'தசா' என்பதை 'வாழ்வின் பாதை' எனக் கொள்ளலாம். ஒரு பாதைதான் நமது பயணத்தின் இலக்கை நிர்ணயிக்கிறது. ஆனால், பயணிப்பவர்களின் பயணத்தை அந்த பாதைதான் தீர்மானிக்கிறது.
எத்தனை விதமான பாதைகளில் நாம் பயணித்து வந்திருக்கிறோம் என்பதைச் சற்றுத் திரும்பிப் பார்த்தாலே... நமது பயணத்தின் போக்கு எவ்வாறு இருந்திருக்கிறது என்பது புரியும். கற்களும், முட்களும் நிறைந்த ஒற்றையடிப் பாதை... கால் வழித் தடங்களாலான பாதை... ஒற்றை மாட்டு வண்டி மட்டும் செல்லும் மண் பாதை...தார் சாலை... இருவழித் தார் சாலை... நான்கு வழிப் பாதைகள்... என எண்ணற்ற பாதைகள்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், பாதைகளில் மாறி மாறி பயணம் செய்ததுதான். அது எவ்வாறு என்றால், நான்கு வழிப் பாதையில் சொகுசாக பயணித்து, நமது இலக்கின் திசையில் அந்தப் பாதை தொடராத பட்சத்தில் திடீரென கற்களும் முட்களும் நிறைந்த ஒற்றையடிப் பாதைக்கு மாறியதுதான். இதைத்தான், 'வாழ்க்கைப் பாதையில் கிடைத்த அனுபவம்' என்று சொல்கிறோம்.
உதாரணமாக, 'ரிஷப லகனத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு, 'சுக ஸ்தானத்தில்' 4 ஆம் பாவத்தில், 'பரணி நட்சத்திரத்தின் 1 ஆம் பாவத்தில்'. 'சுக்கிர பகவான்' அமர்ந்திருந்தார். இராசியில் வலுத்தும்... அம்சத்தில் 'வர்க்கோத்துமம்' பெற்றும்... பலமாக இருந்த, இந்த 'சுக்கிர பகவானின்' தசா அவரது 61 ஆவது வயதில்தான் வந்தது. தான் படிப்படியாக உருவாக்கிய தொழில் ஸ்தாபனத்தின் மூலம் அமைந்த தனது வாழ்வை, மிகவும் சுகமாக அவர் அனுபவித்தது 64 ஆம் வயதுக்கு மேல்தான்.
அதுவரை, தனது வாழ்வின் முதல் தசாவான 'குரு பகவான்' தசாவின் 'சுக்கிர பகவானின்' புத்திக் காலத்தை பால பருவத்திலும்... 'சனி பகவானின்' தசாவின் 'சுக்கிர பகவானின்' புத்திக் காலத்தை இளமையில், 'தொழில் கல்வியிலும்'... கடின உழைப்பிற்குப் பின் தொடர்ந்த 'புத பகவானின்' தசாவின் 'சுக்கிர புத்திக்' காலத்தை... முதலீடுகளை ஈர்த்து, தொழிலமைப்புக்கான கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டும்...'கேது பகவானின்' தசாவின் 'சுக்கிர பகவானின்' புத்திக் காலத்தில், தனது குடும்பக் கடமைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தார்.
கடந்து வந்த, குரு - சனி - புதன் - கேது பகவான்களின், ஒவ்வொரு தசாவிலும் அவரது பாதைகள் 'சுக்கிர பகவான்' அளிக்கும் சுக வாழ்வான, இலக்கை நோக்கியே அழைத்து வந்தாலும், அவற்றின் பாதைகள் வெவ்வேறு வகைகளில் அமைந்து, அவரது பயணத்தை சில நேரம் சொகுசாகவும்... பல நேரங்களில் கடுமையாகவும்... ஆக்கின என்றால், அவை மிகையாகாது.
ஆனால், அந்தப் பாதைகளின் பயணத்தில் ஏற்பட்ட 'பல தடங்கல்கள்', ஒவ்வொரு கிரகத்தின், தசாக்களுக்குள் (உதாரணமாக, 'புத பகவானின்' தசா) அடங்கிய ஒவ்வொரு கிரகத்தின் புத்திகளுக்குள் ('செவ்வாய் பகவானின்' புத்தி) அடங்கிய 'சுக்கிர பகவானின் அந்தரக் காலங்களில், நீங்கியது என்றால் அதுவும் மிகையாகாது.
ஆதலால், நமது 'பூர்வ கர்ம வினைகள் அளிக்கும் புண்ணியங்களும்... பாபங்களும்...' ஒரே காலத்தில்;, ஒரே நேரத்தில் அனுபவத்திற்கு வருவதில்லை. படிப் படியான வாழ்க்கைப் பயணத்தின் வழியே, படிப் படியாகத்தான் அனுபவத்திற்கு வருகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment