Monday, March 16, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 106. 'கிரகங்கள் சுட்டிக் காட்டும் கர்மவினைகளைத் தீர்க்கும் ஆலயங்கள் - 'ராகு-கேது பகவான்கள்' - பகுதி-24.


ஸ்ரீ ராமானுஜர் :



'திருவாதிரை நட்சத்திரத்தில்' ஸ்ரீ பெரும்புதூரில் அவதரித்த மகான். இவர்  'பகவான் லக்ஷ்மணரின்' அவதாரமாகப் போற்றப்படுகிறார். லக்ஷ்மணரோ... 'திருவரங்கன் 'பள்ளி கொண்டிருக்கும் 'ஆதிஷேஷனின்' அவதாரமாகக் கொண்டாடப்படுபவர்.

ஆதலால், ஸ்ரீ ராமானுஜர்... ஆதிஷேஷனின் அவதாரமாகக் கொண்டாடப் படுபவராகிறார்.

வைணவம் தளைத்தோங்கவும்... 'பகவான் ஆதிசங்கரருக்குப்' பிறகு, 'அத்வைத' சித்தாந்தங்கள் சற்று நீர்த்துப் போகும்படியாக காரியங்கள் நடந்து கொண்டிருந்த போது... வைணவ ஆச்சர்யர்களான, 'ஸ்ரீ நாதமுனிகள்', 'ஸ்ரீ ஆளவந்தார்' ஆகியோர்களுக்குப் பிறகு, 'வைணவர்களுக்கு வழிகாட்டியாகவும்'... பெருமாளுக்குப் பெரும் தொண்டாற்றும் அடியவராகவும். பக்தராகவும்... காஞ்சிபுரத்து 'பேரருளாளனான' வரதராஜப் பெருமாளது தூதுவராக... 'திருவரங்கத்து இன்னமுதனின் திருவடிகளுக்கு' வந்து... 'அத்வைதத்தின்' நிலை மாறாமலும்... 'துவைதத்தின்' நிலையைத் தெளிவாக்கியும்... 'பக்தியும், ஞானமும்' ஒன்றாக  இணைந்த... 'விசிஷ்டாவைதத் தத்துவத்தை' நிறுவினார்.

தனது 30 ஆவது வயதில் திருவரங்கத்துக்கு வந்த ஆச்சார்யார்... தமது 120 தாவது வயது வரை... 'அரங்கனுக்கும்'... இந்த உலகமெங்கும் எழுந்தருளும் 'பெருமாள் உறையும்' அனைத்து ஆலயங்களுக்குமான... 'நியமங்களை' வகுத்து அருளினார்.

'வைணவர்' என்ற சொல்லுக்கு... ஆச்சார்யர் வழங்கிய விளக்கம்... 'எவனொருவன், பிரிதொருவனின் துன்பத்தை... தன் துன்பமாகக் கருதி துயருருகிறானோ... அவனே உண்மையான வைணவன்' என்ற சொல்லமுதமாக்கினார். அதன் படி தானும்... தனது 74 சீடர்களையும் வழி நடத்தி அருளினார்.

நாதமுனிகளால் உயிர் பெற்ற... ஆழ்வார்களின் அமுதங்களான... 'நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள்' முன் செல்ல... அடியவர்களின் பின்னால். 'அரங்கனும்' அவனருளும் 'வேதங்களும்' பெருமையுடன் பின் தொடர வைத்த பெருமை 'ராமானுஜரையே' சாரும்.

இந்த பாரத தேசம் முழுவதும்... அவரது காலடிகள் பதிந்தன. அவரின் திக்விஜயத்தை ஒரு வரைபடமாக்கினால்... அது 'ஆதிஷேஷன்' செல்வதைப் போல வளைந்து, வளைந்துதான் காணப்படும.




'கர்ம வினைகள்' என்ற துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிற ஜீவர்கள் அனைவருக்கும்... ஆறுதலாகவும், தேறுதலாகவும். அதனின்று விடுபடும் ஞானத்தை அருளும் 'சத்குருவாகவும்' இன்றும் 'திருவரங்கத்தில்', அரங்கநாதரின் அருளாலயத்தின் பிரகாரத்தில், 'உடையவர் சன்னதியில்' எழுந்தருளி...


இன்றும் மாறாத... புடம் போட்ட உருவத்துடன்... தன் சொந்தத் திருமேனியின் வடிவமாகவே... இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார்... ஸ்ரீ ராமானுஜர்.


'ராகு-கேது பகவான்கள்' குறிப்பிடும், 'கர்ம வினைகளையும்'... அதைக் கடந்து போகும் 'ஞானத்தையும்' பெற விரும்பும், ஜீவர்களுக்கெனவே, திருவரங்கத்தில், 'ரெங்கநாயகித் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கநாதரையும்' அவரின் செல்வக் குழந்தையான 'ஸ்ரீ ராமானுஜரையும்' சென்று தரிசித்து, 'அருள் ஞானத்தைப்' பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்ந்து பயணிப்போம்... இறைவனின் திருவருளோடு...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...