SPB என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும், திரு. S. பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்வும்... மறைவும் எண்ணற்ற வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத் தருவதாக அமைந்திருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.
ஆந்திராவில் பிறந்து, தமிழ்நாட்டில் தமது வாழ்வை அமைத்துக் கொண்ட ஒரு கலைஞன், தனது பலத்தை மட்டுமல்ல... தனது பலவீனங்களையும்... நன்கு அறிந்திருந்ததுதான்... இவ்வளவு அன்புக்கும், புகழுக்கும் அவரை ஆட்படுத்தியிருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
'தான் முறையாக சங்கீதம் கற்றுக் கொள்ளாதவர்...' என்பதையும், 'தனக்கு வாய்ப்பையும், வாழ்க்கையையும் கொடுத்தது தமிழ் மொழிதான்...' என்பதையும் எப்போதும் மறவாதிருந்ததுதான், அவரை புகழின் உச்சத்துக்கு எடுத்துச் செல்வதற்கான காரணங்கள் என்றால்... அது மிகையில்லை.
இந்த பணிவும்... பண்பும்தான்... இந்திய மொழிகள் அனைத்திலும் அவரது குரல் ஒலிப்பதற்கும், மாநில மற்றும் மத்திய அரசுகளின் உயரிய விருதுகளைப் பெறுவதற்கும் ஊக்க சக்தியாக இருந்திருக்கிறது. அவரின் வாழ்வும்... மறைவும்... இதே மண்ணில் நிகழ்ந்திருப்பதுதான்... இவையனைத்திற்கும் சாட்சியாக இருக்கிறது.
அவரது மறைவின் போது... இவ்வளவு கடுமையான சூழலிலும்... எண்ணற்ற ரசிகர்கள் அஞ்சலிக்காக வரிசையில் குழுமியிருந்தது ஒரு புறம் என்றால், இந்த மண்ணின் மரியாதையாக அரசு செலுத்திய அஞ்சலி மறுபுறம்.
அவரின் தொழில் சார்ந்த மனிதர்கள் அனைவரையும் புறந்தள்ளி... இந்த தமிழ் நாடும், தமிழ் நாட்டு மக்களும் அவருக்கு செலுத்திய அஞ்சலிதான்... நமது மாநிலத்தின் பெருமையை உலகுக்கே உணர்த்திய தருணம்.
'மண்ணின் மீது மனிதனுக்காசை... மனிதன் மீது மண்ணுக்காசை...' என்ற அவரின் குரலுக்கு மயங்கிய தமிழ் மண்... அவரை என்றும் பிரியாமல் அணைத்துக் கொண்டது... நமது கண்களில் கண்ணீரை வரவழைத்த தருணம்.
இந்த மண்ணுடன் கலந்து விட்ட கலைஞனுக்கு.... எனது அஞ்சலி.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment