Friday, October 23, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 144 : காரகத்துவமா... ஆதிபத்தியமா... ?

                    


கிரகங்களின் குணாதிசியங்களைத்தான்... 'காரகத்துவங்கள்' என்று வருணிக்கிறோம். ஜோதிட சித்திரத்தில், அவை அமைந்திருக்கிற ஸ்தானங்களை... 'ஆதிபத்தியங்கள்', என்று வகைப் படுத்துகிறோம்.

உதாரணமாக,

'சுக்கிர பகவானது' காரகத்துவங்களாக... சுக போகக்காரகன் என்றும், களத்திரக் காரகன் என்றும் வருணித்து, இந்த உலக வாழ்வை ரசித்து, அனுபவித்துக் கடக்கக் கூடிய அனைத்து சுக அனுபவங்களையும் அளிப்பவராக... அவரின் குணாதிசியங்களை விவரிக்கிறோம்.

இந்த குணாதிசியங்கள்தான் அவரளிக்கும் பலன்களாக இருக்குமெனில், ஆட்சி பலம்.. உச்ச பலம்... நட்பு வீடுகளில் அமைவு... சுப கிரக நட்சத்திர சாரங்கள்... என ஏதாவது ஒரு வகையில்... பெரும்பான்மையானவர்களின் ஜாதகத்தில் பலம் பெறும் வாய்ப்பைப் பெற்ற... சுக்கிர பகவான் ;

* ஏன், இந்த பெரும்பான்மையின மக்கள் அனைவருக்கும், சுக போக வாழ்வை அளிப்பதில்லை...?

* நமது நாட்டில், 80 சத விகிதத்தினரை... இந்த சுக போக வாழ்விலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருப்பதின் காரணம் என்ன... ?

* இவ்வளவு பலம் பெற்று அவர் அமர்ந்திருந்தும்... பெரும்பாலனவர்கள் இன்னும் வறுமையிலும்... சொல்லொண்ணாத் துயரிலும்... தத்தளிப்பதின் காரணம்தான் என்ன... ?

இந்தக் கேள்விகளுகெல்லாம்...  'சுக்கிர பகவான்' ஜாதகத்தில் அமையும் 'ஆதிபத்தியங்கள்' பதிலளிக்கின்றன.

உதாரணமாக.

~ மேஷ லக்ன ஜாதகருக்கு, சுக்கிர பகவான், 2 மற்றும் 7 என்ற இரு ,மாரகத்திற்கு' அதிபதியாகிறார். அவர், பலம் பெற்று அமரும் பொது, ஜாதகர் வாழ்வு துன்ப நிலைக்குத் தள்ளப்படுகிறது. அவரது பூர்வ புண்ணியம் வலுத்திருக்கும் பட்சத்தில், கடினமான உழைப்பிற்குப் பின்னர்தான், ஒரு செழிப்பான வாழ்வு அமையும். அதையும் அனுபவிக்கும் மன நிலையில் அப்போது அவரின் நிலை இருக்காது.

~ கடக லக்ன ஜாதகருக்கு 11 என்ற பாதக ஸ்தானத்திற்கு அதிபதியாகும் சுக்கிர பகவானின் காலம்... அந்த ஜாதகரை சுக வாழ்விலிருந்து துன்பத்திற்கும்... நிம்மதியிலிருந்து உளைச்சல்களுக்குள்ளும் தள்ளி விடும் அபாயம் உள்ளது.

~ விருச்சிக லக்ன ஜாதகருக்கு, 7 மற்றும் 12 ஆம் ஸ்தானங்களுக்கு அதிபதியாகும் சுக்கிர பகவான், தனது காலத்தில், தான் விரும்பி அடைந்த அனைத்து சுகங்களையும் இழக்கும் படியான சூழலுக்குத் தள்ளப்படுகிறார்.

~ தனுர் லக்ன ஜாதகருக்கு, சுக போக அனுபவங்களை அடைவதில் பெரும் தடைகளை ஏற்படுத்தி, அந்த அனுபவங்களின் இறுதியில், 'சீ போ இந்தப் பழம் புளிக்கும்' என்ற நிலையை உருவாக்கி விடுகிறார்.

~மீன லக்ன ஜாதகருக்கு, சுக்கிர பகவானின் காலம் பெரும் சோதனையாக அமைந்து விடுகிறது. சோதனைகளை எதிர் கொண்டு சோர்ந்து போகும் நிலையில் தத்தளிக்க வைத்து விடுகிறார்.

மேற்கண்ட விளைவுகள் உணர்த்துவது ஒன்றைத்தான்..

'கிரகங்கள் ஜோதிடச் சித்திரத்தில்... தனது குணாதிசியங்களைத் தள்ளி வைத்து, அந்த ஜீவனின் 'கர்ம வினைகளுக்கு' ஏற்ப... தான் ஜோதிடச் சித்திரத்தில் அமையும்  ஆதிபத்தியங்களுக்கு உட்பட்டு... பலன்களை அளிக்கின்றன.'

ஸாய்ராம்.

            


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...