சந்திர பகவானை, 'மனோகாரகன்' என்று 'ஜோதிடக் கலை' குறிப்பிடுகிறது. கண்களால் காணக்கூடிய வண்ணம், மாலை நேர வானத்தில், மேற்கிலிருந்து உதயமாகும் சந்திரன்... பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை... வளர்ந்தும், தேய்ந்தும்... பூமியில் இருந்து பார்ப்பவர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
எவ்வாறு 'சூரிய பகவான்' ஆத்மாவைப் பிரதிபலிக்கிறாரோ... அது போல 'சந்திர பகவான்' ஜீவனைப் பிரதிபலிக்கிறார்.
குணங்களற்ற... சுயஒளி பெற்ற... கோடி சூரியப் பிரகாசமான... பரமாத்ம சொரூபம், இந்த ஜீவனின் பிறப்பிற்காக, ஜீவனின் உடல் கூட்டுக்குள் 'சத்து-சித்து-ஆனந்தம்' என்ற 'ஆத்ம சொரூபமாக' எழுந்தருள்கிறது. என்றும் நிலைத்து நிற்கும் பண்பான சத்து என்ற சத்தியத்தையும்... எப்போதும் நிலைத்திருக்கும் ஆனந்தம் என்ற பண்பையும்... மாறாது கொண்டிருக்கும் ஆத்மா, சித்தம் என்ற நிலையில்தான், ஜீவனுக்கு இடமளித்து அருள்கிறது.
அதனால்தான், 'ஜீவன், ஆத்மாவில் நிலை கொண்டிருக்கிறது...' என்ற உண்மையை, வேதமஹா வாக்கியங்களான, 'அயம் ஆத்மா பிரம்மம்' ...'அஹம் பிரம்மாஸ்மி'... 'தத்வமஸி'... 'பிரக்ஞானம் பிரம்மம்'... ஆகியவை உறுதி செய்கின்றன.
ஜீவனுக்கான தனி இருப்பு ஏதும் இல்லை. அது ஆத்மாவின் என்றுமுள்ள இருப்பில்தான் உயிர் வாழ்கிறது. ஜீவனுக்கான மூலம் ஆத்மாவாக இருக்கிறது, ஆனால், ஜீவனுக்கான உயிர் வாழும் காலம், ஜீவனுடைய 'கர்ம வினைகளில்தான்' அடங்கியிருக்கிறது. அந்தக் கர்ம வினைகளின் உற்பத்தி ஸ்தானமாகத்தன் 'மனம்' இருக்கிறது. அந்த மனம், ஆத்மாவின் 'சித்தத்தில்' ஒடுங்கியிருக்கிறது.
அந்த மனம் சித்தத்தில்; ஒடுங்கியிருக்கும் போது, 'செயல்களற்ற நிலையும்'... சித்தத்தில் இருந்து விடுபடும் போது, 'செயல்படும் நிலையும்' ஏற்படுகிறது. ஆக, இந்த மனம்தான், கர்ம வினைகளை, பிறப்பிலிருந்து மரண பரியந்தம் வரை, அலையலையான எண்ணங்களாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த கர்மவினைகளின் உந்துதல்களான எண்ணங்கள் வெளிப்படுத்தும் விளைவுகளால்தான், ஜீவன் தனது வாழ்வில் 'இரட்டைச் சூழல்களான' இன்பங்களையும் - துன்பங்களையும் மாறி, மாறி அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த 'இரட்டைச் சூழ்ல்களைத்தன்'... சந்திர பகவான் 'வளர் பிறையாகவும்'... 'தேய் பிறையாகவும்'... அமைந்து, ஜோதிடச் சித்திரத்தில், அவரமர்ந்த வீட்டை 'இராசியாகவும்'... அவரின் ஆட்சி பெறும் ஆதிபத்தியத்தை 'கடக இராசியாகவும்' கணித்து, ஜீவனின் வாழ்க்கை இரகசியத்தை வெளிப்படுத்துகிறது ஜோதிடக் கலை.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment