Friday, September 30, 2022

ஆகும் சனவேத சக்தியை... 'திருமூலர் அருளிய திருமந்திரம்' பாடல் - 739


 'ஆகுஞ் சனவேத சக்தியை அன்புற

நீர்கொள் நெல்லில் வளர்கின்ற நேர்மையைப்

பாகு படுத்திப் பலகோடி களத்தினால்

ஊழ்கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே'

'திருமூலப் பெருமானரது', 'திருமந்திரப் பாடல்கள்' ஒவ்வொன்றும், மிக மிகக் கருத்தாழமிக்கவைகள். ஏறத்தாள மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து... 'உள்வாழ்வில்' தான் அனுபவித்து உணர்ந்த அனுபவங்கள் ஒவ்வொன்றையும், வருடம் ஒரு பாடலாக வடித்தார் என கூறப்படுகிறது.

இன்றைய காலக் கட்டத்தில், அவரின் இந்த வாழ்வு பற்றிய கருத்து சற்று மிகையானதாகக் கருதப்பட்டாலும், ஒவ்வொரு பாடலையும், நாம் புரிந்து கொண்டு, அதன் அனுபவத்தை பயிற்சியில் அனுபவிக்கு போது மட்டுமே, அவர் வடித்த பாடலின் கருத்தும்... அதன் அனுபவமும்... நமக்குக் கை கூடுகிறது.

அது போலவே , இந்தப் பாடல் உணர்த்தும் 'உட்பொருளை' கருத்துடனும்... அனுபவத்துடனும்... ஆய்ந்து பார்ப்போம் :

களங்களில் குவிந்திருக்கும் நெற்குவியல்கள், அதன் மூலமான, ஒரு நெல் மணியிலிருந்துதான் உண்டாகின்றன. அதே போலவே, கிளைகளாய்... சாகைகளாய்... பலவாறு பிரிந்து இருக்கிற வேதங்களும், அதன் மூலமான, இறைவனிடம் ஒடுங்கியிருக்கின்ற ஓங்காரமான வேதசக்தியில் இருந்துதான் உண்டாகியிருக்கின்றன.

வேதங்களுக்கு மூலமான அந்த 'சக்தியே', நமதுள்ளில் 'ஆத்மாவாக' இருந்து, 'ஊழ் வினைகள்' என்ற 'பூர்வ வாசனைகளால்', எண்ணங்களாக இந்த புற உலகில் விரிந்து... பரந்து... எண்ணற்ற கோடி பிறவிகளை அளிக்கும், இந்த ஜீவனின் பிறவிப் பிணிகளுக்குக் மூலமாகவும்... சாட்சியாகவும்... காரணமாகவும்... இருக்கிறது.

எவ்வாறு வேதங்களின் வழியாக, அதன் மூலசக்தியாக இருக்கும் இறைவனை அறிந்து... அவனில் ஒடுங்குகிறோமோ, அதேபோல, இந்த உலக வாழ்வில் கலந்து இருக்கும், ஜீவ சக்தியை, அதற்கு மூலமாக இருந்து அருளும் அந்த ஆத்ம சக்தியுடன் ஒடுங்க வைக்கும் போது, நாம், இந்தப் பிறவிப் பிணியிலிருந்து விடுதலை அடைந்து விடுகிறோம்.

'ஆன்மாவுடன், ஜீவன் கலந்து விடும்'... இந்த நுட்பத்தைத்தான், தான் அனுபவித்து... உணர்ந்து... ஒவ்வொரு பாடல்கலாக வடித்திருக்கிறார்... திருமூலப் பெருமானார்.

ஆகவேதான் இவற்றை 'திருமந்திரம்' என்று உயர்வாக அழைக்கிறோம்!

ஸாய்ராம்.




Monday, September 26, 2022

கொலு வழிபாட்டை தொடரச் செய்து, துன்பத்தை நீக்கியருளிய பெரியவர்...


                                                                       
மஹாராஷ்டிர மாநிலம், சதாராவில், [மகா பெரியவர்[ முகாமிட்டிருந்த நேரம்... பாலக்காட்டிலிருந்து, ஒரு வாலிபன் அவரை தரிசனம் செய்யச் சென்றான். ஒரு பிற்பகல் வேளையில், பெரியவரை வீழ்ந்து வணங்கி, கண்ணீர்மல்க நின்றான்.

பெரியவர், அவனைப் பற்றி விசாரிக்க... தனது பெயர் 'ஹரிஹர சுப்பிரமணியன்' என்றும், தான் பாலக்காட்டிலிருந்து வருவதாகவும், தனது தந்தை டாகடர். ஹரிஹர நாராயணன் என்றும், அவர் ஆயுர்வேத சிகிச்சை செய்து கொண்டிருந்ததாகவும், தற்போது அவர் இல்லை என்பதாகவும் கூறினான்.

ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர், 'அடடா, நீ பாலக்காடு, ஆயுர்வேத டாகடர் நாரயணனோட பிள்ளையா !' என்றதோடு, 'அப்படியானால், நீ டாகடர். ஹரிஹர ராகவனோடு பேரனாக இருப்பாய்! அவர்கள் எல்லோரும் ஆயுர்வேத சிகிச்சையில் பெயர் பெற்றவர்களாயிற்றே!' என்றார். ஆச்சரியத்துடன் பெரியவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த வாலிபனை, 'நீ உனது பெயருக்கு முன்னால் டாக்டர் என்பதை சேர்க்கவில்லையே!' என்று பெரியவர் குறிப்பிட்ட போது, 'நான் அதைக் கற்றுக்கொள்ளவில்லை பெரியவா. எனது தந்தை என்னை அவ்வாறு தயார் செய்யவில்லை.' என்று ஆர்வமின்றி பதிலளித்தான்.

'அது போல சொல்லக் கூடாது. உனது தந்தை, உன்னை அவ்வாறு தயார் செய்யவில்லையா ? அல்லது, உனக்கு அதைக் கற்றுக் கொள்வதில் சிரத்தையில்லையா ? ஒரு சிறந்த வைத்தியப் பரம்பரையிலிருந்து வந்து, அதை தொடர்வதற்கான வாய்ப்பை இழந்து விட்டாய். சரி, உன்னை பற்றிக் கூறு ?' என்று பெரியவர் கேட்ட போது,  தான் ஒன்பதாவது வரை படித்ததாகவும், அதற்கு மேல் படிப்பு ஏறவில்லை என்றும், அங்கிருக்கும் ஒரு தொழிற்சாலையில், சொற்ப சம்பளத்தில்; 'சூப்பர்வைஸராக' பணியாற்றுவதாகவும், திருமணமாகி ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் கூறினான். இவற்றை எல்லாம் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்,' உனக்கு பெரியவர்கள் விட்டுச் சென்ற வீடு இருக்கிறதல்லாவா ?' என்று கேட்ட போதுதான், தான் வந்த கரியத்தைப் பற்றி வாலிபன் கூறலானான்.

