Thursday, October 3, 2019

ஷிரீடி ஸாயீ மஹான் - ஒரு அற்புத மகா சித்தர்.

'ஷிரீடி ஸாயீ மஹான்' - ஒரு அற்புத சித்தர்.




மஹாராஷ்ட்ரா மாநிலத்தின், அஹமத் நகர் ஜிலாவின் கோபர்காங்வ் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்தான் ஷிரீடி.

இந்தியா முழுவதும் விரிந்து, பரந்துள்ள லட்சக்கணக்கான கிராமங்களில் 'ஷிரிடீயும்' ஒன்று. இந்திய வரைபடத்தில், ஒரு பூதக்கண்ணாடியைக் கொண்டு தேடப்படவேண்டிய கிராமமாக இருந்தாலும்... இந்த புனித மஹானின் வருகையினால்... உலகம் முழுவதும் பிரசித்த பெற்ற 'ஒரு புனித யாத்திரை ஸ்தலாமாக' மாறிவிட்டது ஷிரீடி கிராமம்.

1854 ஆம் ஆண்டு, ஒரு 16 வயது இளைஞனாக இந்த மஹான்... ஷிரீடிக்கு பிரவேசம் செய்தார். கிராமத்தின் எல்லைக்கருகிலுள்ள ஒரு வேப்பமரத்தடிதான் அவரது இருப்பிடமாக இருந்தது. எப்போதும் கண்களை மூடிய நிலையில், ஒரு ஆழ்ந்த தவத்தில், மூழ்கியிருப்பான் இந்த இளைஞன். உணவுக்கோ அல்லது தனது தேவைக்கோ கிராமத்திற்குள் ஒரு முறை கூட இந்த இளவல் பிரவேசித்ததில்லை.

கிராமத்தில் வசிக்கும் 'பாயாஜி பாய்' என்ற ஒரு புனிதத் தாயார், இந்த இளவலைத் தேடி கிராமத்தின் எல்லைக்கருகில் அமைந்த வேப்பமரத்தடியிலும், காட்டுக்குள்ளுமாகச் சென்று, தவத்தில் அமர்ந்திருக்கும் இளவல் கண்ணைத் திறக்கும் வரைக் காத்திருந்து, அவருக்கு சிறிது சோள ரொட்டியும், வெஞ்சனமும் கொடுத்து வலிந்து உண்ணவைப்பார்.

இந்த இளைஞன் மிகச் சிறந்த தவவலிமை மிக்கவனாகவும், வைராக்கியம் நிறைந்தவனாகவும் இருப்பது கண்டு கிராமத்தினர் அனைவருமே ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தார்கள். அவர்களது ஆச்சரியம். இந்த அற்புத இளைஞன் யார் என்று ஆய்வதில் இருந்தது.

ஒரு முறை 'கண்டோபா கோவிலில்' ஸ்வாமியினால் ஆபர்விக்கப் பட்டு, சுவாமி ஆவேசம் கொண்ட சிலரிடம், கிராமத்து முக்கியஸ்தர்கள், 'இந்த இளஞன் யார்...? எங்கிருந்து வந்திருக்கிறான்...? இவனின் தாய், தந்தை யாவர்...?' என்ற வினாக்களை ஆவலுடன் வினவினார்கள். அதற்கு அவர்கள் அளித்த பதில், 'இந்த இளைஞன் இந்த வேப்பமரத்தடியில் 12 வருடங்களாக கடும் தவத்தில் ஈடுபட்டிருந்தான்' என்பதுதான்.

ஆனால் இந்த இளஞனது வாக்கோ, வேறு விதமாக இருந்தது. அதுவரை மோனத் தவத்தில்... ஒரு முறை கூட வாயைத் திறக்காத இளஞன், அன்று வாய் திறந்து அருளினான்... ' இது எனது குருநாதரின் வாசஸ்த்தலம். இந்த வேப்பமரத்திற்குக் கீழே ஒரு நிலவரை இருக்கிறது. அங்குதான் அவர் தவத்தில் ஈடுபட்டிருந்தார்... !' என்று வாய் மொழிந்தான். அதை உறுதிப்படுத்த... 'ஒரு கூந்தாலி கொண்டு அதை தோண்டவும் அனுமதித்தான்...'

கூந்தாலி கொண்டு தோண்டியபோது, அது ஒரு நிலவறைக்குள் இட்டுச் சென்றது. அதன் வாயில் ஒரு திருகையினால் மூடப் பட்டிருந்தது. அந்த திருகையை நகர்த்தினால், அதன் கீழே நிலவறை தென்பட்டது. அதன் தரையில் ஒரு மரப் பலகையும்... ஜபமாலையும்... ஒரு கோமுகப் பையும் இருந்தது. ஆச்சரியத்திலும், ஆச்சரியமாக இரண்டு உலோக விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கிப்போன கிராமத்தினரிடம்... ' இந்த இடத்தை மீண்டும் பழைய நிலையிலேயே மூடி விடுங்கள். இது எனது குருநாதரின் வாசஸ்த்தலம்...' என்று அருளினான் அந்த இளவல்.

வேப்பமரத்தையும், அதைச் சுற்றியுள்ளப் பகுதியையும், 'ஸாத்தே' என்ற ஸாயீயின் அத்யந்த பக்தர் விலைக்கு வாங்கி, அந்த வேப்பமரத்தைச் சுற்றி ஒரு மேடை அமைத்து, அதை மையமாகக் கொண்டு, நான்கு புறமும் சூழ, பக்தர்கள் தங்கிச் செல்லும், ஒரு விருந்தினர் விடுதியையும் அமைத்துள்ளார்.

அந்த வேப்பமரத்தின் அடியில்... அன்று நடந்த 'அற்புத' சம்பவத்தை மறக்கா வண்ணம்... 'இரண்டு பாதங்கள்', மஹானின் இன்னுமொரு அத்யந்த பக்தரான 'உபாசினி மஹராஜ்' எனபவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இன்றும், ஒவ்வொரு வியாழனன்று மாலையிலும் பக்தர்கள், வேப்பமரத்திற்கு எதிரில் அமர்ந்து... வாசனை மிகுந்த பத்திகளை பற்ற வைத்து... வழிபட்டு வருகிறார்கள்.

'சீரடி ஸாயியின் சமஸ்தானம்
ஸாயீ குருவைத் தேடி வந்த குருஸ்தானம்...'

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...