Monday, May 31, 2021

'பகவான் இராமகிருஷ்ண பரமஹம்ஸர்' அருளிய... சிறுகதைகளின் தமிழாக்கம், 'நம்பிக்கையும்... அவநம்பிக்கையும்...'


இறைவனைக் காணும் பொருட்டு, இரண்டு யோகிகள், ஓரிடத்தில் தவம் புரிந்து கொண்டிருந்தனர். அவர்களின் நோக்கத்தை சோதிக்க எண்ணிய இறைவன், 'சர்வ லோக சஞ்சாரியான' நாரத மகிரிஷியை , அவர்களிடம் அனுப்பி வைத்தார்.

தவம் புரிந்து கொண்டிருந்த யோகியர்களுக்கு முன் வந்து பிரசன்னமான 'நாரத மகிரிஷியை' வணங்கிய யோகியர்கள், 'சுவாமி !, தாங்கள் வைகுண்டத்தில் இருந்துதான் வருகிறீர்களா ?' என்று கேட்டனர். 'ஆம்' என்று பதிலளித்த மகிரிஷியிடம்,  'சுவாமி ! பகவான் ஸ்ரீ நாராயணன், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் ?' என்று  கேட்டனர்.

அதற்கு மகிரிஷி, 'ஒரு ஊசியின் காது வழியாக ஒட்டகங்களையும், யானைகளையும், கூட்டம் கூட்டமாக போகச் செய்து விளையாடிக் கொண்டிருக்கிறார் !' என்றார். அதைக் கேட்ட முதல் யோகி, 'நாரத மகிரிஷியே, தாங்கள் கூறுவது உண்மையாக இருக்காது. இதிலிருந்தே தாங்கள் வைகுண்டத்திற்கே போகவில்லை என்பது உறுதியாகிறது' என்றார்.

புன்னகைத்தபடியே நாரதர், இரண்டாவது யோகியின் பக்கம் திரும்பினார். 'இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது ! அவரால் முடியாத காரியம் ஏது உண்டு இந்த பிரபஞ்சத்தில் ?' என்றார் யோகி. சிறு குழந்தைக்கு ஒப்பான நம்பிக்கையுடன், பகவானால் எல்லாம் முடியும்... என்ற இந்த யோகியே, இறைவனை உனரத்தக்கவர் என்று, மகிரிஷி உறுதி செய்தார்.

ஸாய்ராம்.


ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 181. 'வழிபாடுகளில் அடங்கியிருக்கிற சூட்சுமம்' பகுதி-1.


 இரண்டு வழிபாட்டு முறைகளைத்தான், நாம் பெரும்பாலோனார் கடைப்பிடித்து வருகிறோம். ஒன்று 'சைவம்' என்ற 'சிவ வழிபாட்டு' முறை, மற்றையது 'வைணவம்' என்ற 'பெருமாள் வழிபாட்டு' முறை.

ஜோதிடச் சித்திரத்திலும், இந்த இரு வழிபாட்டு முறைகளும், முறையாக வகுக்கப் பட்டிருக்கின்றன 

* மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் மீன இராசிகள்... 'சிவ வழிபாட்டை' முன்னிருத்துகின்றன. 

 ~ மேஷம் மற்றும் விருச்சிக இராசிகளை ஆட்சி செய்யும் 'செவ்வாய்                                     பகவானுக்கு' அதிதேவதையாக... 'முருகக் கடவுள்' அமைகிறார்.

~ கடக இராசியை ஆட்சி செய்யும் 'சந்திர பகவானுக்கு' அதிதேவதையாக                       'பராசக்தித் தாயார்' அமைகிறார்.

~ சிம்ம இராசியை ஆட்சி செய்யும் 'சூரிய பகவானுக்கு' அதிதேவதையாக 'சிவ             பெருமானார்' அமைகிறார்.

~ தனுசு மற்றும் மீன இராசிகளை ஆட்சி செய்யும் 'குரு பகவானுக்கு'                                 அதிதேவதையாக 'சிவ பெருமானாரின்' மூர்த்தங்களில் ஒன்றான 'ஸ்ரீ                         தக்ஷ்ணாமூர்த்தி பகவான்' அமைகிறார்.

* ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம் மற்றும் கும்ப இராசிகள்... வைணவ வழிபாட்டை முன்னிருத்துகின்றன.

 ~ ரிஷபம் மற்றும் துலா இராசிகளை ஆட்சி செய்யும் 'சுக்கிர பகவானுக்கு'                        அதிதேவதையாக 'ஸ்ரீ ரெங்கநாதப் பெருமாள்' அமைகிறார். 

~ மிதுனம் மற்றும் கன்னி இராசிகளை ஆட்சி செய்யும் 'புத பகவானுக்கு'                          அதிதேவதையாக 'ஸ்ரீ வரதராஜப் பெருமாள்' அமைகிறார்.

~ மகரம் மற்றும் கும்ப இராசிகளை ஆட்சி செய்யும் 'சனி பகவானுக்கு'                               அதிதேவதையாக 'ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள்' அமைகிறார்.

ஸாய்ராம்.




Sunday, May 30, 2021

இறைவனின் கருணை...


 'தண்ணீரில் தத்தளிப்பவனின் நிலையும், தரையில் தத்தளிப்பவனின் நிலையும் ஒன்றே. தண்ணீரில் தத்தளிப்பவ்னுக்கும் அலையே துணை. தரையில் தத்தளிப்பவனுக்கு வழிப்போக்கரே துணை' - சத்குருநாதர்.

அனைத்தையும் இழந்து, அனாதையையாய் தவித்து நிற்கும் ஒரு எளிய மனிதனின் நிலையையும்... அவனுக்கு இறைவன் அளிக்கும் கருணையையும்... இரண்டு உதாரணங்களுடன் விளக்குகிறார், குருநாதர்.

கரையே தென்படாத கடலின் நடுவே, தன்னந்தனியாகத் தவித்துத் தத்தளித்து நிற்கும் ஒருவனுக்கு, இறைவனின் அருளால், அந்தக் கடலின் அலையே துணையாகிறது. அவனை தனது அலைக் கரகங்களால் அணைத்து, கரையில் சேர்க்கிறது.

அது போல, அனைவராலும் கைவிடப்பட்டு, தன்னந்தனியனாக இந்த தரையில் தத்தளித்து, எங்கு செல்வது ? யாரிடம் சென்று உதவி கேட்பது ? யாரை அண்டிப் பிழைப்பது ? என்று தவித்து நிற்கும் ஒருவனுக்கு, இறைவனின் கருணையினால்,  அந்த வழியில் வரும், கருணைமிகுந்த ஒரு வழிப்போக்கனே, இவனை மீட்டு, அவனுடன் அழைத்துச் சென்று, அவனுக்கான எதிர்காலத்தைக் காட்டியருள்வான்.

ஸாய்ராம்.


Saturday, May 29, 2021

குருவின் வழிகாட்டுதல் நடத்திய அற்புதம் !


 2007 ஆம் ஆண்டு நிகழ்ந்த சனி பெயர்ச்சியின் போது, அனைவரது கவனமும், தரிசனப் பாதையும் வழக்கம் போல, 'திருநள்ளாறு' சனி பகவானின் ஆலயத்தை நோக்கியே இருந்தது. எனது குருநாதரோ, என்னை 'குருவாயூருக்கு' அழைத்துச் சென்றார்.

'குருவும்' , 'வாயுவும்' இணைந்த ஸ்தலமாகவும்... ஸ்ரீ கிருஷ்ண பகவான் குழந்தையாக தவழ்ந்து கொண்டிருக்கிற சந்நதியாகவும்... வளம் செறிந்த தென்னாட்டில் அமைந்திருக்கிற ஆலயமாகவும்... இருக்கும் புனிதமான கோவிலுக்குள் பாதம் பதித்த போதே, மனம் எல்லையில்லா பேரானந்தத்தில் மூழ்கியது.

பகவானின் தரிசனம் மனதையும், ஆலய அன்னதானம் வயிற்றையும் நிரப்பியது. சிறிது ஓய்வுக்குப் பிறகு  மாலையில் நிகழும் 'சீவேலி' என்ற உற்சவர், யானையில் எழுந்தருளி, திருவிளக்குகளால் ஒளி சிந்தும் பிரகாரங்களின் வழியே வலம் வரும் உற்சவத்தையும் கண்டு களித்து, மறுநாள் மன நிறைவுடன் ஊர் திரும்பினோம்.

வரும் வழியில், எனது மனம் இந்த லீலைக்கான காரணத்தையே அலசிக் கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்ததும், பிரசாதத்தை சுவாமி மடியில் சமர்ப்பித்து... அன்றைய காலை வேளை பூஜையையும் நிறைவாக்கி... மனம் நிறைந்த நன்றியை சுவாமியின் திருவடியில் சமர்ப்பித்தேன்.வழக்கம் போல, காலையில் 'ஐவண்ணேஸ்வரர்' என்று வருணிக்கப்படும், பஞ்ச வர்ணேஸ்வரரின் ஆலய தரிசனத்திற்காக வீட்டின் வாசலுக்கு வந்த போது... சாக்ஷாத் 'கிருஷ்ண பகவானே' வாசலில் வந்து நின்றார். 

ஆம், பகவானின் வேடம் தரித்து, கழுத்தில் வண்ண மலர் மாலையுடனும், ஒரு கையில் புல்லாங் குழலுடனும், மறு கையில் ஒரு தாளக் கருவியுடனும் 'நாரயணா... நாராயணா..' என்று ஸ்மரித்த போது, மைக்கூச்செறிந்து, கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தோட, அவரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்து நின்ற போது, அவரின் கைகள் தக்ஷணைக்காக என்னை நோக்கியிருந்தது. அவரின் கைகளில் தக்ஷணைய அளித்ததும், அவர் புன்னகையுடன் அடுத்த வீட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்.

அப்போதுதான் கவனித்தேன். அவரின் கால்களில் ஒன்று, சற்று உயரக் குறைவாக இருந்ததையும்.. அதனால், அவர் சற்றுத் தாங்கித் தாங்கி நடந்ததையும். அடடா 1 என்ற வேதனையுடன் ஆலயத்தை நோக்கி செல்லும் போதுதான், மனதில் உதித்தது, 'உடலில் குறைபாடு உள்ளவர்கள் சுவாமிகளின் வேடங்களைத் தரிப்பதை தவிர்த்து விடுவார்களே, இவர் மட்டும் எப்படி இந்த வேடத்தைத் தரித்துக் கொண்டார் ?

ஆலயத்திற்குள் நுழைந்து தாயாரையும், சுவாமியையும் தரிசித்து, இரு நாட்களுக்கு முன் பிரகாரத்தில் எழுந்தருளும் 'சனி பகவானுக்கு' பெயர்ச்சியின் போது, செய்வித்த அலங்காரத்துடன் தரிசனம் செய்த போதுதான், குருவாயூரிலிருந்து வரும் போது மனதில் எழுந்த கேள்விக்கான பதில் சற்று நேரத்திற்கு முன், வீட்டின் வாசலில் கிடைக்கப் பெற்றதை... ஆம், 'கண்ணனின் தரிசனத்திற்குள் அடங்கிய சனி பகவானின் அனுக்கிரகம்' என்ற அற்புதத்தைதான்..

குருவருள் அளித்த இந்த அனுபவம் என்னை அவரின் அன்பு வலைக்குள் என்ன்றென்றும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

ஸாய்ராம்.


Friday, May 28, 2021

கடுகுள்ளமும்... தாயுள்ளமும்...


உள்ளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை, 'பாவேந்தர் பாரதிதாசன்' வருணிக்கும் போது,

...'தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்யம், இவையுண்டு தானுண்டு என்போன், சின்னதொரு கடுகு போல உள்ளம் கொண்டோன்...' என்றும்,

... 'தூய உள்ளம், அன்பு உள்ளம், பெரிய உள்ளம், தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்பதே தாயுல்ளம்...' என்றும் வருணிப்பார்.

