Friday, October 23, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 144 : காரகத்துவமா... ஆதிபத்தியமா... ?

                    


கிரகங்களின் குணாதிசியங்களைத்தான்... 'காரகத்துவங்கள்' என்று வருணிக்கிறோம். ஜோதிட சித்திரத்தில், அவை அமைந்திருக்கிற ஸ்தானங்களை... 'ஆதிபத்தியங்கள்', என்று வகைப் படுத்துகிறோம்.

உதாரணமாக,

'சுக்கிர பகவானது' காரகத்துவங்களாக... சுக போகக்காரகன் என்றும், களத்திரக் காரகன் என்றும் வருணித்து, இந்த உலக வாழ்வை ரசித்து, அனுபவித்துக் கடக்கக் கூடிய அனைத்து சுக அனுபவங்களையும் அளிப்பவராக... அவரின் குணாதிசியங்களை விவரிக்கிறோம்.

இந்த குணாதிசியங்கள்தான் அவரளிக்கும் பலன்களாக இருக்குமெனில், ஆட்சி பலம்.. உச்ச பலம்... நட்பு வீடுகளில் அமைவு... சுப கிரக நட்சத்திர சாரங்கள்... என ஏதாவது ஒரு வகையில்... பெரும்பான்மையானவர்களின் ஜாதகத்தில் பலம் பெறும் வாய்ப்பைப் பெற்ற... சுக்கிர பகவான் ;

* ஏன், இந்த பெரும்பான்மையின மக்கள் அனைவருக்கும், சுக போக வாழ்வை அளிப்பதில்லை...?

* நமது நாட்டில், 80 சத விகிதத்தினரை... இந்த சுக போக வாழ்விலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருப்பதின் காரணம் என்ன... ?

* இவ்வளவு பலம் பெற்று அவர் அமர்ந்திருந்தும்... பெரும்பாலனவர்கள் இன்னும் வறுமையிலும்... சொல்லொண்ணாத் துயரிலும்... தத்தளிப்பதின் காரணம்தான் என்ன... ?

இந்தக் கேள்விகளுகெல்லாம்...  'சுக்கிர பகவான்' ஜாதகத்தில் அமையும் 'ஆதிபத்தியங்கள்' பதிலளிக்கின்றன.

உதாரணமாக.

~ மேஷ லக்ன ஜாதகருக்கு, சுக்கிர பகவான், 2 மற்றும் 7 என்ற இரு ,மாரகத்திற்கு' அதிபதியாகிறார். அவர், பலம் பெற்று அமரும் பொது, ஜாதகர் வாழ்வு துன்ப நிலைக்குத் தள்ளப்படுகிறது. அவரது பூர்வ புண்ணியம் வலுத்திருக்கும் பட்சத்தில், கடினமான உழைப்பிற்குப் பின்னர்தான், ஒரு செழிப்பான வாழ்வு அமையும். அதையும் அனுபவிக்கும் மன நிலையில் அப்போது அவரின் நிலை இருக்காது.

~ கடக லக்ன ஜாதகருக்கு 11 என்ற பாதக ஸ்தானத்திற்கு அதிபதியாகும் சுக்கிர பகவானின் காலம்... அந்த ஜாதகரை சுக வாழ்விலிருந்து துன்பத்திற்கும்... நிம்மதியிலிருந்து உளைச்சல்களுக்குள்ளும் தள்ளி விடும் அபாயம் உள்ளது.

~ விருச்சிக லக்ன ஜாதகருக்கு, 7 மற்றும் 12 ஆம் ஸ்தானங்களுக்கு அதிபதியாகும் சுக்கிர பகவான், தனது காலத்தில், தான் விரும்பி அடைந்த அனைத்து சுகங்களையும் இழக்கும் படியான சூழலுக்குத் தள்ளப்படுகிறார்.

~ தனுர் லக்ன ஜாதகருக்கு, சுக போக அனுபவங்களை அடைவதில் பெரும் தடைகளை ஏற்படுத்தி, அந்த அனுபவங்களின் இறுதியில், 'சீ போ இந்தப் பழம் புளிக்கும்' என்ற நிலையை உருவாக்கி விடுகிறார்.

~மீன லக்ன ஜாதகருக்கு, சுக்கிர பகவானின் காலம் பெரும் சோதனையாக அமைந்து விடுகிறது. சோதனைகளை எதிர் கொண்டு சோர்ந்து போகும் நிலையில் தத்தளிக்க வைத்து விடுகிறார்.

மேற்கண்ட விளைவுகள் உணர்த்துவது ஒன்றைத்தான்..

'கிரகங்கள் ஜோதிடச் சித்திரத்தில்... தனது குணாதிசியங்களைத் தள்ளி வைத்து, அந்த ஜீவனின் 'கர்ம வினைகளுக்கு' ஏற்ப... தான் ஜோதிடச் சித்திரத்தில் அமையும்  ஆதிபத்தியங்களுக்கு உட்பட்டு... பலன்களை அளிக்கின்றன.'

ஸாய்ராம்.

            


Tuesday, October 20, 2020

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகள் இயற்றிய 'ஸ்ரீ ரமண வழி என்ற சாதனை சாரத்தில்'.. 'எது ஞானம் ? என்ற பகுதி.



'பகவான் ஸ்ரீ ரமண மகிரிஷி' அவர்களின் சிந்தனைத் தொகுப்புகளை... பகவானின் பக்தர்கள் யாவரும் உணர்ந்து கொள்ளும் வகையில், பாக்களாகவும். பதவுரைகளாகவும், 'ஸ்ரீ சாது ஓம் சுவாமிகள்', தனது நூலான 'ஸ்ரீ ரமண வழி என்ற சாதனை சாரத்தில்' 86 தலைப்புகளின் கீழ் அளித்திருக்கிறார்.

அதன் 55 ஆவது தலைப்பான... 'எது ஞானம்' என்ற தலைப்பின் 302 ஆவது பாடல்... ஞானத்தைப் பற்றிய 'பகவானின்' அருள் வெளிப்பாட்டை விவரிக்கிறது.

பாடல் :

'தடைபடாக் கையும் தடைபடாப் பேச்சும்

தடைபடா ஆசுகவிச் சாற்றும் - தடைபடா

எண்ணமாம் மாயை ; இருப்பில் தடைபடாத்

திண்ணமே ஞானம் தெரி'

பதவுரை :

தடைபடாமல் எழுதும் வன்மையும், தடையின்றிப் பேசும் வன்மையும், தடைபடாமல் ஆசுகவியாகப் பாடல்களைப் பொழியும் வன்மையும், தடைபடாது பெருகும் எண்ணங்களின் பயனே. ஆகையால், அவை மாயயின் தடைபடாத லீலையேயாகும். அவ்வாறின்றி, தன் இருப்பு நிலையின் ஆத்ம நிஷ்டையில், எண்ணங்களின் எழுச்சியைப் புறம் தள்ளி, தடைபடாது நிற்கும் வன்மையே ஞானமாகும் என்று அறிக.

            

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 143 : ஜோதிடக் கலை அளிக்கும் பலன்களை அறிந்து கொள்வதற்கு முன் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அம்ஸங்கள்.

        
    

ஜோதிடக் கலையின் வாயிலாக, ஒரு ஜீவனின் வாழ்க்கை இரகசியங்களையும் அறிந்து கொள்ள முடியும் என்பதும், இந்தக் கலை அளிக்கும் எண்ணற்ற பயன்களில் ஒன்றாக இருக்கிறது.

'ஜோதிட சித்திரம்' என்பது, பூமியில் பிறப்பெடுக்கும் ஒரு ஜீவனின் வாழ்க்கை இரகசியங்களை பூமியை மையாமாகக் கொண்டு கணிக்கப்பட்ட வானியல் கணிதமுறையாகும். 

பூமி எவ்வாறு சூரியனை சுற்றி வருகிறதோ... அதே போல ஏனைய ஏழு கிரகங்களின் சுழற்சியையும், அவை தமது ஈர்ப்புகளினால் ஜிவனுக்கு அளிக்கும் ஆகர்ஷணங்களையும், ஜீவன் சுமந்து வந்திருக்கிற 'கர்ம வினைகளையும்'... அதிலிருந்து ஜீவன் எவ்வாறு விடுபடப் போகிறது என்பதை விளக்கும் இரண்டு 'நிழல் கிரகங்களையும்'... உள்ளடக்கிய ஒரு சூட்சும அமைவாகும்.

ஜோதிடச் சித்திரம், ஜீவன் பிறந்த நேரத்தைக் கொண்டு அதை லக்னமாகவும் (1)... லக்னத்தை மூலமாகக் கொண்டு தன-வாக்கு-குடும்பம் (2). தைர்ய-சகோதரம் (3), வாகனம்-தாயார்-சுகம்-வீடு (4), பூர்வம் (5), சத்ரு (6), களத்திரம் (7), ஆயுள் (8), தர்மம்-பாக்கியம் (9), கர்மம்-ஜீவனம் (10), லாபம் (11), சயனம்-விரயம் (12)... இந்த 12 பாவங்களையும் வரிசைப்படுத்தியிருக்கிறது. இந்த பாவங்களில், அமரும் 9 கிரகங்களை மூலமாகக் கொண்டுதான் ஜீவனின் வாழ்க்கை இரகசியம் அறியப்படுகிறது.

லக்னத்திலிருந்து கிரகங்கள் அமையும் பாவங்களை, திரிகோணமாகவும் (1-5-9)... கேந்திரமாகவும் (1-4-7-10)... பணபர ஸ்தானங்களாகவும் (2-11)... மறைவிடங்களாகவும் (3-6-8-12) அமைத்து, இவற்றை 'ஆதிபத்தியங்கள்' என்று வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த ஆதிபத்தியங்களில், அமரும் கிரகங்களுக்கு, அந்த ஆதிபத்திய பாவங்களின் வழியேயான பலன்களும் அளிக்கப்படுகிறது. கிரகங்களுக்கு என 'குணநலன்கள்' (காரகத்துவங்கள்) இருப்பினும், அவற்றின் ஆதிபத்திய அமைவுகளைக் கொண்டுதான் பலன்கள் அளிக்கப்படுகின்றன.

கிரகங்கள் வழியே பலன்களை அளிக்கு முன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்... :

* ஜீவன் தனது 'கர்ம வினைகளின்' காரணமாகவே இந்தப் பிறப்பை அடைந்திருக்கிறது.

* ஜீவன் தனது முந்தைய பிறவிகளின் மொத்தக் கர்மாவிலிருந்து (சஞ்சித கர்மா), இந்தப் பிறவிக்கான கர்ம வினைகளை (பிராரப்தக் கர்மா) சுமந்து கொண்டு பிறப்பெடுத்திருக்கிறது.

* அந்த கர்ம வினைகள் ஒவ்வொன்றாக முடிச்சு அவிழ்க்கப்பட்டு... அதன் விளைவுகளை ஜீவன் எவ்வாறு அனுபவிக்கிறது என்பதைத்தான், கிரகங்களின் அமைவுகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.

* கிரகங்கள் தமது காரகத்துவம் என்ற குண நலன்களை பின் தள்ளி... அவை அமைந்திருக்கும் ஆதிபத்தியங்கள் என்ற பாவங்களின் வழியாகவே பலன்களை அளிக்கின்றன.

* ஆதாலால், கிரகங்கள் நமது கர்ம வினைகளுக்குப் பொறுப்பு அல்ல. அவை அந்த வினைகளைச் சுட்டிக் காட்டும் கருவிகள் மட்டுமே. கிரகங்கள் தமது கடைமைகளைச் செய்யும் கடமை வீரர்களாக மட்டுமே செயல்படுகின்றன. 

* படைப்பவனின் ஆணைக்கு உட்பட்டு, ஜீவனின் கர்ம வினைகளின் விளைவுகளை, எந்த பாரபட்சமும் இன்றி, வெளிப்படுத்தும் வண்ணமே கிரகங்கள் செயல்படுகின்றன. அவை தனது கடமைகளைத்தான் செய்கின்றன.

... மேற்கண்டவற்றை மனதில் கொள்ளும் போது, பலன்களின் சூட்சுமங்கள் நமது சிந்தனைக்குப் புலப்பட ஆரம்பிக்கும்.

ஸாய்ராம்.



Monday, October 19, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 142 : ஜாதகப் பலன்களை கணித்தளிக்குமுன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்.





ஒரு ஜாதகத்தைக் கணிப்புக்கு எடுத்துக் கொள்ளுமுன், கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள்...

1. ஜாதகரின் பிறந்த நேரத்தின் அடிப்படையில் லக்னம் அமைந்திருக்கிறதா... ? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

2. ஆங்கிலத் தேதி, மாத, வருடமும்... தமிழ்த் தேதி மாதமும்... அன்றைய நட்சத்திரமும், அதன் பாத சாரமும் சரியாக இருக்கிறதா... ? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

3. நட்சத்திர பாத சாரததின் படி, 'கர்ப்ப செல் நீக்கிய இருப்பு' கணிக்கப்பட்டிருக்கிறதா... ? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

4. 'கிரக பாத சாரங்களின்' அட்டவணையை உதவியாகக் கொண்டு... இராசி வீடுகளில், கிரகங்களை ஒவ்வொன்றாக... சரியான இராசி வீடுகளில் அவற்றின் பாத சாரங்களின் படி அமைந்திருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவற்றின் பாத சாரங்களை நவாம்ஸத்திலும் ஒப்புமைப் படுத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

5. ஜாதகரின் பிறந்த தேதி, மாத, வருடத்தின் அடிப்படையில்... அந்த ஜாதகரின் 'தசா, புத்தி, இருப்பை'... அந்த 'ஜீவனின் கர்ப்ப செல் நீக்கிய இருப்பைக்' கொண்டு, ஜனன காலம் முதல், தற்போதைய நடப்புக் காலம் வரை... கணக்கீடு செய்து கொள்ள வேண்டும  

6. ஜாதகத்தை ஆய்வு செய்யும் காலம வரையிலான வயதைக் கணித்து... அன்றைய நிலையில், ஜாதகர் கடந்து கொண்டிருக்கும் 'தசா - -புத்தி - அந்தர காலத்தை' கணிப்புக்கான ஆதரமாகக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும், பஞ்சாங்கத்தின் உதவியுடன், துல்லியமாகக் கணித்து அறிந்ததற்குப் பின், ஜாதகத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

ஸாய்ராம்.

  


    
        


Thursday, October 15, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 141 : 'இயற்கைச் சீரழிவுகளைக் கணிப்பதில் ஜோதிடக் கலையின் பங்கு.





வேதத்தின் அங்கமான ஜோதிடக் கலை, 'வான சாஸ்த்திரத்தையும்'... 'கணித சாஸ்த்திரத்தையும்'... அதைக் கையாள்பவர்களின் 'ஆன்மீக பலத்தையும்'... உள்ளடக்கியதாக இருக்கிறது.

அதன் மூலமாக 'வாரம், திதி, நட்சத்திரம், கரணம், யோகம்' என்ற ஐந்து அங்கங்களின் கணிப்புகள் உள்ளடங்கியிருக்கின்றன. புவியை மையமாகக் கொண்டு, பிரபஞ்சத்தின் மூல ஒளிக் கூறான 'சூரிய பகவான்'... புவியைச் சுற்றி வரும் உப கோளான 'சந்திர பகவான்'... அவர் உலவி வரும் 27 நட்சத்திரங்களை உள்ளடக்கிய பால்விதி... சூரிய பகவானைச் சுற்றிவரும் புத, சுக்கிர, குரு, செவ்வாய், சனி பகவான்கள்... என, இவையனைத்தின் இருப்பிடங்களையும், சுழற்சிகளையும் மூலமாகக் கொண்டு கணிக்கப்படுவதே... பஞ்சாங்கம்.

ரிஷிகள் தமது 'அந்தர்ஞானம்' என்ற உள்முக தரிசனத்தால் கண்டறிந்த 'வான சாஸ்த்திரமும்'... இறையருள் கூடிய உணரறிவான கணித சாஸ்திரமும்... இந்த பஞ்சாங்கத்தின் உருவாக்கத்திற்கு காரணமாயின. அன்று தொட்டு இன்று வரையிலும், தொய்வில்லாத 'தாரையாக' இந்த பஞ்சாங்கக் கணிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ் மாதமான 'சித்திரை மாதத்தை' ஆண்டின் முதல் மாதகக் கொண்டு, 'பங்குனி மாதம்' வரையிலான 12 மாதங்களை உள்ளடக்கியதாக பஞ்சாங்கம் அமைகிறது. மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் கிரகங்களின் நிலைகள் துல்லியமாக நாழிகை... விநாடி... நொடிகள்... என பகுக்கப்படுகின்றன. மேலும் அந்த மாதத்தில் நிகழும் கிரகங்களின் சுழற்சிகளும் துல்லியமாப் பகுத்தளிக்கப் படுகின்றன. இந்த சுழற்சிகள் விளைவிக்கும் விளைவுகள், 'பூமியை' எவ்வாறு பாதிகின்றன...? என்ற கணிப்புகளும் பலன்களாக அளிக்கப்படுகின்றன.
   
இந்த பலன்களை அறிந்துகொள்ள ஏதுவாக பிரபஞ்சத்தை உள்ளடக்கிய 'ஜோதிடச் சித்திரம்'... 12 இராசி வீடுகளையும். 108 பாதங்களை உள்ளடக்கிய 27 நட்சத்திரங்களையும், அவற்றின் வழியாக பயணிக்கும் 7 கிரகங்களையும்... ஜீவனின் 'கர்ம வினைகளைச்' சுட்டிக் காட்டும் 2 நிழல் கிரகங்களையும்... உள்ளடக்கியதாக அமைகிறது.

இந்த ஜோதிடச் சித்திரத்தில்...முதல் இராசி வீடாக அமையும் 'மேஷ இராசியை',  பூமி அனுபவிக்கும் காலமாக... காலபுருஷ இராசியாக அனுமானித்து... இந்த பூமி எதிர்கொள்ளும் சூழல்களை அனுமானிக்கின்றனர், பஞ்சாங்க கணிப்பாளர்கள்.
பஞ்சாங்கத்தை கணிக்கும் இந்த கணிப்பாளர்கள்தான் காலத்தைப் பற்றிய முன்னறிவுப்புகளை கண்டறியும் ஆய்வுகளை மேற்கொண்டு... அதன் விளைவுகளை, பொதுவான முன்னறிவிப்புகளாக வெளியிடுகின்றனர். இவை அனைத்தும் கிர்கங்களின் சுழற்சிகளை முலமாகக் கொண்டே கணிக்கப்படுகின்றன.

அன்றைய ரிஷிககள் முதல் இன்றைய கணிப்பாளர்கள் வரை... இந்த அனுமானங்களான பலன்களுக்கு மூலமாக... 'உள்ளுணர்வு' என்ற இறையருள்தான் ஊக்கியாக இருந்து செயலாற்றுகிறது.கணிதமுறைகளும்... வான சாஸ்திர ஞானமும் வளர்ச்சி பெற்றுத் துல்லிய கணக்கீட்டு முறைகளுக்கு உதவினாலும்... பலன்கள் முழுவதுமே, இறயருளின் உள்ளுணர்வால் மட்டுமே வெளிப்படுத்தப் படுகிறது.

கால புருஷ இராசியை மூலமாகக் கொண்டு, ஏழு கிரகங்களின் வழியாக, காலத்தை கணிக்கும் வாய்ப்பு பெற்ற... பஞ்சாங்கக் கணிப்பாளர்கள்தான், இந்த பூமியைப் பற்றியும்... அது எதிர் கொள்ளும் விளைவுகளைப் பற்றியுமான முன்னறிவுப்புகளை வெளியிடுவதற்கான பூரண தகுதிகளைப் பெற்றிருக்கிறார்கள். 

இதில் ஜோதிடர்களின் பங்கு என்ன... ? என்று ஆய்ந்தால், இந்த பஞ்சாங்கத்தை முலமாகக் கொண்டு, ஒரு ஜீவனின் வாழ்க்கை இரகசியத்தை அறிந்து, ஜீவனின் வாழ்வு மேம்பாட்டுக்கு வழிகாட்டுபவதுதான், அவரது பங்காக இருக்கிறது. இவர்கள் 'ஜீவன்' அனுபவிக்கும் 'கர்ம வினைகளை' வெளிப்படுத்தும் 'ராகு பகவான்'... அந்த வினைகளிலிருந்து ஜீவனை விடுவிக்கும் 'கேது பகவான்'... உள்ளிட்ட 9 கிரகங்களின் வழியாக... ஜீவனின் வாழ்க்கை இரகசியத்தை வெளிப்படுத்துவதற்கான பூரண தகுதிகளைப் பெற்றிருக்கிறார்கள்.

ஆகவே, இந்த பூமி எதிர்கொள்ளும் 'வினைகளின் விளைவுகளை' பஞ்சாங்கக் கணிப்பாளர்களும்... இந்த பூமியில் வாழும் ஜீவர்கள் எதிர்கொள்ளும் 'வினைகளின் விளைவுகளை' ஜோதிடர்களும்... கணித்தளிப்பதே முறையானதாக இருக்கும்.

ஸாய்ராம்.

Tuesday, October 13, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 140 : கேந்திரங்கள் உணர்த்தும் சூட்சுமம்...



                         

'புறப்பட்ட இடத்திலிருந்து பயணித்து... மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்வது...' என்ற பயணத்தைத்தான், தேரோட்டம் என்ற நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

அதற்காக அந்தத் தேரை மூன்று முறைகள் திருப்ப வேண்டியிருக்கிறது. அப்போதுதான் தேர், ஆலயத்திற்குள் அமர்ந்திருக்கிற மூலவரை... தேரில் அமர்ந்திருக்கும் உற்சவரை மூலமாகக் கொண்டு... ஆலயத்தின் நான்கு பிரகாரங்களையும் வலம் வந்து... தன் நிலையை அடைகிறது.

ஆலயத்தின் மூலவர்தான் 'ஆத்மா'... உற்சவர்தான் 'ஜீவன்'... இந்த உடல்தான் 'தேர்'. பரப்பிரம்மான ஆத்மா, இந்தப் பிறப்பை எடுக்கும் ஜீவனுக்கு மூலமாகிறது. அந்த ஜீவன் பயணிக்கும் உடலே, தேராகிறது. இந்த உடலென்னும் தேர் பயணிக்கும் பாதைகளே... ஜீவனின் வாழ்வாகிறது.

எவ்வாறு, தேரின் பயணம் நான்கு வழிப் பிரகாரங்கள் வழியே நடக்கிறதோ... அது போலவே ஜீவனின் பயணமும், பாலப் பருவம்... பிரம்மச்சர்யம்... இல்வாழ்வு... வானப்பிரஸ்தம்... என்ற நான்கு வழிப்பாதைகளில் பயணித்து... அதன் இலக்கான, மூலமான ஆத்மாவிடம் இறுதியில் சங்கமிக்கிறது.

இந்த ஜீவனின் வாழ்க்கைப் பயணத்தைத்தான்... ஜோதிடம் என்ற கலை உலக வாழ்க்கைப் பயணமாக... 'கேந்திரங்கள்' என்ற சூட்சும முறைப் பயணமாக ஜோதிடச் சித்திரத்தின் மூலம் நமக்கு உணர்த்துகிறது.

'லக்னம்' என்ற மூலத்திலிருந்து பயணத்தைத் தொடரும் ஜீவன்... 4 ஆம் பாவம் வரை பால பருவமாகவும், 7 ஆம் பாவம் வரை பிரம்மச்சர்யமாகவும், 10 ஆம் பாவம் வரை இல் வாழ்வுப் பயணமாகவும், மிண்டும் லக்னம் வரையில் வானப்பிரஸ்தம் என்ற இறைவனான மூலத்தை அடையும் பயணமாகவும்... பயணிக்கிறது.

இந்த பயணத்தைத்தான்... ஜோதிடக் கலை, கேந்திரங்கள் என்ற அமைவின் வழியாக... சூட்சுமமாக... நமது வாழ்க்கைப் பயணத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

ஸாய்ராம்.


Sunday, October 11, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 139 : தர்மத்தை வலியுருத்தும் 'தர்ம ஸ்தானம்' (9 ஆம் பாவம்)




'தருமத்திற்கும்... நியாயத்திற்கும்' இடையே இருப்பது, ஒரே ஒரு வித்தியாசம்தான். இரண்டு நபர்களுக்கு இடையே ஒரு சர்ச்சை ஏற்படும் போது... அவரவர்களுக்கு ஏற்ப... தனித் தனியாக நியாயங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், இருவருக்கும் இடையேயான சர்ச்சைக்கு என்று ஒரே ஒரு பொதுவான நியாயம் மட்டுமே இருக்க முடியும். அதைத்தான் 'தர்மம்' என்று அழைக்கிறோம்.

விருப்பு வெறுப்புகளுடன் கூடிய... தோன்றி அழியக் கூடிய... ஜீவனுக்கே உரித்தான அஹங்கார நிலையில் வெளிப்படும் நியாயம்... விருப்பு வெறுப்புகளற்ற... எப்போதும் நிலைத்திருக்கும்... சத்திய வஸ்துவான... ஆத்மாவின் தர்மத்திற்குக் கட்டுப்பட்டுப் போகிறது. 

இந்த அனுபவத்தைத்தான்... ஜீவன் பிறவிகள் தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தனது 'கர்ம வினைகள்' வெளிப்படுத்தும் வினைகளின் விளவுகளால் ஏற்படும் 'விருப்பு வெறுப்புகளே'... ஜீவனை மீண்டும், மீண்டும் பிறவிகளுக்கு ஆட்படுத்துகிறது. 

எப்போது, ஜீவன்... தான் நிரந்தரமானவனில்லை, எனது இருப்பிற்கு, என்றும் நிலைத்திருக்கும் சத்திய வஸ்துவான ஆத்மா மட்டுமே காரணம்... என்று உணர ஆரம்பிக்கிறதோ, அப்போதிருந்ந்துதான், ஜீவன் தர்மத்தின் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறது. ஜீவனின், இந்த 'நியாய தர்ம' போராட்டத்தை வெளிப்படுத்தும் இடமாகத்தான்... ஜோதிடச் சித்திரத்தில்... இந்த '9 ஆம் பாவமான' தர்ம ஸ்தானம் அமைகிறது.

இந்த தர்ம ஸ்தானத்தைத்தான்... பாக்கிய ஸ்தானம் என்றும்...'திரிகோணம்' என்ற முக்கோணத்தின் நடு நாயகமான... பாக்கியங்களை அருளும் பாக்கியாதிபதி என்றும்... 'ஜோதிடக் கலை' விவரிக்கிறது.

இந்த '9 ஆமிடமான' தர்ம ஸ்தானத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனில்... அதற்குப் '12 ஆம் பாவமாக' அமையும் 'அட்டம ஸ்தானத்தையும்' (8 ஆம் பாவம்)... '2 ஆம் பாவமாக' அமையும் 'கர்ம ஸ்தானத்தையும்... ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.

