'ஜனன கால ஜாதகம்', ஒரு ஜீவன் பிறக்கும் வேளையில், பிரபஞ்சத்தில் கிரகங்களின் நிலைகள் எவ்வாறு அமைந்திருந்தனவோ, அந்த அமைவை அவ்வாறே, பிரதிபலித்துக் காட்டுகிறது.
பூமியிலிருந்து, அந்தக் கிரகங்களை, நட்சத்திரக் கூட்டங்களின் வழியாகக் கண்டு, 'சூரிய பகவானின்' உதயத்திலிருந்து ஜனனம் நிகழும் வேளையை லக்னமாகவும், 'சந்திர பகவானின்' அமைவை இராசியாகவும், அவரை சுட்டிக் காட்டும் நட்சத்திரக் கூட்டத்தின் நாயகரை, ஜென்ம நட்சத்திரமாகவும், அவரின் சாரம் பெற்ற கிரகத்தின் தசாக் காலத்தை, ஜனன கால தசாவாகவும், ஏனைய கிரகங்களின் அமைவுகளையும் கணித்து, ஜனன கால ஜாதகத்தை உருவாக்குகிறோம்,
'ஜனன கால ஜாதகம்', இந்தப் பிறவியில் நாம் கொண்டு வந்திருக்கிற 'கர்ம வினைகளின்' விளைவுகளை' மிகத் தெளிவாகவும்... கடந்த பிறவியின் நிலைகளையும்... அடுத்து வரும் பிறவியின் நிலைகளையும்... 'நிழல் கோடுகளாகவும்' சுட்டிக் காட்டுகிறது. இந்த 'சூட்சுமத்தைத்தான்', 'கர்ப்ப செல் நீக்கி தசா புத்தி இருப்பு' என்ற 'குறிப்பு'... கோடிட்டுக் காட்டுகிறது.
உதாரணமாக, ஒருவர், தை மாதத்தின் முதல் வாரத்தில், அதிகாலை, 'சூரிய பகவானின்' உதய காலத்தின் போது, 'கார்த்திகை நட்சத்திரத்தின் 4 ஆவது பாதத்தில்', 'சந்திர பகவான்' உலவும் போது, பிறந்திருப்பாரே ஆனால், அவரது ஜனன கால ஜாதகத்தில் ;
- லக்னம்... மகர இராசி வீடாகவும்,
- இராசி... ரிஷப இராசி வீடாகவும்.
- நட்சத்திரம்... கார்த்திகை 4 ஆவது பாதமாகவும்,
- கர்ப்ப செல் நீக்கிய 'சூரிய பகவானின் தசாக்காலம்' சுமாராக 1 வருடம் - 5 மாதம் - 15 நாட்களாக, அமைவதற்கு வாய்ப்பு உண்டு.
இந்தப் பிறவியில் அவர் 'சூரிய பகவானின்' 1 1/2 வருடக் காலங்களையும்... சந்திர பகவானின்' 10 வருடங்களையும்... 'செவ்வாய் பகவானின்' 7 வருடங்களையும்... 'ராகு பகவானின்', 18 வருடங்களையும்... 'குரு பகவானின்' 16 வருடங்களையும்... 'சனி பகவானின்' 19 வருடகாலங்களையும்... அனுபவிப்பதற்கான வாய்ப்பு இருக்கும்.
இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு அம்சங்கள்,
1. 'கர்ப்ப செல் நீக்குவதற்கு' முன்னிருந்த, 'சூரிய பகவானின்' 4 1/2 வருடக் காலம் அவரது, முந்தைய பிறவியின் இறுதிக் கால தசாவாக இருந்திருக்கும். அப்போது, அவர் 'சனி பகவான்' (19 வருடங்கள்)...'புத பகவான்' (17 வருடங்கள்)... 'கேது பகவான்' (7 வருடங்கள்)... 'சுக்கிர பகவான்' (20 வருடங்கள்)... எனக் கடந்து 'சூரிய பகவானின் தசாக் காலத்தின்' இறுதியில், தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்திருப்பார்,
2. தற்போதைய வாழ்வின் இறுதிக் காலத்தில், ஜாதகர் கடக்கும் தசாக் காலத்தின் மீதி, அதாவது ஒரு வேளை, 'சனி பகவானின்' தசாவின் 18 1/2 வருடத்தின் இறுதியில் கடக்க நேர்ந்தால், எஞ்சிய 6 மாத காலம்... அந்த ஜாதகரின் அடுத்த பிறவியின், 'கர்ப்ப செல் நீக்கிய தசா இருப்பாக' அமைந்து, அந்தப் பிறவியில், 'புத - கேது - சுக்கிர பகவான்களின்' தசாக்களின் வழியே பயணிப்பதாக வாழ்வு அமையும்.
இந்த 'பிறவி சுழற்சியின்' சூட்சுமத்தைத்தான், 'கர்ப்ப செல் நீக்கிய தசாக் காலம்' சுட்டிக் காட்டுகிறது.
இது மட்டுமல்லாமல், ஏனைய கிரகங்களின் அமைவுகளும், இந்த சூட்சுமத்தைச் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை. அதை அடுத்த பகுதியில் ஆய்வோம்...!
ஸாய்ராம்.

No comments:
Post a Comment