Tuesday, May 11, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 177. 'இந்தக் கலையின் உன்னதத்தை அறிபவர்கள் யார் ?'


வான சாஸ்த்திரத்தையும்... கணக்கியலையும்... தனக்குள் கொண்ட 'ஜோதிடக் கலை' அறிவு சார்ந்த கலைதான். ஏனைய கலைகளை அணுகுவதைப் போல, இந்தக் கலையையும், நாம் அறிவு சார்ந்தும் அணுகலாம்.

அதே வேளையில், ஒவ்வொரு ஜீவனுக்கும், அதன் அடுத்த நொடியின் வாழ்வு எவ்வாறு அமையைப் போகிறது ? என்பதை, அந்த ஜீவனுக்கே அறியாதவாறுதான், இறைவன் வகுத்திருக்கிறான். அதை, இந்தக் கலையின் வழியாக அறிந்து கொள்ள முடியும் எனும் போது, இந்தக் கலையின் மீதும்... இதை வகுத்தளித்திருக்கும் ரிஷிகளின் மீதும்... இதை ஆளும் இறைவனின் மீதும்... நமக்கு பயம் கலந்த மரியாதை வந்து கூடுவதை, எவ்வாறு மறுக்க முடியும் !

எனவே, இந்தக் கலையை அறிவால் அணுகுவதை விட... ஆத்மார்த்தமாக அணுகும் போது... ஒவ்வொரு 'காரியத்திற்குப்' பின்னாலும் இருக்கும் 'காரணம்' தாமாக வெளிப்படுவதை உணரலாம். அதனால்தான், நமது முன்னோர்கள், 'காரண - காரியங்களை அறிந்து செயல்படுதல்...' என்ற 'சொல் வழக்கை' பயன்படுத்தியிருந்தார்கள்.

இது போன்று, இந்தக் கலையை பயன்படுத்துபவர்களின் ஜாதகங்களில், 

~ தர்மம் என்ற 'பாக்கிய ஸ்தானம்' வலுப்பெறுதல்.
~ தர்ம - பாக்கிய 'ஸ்தனாதிபதி' வலுப் பெறுதல்.
~ தர்ம - பாக்கிய ஸ்தானம் அல்லது ஸ்தானாதிபதி, 'லக்னம்' மற்றும் 'பூர்வம்'               என்ற இரு 'திரிகோணாதிபதிகளின்' தொடர்பைப் பெறுதல்.
~ எந்த லக்னமாயினும், தர்ம - பாக்கிய ஸ்தானத்திற்கோ அல்லது                                      ஸ்தானாதிபதிக்கோ, 'குரு பகவானின்' அருள் பார்வை கிடைக்கப் பெறுதல்.

போன்ற ஏதாவது ஒரு வகையில், 'தர்மம்' மற்றும் 'பாக்கியாதிபதி' பலம் பெற்று அமையும் போது, அவர்களால், இந்தக் கலையை பூரண நம்பிக்கையோடும்... இறை உணர்வோடும்... அணுகும் வாய்ப்பு, இயல்பாகவே அமைந்திருக்கும்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...