மஹாராஷ்டிர மாநிலம், சதாராவில், [மகா பெரியவர்[ முகாமிட்டிருந்த நேரம்... பாலக்காட்டிலிருந்து, ஒரு வாலிபன் அவரை தரிசனம் செய்யச் சென்றான். ஒரு பிற்பகல் வேளையில், பெரியவரை வீழ்ந்து வணங்கி, கண்ணீர்மல்க நின்றான்.
பெரியவர், அவனைப் பற்றி விசாரிக்க... தனது பெயர் 'ஹரிஹர சுப்பிரமணியன்' என்றும், தான் பாலக்காட்டிலிருந்து வருவதாகவும், தனது தந்தை டாகடர். ஹரிஹர நாராயணன் என்றும், அவர் ஆயுர்வேத சிகிச்சை செய்து கொண்டிருந்ததாகவும், தற்போது அவர் இல்லை என்பதாகவும் கூறினான்.
ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர், 'அடடா, நீ பாலக்காடு, ஆயுர்வேத டாகடர் நாரயணனோட பிள்ளையா !' என்றதோடு, 'அப்படியானால், நீ டாகடர். ஹரிஹர ராகவனோடு பேரனாக இருப்பாய்! அவர்கள் எல்லோரும் ஆயுர்வேத சிகிச்சையில் பெயர் பெற்றவர்களாயிற்றே!' என்றார். ஆச்சரியத்துடன் பெரியவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த வாலிபனை, 'நீ உனது பெயருக்கு முன்னால் டாக்டர் என்பதை சேர்க்கவில்லையே!' என்று பெரியவர் குறிப்பிட்ட போது, 'நான் அதைக் கற்றுக்கொள்ளவில்லை பெரியவா. எனது தந்தை என்னை அவ்வாறு தயார் செய்யவில்லை.' என்று ஆர்வமின்றி பதிலளித்தான்.
'அது போல சொல்லக் கூடாது. உனது தந்தை, உன்னை அவ்வாறு தயார் செய்யவில்லையா ? அல்லது, உனக்கு அதைக் கற்றுக் கொள்வதில் சிரத்தையில்லையா ? ஒரு சிறந்த வைத்தியப் பரம்பரையிலிருந்து வந்து, அதை தொடர்வதற்கான வாய்ப்பை இழந்து விட்டாய். சரி, உன்னை பற்றிக் கூறு ?' என்று பெரியவர் கேட்ட போது, தான் ஒன்பதாவது வரை படித்ததாகவும், அதற்கு மேல் படிப்பு ஏறவில்லை என்றும், அங்கிருக்கும் ஒரு தொழிற்சாலையில், சொற்ப சம்பளத்தில்; 'சூப்பர்வைஸராக' பணியாற்றுவதாகவும், திருமணமாகி ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் கூறினான். இவற்றை எல்லாம் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்,' உனக்கு பெரியவர்கள் விட்டுச் சென்ற வீடு இருக்கிறதல்லாவா ?' என்று கேட்ட போதுதான், தான் வந்த கரியத்தைப் பற்றி வாலிபன் கூறலானான்.
தனது தாத்தா விட்டுச் சென்ற வீடு இருப்பதாகவும், தனது தந்தையின் சகோதரி, அவரது கணவனின் மறைவுக்குப் பின், தனது இரண்டு பெண் குழந்தைகளோடு வந்து விட்டதாகவும், அந்த பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்விப்பதற்காக, இது போன்ற ஒரு நவராத்திரி உற்சவத்தின் போது, அருகிலிருப்பவர் ஒருவரிடம் 25,000/- கடனாகப் பெற்றதும், தற்போது அதை திருப்பிக் கொடுக்க முடியாமல், வட்டியுடன் சேர்ந்து 45,000/- மாகி, வீடு கடனில் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும், அதை எப்படி மீட்பது என்று தெரியாமல்தான் பெரியவரிடம் பிரார்த்திக்க வந்ததாகவும் கூறினான்.
சற்று நேர மௌனத்திற்குப் பின், பெரியவர், 'சரி, வருடா வருடம் வீட்டில் கொலு வைத்து, நவாராத்திரி பண்டிகையை கொண்டாடுகிறீர்கள் தானே ?' என்று கேடதற்கு, 'தந்தை செய்த செயலாலும், அவர் மறைந்ததற்குப் பின்னரும், நாங்கள் நவராத்திரி கொலு வைப்பதில்லை, பெரியவா!' என்றான் வாலிபன். 'முன்னோர்களைப் பற்றி இவ்வாறெல்லாம் மரியாதை குறைவாகப் பேசக் கூடாது. அவர்களெல்லாம் மிகச் சிறந்தவர்கள் என்பதை நானறிவேன். சிறந்த செயல்களை செய்துவிட்டுத்தான் அவர்கள் சென்றிருக்கிறார்கள். சிலதை மனதில் வைத்துக் கொண்டு, நீ அந்த பண்டிகையை கொண்டாடாமல் விட்டிருப்பது மிகப் பெரிய தவாறாகும். இன்னும் ஒரு வாரத்தில், நவராத்திரி ஆரம்பமாகப் போகிறது. நீ சென்று மீண்டும் அந்த வழக்கத்தை தொடர்ந்து ஆரம்பி. உனது அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.' என்று, அந்த வாலிபனை ஆசீர்வதித்து அனுப்பினார்.
இருபது நாட்களுக்குப் பின் ஒரு ஞாயிறன்று, பெரியவரை தரிசிக்க திரளான கூட்டம் கூடியிருந்தது. அப்போது மடத்து சிப்பந்தி, பஞ்சகட்சரம், ஜிப்பா, துளசி-ருத்ராக்ஷ மாலைகள் தரித்த, 65 வயது மதிக்கத் தக்க வட நாட்டுக்காரர் ஒருவரை அழைத்து வந்து பெரியவர் முன் நிருத்த, அவர் பெரியவரை வீழ்ந்து வணங்கி, ஹிந்தியில் பேச ஆரம்பித்தார். அவர் பேசுவதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர், அவருக்கு ஹிந்தியிலேயே பதிலளித்து, அவரை தனக்கு எதிரிலிருக்கும் மேடையில் அமரச் சொன்னார்.
அப்போது, பாலக்காட்டிலிருந்து நவராத்திரி பண்டிகையை மீண்டும் ஆரம்பித்து, அதை பூர்த்தி செய்துவிட்டு, பெரியவரை தரிசிக்க ஹரிஹர சுப்பிரமணியன் வந்திருந்தான். அவன் தனது கையில் ஒரு இரும்புப் பெட்டியை வைத்திருந்தான். அதை பெரியவர் ஒரு அர்த்த புஷ்டியோடு பார்க்க, அந்த இரும்புப் பெட்டியைத் திறந்து, அதிலிருந்து பட்டுத் துணியினால் முடியிருந்த 10 லிருந்து 15 வரையிலான 'ஓலைச் சுவடிக் கட்டுகளை' எடுத்து பெரியவர் முன் வைத்து, 'விட்டுப் போன பழக்கத்தை மீண்டும் ஆரம்பிக்க தாங்கள் ஆணையிட்டதன் பேரில், கொலு வைப்பதற்காக பரணில் ஏறி கொலு பொம்மைகள் வைத்திருக்கும் பெட்டியை எடுத்த போது, அங்கு இந்த இரும்புப் பெட்டி இருந்தது பெரியவா. அதை, இதுவரை நான் பார்த்ததில்லை. அதை திறந்து பார்த்த போது, இந்த ஓலைச் சுவடிகள் இருந்தன. அதில் எழுதியிருப்பவற்றை என்னால் படிக்க முடியவில்லை. அதனால் அதை அப்படியே உங்கள் பார்வைக்கு கொண்டு வந்து விட்டேன்.' என்றான்.
இதை, ஏதும் அறியாதவர் போல பார்த்துக் கொண்டிருந்த பெரியவர், புன்னகைத்தபடியே, எதிரில் அமரவைத்திருந்த அந்த வடநாட்டுக்காரரை சைகையால் அழைத்தார். 'ஒரு அபூர்வமான வஸ்துவைப் பற்றி நீங்கள் சிறிது நேரத்திற்கு முன் கேட்டீர்கள் அல்லவா! இதோ, இப்போது இங்கு அது வந்து விட்டது! வந்து பாருங்கள்1' என்றார்.