தனது தாத்தா விட்டுச் சென்ற வீடு இருப்பதாகவும், தனது தந்தையின் சகோதரி, அவரது கணவனின் மறைவுக்குப் பின், தனது இரண்டு பெண் குழந்தைகளோடு வந்து விட்டதாகவும், அந்த பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்விப்பதற்காக, இது போன்ற ஒரு நவராத்திரி உற்சவத்தின் போது, அருகிலிருப்பவர் ஒருவரிடம் 25,000/- கடனாகப் பெற்றதும், தற்போது அதை திருப்பிக் கொடுக்க முடியாமல், வட்டியுடன் சேர்ந்து 45,000/- மாகி, வீடு கடனில் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும், அதை எப்படி மீட்பது என்று தெரியாமல்தான் பெரியவரிடம் பிரார்த்திக்க வந்ததாகவும் கூறினான்.

சற்று நேர மௌனத்திற்குப் பின், பெரியவர், 'சரி, வருடா வருடம் வீட்டில் கொலு வைத்து, நவாராத்திரி பண்டிகையை கொண்டாடுகிறீர்கள் தானே ?' என்று கேடதற்கு, 'தந்தை செய்த செயலாலும், அவர் மறைந்ததற்குப் பின்னரும், நாங்கள் நவராத்திரி கொலு வைப்பதில்லை, பெரியவா!' என்றான் வாலிபன். 'முன்னோர்களைப் பற்றி இவ்வாறெல்லாம் மரியாதை குறைவாகப் பேசக் கூடாது. அவர்களெல்லாம் மிகச் சிறந்தவர்கள் என்பதை நானறிவேன். சிறந்த செயல்களை செய்துவிட்டுத்தான் அவர்கள் சென்றிருக்கிறார்கள். சிலதை மனதில் வைத்துக் கொண்டு, நீ அந்த பண்டிகையை கொண்டாடாமல் விட்டிருப்பது மிகப் பெரிய தவாறாகும். இன்னும் ஒரு வாரத்தில், நவராத்திரி ஆரம்பமாகப் போகிறது. நீ சென்று மீண்டும்  அந்த வழக்கத்தை தொடர்ந்து ஆரம்பி. உனது அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.' என்று, அந்த வாலிபனை ஆசீர்வதித்து அனுப்பினார்.

இருபது நாட்களுக்குப் பின் ஒரு ஞாயிறன்று, பெரியவரை தரிசிக்க திரளான கூட்டம் கூடியிருந்தது. அப்போது மடத்து சிப்பந்தி, பஞ்சகட்சரம், ஜிப்பா, துளசி-ருத்ராக்ஷ மாலைகள் தரித்த, 65 வயது மதிக்கத் தக்க வட நாட்டுக்காரர் ஒருவரை அழைத்து வந்து பெரியவர் முன் நிருத்த, அவர் பெரியவரை வீழ்ந்து வணங்கி, ஹிந்தியில் பேச ஆரம்பித்தார். அவர் பேசுவதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர், அவருக்கு ஹிந்தியிலேயே பதிலளித்து, அவரை தனக்கு எதிரிலிருக்கும் மேடையில் அமரச் சொன்னார்.

அப்போது, பாலக்காட்டிலிருந்து நவராத்திரி பண்டிகையை மீண்டும் ஆரம்பித்து, அதை பூர்த்தி செய்துவிட்டு, பெரியவரை தரிசிக்க ஹரிஹர சுப்பிரமணியன் வந்திருந்தான். அவன் தனது கையில் ஒரு இரும்புப் பெட்டியை வைத்திருந்தான். அதை பெரியவர் ஒரு அர்த்த புஷ்டியோடு பார்க்க, அந்த இரும்புப் பெட்டியைத் திறந்து, அதிலிருந்து பட்டுத் துணியினால் முடியிருந்த 10 லிருந்து 15 வரையிலான 'ஓலைச் சுவடிக் கட்டுகளை' எடுத்து பெரியவர் முன் வைத்து, 'விட்டுப் போன பழக்கத்தை மீண்டும் ஆரம்பிக்க தாங்கள் ஆணையிட்டதன் பேரில், கொலு வைப்பதற்காக பரணில் ஏறி கொலு பொம்மைகள் வைத்திருக்கும் பெட்டியை எடுத்த போது, அங்கு இந்த இரும்புப் பெட்டி இருந்தது பெரியவா. அதை, இதுவரை நான் பார்த்ததில்லை. அதை திறந்து பார்த்த போது, இந்த ஓலைச் சுவடிகள் இருந்தன. அதில் எழுதியிருப்பவற்றை என்னால் படிக்க முடியவில்லை. அதனால் அதை அப்படியே உங்கள் பார்வைக்கு கொண்டு வந்து விட்டேன்.' என்றான்.

இதை, ஏதும் அறியாதவர் போல பார்த்துக் கொண்டிருந்த பெரியவர், புன்னகைத்தபடியே, எதிரில் அமரவைத்திருந்த அந்த வடநாட்டுக்காரரை சைகையால் அழைத்தார். 'ஒரு அபூர்வமான வஸ்துவைப் பற்றி நீங்கள் சிறிது நேரத்திற்கு முன் கேட்டீர்கள் அல்லவா! இதோ, இப்போது இங்கு அது வந்து விட்டது! வந்து பாருங்கள்1' என்றார். 

உடனடியாக ஆவலுடன் எழுந்து வந்த வடநாட்டுக்காரர், அந்த ஓலைச் சுவடிகளை, தனது பூதக் கண்ணாடியின் துணையுடன் படிக்க ஆரம்பித்தார். அவரது முகம் எல்லையற்ற ஆனந்தத்தால் மலர்ந்தது. 'ஓ! பரம ஆச்சார்ய புருஷரே! இந்த அபூர்வமான 'ஆயுர்வேத கிரந்தத்தைத்தான்', நான் அனேக ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். இதனை பிரார்த்திக்கவே உங்களிடம் வந்தேன். 'பிரத்யக்ஷ தெய்வமான' தாங்கள், நான் பிரார்த்தித்து அரை மணி நேரத்திற்குள், அதை எனது கண்களுக்கு முன்பாகக் கொண்டு வந்து விட்டீர்கள்!' என்றார் ஆனந்தக் கண்ணீருடன்.

ஆச்சரியத்துடன், இவற்றை பார்த்துக் கொண்டிருந்த ஹரிஹர சுப்பிரமணியனை அருகே அழைத்த பெரியவர், 'இவர், பண்டரீபுரத்தை சேர்ந்த மிகச் சிறந்த ஆயுர்வேத ஆராய்ச்சியாளர். அரை மணிக்கு முன்புதான், இவர் என்னிடம் ஒரு 'அபூர்வ சுவடியைப்' பற்றி கேட்டார். ஏதோ எனது மனதில் படவேதான், அவரை இங்கே சிறிது நேரம் அமரவைத்தேன். உடனே நீ வந்து இந்த இரும்புப் பெட்டியோடு நிற்கிறாய்! இந்த சுவடிகள் அனைத்தும் இவருக்கு பேருதவியாக இருக்கும். உனது முன்னோர்களை பிரார்த்தித்தபடியே, உனது கைகளாலேயே இந்த சுவடிகளை இவரிடம் கொடுத்துவிடு!' என்றார்.

வாலிபனிடமிருந்து சுவடிகளை, ஆனந்தக் கண்ணிருடன் பெற்றுக்கொண்ட பண்டரீபுரத்துக்காரர், 'உங்களுடைய கருணையினால்தான், இந்த அபூர்வமான கிரந்தத்தை நான் பெறுகிறேன். இவற்றை காணிக்கைகளின்றி பெற்றுக்கொள்வது தர்மமாகாது!' என்று கூறியபடியே, பழங்கள் நிறைந்த ஒரு தட்டின் மீது 50,000/- ரூபாயை ரொக்கமாக வைத்துக் கொடுத்தார். தயக்கத்துடன் பெரியவரை பார்த்த ஹரிஹர சுப்பிரமணியனை, பெற்றுக்கொள்ளுமாறு, சிரித்த முகத்துடன் பணித்தார் பெரியவர். 

நடுங்கிய கைகளுடன் பொக்கிஷத்தைப் பெற்றுக் கொண்ட வாலிபனை தன்னருகே அழைத்த பெரியவர், 'அன்று உனது பெரியவர்களைப் பற்றி நீ பேசியபோது, நான் உனக்குச் சொன்னேன் அல்லவா! அவர்கள் எல்லாம் மிகப் பெரியவர்கள். மிகச் சிறந்த செயல்களை செய்து விட்டுத்தான் சென்றிருக்கிறார்கள் என்று. அது எனது மனதிற்குப் பட்டதால்தான், கொலு பொம்மைகளை எடுத்து பூஜிக்கச் சொன்னேன். உனது வீடு கடன், வட்டியுடன் சேற்ந்து ருபாய் 45,000/- மாக இருப்பதாகக் கூறினாய். அதற்காக 'சந்திர மௌளீஸ்வரர் செய்திருக்கிற அனுக்கிரகம்தான் இது. பணத்தை பத்திரமாக எடுத்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் போய் வா!' என ஆசிர்வதித்து அனுப்பினார் மகா பெரியவர்!.

நன்றி : எழுதியவர் : ஸ்ரீ ரமணி அண்ணா (தமிழில்)

ஜகத்குரு ஸ்ரீ மகா பெரியவா - காஞ்சி பரமாச்சார்யா முக நூலிலிருந்து தொகுக்கப்பட்டது 

தமிழாக்கம்... அடியேன்.

ஸாய்ராம்.


Thursday, September 22, 2022

பஞ்சாட்சிர மந்திரத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவர்...


ஆந்திர மாநிலத்தில், பக்தர்களாக இணைந்து, 'சிவபெருமானாருக்கு' ஒரு ஆலயத்தை எழுப்பினார்கள். கருவறையின் பீடத்தில் பதிப்பதற்காக, கல்லால் செதுக்கியிருந்த மூல விக்ரமான, 'சிவலிங்கத்தை' எடுக்க முற்படுகையில், அதை ஒரு அங்குல அளவுக்குக் கூட நகர்த்த முடியவில்லை. ஆச்சரியத்தில் மூழ்கிய பக்தர்கள், தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து பார்த்து, இறுதியாக, காஞ்சீபுரம் வந்து 'மஹா பெரியவரிடம்' இதைப் பற்றித் தெரிவித்தார்கள்.

சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, மடத்து சிப்பந்தியை அழைத்து, அவரிடம் திருச்சிக்கு அருகாமையில் வசிக்கும், ஸ்ரீ வைத்தியநாத சாஸ்திரிகள் என்பவரை அழைத்துவரச் சொன்னார். வைத்தியாநாத சாஸ்திரிகள் வந்தவுடன், அவரை அருகில் அழைத்து, அவரது காதில் ரகசியமாக சில நிமிடங்கள் பேசி விட்டு, ஆந்திர பக்தர்களை அழைத்து, சாஸ்திரிகளை அவர்களோடு அழைத்துச் சென்று 21 நாட்கள் தங்க வைக்கும்படி சொன்னார்.

ஆந்திராவை அடைந்ததும், பக்தர்கள் குறிப்பிட்டிருந்த கோவிலுக்குள் சென்ற சாஸ்திரிகள், தனது வழக்கமான அனுஷ்டாங்களை முடித்து விட்டு, நகர்த்தவே முடியாமலிருந்த 'சிவலிங்க ரூபத்திற்கு' முன், 'ஜபத்தில்' அமர்ந்து விட்டார். தங்களது சிக்கலுக்கு ஏதாவது உபாயம் சொல்லுவார் என்ற நம்பிக்கையில் இருந்த பக்தர்களுக்கு, சாஸ்திர்களின் செயல் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. சாஸ்திர்களின் 'ஜபம்' 21 நாட்களும் தொடர்ந்தது. அந்த நாளின் இறுதியில், சாஸ்திரிகள் பக்தர்களை அழைத்து, 'இப்போது, சிவலிங்கத்தை நகர்த்தலாம்!' என்று கூற, சற்று அவநம்பிக்கையுடன் சென்ற பக்தர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது! அதுவரையில், ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாத அளவிற்கு மிகக் கனமாக இருந்த லிங்கம், தற்போது ஒரு பஞ்சுப் பொதியை நகர்த்துவது போல, மிக எளிதாக இருந்தது.

இந்த அற்புதத்திற்கான காரணத்தை பக்தர்கள் ஆவலுடன் வினவ, சாஸ்திரிகளோ, 'எனக்கும் அது தெரியாது. பெரியவர், இந்த லிங்கத்திற்கு முன்பாக அமர்ந்து 21 நாட்களும் 'பஞ்சாட்சர மந்திரத்தை' (ஓம் நமசிவாய) ஜபிக்க சொன்னார். அவ்வளவுதான்!' என்றார்.

அப்போதுதான், பக்தர்களுக்குப் புரிந்தது, எத்தனையோ யுகங்களுக்கு முன்னால், இதே 'பஞ்சாட்சிர மந்திரத்தின்' மஹிமையை எல்லோருக்கும் 'நாவுக்கரசப் பெருமானார்' உணர்த்தியது போல, இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் தனது தபோ மகிமையால் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்... மகா பெரியவர், என்று.

சமண அரசனின் ஆணைக்கு இணங்கி, தன்னை ஒரு பெரும் கல்லால் கட்டி, கடலின் ஆலத்தில் தூக்கி வீசிய போதும், 'திருநாவுக்கரசர்' மிகப் பெரிய நம்பிக்கையுடன், இதே 'பஞ்சாட்சர மந்திரத்தை' ஜபித்துத்தான், கடலில் மிதந்து வந்து கரை சேர்ந்தார்.

(நன்றி : 'ஜகத் குரு மகா பெரியவா - காஞ்சி பரமாச்சார்யா / முக நூலிலிருந்து...தொகுக்கப்பட்டது.)

தமிழாக்கம்... அடியேன்.

ஸாய்ராம்.


Saturday, September 17, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 235. 'ஜாதகத்தை முழுமையாக ஆராய வேண்டியதன் அவசியம்...!'. பகுதி 2.


முன் பகுதியின் (பகுதி 1) தொடர்ச்சி...

(...'ஜனன கால ஜாதகம்' இந்தப் பிறவியில் நாம் கொன்டு வந்திருக்கிற, 'கர்ம வினைகளின் விளைவுகளை' மிகத் தெளிவாகவும்... கடந்த பிறவியின் நிலைகளையும்... அடுத்து வரும் பிறவியின் நிலைகளையும்... 'நிழல் கொடுகளாகவும்' சுட்டிக் காட்டுகிறது. இந்த சூட்சுமத்தைத்தான், 'கர்ப்ப செல் நீக்கிய தசா புத்தி இருப்பு' என்ற குறிப்பு கோடிட்டுக் காட்டுகிறது...)

ஒருவரது ஜதகத்தில், 

- 'லக்னாதிபதி' யாகிய 'சந்திர பகவான்' (கடக லக்னம்) 'பாக்கிய ஸ்தானத்தில்' மீன இராசியில், ரேவதி நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்தில் அமர்ந்தார்.

- பாக்கியாதிபதியாகிய 'குரு பகவான்', 12 ஆம் பாவத்தில், மிதுன இராசியில், புனர்பூச நட்சத்திரத்தின் 4 ஆம் பாவத்தில் அமர்ந்தார்.

- 12 ஆம் பாவதிபதியோ (புத பகவான்), தைர்ய ஸ்தானத்தில் (கன்னி இராசி) ஹஸ்த நட்நத்திரத்தின் 3 ஆம் பாவத்தில் அமர்ந்து, லக்னாதிபதியான 'சந்திர பகவானை' சமசப்தமாக பார்வை செய்கிறார்.

மேற்கண்ட அமைவு அளிக்கும் பலன், குரு பகவானது தசாவில் - புத பகவானின் புத்தியில் - சந்திர பகவானின் அந்தர வேளையில்... ஜாதகர், கடல் கடந்து வெளி நாடு சென்று, 'திரை கடலோடியும் திரவியம் தேடுபவராக' இருக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால், மேற்குறிப்பிட்ட 'குரு பகவான் - புத பகவான் - சந்திர பகவான்' இவர்களின், தசா/புத்தி/அந்தரங்களை, ஜாதகர் இந்தப் பிறவியில் அடைய முடியாதவாறு அவரின், இந்தப் பிறவிக்கான தசாக்கள் அமைந்திருக்கிறது. புத பகவானின் ஏறத்தாள 15 வருடங்களையும்... கேது பகவானின் 7 வருடங்களையும்... சுக்கிர பகவானது 20 வருடங்களையும்... சூரிய பகவானது 6 வருடங்களையும்... சந்திர பகவானது 10 வருடங்களையும்... செவ்வாய் பகவானது 7 வருடங்களையும்... எஞ்சிய வாழ்வு, 'ராகு பகவானது' 18 வருடங்களில் கரலங்களில் கடந்து போய் விடும்.

இந்தப் பலனை இவர், இந்தப் பிறவியில் அனுபவிக்க முடியாது என்பதைத்தான் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ஒரு வேளை 'சந்திர பகவானது தசா - குரு பகவானது புத்தி - புத பகவானது அந்தரக் காலத்தில்',  ஒரு சுற்றுப் பயணமாக வேண்டுமானால், வெளி நாடுகளுக்குச் சென்று வரலாம். முழுப் பலனையும் அனுபவிக்க வேண்டுமெனில், அடுத்தப் பிறவிக்குத்தான் காத்திருக்க வேண்டும்.

(...தொடரும்)

ஸாய்ராம்.


 

Thursday, September 15, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 234. 'ஜாதகத்தை முழுமையாக ஆராய வேண்டியதன் அவசியம்...!' பகுதி 1.


'ஜனன கால ஜாதகம்', ஒரு ஜீவன் பிறக்கும் வேளையில், பிரபஞ்சத்தில் கிரகங்களின் நிலைகள் எவ்வாறு அமைந்திருந்தனவோ, அந்த அமைவை அவ்வாறே, பிரதிபலித்துக் காட்டுகிறது.

பூமியிலிருந்து, அந்தக் கிரகங்களை, நட்சத்திரக் கூட்டங்களின் வழியாகக் கண்டு, 'சூரிய பகவானின்' உதயத்திலிருந்து ஜனனம் நிகழும் வேளையை லக்னமாகவும், 'சந்திர பகவானின்' அமைவை இராசியாகவும், அவரை சுட்டிக் காட்டும் நட்சத்திரக் கூட்டத்தின் நாயகரை, ஜென்ம நட்சத்திரமாகவும், அவரின் சாரம் பெற்ற கிரகத்தின் தசாக் காலத்தை, ஜனன கால தசாவாகவும், ஏனைய கிரகங்களின் அமைவுகளையும் கணித்து, ஜனன கால ஜாதகத்தை உருவாக்குகிறோம்,

'ஜனன கால ஜாதகம்', இந்தப் பிறவியில் நாம் கொண்டு வந்திருக்கிற 'கர்ம வினைகளின்' விளைவுகளை' மிகத் தெளிவாகவும்... கடந்த பிறவியின் நிலைகளையும்... அடுத்து வரும் பிறவியின் நிலைகளையும்... 'நிழல் கோடுகளாகவும்' சுட்டிக் காட்டுகிறது. இந்த 'சூட்சுமத்தைத்தான்', 'கர்ப்ப செல் நீக்கி தசா புத்தி இருப்பு' என்ற 'குறிப்பு'... கோடிட்டுக் காட்டுகிறது.

உதாரணமாக, ஒருவர், தை மாதத்தின் முதல் வாரத்தில், அதிகாலை, 'சூரிய பகவானின்' உதய காலத்தின் போது, 'கார்த்திகை நட்சத்திரத்தின் 4 ஆவது பாதத்தில்', 'சந்திர பகவான்' உலவும் போது, பிறந்திருப்பாரே ஆனால், அவரது ஜனன கால ஜாதகத்தில் ;

- லக்னம்... மகர இராசி வீடாகவும்,

- இராசி... ரிஷப இராசி வீடாகவும்.

- நட்சத்திரம்... கார்த்திகை 4 ஆவது பாதமாகவும்,

- கர்ப்ப செல் நீக்கிய 'சூரிய பகவானின் தசாக்காலம்' சுமாராக 1 வருடம் - 5 மாதம் - 15 நாட்களாக, அமைவதற்கு வாய்ப்பு உண்டு.

இந்தப் பிறவியில் அவர் 'சூரிய பகவானின்' 1 1/2 வருடக் காலங்களையும்... சந்திர பகவானின்' 10 வருடங்களையும்... 'செவ்வாய் பகவானின்' 7 வருடங்களையும்... 'ராகு பகவானின்', 18 வருடங்களையும்... 'குரு பகவானின்' 16 வருடங்களையும்... 'சனி பகவானின்' 19 வருடகாலங்களையும்... அனுபவிப்பதற்கான வாய்ப்பு இருக்கும்.

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு அம்சங்கள்,

1. 'கர்ப்ப செல் நீக்குவதற்கு' முன்னிருந்த, 'சூரிய பகவானின்' 4 1/2 வருடக் காலம் அவரது, முந்தைய பிறவியின் இறுதிக் கால தசாவாக இருந்திருக்கும். அப்போது, அவர் 'சனி பகவான்' (19 வருடங்கள்)...'புத பகவான்' (17 வருடங்கள்)... 'கேது பகவான்' (7 வருடங்கள்)... 'சுக்கிர பகவான்' (20 வருடங்கள்)... எனக் கடந்து 'சூரிய பகவானின் தசாக் காலத்தின்' இறுதியில், தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்திருப்பார்,

2. தற்போதைய வாழ்வின் இறுதிக் காலத்தில், ஜாதகர் கடக்கும் தசாக் காலத்தின் மீதி, அதாவது ஒரு வேளை, 'சனி பகவானின்' தசாவின் 18 1/2 வருடத்தின் இறுதியில் கடக்க நேர்ந்தால், எஞ்சிய 6 மாத காலம்... அந்த ஜாதகரின் அடுத்த பிறவியின், 'கர்ப்ப செல் நீக்கிய தசா இருப்பாக' அமைந்து, அந்தப் பிறவியில், 'புத - கேது - சுக்கிர பகவான்களின்' தசாக்களின் வழியே பயணிப்பதாக வாழ்வு அமையும்.

இந்த 'பிறவி சுழற்சியின்' சூட்சுமத்தைத்தான், 'கர்ப்ப செல் நீக்கிய தசாக் காலம்' சுட்டிக் காட்டுகிறது.

இது மட்டுமல்லாமல், ஏனைய கிரகங்களின் அமைவுகளும், இந்த சூட்சுமத்தைச் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை. அதை அடுத்த பகுதியில் ஆய்வோம்...!

ஸாய்ராம்.



Wednesday, September 14, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 233. 'விதியையும்-மதியையும் இணைக்கும் பாலம்தான் ஜோதிடம்'


இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் 'கர்ம வினைகளின்' இயக்கத்தைத்தான், விதி... என்று அழைக்கிறோம்.

நமது முற்பிறவியின் செயல்களால் விளைந்த 'நன்மை- தீமைகள்', நாம் மேற்கொள்ளும் மற்றும் எதிர்கொள்ளும் செயல்களாக அனுபவிக்கும் போது, அது 'விதியாக' அமைந்து, நம்மை 'இரட்டைச் சூழல்களுக்குள்' தள்ளி விட்டு வேடிக்கைப் பார்க்கிறது. 

இந்த இருவித (மேற்கொள்ளும் மற்றும் எதிர்கொள்ளும்) செயல்களை எதிர்கொள்ளும் போது விளையும் 'நன்மை - தீமைகளும்', நம்மை மேலும், மேலும், இந்த விதியின் இருகிய பிடிக்குள் கொண்டு செலுத்தி விடுகின்றன. 

இதிலிருந்து விடுபட முடியாமல், நாம் சிக்கித் தவிக்கும் போதுதான், 'இறைவனின் திருவருளால்' ஈர்க்கப்பட்டு, அந்த 'பேரருளாரின் கருணையினால்', 'ஜோதிடம்' (விதி)  என்ற 'மறை பொருள் உரைக்கும்' (ஜோதிடம் வேதத்தின் ஓர் அங்கமானதால்...) கலைக்குள் பிரவேசிக்கிறோம். இங்குதான் 'விதியும் - மதியும் இணைகின்றன.

ஜோதிடம், நமது 'இன்ப - துன்பங்களுக்கு' மூலமான காரணங்களை (கர்ம வினைகளின் விளைவுகள்) மிகத் துல்லியமாக சுட்டிக் காட்டுகிறது. ஒரு குறிப்பிட்ட 'கர்ம வினைக்கான விளைவு', எவ்வாறு நிகழப் போகிறது ?  எப்போது நிகழப் போகிறது ? என்று சுட்டிக் காட்டி விடுகிறது. அதை(விதி) எவ்வாறு எதிர் கொண்டால், நம்மால் கடந்து போக முடியும், என்பதை வாழ்வியல் நடைமுறை வழிகளாகவும்... இறை பரிகாரங்களாகவும்... அறிவித்தும் விடுகிறது.

ஜோதிடம் சுட்டிக் காட்டும் வழியில், நமது செயல்கள் அனைத்துக்கும் 'சாட்சியாக' இருக்கும், அந்தப் பரம் பொருளின் திருவடிகளில் நாம், நமது 'சூழலை' (விதி வசத்தால் நிகழும் துன்பம்) அர்ப்பணிக்கும் போது, அந்தத் துன்பம், 'கடலில் மிதக்கும் படகைப் போல, அவரின் அருள் கருணை என்ற அலைகளால்' பாதுகாப்பாக கரை சேர்க்கப்படுகிறது.

இவ்வாறு 'விதியும் - மதியும்' ஒன்று சேருமிடமாகத்தான்... 'இறைவன் உறையும் ஆலயங்களும்'... அவரின் கருணையினால் நமக்கு அளிக்கப்பட்டுள்ள 'ஜோதிடக் கலையும்'... நமக்கு வழிகாட்டக் காத்திருக்கின்றன.

ஸாய்ராம்.




Monday, September 12, 2022

பாரதி... 'ஞானக் கூத்தன்'


'மகாகவி' யென போற்றப்படும், 'பாரதியார்', உள்ளொளி பெற்ற 'ஞானி' என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

நமக்கு உள்ளிருந்து அருள் செய்யும், அந்தப் 'பரம்பொருளை', அணுவணுவாய் ரசித்த ஒருவரால்தான், இவ்வாறு பாட முடியும்...

'சத்து-சித்து-ஆனந்தம்' என்று விளங்கிக் கொண்டிருக்கிற இந்த ஜீவாத்மா, 'சத்து' என்ற 'சத்தியப் பொருளாகவும்... 'ஆனந்தம்' என்ற எல்லையில்லா ஆனந்தத்தில் திழைப்பதாக, இருந்தாலும்... 'சித்து' என்ற ஒரு 'பெருவெளி' இந்த ஜீவாத்மாவை இரண்டு நிலைகளில் நிலைக்க வைக்கிறது.

'பக்தி' என்பதன் மூலமாக 'பேரானந்தம்' அனுபவிக்கும் 'இறையுணர்வுடனும்'... 'ஐம்புலன்களின்' வழியாக 'பிரமிப்புடன்' திகழும் இந்த 'உலக வாழ்வுடனும்'... இணைக்கும் ஆற்றலை, சித்தம்' பெற்றிருக்கிறது.

ஆதலால்தான், பாரதி பாடுகிறார், இறைவனை நோக்கி, 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய்... இறைவா!' என்று...

'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள் 

இறைவா! இறைவா! இறைவா!


சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்கு

சேரும் ஐம்பூதத்து வியனுலகு அமைத்தாய்

அத்தனை உலகமும் வண்ணக் களஞ்சிய

மாகப் பலப்பல நல் அழகுகள் சமைத்தாய்


ஓ! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள் இறைவா!


முக்தி என்று ஒரு நிலை சமைத்தாய் - அங்கு

முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய்

பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய் - எங்கள்

பரமா! பரமா! பரமா!


ஓ! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள் இறைவா!


ஸாய்ராம்.


Saturday, September 10, 2022

சிவசக்தி அம்மையார். திருவண்ணாமலை.


 

ஆழ்கடல் மிக அமைதியாக இருந்தாலும்... அதன் மேற்பரப்பு கொந்தளிக்கும் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆழ்கடல் என்ற அமைதியில் முழ்க வேண்டுமெனில், இந்தக் கொந்தளிக்கும் அலைகளைக் கடந்துதான் தீர வேண்டும். அந்த அலைகளோ நாம்மைப் புறந்தள்ளவே பார்க்கின்றன. அதையும் மீறி முழ்குபவனுக்கே, அந்த ஆழ்கடலின் அமைதி கிட்டுகிறது. அது போலத்தான், நமக்குள் ஆழ்ந்து... அமைதியாக... அருள் செய்கிற அந்த 'பரமானந்தப் பேருணர்வை', நமது மனதில் தோன்றும் 'பூர்வ வாசனைகள்' என்ற 'கர்ம வினைகளின்' அலைகள்... சென்றடைந்து விடாமல் தடுக்கின்றன. இந்த 'பூர்வ வாசனைகளைத்தான்' அம்மா, 'எவ்வளவு கொடியது ?' என்று சுட்டிக் காட்டுகிறார். இந்தக் கருணை மிகு ';சத்குரு'... நமது நிலையை உணர்ந்து... அதைக் கடக்கவும் வைத்து... அந்தப் 'பேரானந்த உணர்வுடன்' கலந்துவிடவும்... செய்கிறார்.

இதுவே குருவருள் செய்யும் அற்புதம்! 

சரணம் தாயே... சகலமும் நீயே...

ஸாய்ராம்.


ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 232. 'கர்மாவைப் பற்றி காஞ்சி மகா முனிவர்...'


'காஞ்சி மகா பெரியவர்', ஒரு 'ஐரோப்பியரின்', 'கர்மா' பற்றிய சந்தேகத்தை, நடைமுறை வழியாகத் தெளிய வைத்த அற்புதம் :

ஐரோப்பியர் : 'சுவாமி ! உங்கள் மதத்தின் பெரும்பான்மையான கோட்பாடுகளை, நான் புரிந்து கொண்டு, அவற்றை மதிக்கிறேன். ஆனால், உங்களது 'கர்மா' வைப் பற்றிய கோட்பாட்டை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதாவது, ஒரே 'ஜீவாத்மா' மீண்டும், மீண்டும் பிறப்பெடுப்பது... அதன் 'பாப - புண்ணியங்களை' அடுத்தடுத்த பிறவிகளுக்குக் கொண்டு செல்வது... என்பது போன்றவை. தயவு செய்து, இதைப் பற்றி எனக்கு தெளிவு ஏற்படுத்த முடியுமா ?'

'ஏனெனில், பெரும்பாலான மதங்கள், இந்தப் பிறவியில் என்ன செய்கிறோமோ... அதற்கேற்ற பலன்களை, இந்தப் பிறவியிலேயே அனுபவித்து விடுகிறோம்... என்றுதான் சொல்கின்றன. நாம் நேர்மையாக இருப்பின், இறைவன் மகிழ்ந்து, நமக்கு எல்லா நலன்களையும் அருள்வான் என்றும்... நாம் நேர்மையாக இல்லாத பட்சத்தில், அவரால் தண்டிக்கப்படுகிறோம் என்றும்தான் கூறுகின்றன.

(அவரின் கேள்விக்கு பதிலளிக்குமுன்... பெரியவர், அவரிடம் தனக்கு ஒரு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவர் சம்மதத்தைத் தெரிவித்ததும், பெரியவர்...)

பெரியவர் : 'காஞ்சீபுரத்திலும், அதைச் சுற்றியுள்ள ஒரு பத்து 'குழந்தைப் பேறு மருத்துவமனைகளுக்குச்' சென்று, கடந்த இரண்டு நாட்களுக்குள் பிறந்த குழந்தைகளின், பாலினம்... உடல் நலம்... பெற்றோர்களின் பெயர்கள்... அவர்களின் நிலை... கல்வித் தகுதிகள், இவற்றோடு... அந்தக் குழந்தைகள் பிறந்த?நேரம்... இவற்றை சேகரித்துக் கொண்டு வாருங்கள்'

(ஒரே நாளில், அந்த ஐரோப்பியர், அந்தப் புள்ளி விபரங்கள் அனைத்தையும் சேகரித்து வந்து, பெரியவரிடம் சமர்ப்பித்தார். பத்து 'குழந்தைப் பேறு மருத்துவமனைகளில்', அவர் சேகரித்த பதினைந்து குழந்தைகளில், எட்டு, பெண் குழந்தைகளாகவும், ஏழு, ஆண் குழந்தைகளாகவும் இருந்தன. அவற்றில், மூன்று குழந்தைகள், ஊட்டச் சத்து குறைபாடுடனும்... இரண்டு முதலில் பிறந்த வசதியான வீட்டுக் குழந்தகளாக, தனியார் மருத்துவமனைகளிலும்... நான்கு குழந்தைகள், ஏற்கனவே குழந்தைகள் இருக்கும் வறியவர்களின் வீட்டிலும் பிறந்திருந்தன. புள்ளி விபரங்களைப் பார்த்த பெரியவர்...)

பெரியவர் : 'இரண்டே நாட்களான இந்தக் குழந்தைகள், நேர்மை ஆனவர்களாகவோ அல்லது நேர்மை அற்றவர்களாகவோ... இருக்க வாய்ப்புகள் உண்டா ? இந்தக் குழந்தைகளால், அவர்களது தாயைக் கூட அடையாளம் கண்டறிய முடியாது. ஆதலால், அவர்கள் பாபத்தையோ... புண்ணியத்தையோ... சம்பாரித்திருக்கவும் முடியாது.'

'உங்களுடைய கோட்பாட்டின் படி, இந்த அனைத்துக் குழந்தைகளும், ஒரே மாதிரியான வாழ்க்கையைத்தானே வாழ வேண்டும்? ஆனால், அவ்வாறு இல்லாமல், சில குழந்தைகள் நோய்வாய் பட்டிருக்கின்றன... சில குழந்தைகள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கின்றன... சில குழந்தைகள் வசதியானவர்களின் வீட்டில் பிறந்திருக்கின்றன... சில குழந்தைகள் வறியவர்களின் வீடுகளில் பிறந்திருக்கின்றன.'

'ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த குழந்தைகள் அனைத்தும் ஒரே நாளில்... புவியின் ஒரே தீர்க்க மற்றும் அட்சய ரேககளில்... ஒரே இடத்திலும்தான்... பிறந்திருக்கின்றன. அவர்களின் 'ஜோதிடச் சித்திரங்கள்' பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆதலால், அவர்களின் வாழ்க்கை வித்தியாசங்களுக்கு 'ஜாதகங்களை' குறை கூற முடியாது அல்லவா!'

(இந்த விளக்கங்களைக் கேட்ட ஐரொப்பியர், வாயடைத்துப் போய் இருந்தார்... அவரது மௌனத்தைக் கலைத்த பெரியவர்...)

பெரியவர் : 'இங்குதான், 'முந்தைய பிறவிகள்' பற்றிய 'கோட்பாடு' வருகிறது. அனைத்துக் குழந்தைகளும், அவரவர்களின் 'கர்ம வினைகளை' சுமந்த படியே, இந்தப் பிறவிகளை எடுத்திருக்கின்றன. அவர்களின் முந்தய பிறவிகளின் ''பாப - புண்ணியங்களுக்கு' ஏற்பவே, இந்தப் பிறவிகளும் அமைந்திருக்கின்றன்.'

(மகா பெரியவர் வழியாக 'சனாதன தர்மம்'... அந்த ஐரோப்பியரைப் பார்த்து புன்னகைத்தது...)

நன்றி : (Jagadguru Sri Maha Periyava - Kanji Paramacharya / Fb. யிலிருந்து தொகுக்கப்பட்டது...)

தமிழாக்கம்... அடியேன்.

ஸாய்ராம்.




Saturday, September 3, 2022

ஐரோப்பியரின் தேடலுக்கு வழிகாட்டிய; நடமாடும் தெய்வம்'


    

 'பால் பிராண்டன்', என்ற ஐரோப்பியரின் ஆன்மீகத் தேடல், அவரை பாரதத்திற்கு இழுத்துவந்தது. அவரின் தேடல், 'உயர் நிலையை அடைந்திருத்த ஒரு உண்மையான' யோகியை பேட்டி காணுவதில்தான் இருந்தது.

வட இந்தியாவில் ஆரம்பித்தத் தேடல், காசியில் இருக்கும் ஒரு யோகி ஒருவரால், அவரை தென் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. பால் பிராண்டனிடம் இருந்த எண்ணற்ற அறிமுகக் கடிதங்களில் ஒன்று, அவரை 'காஞ்சி மகா முனிவரின்'; பக்தரான 'வேங்கடரமணி' யிடம் இணைத்து வைத்தது.

வேங்கடரமணியின் துணையுடன், அவர் செங்கல்பட்டில் அப்போது முகாமிட்டிருந்த 'மகா பெரியவரை' பேட்டி காணச் சென்றார். மகா பெரியவர் தங்கியிருந்த இடத்தில், எண்ணற்ற பகதர்கள் நாட்கணக்காக அவரது தரிசனத்திற்குக் காத்திருப்பதையும்,,, இருநூறுக்கும் மேற்பட்ட பத்திரிக்கயாளர்கள் அவரது பேட்டிக்காகக் காத்திருப்பதையும்... கண்டு ஆச்சிரியப்பட்டும் போனார். பெரியவரின் காரியதரிசி, 'பெரியவர், தற்போது யாருக்கும் பேட்டி கொடுக்கும் நிலையில் இல்லை எனவும், அதுவும் குறிப்பாக ஐரோப்பியர்களுக்கு அவர் பேட்டி அளித்ததில்லை, என்றும் கூறி தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்'.

ஆனாலும், வேங்கடரமணியில் முயற்சியினால், பிராண்டனுக்கு பெரியவரை தரிசித்து, பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாகத் தான் காணும், தென்னாட்டு 'நடமாடும் தெய்வத்தை', மிகப் பணிவுடன் வணங்கி, தான் வாங்கியிருந்த மலர்கள் மற்றும் பழங்களை அவர்முன் சமர்ப்பித்து நின்றார் பிராண்டன்.

காஞ்சி முனிவரைப் பார்த்து பரவசம் அடைந்த பிராண்டன், அவரது நேரத்தை தமக்காக அளித்ததற்கு நன்றி கூறினார். வேங்கடரமணியின் மூலம் அவரிடம் பேசிய பெரியவர், தமக்கு அவர் பேசும் மொழி புரிகிறது என்றும், தாம் அந்த மொழியில் பேசுவது ஒருவேளை அவருக்கு புரியாமல் போகும் என்ற அச்சத்தினால்தான் இவ்வாறு பேச வேண்டியிருக்கிறது... என்று கூறியதை மென்மையாக உள் வாங்கிக் கொண்டார்... பிராண்டன்.

பிராண்டனது கேள்விகள் உலக அமைதியின்மையில் ஆரம்பித்து, அது அமைதியடைய வேண்டியவற்கான வழிகளின் வழியே பயணித்து, இறுதியாகத் தனது தேடலுக்கான நோக்கத்தை பெரியவரிடம் முன் வைத்தார். 

பிராண்டன் : 'நான் உயர் நிலையில் இருக்கும் ஒரு உண்மையான யோகி ஒருவரைத்தான் தேடி வந்திருக்கிறேன். அவரிடமிருந்து அந்த யோகத்தைப் பற்றிய நிரூபணங்களை அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்'

பெரியவர் : 'உண்மையான யோகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற உங்களது உண்மைத் தன்மையை வலிமைப்படுத்த. அந்த உள்ளொளியே, உங்களை அதை நோக்கி வழி நடத்தும்'.

பிராண்டன் : 'உங்களது முன்னோர்களான ரிஷிகள், அவரவர்களுக்குள் இருக்கும் கடவுளைத் தவிர வெளியே ஒரு கடவுள் தனியாக இருப்பதில்லை என்று கூறினாலும், நான் என் உள்ளுணர்வின் படியே அந்தத் தேடுதலைத் தொடர்கிறேன்'

பெரியவர் : 'கடவுள் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறார். இந்த பிரபஞ்சம் முழுவதையும் தாங்கிக் கொண்டிருக்கிற கடவுளை, ஒருவருக்குள் மட்டும் அடக்கி வைத்து விட முடியுமா என்ன ?'

பிராண்டன் : 'அதற்காக நான் எந்த நடைமுறை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் ?'

பெரியவர் : 'உங்களது பயணத்தைத் தொடருங்கள். அதை பூர்த்தி செயத பின், நீங்கள் சந்தித்த யோகியர்களை நினைவு கூறுங்கள். அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு யோகியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவரிடம் திரும்பிச் செல்லுங்கள்  அவர் நிச்சயமாக உங்களுக்கு வழிகாட்டுவார்.'

பிராண்டன் : 'அவர்களில் எவரொருவரும் எனது எண்ணங்களுக்குள் வராமல் போனால், அடுத்த நான் என்ன செய்ய வேண்டும் ?'

பெரியவர் : 'அப்படியானால், இறைவன் உங்களுக்கு வழி காட்டும் வரை நீங்கள் தனியாகத்தான் பயணிக்க வேண்டும். தியானத்தை தொடர்ந்து பழகி வாருங்கள். நீங்கள் தியானிக்கும் அந்த 'மேலான உள்ளுணர்வு' உங்களுக்கு வழிகாட்டும். உலகம் உங்களைத் தொந்தரவு செய்யாமலிருக்கும் காலை வேளைகளிலும்... மாலை வேளைகளிலும்... இந்தத் தியானத்தைத் தொடர்ந்து வாருங்கள்.

பிராண்டன்  'ஒருவேளை இந்த முயற்சியில் நான் தோற்றுவிட்டால், உங்களுடைய வழிகாட்டுதல்களுக்கு நான் வரலாமா ?'

பெரியவர் : 'உங்களுக்காக காலத்தை ஒதுக்கக் கூடிய ஒருவரிடம்தான் நீஙகள் செல்ல வேண்டும். நான் ஒரு மடத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். பொதுமக்களுக்கு சேவையாற்றும் இந்த மடத்தின் கடமைகள் என்னை மூன்று மணி நேரங்கள் மட்டுமே உறங்க வைக்கிறது. என்னால் சிஷ்யர்கள வைத்துக் கொள்வது முடியாத காரியமாகிறது.'

பிராண்டன் : 'ஆனால், உண்மையான யோகிகளைக் காண்பது அரிது என்று சொல்லப்படுகிறதே. அதுவும் ஒரு ஐரோப்பியானால் அது ஆகாது என்றும் வலியுருத்தப்படுகிறதே.'

பெரியவர் : 'உண்மை இருக்கிறது. அதைக் கண்டறிய வேண்டியது அவசியம்.'

பிராண்டன் : 'நீங்கள் அறிந்த அவ்வாறான ஒரு யோகியை அடைய, எனக்கு வழி காட்டமுடியுமா ? அவரிடமிருந்து நான் அந்த உயர் நிலை யோகத்தை அறிந்து கொள்வேனே.'

பெரியவர் : 'அவ்வாறான இரு யோகிகளை அறிவேன். ஒருவர் பனாரஸில் இருக்கிறார். அவரிடம் உங்களை அனுப்ப முடியும், ஆனால் அவரைக் காண்பது அரிது. அதுவும் ஒரு ஐரோப்பியருக்கு அவர் பேட்டி அளிப்பது என்பது மிகவும் சிரமம்'.

பிரான்டன் : 'அவ்வாறானால், இன்னொருவர்....?

பெரியவர் : 'அவர் உள்ளே, தெற்குப் பகுதியில் இருக்கிறார். அவரிடம் நான் ஒரு முறை சென்றிருக்கிறேன். அவர் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் யோகி என்பதை அறிவேன்.அவரை நான் உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.'

பிராண்டன் : 'அவர் யார் ?'

பெரியவர் : 'அவரை 'மஹிரிஷி' என அழைப்பார்கள். அவரை நான் பேட்டி கண்டதில்லை. ஆனால், அவர் மிக சிறந்த யோகி என்பதை அறிவேன். அவரை அடைவதற்கான வழிமுறையை உங்களுக்குக் காட்டட்டுமா ?'

(... என்று பெரியவார் கூறியதுமே சட்டென்று, பிராண்டனின் மனக் கண் முன்னால், ஒரு மஞ்சள் ஆடை அணிந்த ஒருவர் தன்னை வலியுருத்தி, அவரது குருவிடம் அழைத்துச் செல்வதையும்... அவர், 'புனிதத்தை நோக்கி அழைத்துச் செல்லும் கலங்கரை விளக்கம்தான் இந்த மலை' என்று முணு முணுப்பதும்... கேட்டது. ஆச்சரியத்தில் மூழ்கிப் போன பிராண்டன், )

பிராண்டன் : 'மிக மிக நன்றி, ஆனால், நீங்கள் குறிப்பிட்ட அந்த இடத்திலிருந்து வந்திருக்கிற ஒரு வழிகாட்டி என்னுடன் இருக்கிறார்.'

பெரியவர் : அப்படியானால் நீங்கள் அங்கு போகலாம்.'

பிராண்டன்  (தயங்கியபடியே...) 'நான், நாளை இங்கிருந்து கிளம்புவதற்கான ஆயுத்தங்கள் அனைத்தும் செய்யப்பட்டுவிட்டனவே...'

பெரியவர் : 'அப்படியானால், நான் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கலாம் என்றிருக்கிறேன்'

பிராண்டன் : 'தாராளமாக...'

பெரியவர் : 'மகிரிஷியை சந்திக்காமல், இங்கிருந்து செல்வதில்லை, என்று நீங்கள் சத்தியம் செய்து தர வேண்டும்.'

பிராண்டன் : (எனக்காக இவ்வளவு பிரயத்தனம் மேற்கொள்ளும் அவருக்கு எனது சத்தியத்தை காணிக்கையாக்கினேன்...)

பெரியவர் : (புன்னைகைத்தபடியே...) 'கவலைப்படாதீர்கள்... நீங்கள் தேடி வந்தை அடைவீர்கள்.'

பிராண்டன் : 'நான் உங்களுடைய புனிதமான நேரத்தை மிக அதிகமாக எடுத்துக் கொண்டதற்காக என்னை மன்னியுங்கள்.' 

(என்னுடன் வெளியறை வரை வந்த சுவாமிகள், என்னை வழியனுப்பி வைத்தபின், சற்று தூரத்திலிருந்து என்னை அழைத்து....)

பெரியவர் : 'என்னை எப்போதும் உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... நானும் அவ்வாறே உங்களை எப்போதும் என் நினைவில் வைத்துக் கொள்கிறேன்.'

(மிகச் சுருக்கமான, ஆச்சரியமான அந்த வார்த்தைகளைக் கேட்டபடியே, நான் அந்த புனிதமானவரை விட்டு நீங்கினேன்...)

அன்றிரவு எனது அறைக்குத் திரும்பியதும், எனது வழிகாட்டி இரவில் வந்து என்னை எழுப்பினார், அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, 'உனது குருவின் பெயர் மகிரிஷியா ?' என்பதுதான். ஆச்சரியத்துடன் அவர், 'எப்படி அது உங்களுக்குத் தெரியும் ?' என்று கேட்க, நானோ, 'முதல் வேளையாக நாமிருவரும் உனது குருவைப் பார்க்க நாளைக் காலையே கிளம்புகிறோம். ஆனால், ஓரிரண்டு நாட்கள்தான் என்னால் அதற்காக ஒதுக்க முடியும்' என்று கூறி விட்டுப் படுக்கைக்குப் போனேன்..

நான் படுத்திருக்கும் போது, எனது நரம்புகள் முறுக்கேறுவதையும்... என்னைச் சுற்றி ஒரு மின்சாரம் பாய்ந்திருப்பது போலவும்... உணர்ந்தேன். சட்டென்று எனது தலையணைக்குள்ளிருக்கும் கடிகாரத்தை எடுத்து அதில் ஒளிரும் நேரத்தைப் பார்த்தேன். அது விடியற்காலை 3 மணி 15 நிமிடங்களைக் காட்டியது. எனது படுக்கைக்கு எதிரே, ஏதொ ஒன்று ஒளிர்வதைப் பார்த்தேன். நான் உடனே எழுந்து அமர்ந்து, அதை உற்று நோக்கினேன். எனக்கு முன்னால் 'மகா பெரியவர்' நின்று கொண்டிருந்தார். சந்த்தேகத்திற்கு இடமில்லாமல் அவர் இருப்பதை உணர்ந்தேன். சூழ்ந்திருக்கும் இருளிலிருந்து தனிப்பட்டு அவர் இருப்பதைப் பார்த்தேன். இவரை நான் செங்கல்ப்பட்டில் அல்லவா விட்டு விட்டு வந்தேன். இவர் எப்படி இங்கு வந்தார்...என வியந்த படியே, எனது கண்களைக் கசக்கி விட்டு, மீண்டும் விழித்துப் பார்த்தேன். அதே இடத்தில் அவர் புன்னகைத்தபடியே நின்று கொண்டிருந்தார். அவரின் உதடுகள் முணு முணுத்தன, 'அமைதியாக இரு...நீ தேடி வந்ததை அடைவாய் !'.

மெதுவாக... இந்த ஆச்சரியம் மிகுந்த காட்சி, கண்களை விட்டு நீங்கிக் கொண்டிருந்தது. இந்த அற்புதமான லீலையையும்... அவர் இன்று காலை அளித்த பேட்டியையும்... நினைவு கூர்ந்தபடியே விழித்திருந்தேன்...

பால் பிராண்டன்.

(தமிழாக்கம்... அடியேன்.. )

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...