Tuesday, May 25, 2021

இறைவனின் இடைபடுதலும்... சத்குருவின் கருணையும்...


 அறவமற்ற, அமைதி நிறைந்த, மலையை நோக்கிய ஒற்றையடிப்பாதைப் பயணம், நடைவழிப் பயணமாக இருக்கும். கற்களும்... முற்களும்... இரு புறமும் இடைமறிக்கும் செடிகளும்... கொடிகளும்... என தடைகள் நிறைந்ததாக இருக்கும்.

தடைகளைக் கடந்து போவதில் இருக்கும் கவனம் மட்டுமே, நமது மனதை பூரண அமைதியில் லயிக்க வைத்து விடும். மலையின் உச்சியை அடையும் போது, நாம் தேடி வந்து அமைதி, நமது பயணத்தின் போது தானாகவே நிகழ்ந்திருப்பதை உணர்ந்து ஆச்சாரியத்தில் மூழ்கிப் போவோம்.

அரவம் நிறைந்த, ஆரவாரமான, நகரத்தை நோக்கிய பயணம் நான்கு வழிச் சாலை சொகுசு வாகனப் பயணமாக இருக்கும். வழி முழுவதும், புலன்களை ஈர்க்கும் தேநீர், இளநீர், குளிர் பானங்கள், பழ ரசங்கள், என புலன்களை ஈர்க்கும், வித விதமான உணவு வகைகள் நிறைந்ததாக இருக்கும்.

இந்த சொகுசுப் பயணத்தில் மனதின் கவனம் முழுவதும், உலகியல் இன்பங்களைத் துய்ப்பதிலேயே மூழ்கியிருக்கும். ஆராவாரம் நிறைந்த நகரத்தை அடையும் போது, அந்த அமைதியற்ற ஆராவாரம் நிறைந்த சூழலில் கலந்து விடும் தன்மை, தனக்குத் தானாக வந்து கூடியிருப்பதை உணர்ந்து ஆச்சரியத்தில் மூழ்கிப் போவோம்.

ஒன்று அமைதியை நோக்கிய... இடைவிடாத ஆனந்தத்தை அனுபவிக்கும்... ஆத்மஞானப் பயணம்.

மற்றொன்று, அமைதியற்ற... ஆரவாரம் நிறைந்த... இன்பம் - துன்பம் என்ற இரட்டைச் சூழல்கள் நிறைந்த... உலக வாழ்வுப் பயணம்.

இந்த இரண்டு, முரண்பட்ட... நேரெதிரான... பயணங்களில் ஒன்றை, நமது வாழ்வின் ஏதாவது ஒரு கணத்தில், நாம் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். அந்தக் கணத்தில், இன்ப - துன்பம் நிறைந்த உலக வாழ்வின் விதிக்கப் பட்டவைகளைப் பூரணமாக்கி... விதிக்கப் படாதவைகளிலிருந்து விலக்கி... இடைவிடா ஆனந்த வாழ்வில் பயணிக்க வைக்க... அனுபவம் நிறைந்த ஒரு வழிகாட்டியின் துணை தேவைப்படுகிறது.

தேர்ந்தெடுக்கத் தயங்கி நிற்கும் இந்த இக்கட்டான வேளையில்... 'இறைவனின் இடைபடுதல்', கருணைமிக்க ஒரு 'சத்குருவினால்தான்' நிகழ்த்தப் படுகிறது. அவர் நம்மிது பொழியும் அன்பு, நம்மை இடைவிடாத ஆனந்தத்தின் பாதையில், அவருடன்  பயணிக்க வைக்கிறது.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...