Friday, May 28, 2021

கடுகுள்ளமும்... தாயுள்ளமும்...


உள்ளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை, 'பாவேந்தர் பாரதிதாசன்' வருணிக்கும் போது,

...'தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்யம், இவையுண்டு தானுண்டு என்போன், சின்னதொரு கடுகு போல உள்ளம் கொண்டோன்...' என்றும்,

... 'தூய உள்ளம், அன்பு உள்ளம், பெரிய உள்ளம், தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்பதே தாயுல்ளம்...' என்றும் வருணிப்பார்.

இந்தக் கடுகை வைத்து, மஹான் ராஹவேந்திரர் நடத்திய அற்புத லீலைதான்... பாவேந்திரரைத் தூண்டியதோ என்னவோ !

ஒரு முறை ஆஷ்ட மாதத்து விரத காலத்தை, மஹான் மாளவி என்ற கிராமத்தில் கடைப்பிடித்து வந்தார்.அப்போது, மஹானை தரிசிப்பதற்காக, ஒரு எளிய பக்தர், தனது நிலத்தில் விளைந்த கடுகை, ஒரு முடிச்சாகக் கட்டிக் கொண்டு வந்து பணிவுடன் சமர்ப்பித்தார்.

விரத காலத்தில் கடுகை உணவில் சேர்க்கும் வழக்கம் இல்லாதிருந்ததால், மடத்து சிப்பந்திகள் திகைத்து நின்றார்கள். ஆனால் மஹானோ, அந்த சிறிய கடுகுக்குள் மறைந்திருந்த நிறைந்த தாயுள்ளத்தைக் கண்டு, மதிய உணவுக்கு அதைச் சேர்க்கச் சொன்னார்.

இதைச் சகித்துக் கொள்ளாத பக்தர் ஒருவர், தனக்கு நேரமாகிவிட்டது  என்று சொல்லி  மஹானிடம் விடைபெற வந்தார். அவரின் உள்ளத்தை முழுவதுமாக அறிந்திருந்த மஹான், புன்னகைத்த படியே, அந்தக் கடுகுள்ளம் படைத்த பக்தருக்கு அட்சதையைக் கொடுத்து ஆசீர்வாதம் செய்தார்.

பக்தர் வீடு திரும்பும் போது, தனது கைகளில் இருக்கும் அட்சதை கருப்பாக மாறியிருப்பதைக் கண்டு, மனம் கலங்கிப் போனார். மீண்டும் தன்னிடம் வந்து நின்ற பக்தரிடம் , மதிய உணவை ஏற்கச் செய்தார். மனம் மாறியிருந்த பக்தரிடம், அவரின் அட்சைதையைப் பார்க்கச் செய்தார். அந்தக் கரிய நிற அட்சதைகள் மீண்டும் பொன்னிறமாக மாறியிருப்பதைக் கண்டு, அதிசயித்து நின்றார் அந்த பக்தர்.

ஆம், அவரின் கடுகு உள்ளம், இப்போதுதான் மஹானின் அருள் கருணையினால், தாயுள்ளமாக மாறியிருந்தது.

மாற்றவே முடியாத 'பூர்வ வாசனைகளையும், மாற்றக் கூடிய வல்லமை, மஹான்களின் திருவடியில், அவர்களின் ஆணைக்காகக் காத்திருக்கிறது.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...