Wednesday, September 14, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 233. 'விதியையும்-மதியையும் இணைக்கும் பாலம்தான் ஜோதிடம்'


இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் 'கர்ம வினைகளின்' இயக்கத்தைத்தான், விதி... என்று அழைக்கிறோம்.

நமது முற்பிறவியின் செயல்களால் விளைந்த 'நன்மை- தீமைகள்', நாம் மேற்கொள்ளும் மற்றும் எதிர்கொள்ளும் செயல்களாக அனுபவிக்கும் போது, அது 'விதியாக' அமைந்து, நம்மை 'இரட்டைச் சூழல்களுக்குள்' தள்ளி விட்டு வேடிக்கைப் பார்க்கிறது. 

இந்த இருவித (மேற்கொள்ளும் மற்றும் எதிர்கொள்ளும்) செயல்களை எதிர்கொள்ளும் போது விளையும் 'நன்மை - தீமைகளும்', நம்மை மேலும், மேலும், இந்த விதியின் இருகிய பிடிக்குள் கொண்டு செலுத்தி விடுகின்றன. 

இதிலிருந்து விடுபட முடியாமல், நாம் சிக்கித் தவிக்கும் போதுதான், 'இறைவனின் திருவருளால்' ஈர்க்கப்பட்டு, அந்த 'பேரருளாரின் கருணையினால்', 'ஜோதிடம்' (விதி)  என்ற 'மறை பொருள் உரைக்கும்' (ஜோதிடம் வேதத்தின் ஓர் அங்கமானதால்...) கலைக்குள் பிரவேசிக்கிறோம். இங்குதான் 'விதியும் - மதியும் இணைகின்றன.

ஜோதிடம், நமது 'இன்ப - துன்பங்களுக்கு' மூலமான காரணங்களை (கர்ம வினைகளின் விளைவுகள்) மிகத் துல்லியமாக சுட்டிக் காட்டுகிறது. ஒரு குறிப்பிட்ட 'கர்ம வினைக்கான விளைவு', எவ்வாறு நிகழப் போகிறது ?  எப்போது நிகழப் போகிறது ? என்று சுட்டிக் காட்டி விடுகிறது. அதை(விதி) எவ்வாறு எதிர் கொண்டால், நம்மால் கடந்து போக முடியும், என்பதை வாழ்வியல் நடைமுறை வழிகளாகவும்... இறை பரிகாரங்களாகவும்... அறிவித்தும் விடுகிறது.

ஜோதிடம் சுட்டிக் காட்டும் வழியில், நமது செயல்கள் அனைத்துக்கும் 'சாட்சியாக' இருக்கும், அந்தப் பரம் பொருளின் திருவடிகளில் நாம், நமது 'சூழலை' (விதி வசத்தால் நிகழும் துன்பம்) அர்ப்பணிக்கும் போது, அந்தத் துன்பம், 'கடலில் மிதக்கும் படகைப் போல, அவரின் அருள் கருணை என்ற அலைகளால்' பாதுகாப்பாக கரை சேர்க்கப்படுகிறது.

இவ்வாறு 'விதியும் - மதியும்' ஒன்று சேருமிடமாகத்தான்... 'இறைவன் உறையும் ஆலயங்களும்'... அவரின் கருணையினால் நமக்கு அளிக்கப்பட்டுள்ள 'ஜோதிடக் கலையும்'... நமக்கு வழிகாட்டக் காத்திருக்கின்றன.

ஸாய்ராம்.




No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...