Friday, September 30, 2022

ஆகும் சனவேத சக்தியை... 'திருமூலர் அருளிய திருமந்திரம்' பாடல் - 739


 'ஆகுஞ் சனவேத சக்தியை அன்புற

நீர்கொள் நெல்லில் வளர்கின்ற நேர்மையைப்

பாகு படுத்திப் பலகோடி களத்தினால்

ஊழ்கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே'

'திருமூலப் பெருமானரது', 'திருமந்திரப் பாடல்கள்' ஒவ்வொன்றும், மிக மிகக் கருத்தாழமிக்கவைகள். ஏறத்தாள மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து... 'உள்வாழ்வில்' தான் அனுபவித்து உணர்ந்த அனுபவங்கள் ஒவ்வொன்றையும், வருடம் ஒரு பாடலாக வடித்தார் என கூறப்படுகிறது.

இன்றைய காலக் கட்டத்தில், அவரின் இந்த வாழ்வு பற்றிய கருத்து சற்று மிகையானதாகக் கருதப்பட்டாலும், ஒவ்வொரு பாடலையும், நாம் புரிந்து கொண்டு, அதன் அனுபவத்தை பயிற்சியில் அனுபவிக்கு போது மட்டுமே, அவர் வடித்த பாடலின் கருத்தும்... அதன் அனுபவமும்... நமக்குக் கை கூடுகிறது.

அது போலவே , இந்தப் பாடல் உணர்த்தும் 'உட்பொருளை' கருத்துடனும்... அனுபவத்துடனும்... ஆய்ந்து பார்ப்போம் :

களங்களில் குவிந்திருக்கும் நெற்குவியல்கள், அதன் மூலமான, ஒரு நெல் மணியிலிருந்துதான் உண்டாகின்றன. அதே போலவே, கிளைகளாய்... சாகைகளாய்... பலவாறு பிரிந்து இருக்கிற வேதங்களும், அதன் மூலமான, இறைவனிடம் ஒடுங்கியிருக்கின்ற ஓங்காரமான வேதசக்தியில் இருந்துதான் உண்டாகியிருக்கின்றன.

வேதங்களுக்கு மூலமான அந்த 'சக்தியே', நமதுள்ளில் 'ஆத்மாவாக' இருந்து, 'ஊழ் வினைகள்' என்ற 'பூர்வ வாசனைகளால்', எண்ணங்களாக இந்த புற உலகில் விரிந்து... பரந்து... எண்ணற்ற கோடி பிறவிகளை அளிக்கும், இந்த ஜீவனின் பிறவிப் பிணிகளுக்குக் மூலமாகவும்... சாட்சியாகவும்... காரணமாகவும்... இருக்கிறது.

எவ்வாறு வேதங்களின் வழியாக, அதன் மூலசக்தியாக இருக்கும் இறைவனை அறிந்து... அவனில் ஒடுங்குகிறோமோ, அதேபோல, இந்த உலக வாழ்வில் கலந்து இருக்கும், ஜீவ சக்தியை, அதற்கு மூலமாக இருந்து அருளும் அந்த ஆத்ம சக்தியுடன் ஒடுங்க வைக்கும் போது, நாம், இந்தப் பிறவிப் பிணியிலிருந்து விடுதலை அடைந்து விடுகிறோம்.

'ஆன்மாவுடன், ஜீவன் கலந்து விடும்'... இந்த நுட்பத்தைத்தான், தான் அனுபவித்து... உணர்ந்து... ஒவ்வொரு பாடல்கலாக வடித்திருக்கிறார்... திருமூலப் பெருமானார்.

ஆகவேதான் இவற்றை 'திருமந்திரம்' என்று உயர்வாக அழைக்கிறோம்!

ஸாய்ராம்.




No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...