Tuesday, October 20, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 143 : ஜோதிடக் கலை அளிக்கும் பலன்களை அறிந்து கொள்வதற்கு முன் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அம்ஸங்கள்.

        
    

ஜோதிடக் கலையின் வாயிலாக, ஒரு ஜீவனின் வாழ்க்கை இரகசியங்களையும் அறிந்து கொள்ள முடியும் என்பதும், இந்தக் கலை அளிக்கும் எண்ணற்ற பயன்களில் ஒன்றாக இருக்கிறது.

'ஜோதிட சித்திரம்' என்பது, பூமியில் பிறப்பெடுக்கும் ஒரு ஜீவனின் வாழ்க்கை இரகசியங்களை பூமியை மையாமாகக் கொண்டு கணிக்கப்பட்ட வானியல் கணிதமுறையாகும். 

பூமி எவ்வாறு சூரியனை சுற்றி வருகிறதோ... அதே போல ஏனைய ஏழு கிரகங்களின் சுழற்சியையும், அவை தமது ஈர்ப்புகளினால் ஜிவனுக்கு அளிக்கும் ஆகர்ஷணங்களையும், ஜீவன் சுமந்து வந்திருக்கிற 'கர்ம வினைகளையும்'... அதிலிருந்து ஜீவன் எவ்வாறு விடுபடப் போகிறது என்பதை விளக்கும் இரண்டு 'நிழல் கிரகங்களையும்'... உள்ளடக்கிய ஒரு சூட்சும அமைவாகும்.

ஜோதிடச் சித்திரம், ஜீவன் பிறந்த நேரத்தைக் கொண்டு அதை லக்னமாகவும் (1)... லக்னத்தை மூலமாகக் கொண்டு தன-வாக்கு-குடும்பம் (2). தைர்ய-சகோதரம் (3), வாகனம்-தாயார்-சுகம்-வீடு (4), பூர்வம் (5), சத்ரு (6), களத்திரம் (7), ஆயுள் (8), தர்மம்-பாக்கியம் (9), கர்மம்-ஜீவனம் (10), லாபம் (11), சயனம்-விரயம் (12)... இந்த 12 பாவங்களையும் வரிசைப்படுத்தியிருக்கிறது. இந்த பாவங்களில், அமரும் 9 கிரகங்களை மூலமாகக் கொண்டுதான் ஜீவனின் வாழ்க்கை இரகசியம் அறியப்படுகிறது.

லக்னத்திலிருந்து கிரகங்கள் அமையும் பாவங்களை, திரிகோணமாகவும் (1-5-9)... கேந்திரமாகவும் (1-4-7-10)... பணபர ஸ்தானங்களாகவும் (2-11)... மறைவிடங்களாகவும் (3-6-8-12) அமைத்து, இவற்றை 'ஆதிபத்தியங்கள்' என்று வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த ஆதிபத்தியங்களில், அமரும் கிரகங்களுக்கு, அந்த ஆதிபத்திய பாவங்களின் வழியேயான பலன்களும் அளிக்கப்படுகிறது. கிரகங்களுக்கு என 'குணநலன்கள்' (காரகத்துவங்கள்) இருப்பினும், அவற்றின் ஆதிபத்திய அமைவுகளைக் கொண்டுதான் பலன்கள் அளிக்கப்படுகின்றன.

கிரகங்கள் வழியே பலன்களை அளிக்கு முன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்... :

* ஜீவன் தனது 'கர்ம வினைகளின்' காரணமாகவே இந்தப் பிறப்பை அடைந்திருக்கிறது.

* ஜீவன் தனது முந்தைய பிறவிகளின் மொத்தக் கர்மாவிலிருந்து (சஞ்சித கர்மா), இந்தப் பிறவிக்கான கர்ம வினைகளை (பிராரப்தக் கர்மா) சுமந்து கொண்டு பிறப்பெடுத்திருக்கிறது.

* அந்த கர்ம வினைகள் ஒவ்வொன்றாக முடிச்சு அவிழ்க்கப்பட்டு... அதன் விளைவுகளை ஜீவன் எவ்வாறு அனுபவிக்கிறது என்பதைத்தான், கிரகங்களின் அமைவுகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.

* கிரகங்கள் தமது காரகத்துவம் என்ற குண நலன்களை பின் தள்ளி... அவை அமைந்திருக்கும் ஆதிபத்தியங்கள் என்ற பாவங்களின் வழியாகவே பலன்களை அளிக்கின்றன.

* ஆதாலால், கிரகங்கள் நமது கர்ம வினைகளுக்குப் பொறுப்பு அல்ல. அவை அந்த வினைகளைச் சுட்டிக் காட்டும் கருவிகள் மட்டுமே. கிரகங்கள் தமது கடைமைகளைச் செய்யும் கடமை வீரர்களாக மட்டுமே செயல்படுகின்றன. 

* படைப்பவனின் ஆணைக்கு உட்பட்டு, ஜீவனின் கர்ம வினைகளின் விளைவுகளை, எந்த பாரபட்சமும் இன்றி, வெளிப்படுத்தும் வண்ணமே கிரகங்கள் செயல்படுகின்றன. அவை தனது கடமைகளைத்தான் செய்கின்றன.

... மேற்கண்டவற்றை மனதில் கொள்ளும் போது, பலன்களின் சூட்சுமங்கள் நமது சிந்தனைக்குப் புலப்பட ஆரம்பிக்கும்.

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...