Thursday, October 31, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 25. காரகத்துவங்களும், ஆதிபத்தியங்களும் ; பகுதி 2.

ஜோதிடமும் அதன் சூட்ச்சுமங்களும் - பகுதி 25.

காரகத்துவங்களும், ஆதிபத்தியங்களும் ; பகுதி 2.




ஒரு ஜோதிடச் சித்தரத்தில்... 'காரகத்துவமும், ஆதிபத்தியமும்' எவ்வாறு அமைகிறது... என்பதை பார்க்கலாம்.

ஒரு இராசி சக்கரத்தில் 'லக்னத்தை' முதலாகக் கொண்டு அதை வடிவமைக்கிறோம். அது அந்த ஜீவனின் ஜனனத்தைக் குறிக்கும் இடமாகிறது. அது 'லக்ன பா(B)வமாகிறது'. அதிலிருந்து படிப்படியாக குடும்ப பாவம், சகோதர பாவம்... எனக் கடந்து மோக்ஷ பாவம் வரை நீடிக்கிறது.

இந்த பா(B)வங்களைத்தான்... 'காரகத்துவங்கள்' ஆளுமை செய்கின்றன.

உதாரணமாக... இரண்டாம் பாவமான... 'குடும்ப பாவத்தை', 'குரு பகவான்' ஆளுமை செய்கிறார். 'குடும்ப பாவம்' என்பது ஒரு ஜீவன்... தான் பிறந்த குடும்பத்திடமிருந்து அனுபவிக்கும் 'அனுபவங்களையும்... பெரும் 'பாக்கியங்களையும்'... தான் தன் குடும்பத்திற்கு அளிக்கும் 'பங்களிப்புகளையும்'... சுட்டிக் காட்டுகிறது.

இந்த இரண்டாம் பாவம்... அதன் 'ஸ்தானாதிபதியைக்' கொண்டே ஆட்சி செய்யப் படுகிறது. இந்த பாவத்திற்கு பொறுப்பேற்பவராக, 'குரு பகவான்' இருந்தாலும்... அந்த பொறுப்புகளை... இந்த ஜீவனின் பிறப்பின் 'கர்ம வினைச் சூழல்களுக்கு' ஏற்ப வழி நடத்துபவராக... அந்த ஸ்தானாதிபதி அமைகிறார். ஆகவே. அந்த ஸ்தானாதிபதியைத்தான்... 'ஆதிபத்தியத்திற்கு உரியவர்' என்று அழக்கிறோம்.

எனவே... இரண்டாம் பாவத்திற்கு 'குரு பகவான்' பாவாதிபதியாகி... 'காரகத்துவராக' அமைகிறார். அந்த 'ஸ்தானாதிபதி'... 'ஆதிபத்தியத்திற்கு உரியவராக' அமைகிறார்.

இந்த 'காரகத்துவத்தையும்... ஆதிபத்தியத்தையும்' கொண்டு ஒரு ஜாதகத்திற்கு பலனறிய முற்படும் போது... இதில் அமைந்திருக்கும் 'சூட்சுமங்களை' அறிந்து கொள்வது அவசியம்.

எண்ணற்ற சூட்சுமங்களை தன்னகத்தே அடக்கிக் கொண்டுள்ள ஜோதிடக் கலையில்... இந்த காரகத்துவத்திற்கும்... ஆதிபத்தியங்களுக்குமான பலனறியும் சூட்சுமம் ஒன்றைப் பார்க்கலாம்...

சூட்சுமம் 1 : காரகத்துவத்திற்கான கிரகங்கள் அந்தந்த காரகத்தில் நிற்பது...                                     'காரகோப நாஸ்தியாவதற்கு' வழி வகுக்கும்.

உதரணமாக... இரண்டாம் பாவமான 'குடும்ப பாவத்தில்' குடும்பக்காரகரான 'குரு பகவான்' தனித்து அமையும் போது 'காரகோப நாஸ்தியாகிறார்'.

சூட்சுமம் 2 : ஆதிபத்தியங்கள், மாரகத்துவத்துக்கும்... பாதகத்துவத்துக்கும்                                        கட்டுப் பட்டவைகள்.

உதாரணமாக... 'ஸ்திர லக்னமான' மகர லக்னத்திற்கு... இரண்டாம் ஸ்தானமும்... ஏழாம் ஸ்தானமும்... 'இரு மாராகாதிபதிகளாகிறார்கள்'. அது போல பதினோராம் ஸ்தானம்... பாதக ஸ்தானமாகிறது.

இந்த சூட்சுமங்களைக் கொண்டு... உதாரண ஜாதக அமைவுகளின் மூலமாக... தொடர்ந்து ஆராய்வதற்கு முயற்சிப்போம்... இறைவனின் அருளால்...

ஸாய்ராம்.

Tuesday, October 29, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 24. காரகத்துவங்களும், ஆதிபத்தியங்களும் ; பகுதி 1.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 24. 

காரகத்துவங்களும், ஆதிபத்தியங்களும் ; பகுதி 1.





வேதத்தின் அங்கமான 'ஜோதிடக் கலையின்' நோக்கம், ஒரு ஜீவனின் வாழ்வின் இலக்கை... அந்த ஜீவனுக்குச் சுட்டிக் காட்டி... அதன் 'கர்ம வினைகளை'... அந்த ஜீவன் தனது கடமைகளாக... பற்றற்று கடந்து சென்று... 'மீண்டும் பிறவாமை' என்ற முக்தி நிலையை அடைவதற்கான வழி முறையைக் காட்டுவதுதான்.

'சூரிய பகவானை' ஆதாரமாகக் கொண்டு, சுழன்று கொண்டிருக்கும் கிரகங்களையும்... ஒரு ஜீவனின் 'கர்ம வினைகளையும், அதைக் களைந்து விடும் ஞானத்தையும்' அளிக்கும் 'ராகு - கேது பகவான்களையும்'... அந்த ஜீவன் பிறக்கும் க்ஷணத்தில்... இவை கடந்து செல்லும் நட்சத்திரங்களின் 108 பாதங்களின் வழியாக... ஒரு இராசிக் கட்டத்தில் பதிவு செய்து... அந்த க்ஷணத்தை ஆளும் நட்சத்திரத்தின் வழியாக... அந்த ஜீவனின் 'தசா' என்ற வாழ்க்கைப் பாதையையும் சுட்டிக் காட்டி... அதன் வழியாக அந்த 'ஜீவனின் வாழ்வு இரகசியத்தை' அறிந்து கொள்ளும் கலைதான் ஜோதிடம்.

'சூரிய பகவான்' உட்பட்ட 'சந்திர பகவான், செவ்வாய் பகவான், புத பகவான், குரு பகவான், சுக்கிர பகவான், சனி பகவானுடன்'... நிழல் கிரகங்கள் என வருணிக்கப் படும் 'ராகு - கேது பகவான்களை' கொண்ட ஜோதிடக் கலையில்... ஒவ்வொரு கிரகத்திற்குமான 'குண நலன்களை'... 'காரகத்துவமாகவும்'... அந்தக் கிரகங்கள்... அந்த ஜீவனின் 'கர்ம வினைகளுக்கு' ஏற்ப ஏற்றுக் கொள்ளும் 'பொறுப்புகளை'... 'ஆதிபத்தியங்களாகவும்' வகைப் படுத்துகிறோம்.

'காரகத்துவங்கள்'... குணங்களாகிறது. 'ஆதிபத்தியங்கள்'... 'பொறுப்புகளாகிறது.

கிரகங்களின் காரகத்துவங்கள் : 

இது, கிரகங்களின் தனித் தன்மைகளை வெளிப்படுத்துவது...

சூரிய பகவான் - பிதுர் காரகன்
சந்திர பகவான் - மாதுர் காரகன்
செவ்வாய் பகவான் - சகோதரக் காரகன் / பூமிக்காரகன்
புத பகவான் - புத்திக் காரகன்
குரு பகவான் - குடும்பக் காரகன் / புத்திரக் காரகன் / பூர்வ புண்ணியக் காரகன்
சுக்கிர பகவான் - களத்திரக் காரகன்
சனி பகவான் - ஆயுள் காரகன்
ராகு பகவான் - தந்தை வழி முன்னோர் காரகன் / கர்மவினைக் காரகன்
கேது பகவான் - தாய் வழி முன்னோர் காரகன் / மோக்ஷக் காரகன்

கிரகங்களின் ஆதிபத்தியங்கள் :

இது, கிரகங்கள்... அந்த ஜீவனின் 'ஜோதிடச் சித்திரத்தில்'... லக்னம் முதல் 12 ஆமிடமான மோக்ஷ ஸ்தானம் வரையிலான ஸ்தானங்களில்... அவை ஏற்றுக் கொள்ளும் பொறுப்புகள்.

ஸ்தானங்கள் :

1 ஆமிடமான லக்னம் - ஜீவனின் உயிர்.
2 ஆமிடம் - குடும்பம்-வாக்கு-தனம்
3 ஆமிடம் - தைர்யம்-இளைய சகோதரம்
4 ஆமிடம் - தாய்-சுகம்-வீடு-வாகனம்
5 ஆமிடம் - புத்திரம்-பூர்வம்
6 அமிடம் - ருண-ரோக-சத்ரு
7 ஆமிடம் - இணை-துணை
8 அமிடம் - ஆயுள்
9 அமிடம் - தந்தை-பாக்கியம்-தர்மம்
10 ஆமிடம் - ஜீவனம்
11 ஆமிடம் - லாபம்-மூத்த சகோதரம்
12 ஆமிடம் - விரயம்-மோக்ஷம்-சுகம்-சயனம்

இந்த... காரகத்துவங்களின் மூலமாகவும்... அவை அமையும் ஆதிபத்தியங்கள் மூலமாகவும்... கிரகங்கள் எவ்வாறு... அந்த ஜீவனின் வாழ்வின் நிலைகளை வெளிப்படுத்துகிறது என்பதை... தொடரும் பகுதிகளில் காண்போம்... இறைவனின் அருளால்...

ஸாய்ராம்.

Wednesday, October 23, 2019

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 6 - காஞ்சி மஹா பெரியவர்.

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 6 - காஞ்சி மஹா பெரியவர்.





இந்த 'சனாதன தர்மம்' எப்போதெல்லாம் ஒருதொய்வை அடைகிறதோ... அப்போதெல்லாம்... அந்த 'பரம் பொருளே'', ஒரு உருவம் தாங்கி... ஒரு அவதாரமாக இந்த மண்ணில் இறங்கி... மீண்டும் இந்த தர்மத்தை நிலைநாட்டியிருக்கிறது. இதற்கு... இந்த பாரத மண்ணில், யுகங்கள் தோறும் அவதரித்த 'மகான்களே' சாட்சி...!

காலடி என்ற மிக்ச் சிறிய கேரளத்து கிராமத்தில்... அந்த ஆதிசிவனே... 'ஆதி சங்கரராக' அவதரித்தார். இவரது ஆயுள் காலம் வெறும் 32 தான். ஆனால் ஆற்றிய தொண்டுகளோ... ஆண்டுகளைக் கொண்டு அளவிடமுடியாததாகும்.

* இந்த பாரத தேசத்தை... தனது கால்நடையாக மூன்று முறை வலம் வந்தவர்.

* இறையின் பேரருள் ஒரே சக்தியாகத்தான் இருக்கிறது என்ற 'அத்வைத'                    சித்தாந்தத்தை நிறுவியவர்.

* இந்த சனாதன தர்மத்தைக் கடைபிடிப்பவர்களின் மனோ நிலைகளை                          உணர்ந்து அதற்கேற்ப... ஆறு வகையான வழிபாட்டு முறைகளை...                          ஷண்மதங்களாக வகைப்படுத்தியவர்.

* பத்ரி, துவாரகா, சிருங்கேரி, பூரி, ஆகிய பரந்த பாரத தேசத்தில்... நான்கு                       திசைகளுக்குமாக 'ஸ்ரீ மடத்தை' நிறுவி... அதன் தலைமை பிடமாக                        'காஞ்சி பீடத்தை' அமைத்தவர்.

அந்த புரதாண 'காஞ்சி பீடத்தின்' 68 ஆவது பீடாதிபதியாக... தனது 13 ஆவது வயதில் பொறுப்பேற்றுக் கொண்டவர்தான்... 'சுவாமிநாதன்' என்ற பூர்வாசிரமப் பெயர் கொண்ட...'சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமிகள்' என்ற 'காஞ்சிப் பெரியவர்'.

32 ஆண்டுகளில் 'ஆதிசங்கரர்' ஆற்றிய பெரும் தொண்டுகளை... தனது நூறு வயது வரையிலான முழுமையான ஆண்டுகளில்... ஒரு க்ஷணமும் ஓய்வெடுக்காமல்... பலமுறை இந்த பாரத தேசத்தை தனது கால்களால் வலம் வந்து விரிவு படுத்தியத் தெய்வத் துறவி... 'காஞ்சி முனிவர்'.

மஹா யோகீஸ்வரராக... அந்தர் ஞானம் பெற்ற ஞானியாக... உயர் தபஸ்வியாக... சதா நேரமும் நாம ஜபம் செய்த துறவியாக... ஒவ்வொரு நொடியும் 'சகஜ சமாதி நிலையில்' திளைத்த உயர் யோக சாதகராக... இருந்தாலும்... ஒரு 'புரதாண மடத்திற்கு' அதிபதியாக தனது கடமைகளை ஆற்றிய செம்மை... என்றும் போற்றுதலுக்குறியது.

பாரத தேசத்தில் பரந்து விரிந்திருந்த 'ஸ்ரீ மடத்தின்' நிர்வாகத்தினை எந்தத் தொய்வும் வராமல் நிர்வகித்த பெருமை இவரைச் சாரும். மடத்தின் 'நிர்வாகிகளை' எப்போதும் ஒரு 'திகில்' நிலையிலேயே வைத்திருப்பதுதான் இவரின் நிர்வாக சாதூர்யம்.

மடத்தின் கைங்கர்யங்களுக்கு எவரேனும் ஒரு பெரும் உதவி செய்ய நிர்வாகிகளை அணுகினால்... நிர்வாகிகள் ஒப்புதலுக்காக இவரிடம் வரும் போது... இவர் கேட்கும் கேள்வி... 'இப்போது ஏதேனும் கைங்கர்யம் நடைமுறையில் உள்ளதா...? அதற்கான வாய்ப்பு வரும் போது... அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்...!' என்பதாகத்தான் இருக்கும். அது போல வாய்ப்புகள் வரும் போது... அவர்களை ஞாபகப் படுத்தி... வரவழைத்து... அந்த கைங்கர்யத்திற்கான பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படைப்பார்.

எப்போதும் பற்றாக்குறையிலேயே... நிர்வாகத்தை வைத்திருப்பார். 'எப்போது தேவையோ... அப்போது 'காமாட்சி' வழிகாட்டுவாள்...!' என்பதுதான்... அவர் நிர்வாகிகளுக்குக் காட்டிய பக்தியின் வழி முறை.

'ஸ்ரீ மடம்' எப்போதும் எளியவர்களுக்கான புகழிடம்... என்பதாகத்தான் அவர் காலத்தில் திகழ்ந்தது. வைதீக முறைகளின் வழிகாட்டுதலுக்கும்... சனாதன தர்மத்தைக் காக்கும் வழி வகைகளுக்கும்... வேதங்களின் புனிதத்துவம் காப்பதற்கும்... இந்த மடங்களின் நிர்வாகத்தை நடத்தினாலும்... தனது 'தவ வாழ்வு' என்றும் மாறாதவாறு... 'தாமரை இலைத் தண்ணீராகத்' திகழ்ந்தது... இந்த மகானின் வாழ்வு.

இதுதான்... இந்த மகா முனிவருக்கும்... மடத்திற்குமான தொடர்பு.

ஸாய்ராம்.

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 5 - பகவான் ஸ்ரீ ராகவேந்திரர்.

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 5. - பகவான் ஸ்ரீ ராகவேந்திரர்.




ஜீவ இரகசியங்கள் நிறைந்திருக்கும் 'நடராஜர் ஸ்தலம்' அமைந்த சிதம்பரத்திற்கு அருகில் இருக்கும் புவனகிரியில்... 'வேங்கடநாதன்' என்ற நாமகரணத்துடன்... அவதாரம் செய்தவர்... 'ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்வாமிகள்'.

சங்கு கர்ணன்... பிரஹலாதன்... பாஹ்லீகன்... வியாஸராஜர்... என்ற அவதாரங்களின் தொடர்ச்சியாகத்தான், ஸ்ரீ ராகவேந்திரரின் அவதாரமும் நிகழ்ந்தது.


கன்னட தேசத்து பிராமணர்கள் குலத்தில் அவதரித்த இந்த மஹான்... தமது குலத்திற்கு ஒப்ப... திருவேங்கடநாதனையும்... அவரின் அருளால் 'மத்வ மஹான்' நிறுவிய 'மத்வ மடத்தின்' வழியேயான 'ஸ்ரீ ராம பகவானின்' பக்தியிலும் திளைத்து மகிழ்ந்திருந்தார்.


ஆஞ்சநேயர்... பீமன்... என்ற அவதாரங்களின் தொடர்ச்சியான... அவதாரம்தான் 'மத்வரின்' அவதாரம். ஸ்ரீ இராம பக்தியிலும்... ஸ்ரீ கிருஷ்ண பக்தியிலும் திளைத்திருந்த இந்த மஹானின் பக்திக்கு இணங்கி... பகவான் ஸ்ரீ இராமர் இன்றும் 'மூல இராமராக'... அவர் ஸ்தாபித்த 'மத்வ மடத்தில்' அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ கிருஷ்ண பகவானோ... ஸ்ரீ மத்வ மகானின் பக்திக்கு இணங்கி... ஒரு படகின் 'பாரச்சுமைக்குள்' இருந்து வெளிப்பட்டு... 'ஆ நிறை மேய்க்கும் கண்ணனாக' 'உடுப்பி மஹா ஷேத்திரத்தில்'... இந்த மகானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு... பக்தர்களால் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

'ஸ்ரீ சுதீந்திர தீர்த்தருக்கு' அடுத்த பீடாதிபதியாக... இந்த 'மத்வ மடத்தின் பீடாதிபதியாக'... அவரால் பட்டம் சூட்டப் பட்டார்... வேங்கடநாதன் என்ற பூர்வாஸ்ரமப் பெயர் கொண்ட... 'ஸ்ரீ ராகவேந்திரர்'.

மிகப் புகழ் பெற்ற... மத்வ மடம்... அதன் பிரதான காரியங்களாக, வேதத்தை இரட்சிப்பது... அதை ஓதுவது மற்றும் ஓதுவிப்பதான கடமைகளை விரிவாக்கம் செய்தது. அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்ப... நலிந்தவர்களுக்கான உதவிகளுக்கும்... ஆன்மீக முன்னேற்றத்திற்கான பக்தி ஒழுக்கத்திற்கும்... பூஜா நியமங்களுக்கும்... பசிப்பிணியை நீக்கும் தர்ம சாலைகளுக்கும்... முக்கியத்துவத்தைக் கொடுத்தது.

அந்த புகழ் பெற்ற 'மத்வ மடத்திற்கு' பொறுப்பேற்ற 'ஸ்ரீ ராகவேந்திரர்'... பக்தி நெறியில் திளைத்திருந்த பக்தர்களுக்கு... அருள் பரப்பும் காமதேனுவாக... கற்பக விருட்சமாக திகழ்ந்தார். அற்புதங்கள் நிகழ்த்தும், மத்வ பிடாதிபதிகளின் வரிசையில்... தானும் ஒரு 'அற்புத சித்தராக' விளங்கினார்.

தன்னுடைய காலத்திலேயே... தனக்கு அடுத்து வரும்  பீடாதிபதிக்கு வழிவிட்டு... பகவானின் அழைப்பு இணங்கி... 'ஜீவ சமாதி' என்னும் மிக உயர் நிலை சமாதியை... 'மந்த்ராலயம்' என்னும்... இன்றைய ஆந்திரப் பிரதேச எல்லையில் அமைந்த புண்ணியப் பிரதேசத்தில், அடைந்து... பிருந்தாவனஸ்தரானார்.

இதுதான்... இந்த மஹானுக்கும்... இவரமர்ந்த ஆசிரமத்திற்கும் இடையேயான தொடர்பு.

ஸாய்ராம்.

Tuesday, October 22, 2019

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 4 - அருள் பிரகாச வள்ளளார்.

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 4 - அருள் பிரகாச வள்ளளார்.




ஆன்மீகப் புகழ் கொண்ட... ஜிவனின் வாழ்வு இரகசியங்கள் பொதிந்துள்ள ஸ்தலமான... சிதம்பரத்தின் அருகில் இருக்கும் ஒரு சிற்றுரில் 1823 ஆம் ஆண்டில் அவதரித்தவர்.

தமது வாழ்வின் பெரும் பகுதியை அன்றைய சென்னை மாகாணத்தில் கழித்தவர். இளமையிலேயே... இறைவனின் கருணையை... 'ஒரு அருள் பெரும் ஜோதியின் வடிவமாக'  அனுபவித்து உணர்ந்தவர்.

அந்த அருள் பெரும் ஜோதிதான்... உலகத்தில் இருக்கும் அனைத்து 'அசையும்... அசையா' பொருள்கள் மற்றும் உயிரினங்களிலும் விரவி இருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்தவர்.

இந்த உண்மை உணர்த்திய தெளிவு... மாந்தர்களின் மனத்தில் இருக்கும் மாசை அகற்றுவதற்கான வழி... அவர்களை இந்த பொது வழிப் பாதையில் அழைத்துச் செல்வதுதான்... என்ற தீர்மானத்திற்கு அவரை இட்டுச் சென்றது.

அதுவரை உலவி வந்த ஆன்மீகப் பாதைகளை விடுத்து... உலக மாந்தர்கள் அனைவரையும் ஒன்று படுத்தும் முகமாக... 'சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' என்ற புதிய... புரட்சிகரமான அமைவை ஏற்படுத்தி... அதற்கு, தான் அனுபவித்து உணர்ந்த... 'அருள் பெரும் ஜோதியை' மூல வடிவமாக்கினார்.

அந்த 'அருள் பெரும் ஜோதியை'... தனது அனுபவத்தால்...'தனிப் பெரும் கருணை' யாக அனுபவித்து மகிழ்ந்தவர் இந்த அருள் பிரகாச வள்ளளார். தான் பெற்ற அனுபவத்தை... தனது பக்தர்களுக்கும் அளித்து... அவர்களையும் அந்த அருள் பாதையில் அழைத்துச் சென்ற ஆன்மீக வள்ளல்... உலக மாந்தர்களின் நீங்காத துன்பங்களில் ஒன்றான 'பசிப்பிணியை' நீக்க.. வடலுர் அடியார்களின் துணை கொண்டு... அந்தக் காலத்திலேயே... 80 காணி நிலத்தைப் தானமாகப் பெற்று... என்றும் அணையாத... 'சத்திய தரும சாலையை' நிறுவினார்.

அவர் ஏற்றி வைத்த தீபம் போலவே... அந்த அணையா அடுப்பும் இன்றும் எண்ணற்ற மாந்தர்களின் 'பசிப் பிணியையும்... ஆன்மீகத் தாகத்தையும்' தீர்த்து வைக்கிறது.

இதுதான்... இந்த மகானுக்கும்... ஆசிரமத்திற்குமான தொடர்பு.

ஸாய்ராம்.


Monday, October 21, 2019

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 3 - பகவான் ஸ்ரீ ரமண மகிரிஷி

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 3 - பகவான் ஸ்ரீ ரமண மகிரிஷி.




1879 ன் இறுதியில் இந்த மகானின் அவதாரத்தை... விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமமான... 'திருச்சுழி' கண்டு களித்தது.

பள்ளிப் படிப்புக்காக மதுரை வந்த 'வேங்கடராமன்' என்ற, இந்த இளம் பாலகனுக்கு... தனது தந்தையாரின் மரணம்... தனது 'உள் தேடுதலுக்கான' வழியைக் காட்டியது. சிறுவனின் கண்களுக்கு... தந்தையார் உடலுடன் இருப்பது தெரிகிறது. ஆனால்... குடும்பத்தினர்களும், உறவினர்களும்... அவர் இறந்துவிட்டதாக துயரத்தில் மூழ்கியிருப்பது... அவனுள், ஆச்சரியத்தையும்... எண்ணற்ற கேள்விகளையும் எழுப்புகிறது.

தந்தையார், காலையில் இந்த உடலுடன் தானே இருந்தார்...! இப்போதும், அந்த உடல் இங்குதானே இருக்கிறது...! அவர் செயலற்ற நிலையில் இருக்கிறாரே...! உடம்பு சில்லிட்டு இருக்கிறதே...! அப்படியெனில், அவரின் உடல்... அவர் இல்லையா...! அவர் இந்த உடல் இல்லையெனில்... அவரிடம் இருந்து வெளியேறியது எது...?

இந்தத் தேடல், அவரை அந்த வீட்டு மாடியறைக்கு அழைத்துச் சென்றது. கதவை மூடிவிட்டு... தந்தையாரைப் போலவே... கண்களை மூடி... கை, கால்களை உடலுடன் அசைவற்ற நிலையில் வைத்துக் கொண்டார். மூச்சை வெளியே விடாமல்... உள்ளுக்குள்ளேயே ஓடவிட்டார். அவரின் கவனம்... அந்த மூச்சைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே... அது ஓரிடத்தில் ஒடுங்கி... அடங்கும் க்ஷணத்தில் ஏற்பட்ட 'பரமானந்தத்தை' பூரணமாக அனுபவித்தார். அவருக்கும் அனைத்தும் புரிந்தது. 'தான் இந்த உடல் அல்ல... அதற்குள் இருந்து ஸ்புரணிக்கும் ஆத்மா...' என்பதை அனுபவித்து உணர்ந்து கொண்டார்.

இந்த உணர்வுக்குள் அவரை ஈர்த்தது... 'அண்ணாமலையார்' என்பதை... 16 ஆவது வயதில்... 'திருவண்ணாமலைக்கு', விழுப்புரம் வரை ரெயிலில் வந்து. அங்கிருந்து நடந்தே, திருவண்ணாமலைக்கு வந்து... 'அசலமாக' நிற்கும் அண்ணாமலையைப் பார்த்தபின்தான் உணர்ந்தார்.

அன்றிலிருந்து... 'ஒரு சேத்திர சந்நியாசியாக'... திருவண்ணாமலையை விட்டு... தனது 'மகாசமாதி' வரை அகலாது... 'ரமண மகிரிஷி' என்ற நாமத்துடன் இருந்தவர்தான்... இந்த அற்புத மகான்.

முதலில் ஆலயப் பிரகார பாதாள லிங்கத்திற்கு அருகிலும்... சிறிது காலம், ஒரு தோப்பிலும்... பின்னர் அடிவாரத்தில் 'ஆசிரமம்' அமையும் வரை 'விருப்பாட்சி குகையிலும்'... அவரது 'இருப்பு' தொடர்ந்தது.

அத்யந்த பக்தர்களின் அன்புக்கு இணங்கி ஒரு 'ஆசிரம' வாழ்வுக்கு அவர் ஒப்புக் கொண்டாலும்... அதை, 'சாதகர்களை' வழி நடத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவே பயன்படுத்திக் கொண்டார்.

ஒருமுறை, ஆசிரமத்திற்கு வந்து செல்பவர்களைக் கண்ட கொள்ளைக்காரர்கள்... ஒரு இரவு நேரத்தில், ஆசிரமத்திற்குள் புகுந்து திருட முற்பட்டு... ஆசிரமத்தில் கொஞ்சம் சிலவுக்கான பணமும்... ஒரு வாரத்திற்குண்டான உணவுப் பொருள்கள் மட்டுமே இருப்பதைக் கண்டார்கள். கொள்ளையடிப்பதற்கு ஏதும் மதிப்பானவைகள் இல்லாததைக் கண்டு... கோபமுற்ற கொள்ளையர்கள்... பகவானைத் தாக்கிவிட்டும் சென்றார்கள்.

இதுதான்... இந்த மகானுக்கும்... ஆசிரமத்திற்கும் இடையேயான தொடர்பு.

ஸாய்ராம்.


Saturday, October 19, 2019

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 2 - ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 2. - ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர்.




மேற்கு வங்காளத்தின் 'காமார்புகூர்' என்ற ஒரு சிரிய கிராமத்தில் பிறந்த இந்த அற்புத மகானை... கல்கத்தாவில் அமைந்திருக்கும் 'காளி மாதா...' தனது அன்பென்னும் கருணையால் ஆட்கொண்டார். இவருக்கு, காளி அன்னையின் மீது பொழியும் அன்பைத் தவிர வேறொன்றிலும் நாட்டமிருந்ததில்லை.

ஏனைய பூஜாரிகள்... அன்னைக்கு அபிஷேகம் செய்யும் போதும்... அலங்காரம் செய்யும் போதும்... அர்ச்சனை செய்யும் பொதும்... நிவேதனம் என்ற 'அமுது கண்டருளுதலின்' போதும்... இவற்றை ஒரு சம்பிராதயமாக மேற்கொள்ளும் போது... இவர் மட்டும், இவற்றையெல்லாம்... அன்னைக்குச் செய்யும் ஒரு அன்பு மகனின்... தொண்டாகத்தான் செய்வார்.

அவரின் ஒவ்வொரு செயலிலும் இருக்கும் ஈடுபாடும்... அவரின் பக்திக்கு இணங்கி அன்னை அவரிடம் நடத்திய லீலையும்... பார்ப்பவர்கள் கண்களுக்கு, ஒரு 'உன்மத்தரின்' செயலைப் போன்றுதான் இருந்தது. ஆனால் இந்த பூஜாரியோ... அன்னையுடன் நனவிலும்... கனவிலும்... ஆழ் உணர்விலும் ஒன்று கலந்தே இருந்தார்.

ஒரு 'யோக சாதகராக' இந்த மஹான் செய்த சாதனைகள் அளவிட முடியாதது. யோக சாதனைகள் அனைத்தையும் கைக் கொண்டு... அவற்றின் வழியாக 'உருவத்துடன் கூடிய பிரம்மத்தையும்...', 'உருவமற்ற பிரம்மத்தையும்...' பரிபூரணமாக அனுபவித்தார்.

'சமாதி' என்று குறிப்பிடப்படும் யோக சாதனை நிலைகளின் படிமானங்களான... 'சமாதி... நிர்விகல்ப்ப சமாதி... சகஜ சமாதி என்ற நிலைகளை...' விழிப்பு நிலையிலேயே அனுபவித்துக் கொண்டிருந்தார். இந்த சாதனைகள்... அவரின் உடலை நசித்துவிட்டிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

உலகம் முழுவதும் பரவி... விரவியிருந்த 'யோக சாதககர்கள்'... அவர்களை வழி நடத்தும் ஒரு 'சத்குருவை' நோக்கி... தமது கைகளை நீட்டிக் கொண்டிருப்பதை... தனது உள்ளுணர்வால் உணர்ந்து கொண்ட இந்த மகான்... அவர்களது வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

அந்த சாதகர்களில் ஒருவராகவும்... ஏனைய சாதகர்களை வழி நடத்துபவராகவும்... அன்னையால் அழைத்துவரப்பட்டவரே... 'நரேந்திரன்' என்ற... 'சுவாமி விவேகானந்தர்'. அவரின் வருகையால்தான்.. இந்த மகோன்னதமான... உத்தம 'சத்குரு'... சுவாமி ஸ்ரீ இராமகிரிஷ்ணரின் புகழ் உலகெங்கும் பரவியது.

இவரின் இறுதிக் காலத்தில்...இவரின் உடல் நலிந்து கொண்டிருக்கும் போது... இவர் சதா நேரத்திலும்... சகஜ சமாதியில் நிலைத்திருக்கும் நிலையில்... இவரை பாதுகாக்கும் பொருட்டு... இவரின் சீடர்களான சுவாமி விவேகானந்தரின் தலைமையில் உருவானதுதான்... 'ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் ஆசிரமமான... மடம்'.

'பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின்' மகா சமாதிக்குப் பின்னரே... இந்தியாவிலும்... பிறகு மேற்கத்திய நாடுகளிலும்... 'பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் மடங்கள்'... தமது ஆன்மீகப் பணிகளைத் தொடர்ந்தன.... இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இதுதான்... பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணருக்கும்... மடத்திற்குமான தொடர்பு...

ஸாய்ராம்.

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 1 - சிரீடி ஸாயீ மஹான்.

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது... ? பகுதி 1 - சிரீடி ஸாயீ மஹான்.



பந்தங்களிலிருந்து மட்டுமல்ல அவைகளுக்கிடையேயான பற்றுகளுக்குள்ளிருந்தும் விடுபட்டவர்கள்தான் 'மகான்கள்'. அவர்கள் 'இறைவனின் அவதாரங்கள்'.

எவ்வாறு 'புதை மண்ணில்' சிக்கித் தவிக்கும் ஒரு உயிரை மீட்க, அந்த இடத்திற்கு நேரில் வந்து, ஒரு கயிற்றை வீசிக் காக்க வேண்டுமோ... அவ்வாறு இந்த 'பிறவிப் பெருங்கடல்' என்ற புதை மண்ணில் சிக்கித் தவிக்கும் ஜீவனை மீட்க... 'எல்லாம் வல்ல இறைவன்', ஒரு மனித உருவை எடுத்துக் கொண்டு 'மகானாக' அவதாரம் செய்கிறார்.

எவரொருவரின் பக்தி கனிந்து... அவருக்கு ஆத்மஞான தாகம் ஏற்படுகிறோதோ... அப்போது, இறைவன் அந்த ஜீவாத்மாவை ஒரு மகானின் திருவடிக்கு அழைத்துச் செல்கிறார்.

அந்த மகானும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி... வந்திருக்கும் ஜீவனின் 'ஆத்ம ஞான பலத்தை' மட்டும் கருத்தில் கொண்டு... அந்த 'ஜீவனை...' ஒரு 'சாதகனாகவும்...' பின்னர் ஒரு 'ஜீவன் முகதனுமாகவும்...' மாற்றி விடுகிறார்.

எந்தக் கடலும் அதை நாடி வரும் நதியை புறந்தள்ளுவதில்லை. அது போல அந்த ஜீவன் எந்த நிலையில் இருந்தாலும்... அதன் நோக்கம் ஆத்ம சாதனையை நோக்கியிருந்தால் மட்டும் போதும்... அதை மட்டுமே, தகுதியாகக் கொண்டு... அந்த ஜீவனுக்கு கடைதேற்றம் தருவதுதான்... மாகான்களுக்கான பொறுப்பும், கடமையும்.

அந்தக் கடமையை நிறைவேற்ற அவர்களுக்கு எந்த கட்டமைப்பும் தேவைப்பட்டதில்லை. அவர்களிருக்கும் நிலையில் இருந்து கொண்டே... அவர்கள் அந்தக் கடமையை பூரணமாக்குகிறார்கள். ஆனால், அவர்களைத் தேடி வரும் பக்தர்கள்... அவர்களின் 'வாழ்வு முறையைக்' கண்டு... அவர்களுக்குத் தொண்டு செய்வதாக நினைத்து... அந்த மகான்களைச் சுற்றி ஒரு வளையத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

மகான்களுக்கு அவர்களது உடலே சுமை. அவ்வாறு இருக்கும் போது உலகியல் தொடர்புகளும், அவற்றை நிர்வகிக்கும் ஒரு அமைப்பபுக்குள் கட்டுப்படுவது... எவ்வளவு சிரமமானதாக இருக்கும்...! இருப்பினும் பக்தர்களின் அன்புக்கு இணங்கி... அவர்கள் அந்த கட்டுக்குள் இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், தமது நிலைப்பாடுகளிலிருந்து எந்நிலையிலும் வலுவாமல்... சதா... ஆத்மஞானத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு...தன்னுடைய 16 ஆவது வயதில் (1954)... 'சிரீடி' என்ற மஹாராஷ்டிர மாநிலத்து குக்கிராமத்துக்கு... ஒரு 'சேத்திர சந்நியாசியாக' ( ஒரு ஸ்தலத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு... அந்த ஸ்தலத்திலேயே வாழும் முறை ) வந்து... 1918 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 15 ஆம் தேதி, வியாழன் அன்று மதியம் 2.40 மணியளவில்; 'மஹா ஸமாதி' நிலை அடையும் வரை தனது வாழ்வை அமைத்துக் கொண்டவர்தான்... 'ஸாயீ பாபா' என்று எல்லோராலும் அன்புடம் அழைக்கப்படும்... சிரீடி ஸாயி மஹான்.

அவர் சிரீடி வந்து அமர்ந்த இடம் ஒரு 'வேப்ப மரத்தடிதான்'. அது இன்றும் சிரீடியில் இருக்கிறது. அவர் தங்கிய இடமோ... 'ஒரு இடிந்த மசூதி'... அது இன்றும் பக்தர்களால் 'துவாரகமாயீ' என்று பக்தியுடன் அழைக்கப் படுகிறது. அவர் அந்த மசூதியில் வளர்த்த 'அக்னி'... 'தூனி' என்ற அணையா விளக்காக இன்றும் எரிந்து கொண்டு இருக்கிறது.

அவர் தனது 70 ஆவது வயதில்... அதாவது 1910 ஆம் ஆண்டு அளவில்தான்... தனது 'அத்யந்த பக்தர்களின்' வழிபாடுகளை... 'ஆரத்தியாக' ஏற்றுக் கொண்டார். சிரீடியில் அவரை நாடி வந்த பக்தர்கள் அளித்த காணிக்கைகள் மற்றும் அன்பளிப்புகள் அனைத்தும்... பக்தர்களுக்கே திருப்பியளிக்கப் பட்டது.

அன்றாட வாழ்வின் இறுதியில்... அவரிடம் மிஞ்சியது... அவரணிந்திருந்த கிழிந்த 'கஃப்னி' என்ற ஆடை, கிழிந்த கோணிப்பைகள் இரண்டு, ஒரு சட்கா, ஒரு தகரக் குவளை தனக்கு முன்னர் எரிந்து கொண்டிருக்கும் அணையாத தூனி... மட்டும்தான்.

அவருக்காக, 'நாக்புரைச்' சேர்ந்த 'பூட்டி' என்ற தனவந்தர்... அன்றைய காலத்திலேயே... 'ஒரு லட்ச ரூபாயைச்' செலவழித்து... ஒரு பளிங்கு மாளிகையை எழுப்பியிருந்தார். பாபாவின் 'மஹா ஸமாதியின்' போது, அவரின் திருவடி படாமலேயே... அந்த மாளிகை வீணாகிவிடும் என்ற மிகப் பெரிய கவலையில் மூழ்கியிருந்தார்.

தனது அத்யந்த பக்தரின் மனதில் இருந்த ஏக்கத்தை அறிந்து... பாபா உதிர்த்த இறுதி வார்த்தைகள்...'என்னை வாதாவில் வையுங்கள்...!' என்பதாக அமைந்தது. தனது உடலை உகுத்தபின்தான்... இந்த 'அற்புத சித்தர்' அந்த 'ஸமாதி மந்திர்' என்ற ஆசிரமத்துக்குள் அடியெடுத்து வைத்தார்.

இதுதான்... இந்த மஹானுக்கும்... ஆசிரமத்துக்கும் இடையேயான தொடர்பு.

ஸாய்ராம்.

Tuesday, October 8, 2019

திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 5. 'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு'

திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 5.






                             'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
                              விழிப்பது போலும் பிறப்பு'                                                                                                                    ... ( அதிகாரம்: நிலையாமை, குறள்-339)


இந்த குறளுக்கான பொதுவான விளக்கமாக... 'இறப்பு உறக்கத்தைப் போன்றது, பிறப்பு உறக்கம் நீங்கி விழித்தலைப் போன்றது...' என்பதாக அமையும்.

