Sunday, October 11, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 139 : தர்மத்தை வலியுருத்தும் 'தர்ம ஸ்தானம்' (9 ஆம் பாவம்)




'தருமத்திற்கும்... நியாயத்திற்கும்' இடையே இருப்பது, ஒரே ஒரு வித்தியாசம்தான். இரண்டு நபர்களுக்கு இடையே ஒரு சர்ச்சை ஏற்படும் போது... அவரவர்களுக்கு ஏற்ப... தனித் தனியாக நியாயங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், இருவருக்கும் இடையேயான சர்ச்சைக்கு என்று ஒரே ஒரு பொதுவான நியாயம் மட்டுமே இருக்க முடியும். அதைத்தான் 'தர்மம்' என்று அழைக்கிறோம்.

விருப்பு வெறுப்புகளுடன் கூடிய... தோன்றி அழியக் கூடிய... ஜீவனுக்கே உரித்தான அஹங்கார நிலையில் வெளிப்படும் நியாயம்... விருப்பு வெறுப்புகளற்ற... எப்போதும் நிலைத்திருக்கும்... சத்திய வஸ்துவான... ஆத்மாவின் தர்மத்திற்குக் கட்டுப்பட்டுப் போகிறது. 

இந்த அனுபவத்தைத்தான்... ஜீவன் பிறவிகள் தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தனது 'கர்ம வினைகள்' வெளிப்படுத்தும் வினைகளின் விளவுகளால் ஏற்படும் 'விருப்பு வெறுப்புகளே'... ஜீவனை மீண்டும், மீண்டும் பிறவிகளுக்கு ஆட்படுத்துகிறது. 

எப்போது, ஜீவன்... தான் நிரந்தரமானவனில்லை, எனது இருப்பிற்கு, என்றும் நிலைத்திருக்கும் சத்திய வஸ்துவான ஆத்மா மட்டுமே காரணம்... என்று உணர ஆரம்பிக்கிறதோ, அப்போதிருந்ந்துதான், ஜீவன் தர்மத்தின் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறது. ஜீவனின், இந்த 'நியாய தர்ம' போராட்டத்தை வெளிப்படுத்தும் இடமாகத்தான்... ஜோதிடச் சித்திரத்தில்... இந்த '9 ஆம் பாவமான' தர்ம ஸ்தானம் அமைகிறது.

இந்த தர்ம ஸ்தானத்தைத்தான்... பாக்கிய ஸ்தானம் என்றும்...'திரிகோணம்' என்ற முக்கோணத்தின் நடு நாயகமான... பாக்கியங்களை அருளும் பாக்கியாதிபதி என்றும்... 'ஜோதிடக் கலை' விவரிக்கிறது.

இந்த '9 ஆமிடமான' தர்ம ஸ்தானத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனில்... அதற்குப் '12 ஆம் பாவமாக' அமையும் 'அட்டம ஸ்தானத்தையும்' (8 ஆம் பாவம்)... '2 ஆம் பாவமாக' அமையும் 'கர்ம ஸ்தானத்தையும்... ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.

8 ஆம் பாவம்... ஜீவனின் 'கர்ம வினைகளின் விளைவுகளை' அனுபவிக்கும், ஆயுள் காலமாக அமைகிறது. அது 6 ஆம் பாவம் வெளிப்படுத்தும் ருணமாகவோ... ரோகமாகவோ... சத்ருக்களிடமான போராட்டங்களாகவோ அமைந்து... அதற்கு ஜீவன் வெளிப்படுத்தும் விளைவுகள்... அது தொடர்ந்து அமையப் போகும்  பிறவிகளில் அனுபவிக்கக் கூடிய வினைகளின் விளைவுகளாக... அதன் 'கர்மத்தின் தொகுப்பில்' (சஞ்சித கர்மா) கொண்டு சேர்க்கிறது.

அது போல, 10 ஆம் பாவமான 'ஜீவன பாவம்' என்ற கர்ம ஸ்தானம்... ஜீவன் தனது கடமைகளை... அதன் கர்ம வினைகளுக்கு ஏற்ப எதிர்கொள்வதைச் சுட்டிக் காட்டுகிறது. தனது கர்ம வினைகளின் விளைவுகளுக்கு ஏற்ப செயலாற்றும் ஜீவன்... அதன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப... தனது சுகத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்றுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகளே...  ஜீவனின் தொடர்பிறப்புகளில், அதன் 'கர்மத் தொகுப்பில் (சஞ்சித கர்மா) கர்ம வினைகளாகச் சேர்கிறது.

இந்த இரண்டு பாவங்களின் (அட்டம பாவம் மற்றும் கர்ம பாவம்) வெளிப்பாடுகளைக் கட்டுப் படுத்தக் கூடிய மையமாகத்தான்... தர்மம் என்ற பாக்கிய ஸ்தானம் (9 ஆம் பாவம்) அமைகிறது. எப்போது இந்த பாக்கிய பாவம் வலுக்கிறதோ... அப்போதுதான், ஜீவன் தனது சுய சொரூப நிலையான ஆத்மாவை உணர்ந்து... தனது கர்ம வினைகள் வெளிப்படுத்தும் வினைகளை.. விருப்பு வெறுப்பன்றி தர்மத்துடன் அணுக ஆரம்பிக்கிறது.

அப்போதிருந்துதான்... ஜீவன் தனது 'கர்ம வினைக் கட்டுகளிலிருந்து' விடுபட ஆரம்பிக்கிறது. இந்த ஜீவனின் விடுதலைக்கு வித்திடும் பாவத்தைத்தான்... ஜோதிடக் கலை 'தர்ம ஸ்தானம்' என்று வருணிக்கிறது.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...