8 ஆம் பாவம்... ஜீவனின் 'கர்ம வினைகளின் விளைவுகளை' அனுபவிக்கும், ஆயுள் காலமாக அமைகிறது. அது 6 ஆம் பாவம் வெளிப்படுத்தும் ருணமாகவோ... ரோகமாகவோ... சத்ருக்களிடமான போராட்டங்களாகவோ அமைந்து... அதற்கு ஜீவன் வெளிப்படுத்தும் விளைவுகள்... அது தொடர்ந்து அமையப் போகும்  பிறவிகளில் அனுபவிக்கக் கூடிய வினைகளின் விளைவுகளாக... அதன் 'கர்மத்தின் தொகுப்பில்' (சஞ்சித கர்மா) கொண்டு சேர்க்கிறது.

அது போல, 10 ஆம் பாவமான 'ஜீவன பாவம்' என்ற கர்ம ஸ்தானம்... ஜீவன் தனது கடமைகளை... அதன் கர்ம வினைகளுக்கு ஏற்ப எதிர்கொள்வதைச் சுட்டிக் காட்டுகிறது. தனது கர்ம வினைகளின் விளைவுகளுக்கு ஏற்ப செயலாற்றும் ஜீவன்... அதன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப... தனது சுகத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்றுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகளே...  ஜீவனின் தொடர்பிறப்புகளில், அதன் 'கர்மத் தொகுப்பில் (சஞ்சித கர்மா) கர்ம வினைகளாகச் சேர்கிறது.

இந்த இரண்டு பாவங்களின் (அட்டம பாவம் மற்றும் கர்ம பாவம்) வெளிப்பாடுகளைக் கட்டுப் படுத்தக் கூடிய மையமாகத்தான்... தர்மம் என்ற பாக்கிய ஸ்தானம் (9 ஆம் பாவம்) அமைகிறது. எப்போது இந்த பாக்கிய பாவம் வலுக்கிறதோ... அப்போதுதான், ஜீவன் தனது சுய சொரூப நிலையான ஆத்மாவை உணர்ந்து... தனது கர்ம வினைகள் வெளிப்படுத்தும் வினைகளை.. விருப்பு வெறுப்பன்றி தர்மத்துடன் அணுக ஆரம்பிக்கிறது.

அப்போதிருந்துதான்... ஜீவன் தனது 'கர்ம வினைக் கட்டுகளிலிருந்து' விடுபட ஆரம்பிக்கிறது. இந்த ஜீவனின் விடுதலைக்கு வித்திடும் பாவத்தைத்தான்... ஜோதிடக் கலை 'தர்ம ஸ்தானம்' என்று வருணிக்கிறது.

ஸாய்ராம்.


Saturday, October 10, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி : 138 - திரிகோணம் எதை உணர்த்துகிறது... ?


ஒரு ஜோதிடச் சித்திரத்தில் 'திரிகோணம்' என்ற... லக்னம் - பூர்வம் - பாக்கியம்... என்ற மூன்று ஸ்தானங்களைத்தான் திரிகோணம் என்று அழைக்கிறோம்.

இந்த திரிகோணத்தை மூலமாகக் கொண்டுதான் 'ஜீவனின் பிறப்பின் இரகசியம்' என்ற திரை விலக்கப்படுகிறது. இவ்வளவு சூட்சுமமான அமைவை மிகச் சாதாரணமாக ஜோதிட அறிவை மட்டும் கொண்டு அறிந்து கொள்ள முடியாது. ஜோதிடக் கலையின் ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டுதான் இந்த இரகசிய முடிச்சு அவிழ்க்கப்படுகிறது. இதற்கு படைப்பவனின் அருள் கருணைதான் அருள் புரிகிறது.

லக்னம் :

இதுதான் பரமாத்ம சொரூபமான ஆத்மா... தனது இருப்பான 'சத்து - சித்து - ஆனந்தம்' என்ற நிலையில், தனது 'சித்தம்' என்ற சித்தத்தில் ஒரு ஜீவனின் பிறப்பிற்கு உயிரூட்டத்தை அளிக்கும் மூலமாக இருக்கிறது. இந்த ஆத்மாவின் மூலத்தில்தான்... ஜீவன் தனது இருப்பையும்... வாழ்வையும் கொண்டிருக்கிறது 

ஜீவனின் பிறப்பிற்கு மூலமாக இருக்கும் ஆத்மா... அதன் கர்ம வினைகளை அனுபவிக்கும் வாழ்விற்கும்... அதன் அடுத்ததப் பிறவிகளுக்கும்... 'சாட்சியாக' இருக்கிறது.

பூர்வம் :

ஜீவனின் பிறப்பிற்குக் காரணம்... அதன் கர்ம வினைகள்தான். ஒரு ஜீவன் தன் மொத்தப் பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள கர்ம வினைகளின் தொகுப்பை 'சஞ்சித கர்மா' என்றும்... இந்தப் பிறவிக்கு அது அனுபவிப்பதற்காகக் கொண்டு வரும் வினைகளின் தொகுப்பை 'பிராரப்த கர்மா' என்றும்... இந்தப் பிறவிகளில் அனுபவித்துச் சேர்க்கும் வினைகளின் விளைவுக்கான புண்ணிய - பாப வினைகளின் தொகுப்பை 'ஆகாமிய கர்மா' என்றும் குறிப்பிடுகிறது வேதம்.