அது உண்மைதான். ஆனால் இந்த இரண்டு வரிகளுக்குள் எப்போதும் போல இந்த 'வார்த்தைச் சித்தர்' ஏழ் கடலுக்கும் ஒப்பான கருத்தியல்களை பொதித்து வைத்திருப்பார் என்பதுதான் ஆழ்ந்து அறிய வேண்டிய ஞானமாக மலர்கிறது.

ஒரு ஜீவ வாழ்வின் சரி பாதிக் காலங்கள் தூக்கத்தில் கடந்து போகிறது. உறக்கம் என்பது உண்மையில் ஒரு வரம். இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இறைவன் கொடுத்திருக்கும் கொடைதான் உறக்கம்.

இந்த உறக்கத்தில் உண்மையில் என்னதான் நிகழ்கிறது...?

பரமாத்ம சொரூபம் ஒரு ஜீவனின் பிறவிக்காக... அந்த ஜீவனின் மூலமான 'ஆத்மாவாகவும்'... அந்த 'ஆத்மாவை' உற்பத்தி ஸ்தானமாகக் கொண்டு 'ஜீவனும்'... அந்த ஜீவனை மூலமாகக் கொண்டு மனமும்... அந்த மனத்தை மூலமாகக் கொண்டு, அதன் வழியாக வெளிப்படும் அதன் 'கர்ம வினைகளை' அனுபவிக்கும் உடலும் திகழ்கிறது.

அந்த உடல்... தனது வினைகளை... கடலின் தொடர் அலைகளைப் போல தொடர்ந்து அனுபவித்துக் களைத்துப் போகும் போது, அதனை ஆசுவாசப்படுத்த... அந்த பரமாத்ம சொரூபம்... அந்த ஜீவனை ஒவ்வொரு நாளின் இறுதியிலும்... தனது 'ஆத்ம' சொரூபத்தில் இணைத்துக் கொள்கிறது.

அந்த ஜீவன் தனது வினைகளுக்கிடையேயான... ஒரு சில நொடிகளின் இடைவெளியில்... திகைத்து நிற்கும் வேளையை சாதகமாக்கிக் கொண்டு... அந்த ஜீவனை, தனக்குள் ஈர்த்து அணைத்துக் கொள்கிறது... கருணை கொண்டு நம்மோடு எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கும் 'சாட்சியான' ஆத்மா. இந்த நிகழ்வுக்குத்தான்... 'உறக்கம்' என்று பெயர். 'எல்லாத் துன்பத்திற்கும் ஒரு விடிவு' உறக்கம்தான்.

அந்த அற்புத நிகழ்வுதான் இந்த ஜீவனின் வாழ்வின் இறுதியில் நிகழ வேண்டிய நிகழ்வு. இதுதான் ஜீவ வாழ்வின் நோக்கம். இதுதான் 'பேரின்பம்'. அதனால்தான், 'தூக்கத்தின் விழிப்பு' நமக்கு துன்பமாகவும்... 'ஆழ்ந்த உறக்கத்தின் அனுபவம்' நமக்கு பேரின்பமாகவும் அமைகிறது.

ஆனால்... ஒவ்வொரு நாளின் இறுதியிலும் இந்த பேரின்பத்தை அனுபவிக்கும் ஜீவன், மீண்டும் அடுத்த நாளில் அதனின்று வெளிப்பட்டு,,, மீண்டும் தனது 'கர்ம வினைகளை' தொடர்கிறது. இவ்வாறு... ஒவ்வொரு பிறவியிலும், தனது மூலமான... தோன்றாத நிலையில் இருக்கும் ஆத்ம பந்தத்தில் திளைக்கும் உபாயத்தை அறியாமல்... மீண்டும், மீண்டும் தொடர் பிறவிகளில் சிக்கித் தவிக்கும் ஜீவனின் நிலையைத்தான்... இந்தக் குறளில் பதிவு செய்கிறார்... இந்த 'வார்த்தைச் சித்தர்'.

ஒவ்வொரு பிறவியின் மறைவும்... மிண்டும் அடுத்த பிறவியின் பிறப்பும்தான் இந்த ஜீவனின் நீக்க முடியாத துன்பம். இந்தப் பிறவித் தொடரின் மூலம்தான், அந்த ஜீவன் சேர்த்து வைத்துள்ள 'கர்ம வினைகள்'. அதுதான், தொடர் பிறவிகளுக்குக் காரணமாகிறது.

இந்த தொடர் பிறவிகளை நிறுத்தவதன் சூட்சுமம்... அந்த ஜீவனின் 'உறக்கத்தில்தான்' இருக்கிறது. அந்த உறக்கம்... அந்த ஜீவனை, அதன் ஆத்மா சங்கமத்தில் கலக்க வைப்பதாக இருக்க வேண்டும். மீண்டும் அதனின்று பிரிந்து... ஒரு பிறப்பாக அமைந்து விடக் கூடாது... என்பதை வலியுறுத்தும் 'குறளாக' அமைவதுதான் இதன் சிறப்பும்... சூட்சுமமும்.

ஸாய்ராம்.

Saturday, October 5, 2019

'சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்', சத்ரு சம்ஹார முர்த்தி சுவாமிகள் ஆலயம். கோர்ட் வளாகம். திருச்சிராப்பள்ளி.

'சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்',
சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் ஆலயம்.
கோர்ட் வளாகம், திருச்சிராப்பள்ளி.





திருச்சிராப்பள்ளியின் மையத்தில் அமைந்திருக்கும் கோர்ட் வளாகம், அது 1917 க்கும் 1928 க்கும் இடையேயான 11 ஆண்டுகள், இந்த மகா முனிவரின் தவத்தினால் நிறைந்திருந்தது.

தன்னை யாருக்கும் வெளிப்படுத்தாது இருந்த இந்த மகானை நோக்கி தனது குடும்பத்து அங்கத்தினர்களை ஈர்த்த வருடம்தான் 1928. அப்போது திருச்சி மலைக் கோட்டையின் தாழ்வாரத்தில் அமைந்த நந்தி கோவில் விதியில் அமைந்துள்ள 'நாகநாதர் ஆலயத்தில்' எப்போதும் தவத்தில் அமர்ந்திருந்தார் இந்த மஹான்.

அங்கு வந்து தன்னை அடையாளம் தெரிந்து கொண்ட மனிதர்களைத் தவிர்ப்பதற்காகத் தன்னை மறைத்துக் கொண்ட இடம்தான் கோர்ட் வளாகம். அங்கிருக்கும் ஒரு மகிழ மரத்தின் கீழே அமர்ந்து தன் தவத்தைத் தொடர்ந்தார்.

ஒரு புறம்... கோர்ட், ஒரு புறம்... பதிவாளர் அலுவலகம், ஒரு புறம் தீயணைப்பு நிலையம்... இந்த மூன்றுக்கும் செல்வதை எப்போதும், எல்லோரும் தவிர்ப்பதற்குத்தான் விரும்புவார்கள். ஆனால் முருகனின் திருவருளால் ஈர்க்கப்பட்டு... அவரால் ஆட்கொள்ளப்பட்ட இந்த 'கனகசபாபதி' என்ற மஹான்... 'சத்ரு சம்ஹார முர்த்தியாக' இந்த மகிழ மரத்தின் கீழ் அம்ர்ந்ததும்... இவரின் திருவடியை நோக்கி... அன்று மட்டுமல்ல, இன்றும் லக்ஷக் கணக்கில் பக்தர்கள் வந்து குவிகிறார்கள்.

இறைவனின் அவதாரம் நிகழும் காலத்தில், அவருக்கான பிரதானமான நோக்கத்தை... 'இஷ்ட பரிபாலனம் - துஷ்ட நிக்ரஹம்' என்று வருணிப்பர். அதாவது தர்மத்திற்கு எதிராக இருக்கும் சக்திகளை அழித்தும்... தர்மத்தின் வழியே நடக்கும் எளியவர்களைக் காத்து இரட்சிப்பதும்... அவதாரத்தின் நோக்கம் என்பதாக.

இந்த பூமியில் அவதரிக்கும் ஒவ்வொரு ஜீவனும் அதனதன் 'கர்ம வினைகளை' அனுபவித்து... அதன் வழியாகப் பயணித்து... அந்த கர்ம வினைகள் பூரணமாகக் கழிந்த பின்... தனது மூலமான படைப்பின் திருவடியில் கலந்து விடுகிறது. இந்த கர்ம வினைகள் என்னவோ... அந்த ஜீவர்களின் 'முன் வினைத் தொகுப்புதான்', ஆனாலும், இந்தப் பிறவியில் அதைக் கடந்து போகும் போது... அந்தந்த 'வினைகளின் விளைவுகளுக்கு' ஏற்ப 'புண்ணியமாகவோ, பாபமாகவோ' கடந்து போக வேண்டியிருக்கிறது.

புண்ணியமாகக் கடந்து போகும் போது 'மிக மகிழ்வாகக்' கடந்து போகும் ஜீவன்... அதுவே, தனது பாவ வினைகளை அனுபவிக்கும் போது 'துன்பத்தால் துவண்டு' போகிறது. அதுவும் தனது 'முன் வினைக் கர்ம பயன்தான்' என்பதை ஏற்றுக் கொள்ளாத மனம் பதை பதைத்துப் போகிறது. இந்த தாங்க முடியாத துன்பத்திற்கு வடிகாலைத் தேடி 'இறைவனின் திருவடியில்' சரணடையும் ஜீவனின் மீது கருணை கொள்ளும் இறைவன்... அதைத் தக்கதொரு 'சத்குருவின்' திருவடிக்கு அழைத்துச் செல்கிறான்.

அவ்வாறு, அழிக்கவே முடியாத... அனுபவிக்காமல் தப்பிச் செல்ல முடியாத... அந்த 'கர்ம வினைச் சூழலை' கடந்து போகத் தோணியாக அமைவபவரே... ஒரு சத்குரு.

ஒவ்வொரு ஜீவனுடைய இந்த 'கர்ம வினைக் கட்டுகளை' அவிழ்த்து... அதன் பாபத்தையும், புண்ணியத்தையும்... அந்த ஜீவன் சமமாக ஏற்றுக் கொண்டு கடந்து போகும் பக்குவத்தையும்... அந்த ஜீவனின் நன்மைக் கருதி, பல சூழல்களில் அந்த கர்ம வினையையே களைந்தும் போகச் செய்பவராக இருப்பவதான் 'சத்ரு சம்ஹார முர்த்திகள்'.

ஒவ்வொரு ஜீவனின் வாழ்க்கச் சக்கரம் என்ற ஜோதிடத்தில்... அதன் ஜனன கால ஜோதிட இராசிச் சக்கரத்தில்... 6 ஆமிடமான 'ருண - ரோக - சத்ரு ஸ்தானம்' தான் அந்த ஜீவன் இந்த பிறவியில் அனுபவிக்கப் போகும் பாப வினைகளின் விளைவுகளைச் சுட்டிக் காட்டுகிறது. அந்த வினைகளால் துன்புற்றுத் தவிக்கும் ஜீவனின் துன்பத்தை தனது கருணை என்ற வாளால் வெட்டி வீசுபவராக... இன்றும் தான் அமர்ந்திருந்த... மகிழ மரத்தின் கீழே அமர்ந்து அருள் மழை பொழிகிறார்... இந்த மஹான்.

ஒரு மஹானின மஹிமை, அவரிருந்த அனைத்து இடங்களிலுமே ஆகர்ஷித்து அருளும் தன்மையுடன் இருக்கும். அதுதான்... இந்த மஹானின் வாழ்விலும்... அவரிரிந்து அருள் செய்த இடங்கள்... அவரை ஆட்கொண்ட 'முருகனின் அறு படை வீடுகள்' போல... 'தான்றீஸ்வரத்திலிருந்து... திருச்செந்தூர் வரை... அறுபடை வீடுகளாகத் திகழ்கிறது.

ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்திகளின் திருவடியே சரணம்.

ஸாய்ராம்.














Thursday, October 3, 2019

ஷிரீடி ஸாயீ மஹான் - ஒரு அற்புத மகா சித்தர்.

'ஷிரீடி ஸாயீ மஹான்' - ஒரு அற்புத சித்தர்.




மஹாராஷ்ட்ரா மாநிலத்தின், அஹமத் நகர் ஜிலாவின் கோபர்காங்வ் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்தான் ஷிரீடி.

இந்தியா முழுவதும் விரிந்து, பரந்துள்ள லட்சக்கணக்கான கிராமங்களில் 'ஷிரிடீயும்' ஒன்று. இந்திய வரைபடத்தில், ஒரு பூதக்கண்ணாடியைக் கொண்டு தேடப்படவேண்டிய கிராமமாக இருந்தாலும்... இந்த புனித மஹானின் வருகையினால்... உலகம் முழுவதும் பிரசித்த பெற்ற 'ஒரு புனித யாத்திரை ஸ்தலாமாக' மாறிவிட்டது ஷிரீடி கிராமம்.

1854 ஆம் ஆண்டு, ஒரு 16 வயது இளைஞனாக இந்த மஹான்... ஷிரீடிக்கு பிரவேசம் செய்தார். கிராமத்தின் எல்லைக்கருகிலுள்ள ஒரு வேப்பமரத்தடிதான் அவரது இருப்பிடமாக இருந்தது. எப்போதும் கண்களை மூடிய நிலையில், ஒரு ஆழ்ந்த தவத்தில், மூழ்கியிருப்பான் இந்த இளைஞன். உணவுக்கோ அல்லது தனது தேவைக்கோ கிராமத்திற்குள் ஒரு முறை கூட இந்த இளவல் பிரவேசித்ததில்லை.

கிராமத்தில் வசிக்கும் 'பாயாஜி பாய்' என்ற ஒரு புனிதத் தாயார், இந்த இளவலைத் தேடி கிராமத்தின் எல்லைக்கருகில் அமைந்த வேப்பமரத்தடியிலும், காட்டுக்குள்ளுமாகச் சென்று, தவத்தில் அமர்ந்திருக்கும் இளவல் கண்ணைத் திறக்கும் வரைக் காத்திருந்து, அவருக்கு சிறிது சோள ரொட்டியும், வெஞ்சனமும் கொடுத்து வலிந்து உண்ணவைப்பார்.

இந்த இளைஞன் மிகச் சிறந்த தவவலிமை மிக்கவனாகவும், வைராக்கியம் நிறைந்தவனாகவும் இருப்பது கண்டு கிராமத்தினர் அனைவருமே ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தார்கள். அவர்களது ஆச்சரியம். இந்த அற்புத இளைஞன் யார் என்று ஆய்வதில் இருந்தது.

ஒரு முறை 'கண்டோபா கோவிலில்' ஸ்வாமியினால் ஆபர்விக்கப் பட்டு, சுவாமி ஆவேசம் கொண்ட சிலரிடம், கிராமத்து முக்கியஸ்தர்கள், 'இந்த இளஞன் யார்...? எங்கிருந்து வந்திருக்கிறான்...? இவனின் தாய், தந்தை யாவர்...?' என்ற வினாக்களை ஆவலுடன் வினவினார்கள். அதற்கு அவர்கள் அளித்த பதில், 'இந்த இளைஞன் இந்த வேப்பமரத்தடியில் 12 வருடங்களாக கடும் தவத்தில் ஈடுபட்டிருந்தான்' என்பதுதான்.

ஆனால் இந்த இளஞனது வாக்கோ, வேறு விதமாக இருந்தது. அதுவரை மோனத் தவத்தில்... ஒரு முறை கூட வாயைத் திறக்காத இளஞன், அன்று வாய் திறந்து அருளினான்... ' இது எனது குருநாதரின் வாசஸ்த்தலம். இந்த வேப்பமரத்திற்குக் கீழே ஒரு நிலவரை இருக்கிறது. அங்குதான் அவர் தவத்தில் ஈடுபட்டிருந்தார்... !' என்று வாய் மொழிந்தான். அதை உறுதிப்படுத்த... 'ஒரு கூந்தாலி கொண்டு அதை தோண்டவும் அனுமதித்தான்...'

கூந்தாலி கொண்டு தோண்டியபோது, அது ஒரு நிலவறைக்குள் இட்டுச் சென்றது. அதன் வாயில் ஒரு திருகையினால் மூடப் பட்டிருந்தது. அந்த திருகையை நகர்த்தினால், அதன் கீழே நிலவறை தென்பட்டது. அதன் தரையில் ஒரு மரப் பலகையும்... ஜபமாலையும்... ஒரு கோமுகப் பையும் இருந்தது. ஆச்சரியத்திலும், ஆச்சரியமாக இரண்டு உலோக விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கிப்போன கிராமத்தினரிடம்... ' இந்த இடத்தை மீண்டும் பழைய நிலையிலேயே மூடி விடுங்கள். இது எனது குருநாதரின் வாசஸ்த்தலம்...' என்று அருளினான் அந்த இளவல்.

வேப்பமரத்தையும், அதைச் சுற்றியுள்ளப் பகுதியையும், 'ஸாத்தே' என்ற ஸாயீயின் அத்யந்த பக்தர் விலைக்கு வாங்கி, அந்த வேப்பமரத்தைச் சுற்றி ஒரு மேடை அமைத்து, அதை மையமாகக் கொண்டு, நான்கு புறமும் சூழ, பக்தர்கள் தங்கிச் செல்லும், ஒரு விருந்தினர் விடுதியையும் அமைத்துள்ளார்.

அந்த வேப்பமரத்தின் அடியில்... அன்று நடந்த 'அற்புத' சம்பவத்தை மறக்கா வண்ணம்... 'இரண்டு பாதங்கள்', மஹானின் இன்னுமொரு அத்யந்த பக்தரான 'உபாசினி மஹராஜ்' எனபவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இன்றும், ஒவ்வொரு வியாழனன்று மாலையிலும் பக்தர்கள், வேப்பமரத்திற்கு எதிரில் அமர்ந்து... வாசனை மிகுந்த பத்திகளை பற்ற வைத்து... வழிபட்டு வருகிறார்கள்.

'சீரடி ஸாயியின் சமஸ்தானம்
ஸாயீ குருவைத் தேடி வந்த குருஸ்தானம்...'

ஸாய்ராம்.


Tuesday, October 1, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 23. 'திருமணப் பொருத்தங்களும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 6. 'ஜாதகப் பொருத்தம்

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 23. 

'திருமணப் பொருத்தங்களும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 6. 

'ஜாதகப் பொருத்தம்'

சென்ற பகுதியில் விவரித்ததன் படி அடிப்படை அம்சங்கள் ஒத்துப் போகும் நிலையில்... ஆழ்ந்த நிலையிலான அணுகுமுறைக்குள் பிரவேசிப்போம்.

வயது... லக்னம்... இராசி... தசா-புத்தி... இவையனைத்தும் ஒத்துப் போகும் பக்ஷத்தில்... கிரகங்களின் அமைவுகளின் வழியேயான பொருத்த முறைக்குள் பிரவேசிக்கலாம்.

உதாரணம் - 1 : வரன் தேடும் ஆண் ஜாதகரின் ஜாதகத்தில்... லக்னாதிபதி பலத்தை இழந்து மறைந்து இருக்கும் பக்ஷத்தில்; பொருத்தம் பார்க்கப்படும் பெண் ஜாதகத்தில்... லக்னம் வலுத்தும்,  சுப ஆதிபத்தியப் பெற்ற கிரகங்களின் பார்வையும் பெற்றிருந்தால்... அதை உத்தமமான பொருத்தம்.

அதே நேரத்தில்... பெண் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்து காணப்பட்டால்... மேற்படி நாம் பார்க்கும் ஆண் ஜாதகருக்கு இந்த அமைவு பொருந்தி வருவதற்கு வாய்ப்பேற்படாது.

உதாரணம் - 2 : வரன் தேடும் ஆண் ஜாதகரின் ஜாதகத்தில்... லக்னாதிபதி வலுவாக அமைந்திருக்கும் பக்ஷத்தில்... பெண் ஜாதகத்தில் 7 ஆம் ஸ்தானாதிபதி வலுத்து இருப்பது... உத்தமாமான பொருத்தம்.

அதே நேரத்தில்... பெண் ஜாதகத்தில் 7 அம் அதிபதி வலுகுறைந்து, மறைந்து பலமற்று இருக்கும் பக்ஷத்தில்... மேற்கண்ட ஆண் ஜாதகருக்கு இந்த அமைவு  பொருந்தி வருவதற்கு வாய்ப்பேற்படாது.

உதாரணம் - 3 : வரன் தேடும் ஆண் ஜாதகரின் ஜாதகத்தில் 7 ஆம் பாவத்தில்... 'ஆதிபத்திய ரீதியான பாபர்கள்' இருக்கும் பக்ஷத்தில்... பெண் ஜாதகத்தில் அந்த 7 ஆமிடத்தில் கிரகங்கள் ஏதும் இல்லாமலும்... ஆதிபத்திய சுபர்களில் ஏதாவது ஒன்று அமைந்திருப்பதும் உத்தமமான பொருத்தம்.

உதாரணம் - 4 : வரன் தேடும் ஆண் ஜாதகத்தில் 9 அம் பாவமான 'பாக்கியஸ்தானம்' வலுத்து இருக்கும் பக்ஷத்தில்... அமையப் போகும் பெண் ஜாதகத்தில் அந்த பாக்கிய ஸ்தானம் வலுத்து இருப்பது உத்தமமான பொருத்தம்.

அதே நேரத்தில்... பெண் ஜாதகத்தில் 'பாக்கிய ஸ்தானம்' பழமிழந்து இருக்கும் பக்ஷத்தில் அது பொருந்தி வருவதற்கு வாய்ப்பேற்படாது.

இதுபோல ஏனைய பாவங்களையும் பொருத்தி... அதன் வழியாக பொருத்தங்களை தீர்மானிக்கலாம்.

மேற்கூறிய பொருத்தங்களின் அமைவு உணர்த்துவது ஒன்றைத்தான். அது ஒவ்வொரு ஜீவனுக்கும், அதன் குறை நிறைகளுக்கு ஏற்ப, அதை ஈடுகட்டும் வகையில் ஒரு துணையை இறைவன் கொண்டு வந்து சேர்ப்பான்... என்ற சத்தியத்தைத்தான்.

'இந்த உண்மையை உணர்ந்து கொண்டு... 'நிறை குறைகளை' சமன் செய்வதுதான்... ஜாதக ரீதியான பொருத்த முறைகளின் வழியாக... ஒரு ஜோதிடர்... வரன்களின் ஜாதகத்தை அணுகுவதன் முறை..'

இவ்வாறு தேர்ந்தெடுத்து பொருந்தும் ஜாதகத்தில்... தாமாகவே குல-குடி-குடும்ப-குலதெய்வ பொருத்தங்களும்... நட்சட்திர ரீதியான பொருத்தங்களும்... கூடி வந்து விடுவதை... அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல... வரன்களுக்கு, இல்வாழ்வு என்பது ஒரு கடமை என்றும்... அதன் வழியாக இருவரும் இணைந்து தமது 'கடமைகளை' பற்றற்று பூர்த்தி செய்து... 'கர்ம வினைகளைக் களைந்து'... பிறவியில்லா பெரும் வாழ்வை அமைத்துக் கொள்ள தரப்படும் ஒரு  வாய்ப்பு என்றும்... உணரவைக்க முடியும்.

இது இந்த 'ஜோதிடக் கலையாலும்'... அதைக் கையாளும் 'ஜோதிடர்' என்ற 'தெய்வக்யஞர்களால்' மட்டுமே சாத்தியமாகும்.

இந்த 6 பகுதிகளில்... திருமணப் பொருத்தம் என்ற மிகப் பெரிய சமுத்திரத்தின்... சில தூய்மையான துளிகளை சுவைத்த அனுபவத்தில்... இறைவனுக்கு நன்றி செலுத்தி விடைபெறுவோம்.

ஸாய்ராம்.







ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...