 'சனி பகவான்' மேற்கொள்கிறார்.
'கர்ம வினைகளைக் களையும்' பாதையில்... தனது ஆயுளுக்கு ஒரு பங்கம் ஏற்படும் போது... அது, தனது பிறவிகளின் எண்ணிக்கைகளை நீட்டி விடுமோ...! என்ற பயத்தில் உலவும் 'ஞானவான்களுக்கும்' ;
மரணத்தின் விளிம்பில் நின்று தவிக்கும்... கர்மவான்களை, மரண பயத்திலிருந்து நீக்கி, மரணத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் ;
'சனி பகவானின்' அதிதேவதையாகிய 'எம பகவான்' அருள்கிறார்.
* 'கர்ம வினைகளைக் களையும்' பாதையில்... தனது ஆயுளுக்கு ஒரு பங்கம் ஏற்படும் போது... அது, தனது பிறவிகளின் எண்ணிக்கைகளை நீட்டி விடுமோ...! என்ற பயத்தில் உலவும் 'ஞானவான்களுக்கு' அருள் செய்யும் இறைவனாக,
திருவாரூருக்கு அருகே, ஸ்ரீ வாஞ்சியம் என்ற ஊரில், பக்தர்களுக்கு அருள் பாலிக்க எழுந்தருளியிருக்கிறார்... 'மங்களாம்பிகைத் தாயார் சமேத வாஞ்சிநாத சுவாமி'.
'திருவாரூர் தியாகராஜரிடம்' சென்று, 'என்னைக் கண்டு இந்த உலக மக்கள் யாவரும் அஞ்சுகிறார்களே சுவாமி...! உங்களின் திருவுள்ளப்படிதானே எனது பணியும் இருக்கிறது...! ஆனால், எட்டுத் திக்குப் பாலகர்களில் எனக்கு மட்டும் ஏன் இந்த வெறுப்பை உன்ண்டாக்கும் கடமையை அளித்திருக்கிறீர்கள்...?' என்று 'எம தர்மர்' முறையிட்டார்.
அவரது, முறையீட்டைக் கேட்ட சர்வேஸ்வரன், மனமிரங்கி, 'நீ சென்று வாஞ்சிநாதரை சரணடைவாக...!' என்று அருள்கிறார். 'வாஞ்சிநாதரை' சரணடைந்த எமப் பிரபுவை, ஆசுவாசப் படுத்தும் 'வாஞ்சிநாதர்' அவரை தனது ஆலயத்தின் 'ஷேத்திர பாலகனாக' நியமித்து, அவருக்கு ஒரு தனிச் சன்னதியையும், அவரை ஒரு வாகனமாக்கி, அதில் பவனியும் செய்து அருளினார்.
இந்த 'ஸ்ரீ வாஞ்சிய நாதர்' ஆலயத்திற்கு வந்து தாயார், சுவாமி, எமபகவானை வழிபடுவோர்க்கு, ஞானமும் கைகூடி, தனது கடமைகளை இந்தப் பிறவியில் பூரணமாக்கும் வல்லமையும் கூடிவரும்.
* மரணத்தின் விளிம்பில் நின்று தவிக்கும்... கர்மவான்களை, மரண பயத்திலிருந்து நீக்கி, மரணத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அளிக்கும் சுவாமியாக,
திருச்சிக்கு அருகில், திருப்பைஞ்சலியில், 'தாயார் நீல்நெடுங்கண் நாயகி, விசாலாட்சியார் சமேத ஞீலிவனேஸ்வரராக' சுவாமி எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
திருக்கடையூரில், தண்டிக்கப்பட்டு தன்னை இழந்த 'எமபகவான்' தான் மீண்டும் உயிர் பெற்ற ஸ்தலாமாக, குழந்தை வடிவில் உயிர் பெற்ற ஸ்தலாமக, திருப்பைஞ்சலி ஸ்தலம் அமைகிறது.
இங்கு அவருக்கு தனிக் கோவிலும், தீர்த்தமும் அமைந்திருக்கிறது. 'மரண பயத்தால்' தவிக்கும் ஜீவர்களுக்கும், மரணத்தை நோக்கிய பயணத்தில் தவித்து நிற்கும் ஜீவர்களுக்கும், அருள் நிழல் குடையாக... 'எமலிங்கமாக' எமதர்மப் பிரபு எழுந்தருள்கிறார்.
இந்த ஆலயம் வந்து, தாயார், சுவாமி, எம பகவானை தரிசித்து, பைஞ்சலீஸ்வரரின் திருநீறுடன், எமதீர்த்தத்தைப் பருகுவோர்க்கு, எமயாதனை தீரும் என்பது கண்கூடு.
தொடர்ந்து பயணிப்போம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்






No comments:
Post a Comment