இந்தக் கடுகை வைத்து, மஹான் ராஹவேந்திரர் நடத்திய அற்புத லீலைதான்... பாவேந்திரரைத் தூண்டியதோ என்னவோ !

ஒரு முறை ஆஷ்ட மாதத்து விரத காலத்தை, மஹான் மாளவி என்ற கிராமத்தில் கடைப்பிடித்து வந்தார்.அப்போது, மஹானை தரிசிப்பதற்காக, ஒரு எளிய பக்தர், தனது நிலத்தில் விளைந்த கடுகை, ஒரு முடிச்சாகக் கட்டிக் கொண்டு வந்து பணிவுடன் சமர்ப்பித்தார்.

விரத காலத்தில் கடுகை உணவில் சேர்க்கும் வழக்கம் இல்லாதிருந்ததால், மடத்து சிப்பந்திகள் திகைத்து நின்றார்கள். ஆனால் மஹானோ, அந்த சிறிய கடுகுக்குள் மறைந்திருந்த நிறைந்த தாயுள்ளத்தைக் கண்டு, மதிய உணவுக்கு அதைச் சேர்க்கச் சொன்னார்.

இதைச் சகித்துக் கொள்ளாத பக்தர் ஒருவர், தனக்கு நேரமாகிவிட்டது  என்று சொல்லி  மஹானிடம் விடைபெற வந்தார். அவரின் உள்ளத்தை முழுவதுமாக அறிந்திருந்த மஹான், புன்னகைத்த படியே, அந்தக் கடுகுள்ளம் படைத்த பக்தருக்கு அட்சதையைக் கொடுத்து ஆசீர்வாதம் செய்தார்.

பக்தர் வீடு திரும்பும் போது, தனது கைகளில் இருக்கும் அட்சதை கருப்பாக மாறியிருப்பதைக் கண்டு, மனம் கலங்கிப் போனார். மீண்டும் தன்னிடம் வந்து நின்ற பக்தரிடம் , மதிய உணவை ஏற்கச் செய்தார். மனம் மாறியிருந்த பக்தரிடம், அவரின் அட்சைதையைப் பார்க்கச் செய்தார். அந்தக் கரிய நிற அட்சதைகள் மீண்டும் பொன்னிறமாக மாறியிருப்பதைக் கண்டு, அதிசயித்து நின்றார் அந்த பக்தர்.

ஆம், அவரின் கடுகு உள்ளம், இப்போதுதான் மஹானின் அருள் கருணையினால், தாயுள்ளமாக மாறியிருந்தது.

மாற்றவே முடியாத 'பூர்வ வாசனைகளையும், மாற்றக் கூடிய வல்லமை, மஹான்களின் திருவடியில், அவர்களின் ஆணைக்காகக் காத்திருக்கிறது.

ஸாய்ராம்.


Tuesday, May 25, 2021

இறைவனின் இடைபடுதலும்... சத்குருவின் கருணையும்...


 அறவமற்ற, அமைதி நிறைந்த, மலையை நோக்கிய ஒற்றையடிப்பாதைப் பயணம், நடைவழிப் பயணமாக இருக்கும். கற்களும்... முற்களும்... இரு புறமும் இடைமறிக்கும் செடிகளும்... கொடிகளும்... என தடைகள் நிறைந்ததாக இருக்கும்.

தடைகளைக் கடந்து போவதில் இருக்கும் கவனம் மட்டுமே, நமது மனதை பூரண அமைதியில் லயிக்க வைத்து விடும். மலையின் உச்சியை அடையும் போது, நாம் தேடி வந்து அமைதி, நமது பயணத்தின் போது தானாகவே நிகழ்ந்திருப்பதை உணர்ந்து ஆச்சாரியத்தில் மூழ்கிப் போவோம்.

அரவம் நிறைந்த, ஆரவாரமான, நகரத்தை நோக்கிய பயணம் நான்கு வழிச் சாலை சொகுசு வாகனப் பயணமாக இருக்கும். வழி முழுவதும், புலன்களை ஈர்க்கும் தேநீர், இளநீர், குளிர் பானங்கள், பழ ரசங்கள், என புலன்களை ஈர்க்கும், வித விதமான உணவு வகைகள் நிறைந்ததாக இருக்கும்.

இந்த சொகுசுப் பயணத்தில் மனதின் கவனம் முழுவதும், உலகியல் இன்பங்களைத் துய்ப்பதிலேயே மூழ்கியிருக்கும். ஆராவாரம் நிறைந்த நகரத்தை அடையும் போது, அந்த அமைதியற்ற ஆராவாரம் நிறைந்த சூழலில் கலந்து விடும் தன்மை, தனக்குத் தானாக வந்து கூடியிருப்பதை உணர்ந்து ஆச்சரியத்தில் மூழ்கிப் போவோம்.

ஒன்று அமைதியை நோக்கிய... இடைவிடாத ஆனந்தத்தை அனுபவிக்கும்... ஆத்மஞானப் பயணம்.

மற்றொன்று, அமைதியற்ற... ஆரவாரம் நிறைந்த... இன்பம் - துன்பம் என்ற இரட்டைச் சூழல்கள் நிறைந்த... உலக வாழ்வுப் பயணம்.

இந்த இரண்டு, முரண்பட்ட... நேரெதிரான... பயணங்களில் ஒன்றை, நமது வாழ்வின் ஏதாவது ஒரு கணத்தில், நாம் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். அந்தக் கணத்தில், இன்ப - துன்பம் நிறைந்த உலக வாழ்வின் விதிக்கப் பட்டவைகளைப் பூரணமாக்கி... விதிக்கப் படாதவைகளிலிருந்து விலக்கி... இடைவிடா ஆனந்த வாழ்வில் பயணிக்க வைக்க... அனுபவம் நிறைந்த ஒரு வழிகாட்டியின் துணை தேவைப்படுகிறது.