இந்த பிராரப்தக் கர்மாவைக் குறிப்பிடும் பாவமாக அமைவதுதான் பூர்வம் என்ற பூர்வ புண்ணிய ஸ்தானம்.

பாக்கியம் :

இந்தப் பிறவியில் தான் கொண்டு வந்திருக்கும் பூர்வ புண்ணிய வினைகளான... 'பிராரப்த கர்மாவை'... இந்த ஜீவன் எவ்வாறு தனது வாழ்நாளில் அனுபவிக்கிறது... ? என்ற அனுபவங்களைத்தான்... இந்த பாக்கியம் என்ற பாக்கிய  ஸ்தானம் விவரிக்கிறது.

ஸாய்ராம்.


Monday, October 5, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமம் - பகுதி : 137. மனோகாரகனான சந்திர பகவான்.



         

சந்திர பகவானை, 'மனோகாரகன்' என்று 'ஜோதிடக் கலை' குறிப்பிடுகிறது. கண்களால் காணக்கூடிய வண்ணம், மாலை நேர வானத்தில், மேற்கிலிருந்து உதயமாகும் சந்திரன்... பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை... வளர்ந்தும், தேய்ந்தும்... பூமியில் இருந்து பார்ப்பவர்களுக்குக் காட்சியளிக்கிறார்.

எவ்வாறு 'சூரிய பகவான்' ஆத்மாவைப் பிரதிபலிக்கிறாரோ... அது போல 'சந்திர பகவான்' ஜீவனைப் பிரதிபலிக்கிறார்.

குணங்களற்ற... சுயஒளி பெற்ற... கோடி சூரியப் பிரகாசமான... பரமாத்ம சொரூபம், இந்த ஜீவனின் பிறப்பிற்காக, ஜீவனின் உடல் கூட்டுக்குள் 'சத்து-சித்து-ஆனந்தம்' என்ற 'ஆத்ம சொரூபமாக' எழுந்தருள்கிறது. என்றும் நிலைத்து நிற்கும் பண்பான சத்து என்ற சத்தியத்தையும்... எப்போதும் நிலைத்திருக்கும் ஆனந்தம் என்ற பண்பையும்... மாறாது கொண்டிருக்கும் ஆத்மா, சித்தம் என்ற நிலையில்தான், ஜீவனுக்கு இடமளித்து அருள்கிறது.

அதனால்தான், 'ஜீவன், ஆத்மாவில் நிலை கொண்டிருக்கிறது...' என்ற உண்மையை, வேதமஹா வாக்கியங்களான, 'அயம் ஆத்மா பிரம்மம்' ...'அஹம் பிரம்மாஸ்மி'... 'தத்வமஸி'... 'பிரக்ஞானம் பிரம்மம்'... ஆகியவை உறுதி செய்கின்றன.

ஜீவனுக்கான தனி இருப்பு ஏதும் இல்லை. அது ஆத்மாவின் என்றுமுள்ள இருப்பில்தான் உயிர் வாழ்கிறது. ஜீவனுக்கான மூலம் ஆத்மாவாக இருக்கிறது, ஆனால், ஜீவனுக்கான உயிர் வாழும் காலம், ஜீவனுடைய 'கர்ம வினைகளில்தான்' அடங்கியிருக்கிறது. அந்தக் கர்ம வினைகளின் உற்பத்தி ஸ்தானமாகத்தன் 'மனம்' இருக்கிறது. அந்த மனம், ஆத்மாவின் 'சித்தத்தில்' ஒடுங்கியிருக்கிறது.

அந்த மனம் சித்தத்தில்; ஒடுங்கியிருக்கும் போது, 'செயல்களற்ற நிலையும்'... சித்தத்தில் இருந்து விடுபடும் போது, 'செயல்படும் நிலையும்' ஏற்படுகிறது. ஆக, இந்த மனம்தான், கர்ம வினைகளை, பிறப்பிலிருந்து மரண பரியந்தம் வரை, அலையலையான எண்ணங்களாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த கர்மவினைகளின் உந்துதல்களான எண்ணங்கள் வெளிப்படுத்தும் விளைவுகளால்தான், ஜீவன் தனது வாழ்வில் 'இரட்டைச் சூழல்களான' இன்பங்களையும் - துன்பங்களையும் மாறி, மாறி அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த 'இரட்டைச் சூழ்ல்களைத்தன்'... சந்திர பகவான் 'வளர் பிறையாகவும்'... 'தேய் பிறையாகவும்'... அமைந்து, ஜோதிடச் சித்திரத்தில், அவரமர்ந்த வீட்டை 'இராசியாகவும்'... அவரின் ஆட்சி பெறும் ஆதிபத்தியத்தை 'கடக இராசியாகவும்' கணித்து, ஜீவனின் வாழ்க்கை இரகசியத்தை வெளிப்படுத்துகிறது ஜோதிடக் கலை.

ஸாய்ராம்.



ஜோதிடமும் அதன் சூட்சுமமும்... பகுதி : 136. ஆத்மகாரகரான சூரிய பகவான்.


பரபிரம்மம் என்ற இறையருள்... ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் ஆத்மசொரூபமாக எழுந்தருளியிருக்கிறது. அதனால்தான் ஜீவன் தனது ஆயுட்காலம் முழுவதுமாக ஜீவனாக... உயிருடன் உலவுகிறது.

பரபிரம்மமாக இருக்கும் போது குணங்களற்ற... பரி பூரணமாக... சுய ஒளிப் பிரகாசமாக... கோடி சூரியர்களின் ஒளிப்பிளம்பாக... இருக்கும் இறையருள், ஒரு ஜீவனுக்குள் எழுந்தருளும் போது, 'சத்து-சித்து-ஆனந்தம்' என்ற ஆத்ம சொரூபமாக இருக்கின்றது.

இந்த 'சச்சிதானந்தத்தை' மூலமாகக் கொண்டுதான்... ஜீவன் தனது கர்மவினைகளைக் கடந்து போகின்றது. சத்து என்ற சத்தியமான இருப்பையும்... ஆனந்தம் என்ற பூரணத்தையும்... தன்னகத்தே கொண்ட ஆத்மா, சித்தம் என்ற தன்னொளியைத்தான் ஜீவனுக்கு அருள்கிறது.

அந்த சித்தத்தில்தான்... ஜீவன் தனது இருப்பைக் கொண்டிருக்கிறது. அந்த ஜீவன் சுமக்கின்ற 'கர்ம வினைகளால்தான்' இந்த சுய ஒளிப் பிரகாசமான... பரி பூரணமான... பரப்பிரம்மம் பின்னமடைந்து, கோடி சூரியப் பிரகாசமாக இருக்கிற ஆத்மா... ஒற்றைச் சூரியனாக நமக்குள்ளிருந்து ஆகாயத்தில் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

அந்த பின்னமடைந்த... பிரதிபலிக்கிற... 'சூரிய பகவானைத்தான்', ஆத்மகாரகன் என்றழைக்கிறது 'ஜோதிடக் கலை'. ஆதலால்தான், ஜோதிடக் கலையில் ஜீவனின் லக்னம் என்ற மூலத்தை... உயிரோட்டத்திற்கான உற்பத்தி ஸ்தானமாகக் கொள்கிறது இந்தக் கலை.

இந்த சத்தியத்தை, ஜீவன் தனது கர்மவினைகளை ஒவ்வொன்றாக அனுபவிக்கும் போது உணர்ந்து கொள்கிறது. இதை விளக்குவதற்காகத்தான், தாருகாவனத்தில் ரிஷிகள், 'ஜோதிடத்தை ஆத்மாவுக்காகவும்... மந்திரத்தை மனதிற்காகவும்... ஔஷதம் என்ற மருந்தை உடலுக்காகவும்...' வகுத்தளித்தார்கள்.

இந்த ஆத்மகாரகரான 'சூரிய பகவான்', தனது சொரூபத்திற்கான மூலத்தை 'லக்னத்தின்' வாயிலாகவும்... அவரின் அருளை 'ஆதிபத்தியத்தின்' வாயிலாகவும் வெளிப்படுத்துகிறார்.

ஸாய்ராம்.

                                                                                          


Saturday, October 3, 2020

Tribute to SPB


SPB  என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும், திரு. S. பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்வும்... மறைவும் எண்ணற்ற வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத் தருவதாக  அமைந்திருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.

ஆந்திராவில் பிறந்து, தமிழ்நாட்டில் தமது வாழ்வை அமைத்துக் கொண்ட ஒரு கலைஞன், தனது பலத்தை மட்டுமல்ல... தனது பலவீனங்களையும்... நன்கு அறிந்திருந்ததுதான்... இவ்வளவு அன்புக்கும், புகழுக்கும் அவரை ஆட்படுத்தியிருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

'தான் முறையாக சங்கீதம் கற்றுக் கொள்ளாதவர்...' என்பதையும், 'தனக்கு வாய்ப்பையும், வாழ்க்கையையும் கொடுத்தது தமிழ் மொழிதான்...' என்பதையும் எப்போதும் மறவாதிருந்ததுதான், அவரை புகழின் உச்சத்துக்கு எடுத்துச் செல்வதற்கான காரணங்கள் என்றால்... அது மிகையில்லை.

இந்த பணிவும்... பண்பும்தான்... இந்திய மொழிகள் அனைத்திலும் அவரது குரல் ஒலிப்பதற்கும், மாநில மற்றும் மத்திய அரசுகளின் உயரிய விருதுகளைப் பெறுவதற்கும் ஊக்க சக்தியாக இருந்திருக்கிறது. அவரின் வாழ்வும்... மறைவும்... இதே மண்ணில் நிகழ்ந்திருப்பதுதான்... இவையனைத்திற்கும் சாட்சியாக இருக்கிறது. 

அவரது மறைவின் போது... இவ்வளவு கடுமையான சூழலிலும்... எண்ணற்ற ரசிகர்கள் அஞ்சலிக்காக வரிசையில் குழுமியிருந்தது ஒரு புறம் என்றால், இந்த மண்ணின் மரியாதையாக அரசு செலுத்திய அஞ்சலி மறுபுறம். 

அவரின் தொழில் சார்ந்த மனிதர்கள் அனைவரையும் புறந்தள்ளி... இந்த தமிழ் நாடும், தமிழ் நாட்டு மக்களும் அவருக்கு செலுத்திய அஞ்சலிதான்... நமது மாநிலத்தின் பெருமையை உலகுக்கே உணர்த்திய தருணம்.

'மண்ணின் மீது மனிதனுக்காசை... மனிதன் மீது மண்ணுக்காசை...' என்ற அவரின் குரலுக்கு மயங்கிய தமிழ் மண்... அவரை என்றும் பிரியாமல் அணைத்துக் கொண்டது... நமது கண்களில் கண்ணீரை வரவழைத்த தருணம்.

இந்த மண்ணுடன் கலந்து விட்ட கலைஞனுக்கு.... எனது அஞ்சலி.

ஸாய்ராம்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...