'புறப்பட்ட இடத்திலிருந்து பயணித்து... மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்வது...' என்ற பயணத்தைத்தான், தேரோட்டம் என்ற நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
அதற்காக அந்தத் தேரை மூன்று முறைகள் திருப்ப வேண்டியிருக்கிறது. அப்போதுதான் தேர், ஆலயத்திற்குள் அமர்ந்திருக்கிற மூலவரை... தேரில் அமர்ந்திருக்கும் உற்சவரை மூலமாகக் கொண்டு... ஆலயத்தின் நான்கு பிரகாரங்களையும் வலம் வந்து... தன் நிலையை அடைகிறது.
ஆலயத்தின் மூலவர்தான் 'ஆத்மா'... உற்சவர்தான் 'ஜீவன்'... இந்த உடல்தான் 'தேர்'. பரப்பிரம்மான ஆத்மா, இந்தப் பிறப்பை எடுக்கும் ஜீவனுக்கு மூலமாகிறது. அந்த ஜீவன் பயணிக்கும் உடலே, தேராகிறது. இந்த உடலென்னும் தேர் பயணிக்கும் பாதைகளே... ஜீவனின் வாழ்வாகிறது.
எவ்வாறு, தேரின் பயணம் நான்கு வழிப் பிரகாரங்கள் வழியே நடக்கிறதோ... அது போலவே ஜீவனின் பயணமும், பாலப் பருவம்... பிரம்மச்சர்யம்... இல்வாழ்வு... வானப்பிரஸ்தம்... என்ற நான்கு வழிப்பாதைகளில் பயணித்து... அதன் இலக்கான, மூலமான ஆத்மாவிடம் இறுதியில் சங்கமிக்கிறது.
இந்த ஜீவனின் வாழ்க்கைப் பயணத்தைத்தான்... ஜோதிடம் என்ற கலை உலக வாழ்க்கைப் பயணமாக... 'கேந்திரங்கள்' என்ற சூட்சும முறைப் பயணமாக ஜோதிடச் சித்திரத்தின் மூலம் நமக்கு உணர்த்துகிறது.
'லக்னம்' என்ற மூலத்திலிருந்து பயணத்தைத் தொடரும் ஜீவன்... 4 ஆம் பாவம் வரை பால பருவமாகவும், 7 ஆம் பாவம் வரை பிரம்மச்சர்யமாகவும், 10 ஆம் பாவம் வரை இல் வாழ்வுப் பயணமாகவும், மிண்டும் லக்னம் வரையில் வானப்பிரஸ்தம் என்ற இறைவனான மூலத்தை அடையும் பயணமாகவும்... பயணிக்கிறது.
இந்த பயணத்தைத்தான்... ஜோதிடக் கலை, கேந்திரங்கள் என்ற அமைவின் வழியாக... சூட்சுமமாக... நமது வாழ்க்கைப் பயணத்தைச் சுட்டிக் காட்டுகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment