Tuesday, March 10, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 102. 'கிரகங்கள் சுட்டிக் காட்டும் கர்மவினைகளைத் தீர்க்கும் ஆலயங்கள் - 'சனி பகவான்' - பகுதி-20.





'சனி பகவான்'... 'ஜோதிடக் கலையில்', ஜீவனின் 'தர்ம வாழ்வை' பரிபாலனம் செய்யும் கடமையைச் செய்பவர்.

ஜீவனின் ஆயுள் காலத்தையும், அந்த ஆயுள் காலத்தில், ஜீவன் 'எதிர்கொள்ளும்' அல்லது 'விளைவிக்கும் விளைவுகளையும்', தர்மத்திற்கு உட்பட்டு பரிபாலனம் செய்து, அதற்கான விளைவுகளை, அந்த ஜீவனின் 'கர்ம வினைகளிலிருந்து' எடுத்து அளிப்பவராக... தனது கடமையை ஆற்றுகிறார்.

ஒரு ஜீவனின் வாழ்வில் ஏறக்குறைய 19 முழு வருடங்களையோ... அல்லது பகுதியையோ... தசாவாகவும், நீண்ட நெடிய புத்திக் காலங்களையும், அந்தரங்களையும் ஆட்கொண்டு... தர்ம பரிபாலனம் செய்வதால்... அனைவராலும் ஆழ்ந்து நோக்கப்படுபவராக 'சனி பகவான்' அமைகிறார்.

'தர்மம்' என்பது மிகவும் சூட்சுமமானது. நமது பார்வைக்கு 'நியாயமாகப்' படுபவைகள், தர்மத்தின் பார்வைக்குள், 'நியாயமற்றது' என தீர்ப்பாகும் போதும்... நமக்கு 'நியாயமற்றது' என்பது தர்மத்தின் பார்வைக்குள், 'நியாயமானது' என தீர்ப்பாகும் போதுதான்.. இந்த 'தர்ம முடிச்சின் சூட்சுமம்' நமக்குப் புலனாகிறது.

ஒரு குறிப்பிட்ட 'கிரகத்தின்' காலம் ஜீவனுக்கு யோகமான பலன்களை அளிக்கக் கூடியதாக அமைந்து, அந்த யோக காலத்தில், சுக பாக்கியங்களை அந்த ஜீவன் இழக்கும் போதுதான்... அந்தக் கிரகத்தின் பின்னணியில்... 'சனி பகவானின்' ஆளுமை இருப்பது புலனாகும். அந்த ஆளுமையைக் கொண்டு, அந்த ஜீவனின் 'கர்ம வினைகளின் விளைவுகளுக்கு' ஏற்ப, 'தர்மத்தை' பரிபாலன்ம் செய்து விடுகிறார் 'சனி பகவான்'.

இவ்வாறு நிகழ்ந்த வரலாறுதான் 'நள மகராஜனின்' வாழ்வு.


மகாராஜாவான நளன், தனது 'கர்ம வினைகளின் விளைவால்', தனது ராஜ்ஜியம், குழந்தைகள், இறுதியாக தன்னையே, நம்பி வந்த துணைவியான 'தமயந்தியையும்', இழந்த கதைதான் 'நள தமயந்தி' வரலாறாக... தர்மத்தின் சூட்சுமங்களை அவிழ்க்கும்... இதிகாசமான... மஹாபாரதம் கூறுகிறது.

நளன் தனது புண்ணியங்களின் பலனை... இராஜாவாகவும், பாபங்களின் பலனை... சமையல் மற்றும் தேரோட்டியாகவும், மீண்டும் துன்பங்களைக் கடந்து இன்பங்களை நுகரும் புண்ணிய காலங்களில்... சக்கரவர்த்தியாகவும் மாற்றமடைவதே... இந்த 'கர்ம வினைகளின் சுழற்சிக்கு' ஒரு அத்தாட்சியாக நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த சூட்சுமத்தை விளக்கும் கோவிலாக அமைந்திருப்பதே... திருநள்ளாறு 'தர்பாரண்யேஸ்வரர் திருக்கோவில்'.


'தர்மத்திற்குக்' காவலாக... 'வாமன' அவதாரத்தின் போது, வாமனப் பெருமாளின் ஆயுதமாக... 'யாகங்களுக்கு' மூலமாக... 'நுண்மையான புத்தியைக்' குறிப்பதாக... அமையும் 'தர்ப்பைப் புல்லே' இந்த ஆலயத்தின் விருட்சமாக அமைகிறது.

தர்மத்தை ஒருவர் மீறும் போது, அந்த தர்மத்திற்குக் காவலாக இருக்கும் 'சனி பகவான்'... மீறுபவரின், கர்ம வினைகளின் பாபக் கணக்கு வரும் வரை காத்திருந்து... அந்தக் காலத்தை... இறைவனிடம் அர்ப்பணிக்கிறார். அந்த ஜீவனது, கர்ம வினைகளையும்... அந்த ஜீவனது தற்போதைய நடைமுறை வாழ்வையும்... கணக்கில் கொண்டு... இறைவன் அளிக்கும் 'விளைவுகளைத்தான்'... ஜீவன் தனது வாழ்வின் துன்பங்களாக அனுபவித்து வருகிறது.

இந்த உண்மையை விளக்கும் வண்ணம், இந்த ஸ்தலத்தில், தர்ப்பாரண்யேஸ்வரர், தமக்கு அன்புடன் அபிஷேகத்திற்கு பால் கொடுக்கும். ஒரு இடையருக்கு காட்சி கொடுத்த அற்புதமும் நிகழ்ந்திருக்கிறது.


அரசரின் ஆணைப்படி, தினமும் ஈஸ்வரரின் அபிஷேகத்திற்காக, பால் வழங்கிக் கொண்டிருந்தார் ஒரு இடையர் குலத்தைச் சேர்ந்தவர். ஆனால், கோவிலில் இருந்த 'கணக்கர்', அன்றாடம், அந்த பாலை தனது வீட்டிற்கு அனுப்பிவிட்டு, பாலின் அளவைக் குறைத்து கணக்கை எழுதிக் கொண்டிருந்தார். அந்தக் கணக்கைப் பார்வையிட்ட அரசர், தாம் கொடுக்கச் சொன்னதற்குக் குறைவாக பாலை அளித்தற்காக, அந்த இடையரை தண்டிக்க முற்பட்டான்.

மனம் கலங்கிய இடையர், சர்வேஸ்வரரிடம் முறையிட்டு கலங்கி நிற்க, ஈசனிடம் இருந்த சூலம், தாமாகவே புறப்பட்டு, நந்தி, பலிபீடங்கள் வழிவிட... அந்த கணக்கரை வந்து தாக்கியது. உண்மை வெளிப்பட்டு, நன்றியுடன் தாள் பணிந்த, இடையருக்கு 'காட்சி' கொடுத்தருளினார்... தர்ப்பாரண்யேஸ்வரர்.

இந்த தர்மத்தை ஸ்தாபிக்க உதவிய, 'சனி பகவானுக்கு' தனக்கு முன்பாகவே, ஒரு தனிச் சன்னதியைக் கொடுத்து அருளியிருக்கிறார் ஈசன்.

தர்மத்தின் வழியே செல்லும் போது ஏற்படும் தடங்கல்களை நீக்கவும்... அந்த தர்மத்தை நிலைநிறுத்தவும்... இந்த ஆலயத்திற்குச் சென்று,


நள தீர்த்தத்தில் நீராடி, 'தாயார் பிராணேஸ்வரி சமேத தர்ப்பாரண்யேஸ்வரை' தரிசனம் செய்து, இடையருக்குச் காட்சி கொடுத்த 'சர்வேஸ்வரரையும்'... 'சனி பகவானையும்' தரிசனம் செய்து வர... 'தர்மத்தின் வாழ்வுதனை கவ்விய சூதுகளைக் களைந்து... தர்மத்தை மீண்டும் ஸ்தாபிப்பார்... தர்ப்பாரண்யேஸ்வரர்'.

இறைவனின் அருளோடு... மீண்டும் பயணிப்போம்...

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...