Wednesday, May 19, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 178. 'நட்சத்திரங்களில் அடங்கியிருக்கிற சூட்சுமம்'


பூமிக்கும், பிரபஞ்சத்தில் உலவிக் கொண்டிருக்கிற கிரகங்களுக்கும் இடையே, ஒரு ஊடகமாக... அளவீடுகளின் அடிப்படையாக... வானவியல் சாஸ்த்திரங்களுக்கு மூலமாக... கணித வியலுக்கு அடிப்படையாக... இருப்பவை, 'நட்சத்திரக் கூட்டங்களை' உள்ளடக்கிய... 'நட்சத்திர மண்டலங்கள்தாம்'.

'பஞ்சாங்கம்' என்ற 'ஜோதிடக் கலையின்' மூலமான, 'துல்லியக் குறிப்புகள்' அனைத்தும், இந்த நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப் பட்டிருக்கின்றன.

இந்தக் குறிப்புகளின் வழியாக கணிக்கப்படும் 'ஜாதகம்' என்ற 'ஜீவனின் வாழ்க்கைச் சித்திரத்தின்' அடிப்படையகத் திகழ்வதும் 'நட்சத்திரங்களே'.

எல்லைகளே தென்படாத, ஆழ் கடலில் பயணிக்கும் போது, தொலைவில் ஏதேனும் கப்பல் தென்படுகிறதா, என்பதைக் காண ஒரு 'தொலை நோக்கிக் கருவி' உதவுவது போல... எல்லையில்லாத தூரத்திலிருந்து, தமது அருள் கிரணங்களால் நம்மை ஆளும் கிரகங்களின் நகர்வுகளைக் கணக்கீடுகள் செய்வதற்கு, இந்த நட்சத்திர மண்டலமே ஆதாரமாகிறது.

* உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை பயணிக்கும் 'சூரிய பகவான்', மீண்டும் அடுத்த நாளில் உதிக்கும் வரையிலான காலத்தைத்தான் 60 நாழிகைகள் கொண்ட ஒரு நாளாக வகுக்கிறது பஞ்சாங்கம். இந்த 60 நாழிகைகளை, 'சூரிய பகவான்', 108 பாதங்களைக் கொண்ட 27 நட்சத்திரங்களின் வழியாகவே கடந்து போகிறார். இதில் எந்த நட்சத்திரத்தின் பாதத்தைக் கடக்கும் போது ஜனனம் நிகழ்கிறதோ, அந்த நட்சத்திர பாதம் அமைந்திருக்கிற 'இராசியே', அந்த ஜீவனுக்கு 'லக்னமாகிறது'.

* 9 பாதங்களைக் கொண்ட 3 நட்சத்திரங்களின் வழியே பயணிக்கும் 'சூரிய பகவானின்' பயணமே... அந்த ஜீவன் ஜனித்த, 'தமிழ் மாதமாக' மலர்கிறது.

* 12 இராசிகளில், 108 பாதங்களாக பிரிந்திருக்கும் 27 நட்சத்திரங்களின் வழியே பயணிக்கும் 'சந்திர பகவான்', வளர் பிறையாகவும்... தேய் பிறையாகவும்... பயணித்து தனது மாதாந்திரப் பயணத்தைப் பூரணம் செய்கிறார். இதில், ஜீவன் ஜனனம் செய்யும் நேரத்தில், 'சந்திர பகவான்' பயணிக்கும் நட்சத்திரத்தின் பாதம் அமைந்திருக்கும் இராசியே... அந்த ஜிவனுக்கு 'இராசியாக' அமைகிறது.

* அந்த நட்சத்திரமே, ஜீவனின் ஜனன நட்சத்திரமாகவும் அமைகிறது.

* அந்த நட்சத்திரத்தின் பாத சாரமான கிரகமே... அந்த ஜீவனின் 'தசாவை' நடத்தும், கிரகமாகவும் அமைகிறது.

* இதை அனைத்தையும் விட முக்கியமானது எதுவெனில்... அந்த 'நட்சத்திரத்தின்' பாத சாரத்தையொட்டி கணக்கீடு செய்யும் போது அமைகிற... 'கர்ப்ப செல் நீக்கிய தசா இருப்புதான்'. 

   நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த 'கர்ப்ப செல் நீக்கிய தசா இருப்புதான்', 'ஜீவனின் தொடர் பிறவிகள்' என்ற உண்மையை உறுதி செய்கிறது. உலகியலில் உலவும் எந்தக் கலையும், இது போல, 'தொடர் பிறவிகள்' என்ற 'ஜீவனின் வாழ்க்கைச் சுழற்சியை', இவ்வளவு துல்லியமாக உறுதிப்படுத்தியதே இல்லை.

இவ்வாறு, 'ஜொதிடக் கலையின்' உன்னத 'மணி மகுடத்தில்', ஒரு வைரமாக ஜொலிப்பது 'நட்சத்திரங்களே' என்றால் அது மிகையில்லை.

ஸாய்ராம்.  

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...