2007 ஆம் ஆண்டு நிகழ்ந்த சனி பெயர்ச்சியின் போது, அனைவரது கவனமும், தரிசனப் பாதையும் வழக்கம் போல, 'திருநள்ளாறு' சனி பகவானின் ஆலயத்தை நோக்கியே இருந்தது. எனது குருநாதரோ, என்னை 'குருவாயூருக்கு' அழைத்துச் சென்றார்.
'குருவும்' , 'வாயுவும்' இணைந்த ஸ்தலமாகவும்... ஸ்ரீ கிருஷ்ண பகவான் குழந்தையாக தவழ்ந்து கொண்டிருக்கிற சந்நதியாகவும்... வளம் செறிந்த தென்னாட்டில் அமைந்திருக்கிற ஆலயமாகவும்... இருக்கும் புனிதமான கோவிலுக்குள் பாதம் பதித்த போதே, மனம் எல்லையில்லா பேரானந்தத்தில் மூழ்கியது.
பகவானின் தரிசனம் மனதையும், ஆலய அன்னதானம் வயிற்றையும் நிரப்பியது. சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலையில் நிகழும் 'சீவேலி' என்ற உற்சவர், யானையில் எழுந்தருளி, திருவிளக்குகளால் ஒளி சிந்தும் பிரகாரங்களின் வழியே வலம் வரும் உற்சவத்தையும் கண்டு களித்து, மறுநாள் மன நிறைவுடன் ஊர் திரும்பினோம்.
வரும் வழியில், எனது மனம் இந்த லீலைக்கான காரணத்தையே அலசிக் கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்ததும், பிரசாதத்தை சுவாமி மடியில் சமர்ப்பித்து... அன்றைய காலை வேளை பூஜையையும் நிறைவாக்கி... மனம் நிறைந்த நன்றியை சுவாமியின் திருவடியில் சமர்ப்பித்தேன்.வழக்கம் போல, காலையில் 'ஐவண்ணேஸ்வரர்' என்று வருணிக்கப்படும், பஞ்ச வர்ணேஸ்வரரின் ஆலய தரிசனத்திற்காக வீட்டின் வாசலுக்கு வந்த போது... சாக்ஷாத் 'கிருஷ்ண பகவானே' வாசலில் வந்து நின்றார்.
ஆம், பகவானின் வேடம் தரித்து, கழுத்தில் வண்ண மலர் மாலையுடனும், ஒரு கையில் புல்லாங் குழலுடனும், மறு கையில் ஒரு தாளக் கருவியுடனும் 'நாரயணா... நாராயணா..' என்று ஸ்மரித்த போது, மைக்கூச்செறிந்து, கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தோட, அவரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்து நின்ற போது, அவரின் கைகள் தக்ஷணைக்காக என்னை நோக்கியிருந்தது. அவரின் கைகளில் தக்ஷணைய அளித்ததும், அவர் புன்னகையுடன் அடுத்த வீட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்.
அப்போதுதான் கவனித்தேன். அவரின் கால்களில் ஒன்று, சற்று உயரக் குறைவாக இருந்ததையும்.. அதனால், அவர் சற்றுத் தாங்கித் தாங்கி நடந்ததையும். அடடா 1 என்ற வேதனையுடன் ஆலயத்தை நோக்கி செல்லும் போதுதான், மனதில் உதித்தது, 'உடலில் குறைபாடு உள்ளவர்கள் சுவாமிகளின் வேடங்களைத் தரிப்பதை தவிர்த்து விடுவார்களே, இவர் மட்டும் எப்படி இந்த வேடத்தைத் தரித்துக் கொண்டார் ?
ஆலயத்திற்குள் நுழைந்து தாயாரையும், சுவாமியையும் தரிசித்து, இரு நாட்களுக்கு முன் பிரகாரத்தில் எழுந்தருளும் 'சனி பகவானுக்கு' பெயர்ச்சியின் போது, செய்வித்த அலங்காரத்துடன் தரிசனம் செய்த போதுதான், குருவாயூரிலிருந்து வரும் போது மனதில் எழுந்த கேள்விக்கான பதில் சற்று நேரத்திற்கு முன், வீட்டின் வாசலில் கிடைக்கப் பெற்றதை... ஆம், 'கண்ணனின் தரிசனத்திற்குள் அடங்கிய சனி பகவானின் அனுக்கிரகம்' என்ற அற்புதத்தைதான்..
குருவருள் அளித்த இந்த அனுபவம் என்னை அவரின் அன்பு வலைக்குள் என்ன்றென்றும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment