Friday, July 29, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 230. 'பிரசன்னம் ஒரு ஆய்வு'


'பிரசன்னம்' என்பதை, 'ஒரு சந்தேகத்திற்கான தெளிவு...' என்பதாக எடுத்துக் கொள்ளாலாம்.

ஒரு 'தெளிவான பதில்' உருவாக வேண்டுமெனில், முதலில் 'தெளிவான கேள்வி' அமைய வேண்டும். கேட்பதில் தெளிவு இருந்தால், அதற்கான பதிலும் தெளிவாக இருக்கும்.

நாம் 'மேற்கொள்ளப் போகும்'... அல்லது, 'எதிர் கொள்ளப் போகும்,,,' ஒவ்வொரு செயலுக்குமான வழி வகைகளை, ஜாதகத்தில் அறிந்து கொள்வது... என்பது, மிகக் கடினமான கணிதமுறைகளுடன் கூடியதாக இருப்பதால், அதற்கான பொறுமையும்... கால அவகாசமும்... நமக்குக் கிடைப்பதில்லை/ 

ஆகவே, ஒரு செயலை மேற்கொள்ள திட்டமிடும் போது, 

- அதில் நாம் ஈடுபடலாமா ?.

- அதில் ஈடுபடக் கூடிய சக்தி நம்மிடம் உள்ளதா ? 

- அந்த செயலுக்கான விளைவுகள் எவ்வாறு இருக்கும் ? 

- அதில் ஈடுபட வேண்டும் எனும் போது, அதை எவ்வாறு கையாள்வது ?

என்ற கேள்விகளுக்கான பதில்கள் தெரிந்தால், அந்த செயலில் நாம் தைரியமாக இறங்கிவிடலாம்.

இந்தக் கேள்விகளுக்கான பதிலை, நமது ஜாதகத்தில் ஆய்ந்து தேடுவதை விட, நமது 'கர்ம வினைகளை' பூரணமாக அறிந்திருக்கிற, அந்தப் 'பரம்பொருளிடம்' கேட்டறிவது மிகவும் இதமானதாக இருக்கும். இவ்வாறு கேட்டறிவதே, 'பிரசன்னம்' என்பதாகும். 

இந்த முறையில் அறியப்படும் விஷயங்கள் யாவும், இந்தக் குறிப்பிட்ட செயலுக்குண்டான, 'கேள்விக்கான பதில்களே' அன்றி 'ஏனைய நடை முறை செயல்ககளுக்கானது அல்ல...' என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சோழி... வெற்றிலை... சகுனங்கள்... திருஉளச் சீட்டு... என எண்ணற்ற பிரசன்ன முறைகள் இருந்தாலும், எந்த முறையில் கேட்கும் போதும், கேட்கும் 'பரம் பொருள் சக்தியிடம்' பக்தியும்...நமது கேள்வியில் தெளிவும்...இருத்தல் அவசியம். அது போலவே, கிடைக்கும் பதிலின் படி மாறாமல், நடந்து கொள்வதும் அவசியம்.

ஸாய்ராம்.


Wednesday, July 27, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 229. 'தசா... புத்தி... அந்தரம்...'


'தசா' என்பதை 'வாழ்வின் பாதை' எனக் கொள்ளலாம். ஒரு பாதைதான் நமது பயணத்தின் இலக்கை நிர்ணயிக்கிறது. ஆனால், பயணிப்பவர்களின் பயணத்தை அந்த பாதைதான் தீர்மானிக்கிறது.

எத்தனை விதமான பாதைகளில் நாம் பயணித்து வந்திருக்கிறோம் என்பதைச் சற்றுத் திரும்பிப் பார்த்தாலே... நமது பயணத்தின் போக்கு எவ்வாறு இருந்திருக்கிறது என்பது புரியும். கற்களும், முட்களும் நிறைந்த ஒற்றையடிப் பாதை... கால் வழித் தடங்களாலான பாதை... ஒற்றை மாட்டு வண்டி மட்டும் செல்லும் மண் பாதை...தார் சாலை... இருவழித் தார் சாலை... நான்கு வழிப் பாதைகள்... என எண்ணற்ற பாதைகள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், பாதைகளில் மாறி மாறி பயணம் செய்ததுதான். அது எவ்வாறு என்றால், நான்கு வழிப் பாதையில் சொகுசாக பயணித்து, நமது இலக்கின் திசையில் அந்தப் பாதை தொடராத பட்சத்தில் திடீரென கற்களும் முட்களும் நிறைந்த ஒற்றையடிப் பாதைக்கு மாறியதுதான். இதைத்தான், 'வாழ்க்கைப் பாதையில் கிடைத்த அனுபவம்' என்று சொல்கிறோம்.

உதாரணமாக, 'ரிஷப லகனத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு, 'சுக ஸ்தானத்தில்' 4 ஆம் பாவத்தில், 'பரணி நட்சத்திரத்தின் 1 ஆம் பாவத்தில்'. 'சுக்கிர பகவான்' அமர்ந்திருந்தார். இராசியில் வலுத்தும்... அம்சத்தில் 'வர்க்கோத்துமம்' பெற்றும்... பலமாக இருந்த, இந்த 'சுக்கிர பகவானின்' தசா அவரது 61 ஆவது வயதில்தான் வந்தது. தான் படிப்படியாக உருவாக்கிய தொழில் ஸ்தாபனத்தின் மூலம் அமைந்த தனது வாழ்வை, மிகவும் சுகமாக அவர் அனுபவித்தது 64 ஆம் வயதுக்கு மேல்தான்.

அதுவரை, தனது வாழ்வின் முதல் தசாவான 'குரு பகவான்' தசாவின் 'சுக்கிர பகவானின்' புத்திக் காலத்தை பால பருவத்திலும்... 'சனி பகவானின்' தசாவின் 'சுக்கிர பகவானின்' புத்திக் காலத்தை இளமையில், 'தொழில் கல்வியிலும்'... கடின உழைப்பிற்குப் பின் தொடர்ந்த 'புத பகவானின்' தசாவின் 'சுக்கிர புத்திக்' காலத்தை... முதலீடுகளை ஈர்த்து, தொழிலமைப்புக்கான கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டும்...'கேது பகவானின்' தசாவின் 'சுக்கிர பகவானின்' புத்திக் காலத்தில், தனது குடும்பக் கடமைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தார். 

கடந்து வந்த, குரு - சனி - புதன் - கேது பகவான்களின், ஒவ்வொரு தசாவிலும் அவரது பாதைகள் 'சுக்கிர பகவான்' அளிக்கும் சுக வாழ்வான, இலக்கை நோக்கியே அழைத்து வந்தாலும், அவற்றின் பாதைகள் வெவ்வேறு வகைகளில் அமைந்து, அவரது பயணத்தை சில நேரம் சொகுசாகவும்... பல நேரங்களில் கடுமையாகவும்... ஆக்கின என்றால், அவை மிகையாகாது. 

ஆனால், அந்தப் பாதைகளின் பயணத்தில் ஏற்பட்ட 'பல தடங்கல்கள்', ஒவ்வொரு கிரகத்தின், தசாக்களுக்குள் (உதாரணமாக, 'புத பகவானின்' தசா) அடங்கிய ஒவ்வொரு கிரகத்தின் புத்திகளுக்குள் ('செவ்வாய் பகவானின்' புத்தி) அடங்கிய 'சுக்கிர பகவானின் அந்தரக் காலங்களில், நீங்கியது என்றால் அதுவும் மிகையாகாது.

ஆதலால், நமது 'பூர்வ கர்ம வினைகள் அளிக்கும் புண்ணியங்களும்... பாபங்களும்...' ஒரே காலத்தில்;, ஒரே நேரத்தில் அனுபவத்திற்கு வருவதில்லை. படிப் படியான வாழ்க்கைப் பயணத்தின் வழியே, படிப் படியாகத்தான் அனுபவத்திற்கு வருகிறது.

ஸாய்ராம்.


Thursday, July 21, 2022

திருமூலர் அருளிய திருமந்திரம் : ஏழாம் தந்திரம் : சதாசிவ லிங்கம். பாடல் - 1736.

                                                    

'திருமூலர்' அரூளிய எண்ணிக்கையில் அடங்காத பாடல்களில், கைகளில் கிடைத்த 'மூவாயிரம் பாடல்கள்' மட்டுமே, 'திருமந்திரம்' என்கிற தலைப்பில், 'பன்னிரு திருமுறைகளில்', '10 ஆவது திருமுறையாக' தொகுக்கப்பட்டிருக்கிறது.

தான் பெற்ற 'ஆன்ம அனுபவத்தினை', ஒவ்வொரு படிநிலைகளாக, 'ஒன்பது 'தந்திரங்களாக' (இரகசியங்கள்) தான் ஒளி ரூபமாக வாழ்ந்திருந்த மூவாயிரம் வருடங்களில், ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு அனுபவமாக பாடல்களில் வடித்திருக்கிறார்... திருமூலத் தேவர்.

அதில் இந்தக் குறிப்பிட்ட பாடல்... 

....7 ஆம் தந்திரத்தில், 4 ஆவதாக அமையும் 'சதா சிவலிங்கம்' என்ற 'சகஸ்ரத்தை' (ஆறாவது ஆதாரம்), சிரசின் உச்சி ஸ்தானத்தை, 'சதாசிவ ரூபமாக' வடித்து, அதிலிருந்து...'ருத்ரம்' என்ற அக்னியாகவும்'... 'ஈஸ்வரன்' என்ற 'ஜீவ சக்தி வாயுவாகவும்' (ஜீவனின் - சத்துவ குணம்)... வாயுவிலிருந்து 'வியர்வையாக', 'விஷ்ணு' என்ற 'ஜல ரூபமாகவும்' (ஜீவனின் - ரஜோ குணம்)... 'கெட்டிப்படுத்தப்பட்ட ஜடமாக', 'பிரம்மாவாகவும்' (ஜீவனின் - தாமஸ குணம்)... மாற்றமடைந்து விரிவடைகிறது. இந்த விரிவடைந்த 'ஜீவனின் ஐம்புலன்களின்' (பஞ்சேந்திரியங்கள்) வழியாகத்தான், ஜீவனது 'சக்தி' (கர்மேந்திரியங்கள்), 'முக்குணங்களாக' வெளியில் வந்து பிரகாசிக்கிறது... என்பதை, மிகவும் சூட்சுமமாக விளக்குகிறது.

'அஞ்சு முகமுள ஐமூன்று கண்ணுள

அஞ்சுனொடு அஞ்சு கரதலம் தானுள

அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்

நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.'

பொருள் : சதாசிவனாக எங்கும் நிறைந்திருக்கிற பிரபஞ்ச நாயகன், ஒரு உருவைத் தாங்கும் போது, 'கிழக்கு - தெற்கு - மேற்கு - வடக்கு - உச்சி' என ஐந்து திசைகளில் ஐந்து முகங்களாகின்றான். ஒவ்வொரு திசையிலும் அவனது திருமுகத்தில், மூன்று கண்களும் (பதினைந்து...), இரண்டு கரங்களும் (பத்து...) அமைகின்றன. இந்த உடலில் ஐந்து கர்மேந்திரியங்களின் வழியாக, 'முக்குணங்களாக' (சத்துவம் - ராஜ்ஜஸம் - தாமஸம்) வெளிச்செல்லும், அந்த 'ஈஸ்வர சக்தியைக்' (ஜீவனின் கர்மம்) கட்டுப்படுத்தும், 'பஞ்சேந்திர்யங்களை' ஆளும் ஆயுதத்தைத் தரித்திருக்கிற... நம்பியான (சதாசிவன்) எம்பெருமான்தான் என்னுள்ளிலிருந்து அருள்கிறான்'.

திருமூலத் தேவரின் திருவடிகள் சரணம்.

ஸாய்ராம்.


Saturday, July 9, 2022

Sri Sathya Sai Baba : 'About Karma'


 கேள்வி : நமது பிறப்பின் போதே, நாம் அணிந்து கொண்டு வந்திருக்கிற மாலை எது ? அந்த மாலை விளைவிக்கும் சோதனைகளையும்... துயரங்களையும்... நாம் எவ்வாறு எதிர்கொள்வது ?

பகவான் : தனது தாயின் கருவறையிலிருந்து வெளி வருகிற மனிதன், எந்த மாலையையும் அணிந்து கொண்டு வருவதில்லை. முத்துக்களாலான மாலையையோ... பள பளக்கிற தங்க நகைகளையோ... மரகதங்கள், வைரங்கள் பதித்த கழுத்தணியையோ... அணிந்து கொண்டு வரவில்லை. ஆனால், அவனது முன் பிறவிகளில் செய்த செயல்களால் விளைந்த விளைவுகளை ஒவ்வொன்றாகக் கோர்த்து, பிரம்மன்... ஒரு கணமான மாலையாகக் கழுத்தில் அணிவித்துவிடுகிறான். அதனால்தான், நமது முன் வினைகளின் விளைவுகள் நம்மை துரத்திக் கொன்டே வருகின்றன. பக்கோடாவை  சாப்பிட்டிருந்தீர்களே ஆனால், அதற்குப் பின் வரும் ஏப்பத்தில் பக்கோடாவின் வாசனைதான் இருக்கும். அதுபோலத்தான், உங்களது கடந்த கால கர்மாவை ஒட்டியே தற்போதைய வாழ்வும் அமைந்து விடும். ஆதலால்தான் நமது செயல்கள் நன்மையை விளைவிப்பவையாகவே இருக்க வேண்டும். நன்மையை விளைவிக்கும் செயல்களைச் செய்வதற்கு, முதலில் இறைவன் மேல் அன்பைச் செலுத்த வேண்டும். இரண்டாவதாக பாபச் செய்லகளை செய்வதற்கு பயப்பட வேண்டும். இறுதியாக நாம் வாழுகின்ற சமூகத்தில் ஒழுக்க நெறியுடன் வாழ வேண்டும். இந்த மூன்றையும் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், புதிய கர்ம வினைகளை சேர்த்துக் கொள்ளாமல் இருக்க முடியும். கடவுளின் மீதான அன்பு - பாபச் செயல்களைத் தவிர்த்தல் - ஒழுக்கம், இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகள். இவைகளைக் கடைப் பிடிப்பதற்கு, இறைவனின் மீதான பக்தி... நமக்கு பேறுதவியைச் செய்கிறது.

பகவான் சத்ய சாய் பாபா.

(Divine Discourse, July 20. 2009. தமிழாக்கம்... அடியேன்)

ஸாய்ராம்.


Thursday, July 7, 2022

Bhagavan Sathya Sai Baba : 'About Gita"


கேள்வி : 'சாதனைகளுக்கு அடிப்படையாக இருப்பது எது ?'

பகவான் : நினைத்துப் பாருங்கள்...! எந்த அளவு கவனத்துடன் அர்ஜுனன்,கீதையைக் கேட்டிருக்க வேண்டும் ? அர்ஜுனனது கவனம், பிருந்தாவனத்து கோபியர்கள், கண்ணனின் குழலிசைக்கு  இசைந்திருப்பதைப் போன்றதாகும். தனக்கு எதிராக அணிவகுத்து நிற்கும் எதிரிகள்... அவர்களின் மீது இருந்த வெறுப்பு... போரின் மீது இருந்த ஆர்வம்... என்பவை அனைத்தையும் மறந்து, பகவானின் உபதேசத்திலேயே மூழ்கியிருந்தான் அர்ஜுனன்.  

நாமும் அதே போன்ற ஒருமுகப்பட்ட கவனத்தை வளர்த்துக் கொள்ளும் போது, நமது போராட்டமான வாழ்க்கைக்கு மத்தியிலும், நம்மால் கீதையைக் கவனித்துக் கேட்க முடியும். கீதை, அர்ஜுனனின் அறியாமைய நீக்கி அவனது மயக்கத்தைத் தெளிவித்தது. ஆனால், கீதையைக் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சயனுக்கோ... திருதிருஷ்டரனுக்கோ... அவர்களது அறியாமையினால், கீதையிலிருந்து பயன்களைப் பெறமுடியாது போனது. 

எண்ணற்றவர்கள் கீதையைப் படிக்கிறார்கள். வெகு சிலரே அதன் பயனை அடைகிறார்கள். அர்ஜுனனுக்கு இருந்த பற்றற்ற மனப்பான்மையும்... ஒருமுகப்பட்ட கவனமும்...நமக்கு இருந்தால், நம்மாலும் கிதையின் பயனைப் பெறமுடியும். இதற்குத் தூய்மையான மனமும்... வலிமையான எண்ணங்களும் அவசியமாகின்றன.'

பகவான் சத்ய சாயி பாபா.

(Divine Discourse, Sep 27, 1960. தமிழாக்கம்... அடியேன்)

ஸாய்ராம்.


Saturday, July 2, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் பகுதி - 228. 'இராசியின் அமைப்பு உணர்த்தும் சூட்சுமம்...' பாகம் - 5.


'பூர்வ புண்ணியம்' என்ற 5 ஆம் பாவமும்... 'ஜீவனம்' (கர்மா) என்ற 10 ஆம் பாவமும் :

இராசிச் சக்கரத்தில் 5 ஆம் பாவம்... 'பூர்வ புண்ணியம்' என்ற ஜீவனின், இந்த வாழ்க்கைக்கான 'கர்ம வினைகளின் தொகுப்பை' உள்ளடக்கியிருக்கிறது. இந்த வினைகள்தான்... ஜீவனின் வாழ்வை, அதன் ஜனனம் முதல் மரண பரியந்தம் வழி நடத்துகிறது. இன்பங்களையும் - துன்பங்களையும்... மாறி மாறி அளிக்கும் இந்த வினைகளை, ஜீவன் அனுபவித்துத்தான் கடந்து போக வேண்டும்.

இந்த வினைகளைதான்... ஜீவனது வாழ்வில், அது எதிர்கொள்ளும் செய்லகளாகவும்... அது மேற்கொள்ளும் செயல்களாகவும்... கடலின் அலைகள் போல ஜீவன் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப செயலாற்றும் ஜீவனின் 'செயல்களைத்தான்' (கடமைகள்(... 10 ஆம் பாவமான 'ஜீவன ஸ்தானம்' வெளிப்படுத்துகிறது.

ஆகவேதான், பூர்வ புண்ணிய (5 ஆம் பாவம்) பாவத்திற்கு,  6 ஆம் பாவமாக, 'ஜீவன பாவம்' (10 ஆம் பாவம்) அமைந்திருக்கிறது. இதுதான், நமது பூர்வ புண்ணியமே... சத்ருவாகவும் - ரோகமாகவும் - எதிர்ப்புகளாகவும், நம்மை வந்து சேருகின்றன... என்பதற்கு ஆதாரமாகும்.

மேலும், தாமாக... தமது கடமைகளையும் கடந்து... வலிந்து செய்யும் செய்லகளினால் விளையும் விளைவுகளையும், ஜீவன் அனுபவித்தே தீர வேண்டும்... என்ற உண்மையைத்தான், 'ஜீவன் பாவத்திற்கு' (10 ஆம் பாவம்) 8 ஆம் பாவமாக அமையும் 'பூர்வ புண்ணிய பாவம் (5 ஆம் பாவம்) நமக்கு உணர்த்துகிறது.

ஸாய்ராம்.


Bhaghavan Sathya Sai Baba. Divine Discourse, Dec 20, 1958. (தமிழாக்கம்... அடியேன்)


பக்தர் : மனதையும்... அறிவையும்... அதன் இலக்கான இறைவனிடம் கொண்டு சேர்க்க என்ன விதமான பயிற்சிகளை அளிக்க வேண்டும்...?

பகவான் : இறைவனை நோக்கிய புனித பயணம்தான் வாழ்க்கை. அந்த புனித இடம் வெகு தொலைவில் இருக்கிறது. ஆனால், அதன் துவக்கப் பாதை உன் எதிரில்தான் இருக்கிறது. அதில் நீ பயணிக்க ஆரம்பிக்காமல் எவ்வாறு அதன் இலக்கை சென்று அடைய முடியும் ? தைர்யமாகவும், நம்பிக்கையோடும், நிதானத்தோடும், மகிழ்வோடும், உன் பயணத்தை துவக்கினால் வெற்றி நிச்சயம்.

நமது உள்ளிருக்கும் ஜீவாத்மாவுக்கு, மனமும் - அறிவும், வண்டியில் பூட்டப்பட்டுள்ள இரண்டு எருதுகள் போன்றவைகள். இந்த எருதுகளுக்கு உண்மை... அன்பு... அமைதி என்ற பாதை மிகவும் புதிதானது. அதனால்தான் அதன் வழக்கமான பொய்மை... அநீதி... கவலை... வெறுப்பு என்ற, அதன் வழக்கமான பாதைக்கே, வண்டியை இழுத்துச் செல்கிறது. நாம்தான் அதற்கு சரியான பயிற்சியைக் கொடுத்து, நல்ல பாதையில் பயணிக்க வைக்க வேண்டும். அந்த பாதையில் செல்லும் போதுதான் தங்களுக்கும்... வண்டிக்கும்... அதை செலுத்தும் ஜீவாத்மாவுக்கும்... அழிவு ஏற்படாமல் பாதுகாக்க முடியும். 

உங்களது குழந்தை உங்களொடு விளையாடும் போது, அது உங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் அதே குழந்தை, உங்களது வேலைகளுக்கு இடையூராக வரும் போது, அது உங்களுக்கு கோபத்தை வரவழைக்கிறாது. எங்கு இன்பம் இருக்கிறதோ, அங்கேதான் துயரமும் இருக்கிறது. 

இந்த உலக வாழ்வில் எதுவுமே உங்களுக்கு இடைவிடாத மகிழ்ச்சியை கொடுத்து விட முடியாது. அவ்வாறு ஏதேனும் இருப்பினும் முடிவில் அது உங்களுக்குத் துயரத்தைத்தான் அளிக்கும். எப்போதெல்லாம் மனதைக் கட்டுப் படுத்தவும், பயிற்றுவிக்கவும் செய்கிறோமோ... அப்போதெல்லாம் மனம் அதற்கு எதிராக போராட ஆரம்பிக்கிறது. இதை அறிந்து கொள்வதுதான் உண்மையான அறிவாக இருக்கமுடியும்..

ஸாய்ராம்.


Friday, July 1, 2022

Our joy does not come from circumstances... Joyce Mayer. (தமிழாக்கம்... அடியேன்)


நமது மகிழ்ச்சி, நமது சூழ்நிலைகளால் வருவதில்லை. வாழ்வில் எது நடந்தாலும், அதை நாம் ஆக்கப்பூர்வமான மனப்பான்மையோடு எதிர்கொள்ள வேண்டும். நமது மனதை, எதிர் வரும் காலத்தோடு இணைத்து விட வேண்டும். எது நேரினும் அதை மகிழ்வோடு எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். 

இறைவன் நேர்மையானவர்... ஆக்கப் பூர்வமானவர்... அந்த மனப்பான்மையுடனேயே,  நாமும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளையும், உற்சாகத்துடன், இன்று ஏதாவது ஒரு நன்மை நடக்கப் போகிறது... என்ற நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேன்டும். நம்மை பின்னுக்கு இழுக்கப் பார்க்கும் நமது 'வினைகளிடம்', நாம் சப்தமாக சொல்ல வேண்டியது, 'என்னை பின்னால் இழுக்க... உன்னை நான் விடமாட்டேன் !'. 

எல்லாவற்றிற்குள்ளும்... ஒரு நன்மை இருக்கிறது. அதை நாம் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவுக்கு... எவ்வளவு ஆக்கப்பூர்வமான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறோமோ... அந்த நொடியிலிருந்தே... நாம், நமது வாழ்வின் ஆனந்தத்தை உணர ஆரம்பிக்கிறோம்.

நமது பலமான எண்ணம் இவ்வாறாக இருக்க வேண்டும் : 'நான், இனி எப்போதும், ஆக்கப்பூர்வமான... தோற்கடிக்கப்பட முடியாத... உற்சாகமுள்ள... ஆர்வமான மனப்பான்மையுடனேயே... இனிவரும் எல்லா சூழல்களையும் எதிர் கொள்ளப் போகிறேன்.

ஜாய்ஸ் மேயர்.

ஸாய்ராம்.

                                  

'Talks with Sri Ramana Mahirishi' Talk 80. (தமிழாக்கம்.... அடியேன்)


'நான் பிறந்திருக்கிறேன்... என்ற நினைவு இருக்கும் வரை மரண பயத்திலிருந்து விடுதலை பெற முடியாது. நான் என்ற உடல் பிறந்திருக்கிறதா ? அல்லது 'தான்' என்ற உணர்வு பிறந்திருக்கிறதா ? என்று, அவன் ஆய்ந்தறியும் போது, தான் என்ற உணர்வு எப்போதும், நிலைபெற்று இருப்பதை கண்டறிவான்.' 

'மேலும், உடல்தான் பிறந்திருக்கிறது என்பதையும், அது எண்ணங்களை உற்பத்தி செய்வதையும், அந்த எண்ணங்களே இவ்வாறான ஜனன - மரண விளையாட்டுகளுக்கு ஆதாரமாக இருப்பதையும் அறிந்து கொள்கிறான். தொடர்ந்து, அந்த எண்ணங்கள் எங்கிருந்து உற்பத்தியாகிறது... என்று ஆய்ந்து கொண்டே போனால், அது எப்போதும், நிலைத்திருக்கிற 'தான்' என்ற உள் உணர்வில் கொண்டு போய் சேர்க்கும். அந்த உணர்வில் நிலைத்து இருக்கும் போது, பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய பயம் நீங்கி விடுவதை உணர்கிறான்.'

ஓம் பகவதே ரமணாய நமஹ.

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...