தேர்ந்தெடுக்கத் தயங்கி நிற்கும் இந்த இக்கட்டான வேளையில்... 'இறைவனின் இடைபடுதல்', கருணைமிக்க ஒரு 'சத்குருவினால்தான்' நிகழ்த்தப் படுகிறது. அவர் நம்மிது பொழியும் அன்பு, நம்மை இடைவிடாத ஆனந்தத்தின் பாதையில், அவருடன்  பயணிக்க வைக்கிறது.

ஸாய்ராம்.


Thursday, May 20, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 180. 'கிரக அமைவுகள் உணர்த்தும் சூட்சுமங்கள்'


கிரகங்கள் ஆட்சி, உச்ச பலம் பெற்ற அமைவுகளைப் பெற்றிருக்கும் ஜாதகர்களின் வாழ்வுதான், சிறப்பாக அமைய வேண்டும் என்ற நியதிகள் ஏதும் இல்லை. அந்தந்த ஜாதகர்களின் 'பூர்வ கர்ம வினைகளுக்கு' ஏற்பவே, கிரகங்களின் அமைவுகளும் நிகழ்கின்றன.

40 வயதைக் கடந்து கொண்டிருக்கிற, உலக ரீதியான வெற்றியையும், புகழையும் அடைந்திருக்கிற ஒரு ஜாதகரின், ஜாதகத்தில், மிக எளிமையாக  அமைந்திருக்கும் கிரகங்களின் அமைவே, இதற்கு சாட்சியாகிறது.

* 'கன்னி இராசியே' லக்னமாகவும்... இராசியாகவும் அமைகிறது.

* லக்னாதிபதியான 'புத பகவான்'.. 10 ஆம் பாவமான ஜீவன பாவத்தில் ஆட்சி பலம் பெற்று அமைந்தார். அவருடன் 'விரயதிபதியான'... 'சூரிய பகவான்' இணைந்தார்/.

* தன - பாக்கியாதிபதியாகிய 'சுக்கிர பகவான்' லாப ஸ்தானத்தில், 'ராகு பகவானுடன்' இணைந்தார்.

* தைர்ய - அட்டமாபதி 'செவ்வாய் பகவான்', 'பாக்கிய ஸ்தானத்தில்' அமர்ந்தார்.

* சுக - களத்திர ஸ்தானாதிபதியான 'குரு பகவான்', லக்னத்திலேயே  'பூர்வ புண்ணியஸ்தானாதிபதி'... 'சனி பகவானுடனும்', 'லாபாதிபதியான'... 'சந்திர பகவானுடனும் இணைந்தார்.

*  'கேது பகவான்'... 'பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்' அமர்ந்திருக்கிறார்.

... அது மட்டுமல்ல...

~ 4 வயது வரை... 'விரயாதிபதியான'... 'சூரிய பகவானின்' தசாவும்...

~ 14 வயது வரை... 'லாபாதிபதியான'... 'சந்திர பகவானின்' தசாவும்...

~ 21 வயது வரை... 'தைர்ய - அட்டமாதிபதியான'... 'செவ்வாய் பகவானின்' தசாவும்...

~ 39 வயது வரை...  'லாப ஸ்தானத்தில்' அமர்ந்திருக்கிற 'ராகு பகவானின்' தசாவும்...

~ தற்போது, 55 வயது வரைக்கான, 'குரு பகவானின்' தசாவும் கடந்து கொண்டிருக்கிறது.

... 'லக்னாதிபதியான' புத பகவான் மட்டும்தான் 'ஆட்சி பலம்' பெற்றிருக்கிறார். மேலும், அவர் கடந்து வந்திருக்கிற தசாக்களும், யோகாதிபதிகளின் தசாக்கள் அல்ல. பின் எவ்வாறு அவர் உலகியலின் உயர் வாழ்வான 'செல்வ செழிப்பையும்'... 'புகழையும்' எட்டிப் பிடித்தார்... ?

# 'லக்னாதிபதியான' புத பகவான், 'லக்னத்திலேயே' அமர்ந்து... பலம் பெற்றிருக்கிற 'குரு பகவானின்' சாரத்தில் அமைந்தார்.

# தன - பாக்கியாதிபதியாகியு 'சுக்கிர பகவான்', 'லாப ஸ்தானத்தில்' அமர்ந்து, 'லக்னத்திலேயே' அமர்ந்திருக்கிற 'பூர்வ புண்ணியாதிபதியான' சனி பகவானின் சாரத்தில் அமைந்தார்.

# தைர்ய - அட்டாமாதிபதியான 'செவ்வாய் பகவான்', பாக்கிய ஸ்தானத்தில் 'சுய சாரத்தில்' அமைந்தாலும், லகன்த்திலேயே அமர்ந்திருக்கிற 'சுக - களத்திர ஸ்தானாதிபதியான' குரு பகவானின் பார்வையைப் பெற்றார்.

#'சுக - களத்திர ஸ்தானாதிபதியான' குரு பகவான், லகனத்திலேயே, 'பூர்வ புண்ணியாதிபதியான' சனி பகவானுடனும், 'லாபாதிபதியான' சந்திர பகவானுடன் இணைந்தார்.

# 'லாபாதிபதியான' சந்திர பகவான், லக்னத்தில், 'பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான' சனி பகவானுடனும், 'சுக - களத்திர ஸ்தானாதிபதியான' குரு பகவானுடன் இணைந்தார்.

# 'விரயாதிபதியான' சூரிய பகவான்' லக்னாதிபதியான 'புத பகவானுடன்' இணைந்து, 'குரு பகவானின்' சாரத்தால் வழி நடத்தப் படுகிறார்.

# 'லாப ஸ்தானத்தில்' அமர்ந்திருக்கிற 'ராகு பகவான்', தன - பாக்கியாதிபதியான 'சுக்கிர பகவானுடன்' இணைந்தது மட்டுமல்ல... 'பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான' சனி பகவானின் சாரத்தில் அமர்ந்தார்.

# 'பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்' அமர்ந்திருக்கிற 'கேது பகவான்' லக்னத்திலேயே அமர்ந்திருக்கிற 'குரு பகவானால்' பார்க்கப் படுகிறார்.

இப்போது புரிந்திருக்கும் ! மிக எளிமையாக அமைந்திருக்கும் இந்தக் கிரகங்களின் அமைவுகள்... எவ்வாறு ஒரு ஜாதகரின் 'பூர்வ புண்ணிய கர்ம வினைகளின் விளைவுகளை'... அவற்றின் சூட்சுமமான, 'சார பலங்களின்' மூலம், அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறது என்பதை.

இதைத்தான் 'கோள்களின் கோலாட்டம்' என்று ஜோதிட வல்லுனர்கள் வருணிக்கிறார்கள் போலும் !

ஸாய்ராம்.


ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 179. 'லக்னமும் - இராசியும்'


'லக்னம்', ஜீவன் என்ற உயிராகக் கருதப்படுகிறது. 'இராசி', ஜீவன் குடிகொன்டிருக்கிற உடலாகக் கருதப்படுகிறது.

ஆதலால்தான், 'கர்ம வினைகளைச்' சுமந்து கொண்டிருக்கிற ஜீவனது, 'கர்ம வினைகளின் விளைவுகளை' வெளிப்படுத்துகிற 'கிரகங்களின் அமைவுகள்', உயிராகக் கருதப்படுகிற ஜீவனின், லக்னத்தை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது.

அந்தக் 'கர்ம வினைகளின் வெளிப்பாடுகளை', ஜீவன் எப்போதெல்லாம் அனுபவிக்கிறது என்பதை, ஜீவன் குடிகொண்டிருக்கிற உடலைக் குறித்திடும், இராசியை அடிப்படையாகக் கொண்ட தசாவின் வழியாகவும்... கோள்களின் நகர்தல் என்ற சாரங்களின் வழியாகவும்... ஆய்வு செய்யப்படுகிறது.

* லக்னமும், இராசியும்... ஒன்றுக்கொன்று 'திரிகோணங்களில்' அமையும் போது,

 ~ இந்தப் பிறவியில் ஜீவன் அனுபவிக்கும் அனுபவங்கள் அனைத்தும், தனது           'கர்ம வினைகளின் விளைவுகளால்தான்' நடைபெறுகின்றன... என்ற                          உண்மையை உணர்ந்து கொண்டு... தான் மேற்கொள்ளும் அல்லது                              எதிர்கொள்ளும் அனைத்து செயல்களையும், பற்றற்று அணுகும்                                  பக்குவத்தை உருவாக்குகிறது.

* லக்னமும், இராசியும்... ஒன்றுக்கொன்று 'கேந்திரங்களில்' அமையும் போது,

 ~ தனது 'கர்ம வினைகளின் விளைவுகளைத்தான்' ஜீவன் அனுபவிக்கிறது                  என்பதை உணர்ந்திருந்தாலும், உலக வாழ்வின் வெற்றி என்ற இலக்கை                  நோக்கி, ஆற்றின் ஓட்டத்திற்கு எதிரே பயணிப்பது போன்ற, பெரும்                            முயற்சியை ஜீவன் மேற்கொள்கிறது. காலமும், நேரமும் கூடி வரும்போது         அதில் வெற்றியையும் பெறுகிறது.

* லக்னமும், இராசியும்... ஒன்றுக்கொன்று 'பணபர ஸ்தானங்களில்' அமையும் போது,

 ~ உலக வாழ்வை நோக்கிய பயனத்தில் ஜீவன் பயணிக்க வேண்டியிருக்கிறது.        தனக்காக வாழாமல், தான் சுமந்திருக்கும் கடமைகளுக்காகத் தன்னை                   அர்ப்பணித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

* லக்னமும், இராசியும்... ஒன்றுக்கொன்று 'மறைவிடங்களில்' அமையும் போது,

 ~ தான் வாழ்வில் மேற்கொள்ளும் அல்லது தான் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் அனைத்திற்கும், தான் காரணமல்ல... என்று மட்டுமல்ல, அந்த நிகழ்வுகளில் பங்களிப்பவர்களும், தன்னோடு பயணிப்பவர்கள் மற்றும் தனது முன்னோர்களும்தான் காரணம்... என்று கூறும் மனப்பாங்கு ஓங்கியிருக்கிறது.

... இவ்வாறு, லக்னம் என்ற ஜீவனும்... ஜீவன் உறையும் இராசி என்ற உடலும்... இணைந்தும், பிரிந்தும் செயல்படுவதுதான்... கரம வினைகளிக் கொண்ட வாழ்வாக அமைகிறது.

ஸாய்ராம்.


Wednesday, May 19, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 178. 'நட்சத்திரங்களில் அடங்கியிருக்கிற சூட்சுமம்'


பூமிக்கும், பிரபஞ்சத்தில் உலவிக் கொண்டிருக்கிற கிரகங்களுக்கும் இடையே, ஒரு ஊடகமாக... அளவீடுகளின் அடிப்படையாக... வானவியல் சாஸ்த்திரங்களுக்கு மூலமாக... கணித வியலுக்கு அடிப்படையாக... இருப்பவை, 'நட்சத்திரக் கூட்டங்களை' உள்ளடக்கிய... 'நட்சத்திர மண்டலங்கள்தாம்'.

'பஞ்சாங்கம்' என்ற 'ஜோதிடக் கலையின்' மூலமான, 'துல்லியக் குறிப்புகள்' அனைத்தும், இந்த நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப் பட்டிருக்கின்றன.

இந்தக் குறிப்புகளின் வழியாக கணிக்கப்படும் 'ஜாதகம்' என்ற 'ஜீவனின் வாழ்க்கைச் சித்திரத்தின்' அடிப்படையகத் திகழ்வதும் 'நட்சத்திரங்களே'.

எல்லைகளே தென்படாத, ஆழ் கடலில் பயணிக்கும் போது, தொலைவில் ஏதேனும் கப்பல் தென்படுகிறதா, என்பதைக் காண ஒரு 'தொலை நோக்கிக் கருவி' உதவுவது போல... எல்லையில்லாத தூரத்திலிருந்து, தமது அருள் கிரணங்களால் நம்மை ஆளும் கிரகங்களின் நகர்வுகளைக் கணக்கீடுகள் செய்வதற்கு, இந்த நட்சத்திர மண்டலமே ஆதாரமாகிறது.

* உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை பயணிக்கும் 'சூரிய பகவான்', மீண்டும் அடுத்த நாளில் உதிக்கும் வரையிலான காலத்தைத்தான் 60 நாழிகைகள் கொண்ட ஒரு நாளாக வகுக்கிறது பஞ்சாங்கம். இந்த 60 நாழிகைகளை, 'சூரிய பகவான்', 108 பாதங்களைக் கொண்ட 27 நட்சத்திரங்களின் வழியாகவே கடந்து போகிறார். இதில் எந்த நட்சத்திரத்தின் பாதத்தைக் கடக்கும் போது ஜனனம் நிகழ்கிறதோ, அந்த நட்சத்திர பாதம் அமைந்திருக்கிற 'இராசியே', அந்த ஜீவனுக்கு 'லக்னமாகிறது'.

* 9 பாதங்களைக் கொண்ட 3 நட்சத்திரங்களின் வழியே பயணிக்கும் 'சூரிய பகவானின்' பயணமே... அந்த ஜீவன் ஜனித்த, 'தமிழ் மாதமாக' மலர்கிறது.

* 12 இராசிகளில், 108 பாதங்களாக பிரிந்திருக்கும் 27 நட்சத்திரங்களின் வழியே பயணிக்கும் 'சந்திர பகவான்', வளர் பிறையாகவும்... தேய் பிறையாகவும்... பயணித்து தனது மாதாந்திரப் பயணத்தைப் பூரணம் செய்கிறார். இதில், ஜீவன் ஜனனம் செய்யும் நேரத்தில், 'சந்திர பகவான்' பயணிக்கும் நட்சத்திரத்தின் பாதம் அமைந்திருக்கும் இராசியே... அந்த ஜிவனுக்கு 'இராசியாக' அமைகிறது.

* அந்த நட்சத்திரமே, ஜீவனின் ஜனன நட்சத்திரமாகவும் அமைகிறது.

* அந்த நட்சத்திரத்தின் பாத சாரமான கிரகமே... அந்த ஜீவனின் 'தசாவை' நடத்தும், கிரகமாகவும் அமைகிறது.

* இதை அனைத்தையும் விட முக்கியமானது எதுவெனில்... அந்த 'நட்சத்திரத்தின்' பாத சாரத்தையொட்டி கணக்கீடு செய்யும் போது அமைகிற... 'கர்ப்ப செல் நீக்கிய தசா இருப்புதான்'. 

   நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த 'கர்ப்ப செல் நீக்கிய தசா இருப்புதான்', 'ஜீவனின் தொடர் பிறவிகள்' என்ற உண்மையை உறுதி செய்கிறது. உலகியலில் உலவும் எந்தக் கலையும், இது போல, 'தொடர் பிறவிகள்' என்ற 'ஜீவனின் வாழ்க்கைச் சுழற்சியை', இவ்வளவு துல்லியமாக உறுதிப்படுத்தியதே இல்லை.

இவ்வாறு, 'ஜொதிடக் கலையின்' உன்னத 'மணி மகுடத்தில்', ஒரு வைரமாக ஜொலிப்பது 'நட்சத்திரங்களே' என்றால் அது மிகையில்லை.

ஸாய்ராம்.  

Tuesday, May 18, 2021

எங்கு உளன் ?


 'ஹரி ஓம் நாராயணாய நமஹ ' என்று எப்போதும் ஸ்மரித்துக் கொண்டிருக்கும் தனது மகனான 'பிரஹலாதனிடம்'... தந்தையான 'ஹிரண்யகசிபு', 'நாராயணா, நாரயணா, என்று சதா ஸ்மரித்துக் கொண்டிருக்கிறாயே ! அவன் எங்கு உளன் ?' என்று கேட்கிறான். அதற்கு பிரஹலாதன், 'அவன் எங்கும் உளன் !' என்று பதிலளிக்கிறான்/.

மாணிக்கவசகர், தனது அனுபவமாய், 'விண்ணிறைந்து, மண்ணிறைந்து, மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறைந்து, எல்லையிலாதானே !' என்று வருணிக்கிறார்.

இன்றும் நாம் எதிர் கொள்ளும் கேள்வி...'எங்கு உளன் ?' என்பதாகத்தான் இருக்கிறது.

இந்த உலகமாகவும்... ஜீவன் வாழ்கிற உடலாகவும்... ஜீவனுக்குள் மனமாகவும்... இருப்பவன் மட்டுமல்ல... இவைகள் எல்லாவற்றிலிருந்தும் விலகி... இந்த உடலுக்குள்ளேயே இருந்து அருள்கிறவன்தான்... ஆத்ம சொரூபமான இறைவன்.

நனவு என்ற விழிப்பு நிலையில், நமக்குள் இருந்து அருள்கிறவன் எவனோ... கனவு என்ற மனம் செயல்புரியாத நிலையில் நமக்குள் இருந்து அருள்கிறவன் எவனோ... துயில் என்றஆழ்ந்த தூக்க நிலையில் நம்மோடு இருப்பவன் எவனோ... அவனே தான் இறைவன். 

இதில் ஆச்சரியம் என்னவென்றால்... நமக்குள்ளேயே இருந்து அருள் செய்யும் அந்த பரமார்த்த சொரூபத்தை... ஆழ்ந்த தூக்க நிலையிலும் நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை, கனவு நிலையிலும் நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை. விழிப்பு நிலையில் மட்டும்தான், அவரை அறிந்து கொள்ள முடியும். 

ஆனால், அந்த விழிப்பு நிலையிலும், நம்மை ஒரு ஆத்மாவாகக் கருதிக் கொள்ளாமல்... இந்த மனமாகவும், உடலாகவும், உலகமாகவும் கருதிக் கொண்டு... இந்த உலகவாழ்விலே நிலைத்து நின்று... அவரை அறிந்து கொள்ள முடியாமல், அஞ்ஞானத்தில் மூழ்கி விடுகிறோம்.

எப்போது, இறைவனின் கருணையினால், ஒரு 'சத்குரு' நமது வாழ்வில் இடைபடுகிறாறோ... அப்போதுதான், இந்த உலகமாகவும்... இந்த உடலாகவும்... இந்த மனமாகவும்... இருந்து அருள்பவரே, ஆத்ம சொரூபமான இறைவன் என்பதை உணர்கிறோம்.

அப்போதுதான்... 'எங்கும் உளன்' என்ற பரமார்த்த சொரூபம்... தன்னைத் தானே, தானாக வெளிப்படுத்திக் கொள்கிறது. பனி உறைந்த மலையிலிருந்து மட்டுமல்ல... பாறாங்கல்லிலிருந்து உருவான தூணிலிமிருந்தும்தான்.

ஸாய்ராம்.


Wednesday, May 12, 2021

நாம் பார்க்கும் உலகம்... நமது கைகளில்தான் இருக்கிறது


நாம், கண்ணுக்குத் தெரியும் இந்த உலகம் அடங்கியுள்ள மாபெரும் பிரபஞ்சத்தை, 

~ காண்பது

~ கேட்பது

~ அறிவது

என்பதான, மூன்று விதத்தில் அனுபவிக்கிறோம் ?

இதில் 'கேட்பது' மற்றும் 'அறிவது'  என்பவைகள், 'நமது கேள்விக்கும்  அறிதலுக்கும், வரும் விஷயங்களைப் பொருத்து' அமைகிறது. ஆனால், காண்பது... என்பது மட்டும்தான், நனது காட்சிக்குள் வந்து அமைகிறது.

இந்தக் 'காட்சிகளும், 'நிர்ணயிக்கப்பட்ட நிகழ்வுகளை' கொண்டதாகத்தான் அமைகிறது. நாம் அன்றாடம் காலையில் விழிக்கும் போதிருந்து, இரவு கண்களை மூடும் வரையிலான நிகழ்வுகள் அனைத்தும் ஒரு தொடர் காட்சிகளாக அடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்வுகள் வழியே நாம் கடந்து போவதுதான்... நாம் காணும் உலகம்.

உதாரணமாக, காலையில் கண் விழிக்கும் போது, நம்மோடு நமது புற உலகமும் விழித்துக் கொள்கிறது. அதில்தான் நாம பயணம் செய்ய ஆரம்பிக்கிறோம். அந்த புற உலகத்தில் அடங்கியிருப்பதுதான்... நமது வீடு, வீதி, நகரம், நாம் தொழில் செய்யும் இடம், நமது பணிகளுக்காக நாம் பயணிக்கும் இடங்கள், இறுதியாக மாலையில் மீண்டும் நமது வீடு என, இவையனைத்தும் அடங்கியதுதான், அன்றைய ஒரு பொழுதில் நமது உலகமாக இருக்கிறது.

இவ்வாறாக, நம்மிலிருந்து உதிக்கும் நமது உலகம், இறுதியில் நம்மிலேயே அடங்கியும் விடுவதால்தான்...நாம் பார்க்கும் உலகம் நமது கைகளில்தான் இருக்கிறது... என்று சொல்கிறோம்.

ஸாய்ராம்.



Tuesday, May 11, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 177. 'இந்தக் கலையின் உன்னதத்தை அறிபவர்கள் யார் ?'


வான சாஸ்த்திரத்தையும்... கணக்கியலையும்... தனக்குள் கொண்ட 'ஜோதிடக் கலை' அறிவு சார்ந்த கலைதான். ஏனைய கலைகளை அணுகுவதைப் போல, இந்தக் கலையையும், நாம் அறிவு சார்ந்தும் அணுகலாம்.

அதே வேளையில், ஒவ்வொரு ஜீவனுக்கும், அதன் அடுத்த நொடியின் வாழ்வு எவ்வாறு அமையைப் போகிறது ? என்பதை, அந்த ஜீவனுக்கே அறியாதவாறுதான், இறைவன் வகுத்திருக்கிறான். அதை, இந்தக் கலையின் வழியாக அறிந்து கொள்ள முடியும் எனும் போது, இந்தக் கலையின் மீதும்... இதை வகுத்தளித்திருக்கும் ரிஷிகளின் மீதும்... இதை ஆளும் இறைவனின் மீதும்... நமக்கு பயம் கலந்த மரியாதை வந்து கூடுவதை, எவ்வாறு மறுக்க முடியும் !

எனவே, இந்தக் கலையை அறிவால் அணுகுவதை விட... ஆத்மார்த்தமாக அணுகும் போது... ஒவ்வொரு 'காரியத்திற்குப்' பின்னாலும் இருக்கும் 'காரணம்' தாமாக வெளிப்படுவதை உணரலாம். அதனால்தான், நமது முன்னோர்கள், 'காரண - காரியங்களை அறிந்து செயல்படுதல்...' என்ற 'சொல் வழக்கை' பயன்படுத்தியிருந்தார்கள்.

இது போன்று, இந்தக் கலையை பயன்படுத்துபவர்களின் ஜாதகங்களில், 

~ தர்மம் என்ற 'பாக்கிய ஸ்தானம்' வலுப்பெறுதல்.
~ தர்ம - பாக்கிய 'ஸ்தனாதிபதி' வலுப் பெறுதல்.
~ தர்ம - பாக்கிய ஸ்தானம் அல்லது ஸ்தானாதிபதி, 'லக்னம்' மற்றும் 'பூர்வம்'               என்ற இரு 'திரிகோணாதிபதிகளின்' தொடர்பைப் பெறுதல்.
~ எந்த லக்னமாயினும், தர்ம - பாக்கிய ஸ்தானத்திற்கோ அல்லது                                      ஸ்தானாதிபதிக்கோ, 'குரு பகவானின்' அருள் பார்வை கிடைக்கப் பெறுதல்.

போன்ற ஏதாவது ஒரு வகையில், 'தர்மம்' மற்றும் 'பாக்கியாதிபதி' பலம் பெற்று அமையும் போது, அவர்களால், இந்தக் கலையை பூரண நம்பிக்கையோடும்... இறை உணர்வோடும்... அணுகும் வாய்ப்பு, இயல்பாகவே அமைந்திருக்கும்.

ஸாய்ராம்.

Sunday, May 9, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 176. 'நீச பங்கம் செய்த அற்புதம்"


 2003 ஆம் ஆண்டின் மத்தியில், ஒரு நெருங்கிய நண்பரின் அறிமுகத்துடன், தனது மகனின் ஜாதகத்துடன் ஒரு பெரியவர் வந்திருந்தார். இரண்டு மகள்கள், ஒரு மகன் என்ற குடும்பத்தில், மகன், பட்ட மேல் படிப்பு பதித்து, சென்னையில், ஒரு கார்ப்பரேட் கம்பெனியில், நிர்வாகப் பணியில், சாதாரண ஊழியராகப் பணி புரிந்து வந்தார். தனது குடும்பத்தின் எதிர்காலமே மகனின் பொருளாதார உயர்வில்தான் இருக்கிறது என்பதால், அவரின் எதிர்கால வாழ்வைப் பற்றிய கேள்விகளுடன் வந்திருந்தார்.

அந்த ஜாதகத்தின் அமைவு சற்று வித்தியாசமாக இருந்தது. 

~ 'விருச்சிக லக்னத்தில்' பிறந்திருந்த ஜாதகரின் லக்னாதிபதியான 'செவ்வாய் பகவான்', பாக்கிய ஸ்தானமான 'கடக இராசியில்' நீச பலம் பெற்று, தனது வலிமையை இழந்திருந்தார்.

~ பாக்கியாதிபதியான 'சந்திர பகவான்', லகனத்திலேயே தனது பலத்தை இழந்து 'நீசம் பெற்று' அமர்ந்திருந்தார்.

~ 7 ஆம் பாவாதிபதியான, 'சுக்கிர பகவான்' 11 ஆம் பாவமான லாப ஸ்தானத்தில், தனது பலத்தை இழந்து, நீச நிலையில்' சஞ்சரித்தார்.

~ இந்த 3 கிரகங்களின் நீச நிலையில் ( லக்னாதிபதியான 'செவ்வாய் பகவான்... பாக்கியாதிபதியான 'சந்திர பகவான்'... களத்திர ஸ்தானாதிபதியான 'சுக்கிர பகவான்')... 'சுக்கிர பகவான்' மட்டும், அவரமர்ந்த வீட்டதிபதியான 'புத பகவானுடன்' இணைந்து அமர்ந்திருந்தார். 'புத பகவானின்' உச்ச பலத்தால், 'சுக்கிர பகவான்' தனது 'நீச நிலையிலிருந்து' விடுபட்டு... நீச பங்கம் அடைந்திருந்தார்.

~ லாப ஸ்தானாதிபதியான 'புத பகவானின்' உச்ச பலத்தினால், நீச பங்கம் பெற்ற 'சுக்கிர பகவானின்' நீச பங்க பலம்... 'புத பகவானின்' நட்சத்திர சார பலம்' பெற்ற, 'சந்திர பகவானையும்' (சந்திர பகவான் நின்ற நட்சத்திரம்... 'கேட்டை 1 ஆம் பாதம்), 'செவ்வாய் பகவானையும்' ('செவ்வாய் பகவான்' நின்ற நட்சத்திரம்... 'ஆயிலயம் 2 ஆம் பாதம்) தாமாக வலிமையடைய வைத்தது.

~ 15 வயதுவரையிலான 'புத பகவானின்' தசாவையும்... 22 வயதுவரையிலான 'கேது பகவானின்' தசாவையும் கடந்து... 42 வயதுக்கான 'சுக்கிர பகவானின்' தசா நடப்பில் இருந்தது. அதில், 27 வயதுக்கான 'சுக்கிர பகவானின்' தசாவில்... பாக்கியாதிபதியான 'சந்திர பகவானின்' புத்தி நடந்து கொண்டிருந்தது.

இந்த அமைவுகளைக் கவனத்தில் கொண்டு, அவருக்கு நாம் அளித்த பலன்களாவன...

* கை விலங்கிட்டு கைதி போல இருக்கும், இந்த ஜாதகரின் கை விலங்கு தற்போது (சுக்கிர பகவானினின் தசாவில், சந்திர பகவானின் புத்தி) விலகப் போகிறது.

* ஒரு நண்பரின் உதவியால், இவரின் கை விலங்கு உடைந்து, கடல் கடந்த வெளி நாட்டில் பணிபுரியும் வாய்ப்பு, தொடரப் போகும், 'சுக்கிர பகவானின்' தசாவின், 'செவ்வாய் பகவானின்' புத்திக் காலத்தில் நடக்கும் வாய்ப்பு கூடிவரும்... என்பதுதான்.

இரண்டு வருடங்கள் கடந்த பின், அந்தப் பெரியவர் நம்மைச் சந்திர்த்த போது, 

'என் மகன் தங்கியிருந்த வீட்டின் கீழ்ப்பகுதியில் தங்கியிருந்த கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவரின் உதவியால்... கடவுச் சீட்டும், அதைத் தொடர்ந்து இருவருக்கும், அமெரிக்க நாட்டின்,  சிக்காக்கோ நகரில், எனது மகனுக்கு ஒரு 'கார்ப்பரேட்' நிறுவனத்திலும்.. அந்த செவிலியருக்கு ஒரு முன்னனி மருத்துவமனையில் செவிலியர் பணியும்... கிடத்துவிட்டது !'

'ஒரு நண்பர் என்று கூறினேர்களே ! அது ஒரு பெண் நண்பர் என்று ஏன் கூறவில்லை ?' என்ற அவரின் கேள்விக்கு நாம் அளித்த பதில், 'இதை நீங்கள் அன்று கேட்க ல்லையே !' என்பதாகத்தான் இருந்தது.

இந்த 'நீசபங்க யோகம்' செய்த அற்புதம்... இன்றும் என் நினைவில், நீங்காது உசலாடிக் கொண்டிருக்கிறாது.

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...