உடனடியாக ஆவலுடன் எழுந்து வந்த வடநாட்டுக்காரர், அந்த ஓலைச் சுவடிகளை, தனது பூதக் கண்ணாடியின் துணையுடன் படிக்க ஆரம்பித்தார். அவரது முகம் எல்லையற்ற ஆனந்தத்தால் மலர்ந்தது. 'ஓ! பரம ஆச்சார்ய புருஷரே! இந்த அபூர்வமான 'ஆயுர்வேத கிரந்தத்தைத்தான்', நான் அனேக ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். இதனை பிரார்த்திக்கவே உங்களிடம் வந்தேன். 'பிரத்யக்ஷ தெய்வமான' தாங்கள், நான் பிரார்த்தித்து அரை மணி நேரத்திற்குள், அதை எனது கண்களுக்கு முன்பாகக் கொண்டு வந்து விட்டீர்கள்!' என்றார் ஆனந்தக் கண்ணீருடன்.
ஆச்சரியத்துடன், இவற்றை பார்த்துக் கொண்டிருந்த ஹரிஹர சுப்பிரமணியனை அருகே அழைத்த பெரியவர், 'இவர், பண்டரீபுரத்தை சேர்ந்த மிகச் சிறந்த ஆயுர்வேத ஆராய்ச்சியாளர். அரை மணிக்கு முன்புதான், இவர் என்னிடம் ஒரு 'அபூர்வ சுவடியைப்' பற்றி கேட்டார். ஏதோ எனது மனதில் படவேதான், அவரை இங்கே சிறிது நேரம் அமரவைத்தேன். உடனே நீ வந்து இந்த இரும்புப் பெட்டியோடு நிற்கிறாய்! இந்த சுவடிகள் அனைத்தும் இவருக்கு பேருதவியாக இருக்கும். உனது முன்னோர்களை பிரார்த்தித்தபடியே, உனது கைகளாலேயே இந்த சுவடிகளை இவரிடம் கொடுத்துவிடு!' என்றார்.
வாலிபனிடமிருந்து சுவடிகளை, ஆனந்தக் கண்ணிருடன் பெற்றுக்கொண்ட பண்டரீபுரத்துக்காரர், 'உங்களுடைய கருணையினால்தான், இந்த அபூர்வமான கிரந்தத்தை நான் பெறுகிறேன். இவற்றை காணிக்கைகளின்றி பெற்றுக்கொள்வது தர்மமாகாது!' என்று கூறியபடியே, பழங்கள் நிறைந்த ஒரு தட்டின் மீது 50,000/- ரூபாயை ரொக்கமாக வைத்துக் கொடுத்தார். தயக்கத்துடன் பெரியவரை பார்த்த ஹரிஹர சுப்பிரமணியனை, பெற்றுக்கொள்ளுமாறு, சிரித்த முகத்துடன் பணித்தார் பெரியவர்.
நடுங்கிய கைகளுடன் பொக்கிஷத்தைப் பெற்றுக் கொண்ட வாலிபனை தன்னருகே அழைத்த பெரியவர், 'அன்று உனது பெரியவர்களைப் பற்றி நீ பேசியபோது, நான் உனக்குச் சொன்னேன் அல்லவா! அவர்கள் எல்லாம் மிகப் பெரியவர்கள். மிகச் சிறந்த செயல்களை செய்து விட்டுத்தான் சென்றிருக்கிறார்கள் என்று. அது எனது மனதிற்குப் பட்டதால்தான், கொலு பொம்மைகளை எடுத்து பூஜிக்கச் சொன்னேன். உனது வீடு கடன், வட்டியுடன் சேற்ந்து ருபாய் 45,000/- மாக இருப்பதாகக் கூறினாய். அதற்காக 'சந்திர மௌளீஸ்வரர் செய்திருக்கிற அனுக்கிரகம்தான் இது. பணத்தை பத்திரமாக எடுத்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் போய் வா!' என ஆசிர்வதித்து அனுப்பினார் மகா பெரியவர்!.
நன்றி : எழுதியவர் : ஸ்ரீ ரமணி அண்ணா (தமிழில்)
ஜகத்குரு ஸ்ரீ மகா பெரியவா - காஞ்சி பரமாச்சார்யா முக நூலிலிருந்து தொகுக்கப்பட்டது
தமிழாக்கம்... அடியேன்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment