'ஹரி ஓம் நாராயணாய நமஹ ' என்று எப்போதும் ஸ்மரித்துக் கொண்டிருக்கும் தனது மகனான 'பிரஹலாதனிடம்'... தந்தையான 'ஹிரண்யகசிபு', 'நாராயணா, நாரயணா, என்று சதா ஸ்மரித்துக் கொண்டிருக்கிறாயே ! அவன் எங்கு உளன் ?' என்று கேட்கிறான். அதற்கு பிரஹலாதன், 'அவன் எங்கும் உளன் !' என்று பதிலளிக்கிறான்/.
மாணிக்கவசகர், தனது அனுபவமாய், 'விண்ணிறைந்து, மண்ணிறைந்து, மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறைந்து, எல்லையிலாதானே !' என்று வருணிக்கிறார்.
இன்றும் நாம் எதிர் கொள்ளும் கேள்வி...'எங்கு உளன் ?' என்பதாகத்தான் இருக்கிறது.
இந்த உலகமாகவும்... ஜீவன் வாழ்கிற உடலாகவும்... ஜீவனுக்குள் மனமாகவும்... இருப்பவன் மட்டுமல்ல... இவைகள் எல்லாவற்றிலிருந்தும் விலகி... இந்த உடலுக்குள்ளேயே இருந்து அருள்கிறவன்தான்... ஆத்ம சொரூபமான இறைவன்.
நனவு என்ற விழிப்பு நிலையில், நமக்குள் இருந்து அருள்கிறவன் எவனோ... கனவு என்ற மனம் செயல்புரியாத நிலையில் நமக்குள் இருந்து அருள்கிறவன் எவனோ... துயில் என்றஆழ்ந்த தூக்க நிலையில் நம்மோடு இருப்பவன் எவனோ... அவனே தான் இறைவன்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால்... நமக்குள்ளேயே இருந்து அருள் செய்யும் அந்த பரமார்த்த சொரூபத்தை... ஆழ்ந்த தூக்க நிலையிலும் நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை, கனவு நிலையிலும் நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை. விழிப்பு நிலையில் மட்டும்தான், அவரை அறிந்து கொள்ள முடியும்.
ஆனால், அந்த விழிப்பு நிலையிலும், நம்மை ஒரு ஆத்மாவாகக் கருதிக் கொள்ளாமல்... இந்த மனமாகவும், உடலாகவும், உலகமாகவும் கருதிக் கொண்டு... இந்த உலகவாழ்விலே நிலைத்து நின்று... அவரை அறிந்து கொள்ள முடியாமல், அஞ்ஞானத்தில் மூழ்கி விடுகிறோம்.
எப்போது, இறைவனின் கருணையினால், ஒரு 'சத்குரு' நமது வாழ்வில் இடைபடுகிறாறோ... அப்போதுதான், இந்த உலகமாகவும்... இந்த உடலாகவும்... இந்த மனமாகவும்... இருந்து அருள்பவரே, ஆத்ம சொரூபமான இறைவன் என்பதை உணர்கிறோம்.
அப்போதுதான்... 'எங்கும் உளன்' என்ற பரமார்த்த சொரூபம்... தன்னைத் தானே, தானாக வெளிப்படுத்திக் கொள்கிறது. பனி உறைந்த மலையிலிருந்து மட்டுமல்ல... பாறாங்கல்லிலிருந்து உருவான தூணிலிமிருந்தும்தான்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment