Saturday, October 19, 2019

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 1 - சிரீடி ஸாயீ மஹான்.

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது... ? பகுதி 1 - சிரீடி ஸாயீ மஹான்.



பந்தங்களிலிருந்து மட்டுமல்ல அவைகளுக்கிடையேயான பற்றுகளுக்குள்ளிருந்தும் விடுபட்டவர்கள்தான் 'மகான்கள்'. அவர்கள் 'இறைவனின் அவதாரங்கள்'.

எவ்வாறு 'புதை மண்ணில்' சிக்கித் தவிக்கும் ஒரு உயிரை மீட்க, அந்த இடத்திற்கு நேரில் வந்து, ஒரு கயிற்றை வீசிக் காக்க வேண்டுமோ... அவ்வாறு இந்த 'பிறவிப் பெருங்கடல்' என்ற புதை மண்ணில் சிக்கித் தவிக்கும் ஜீவனை மீட்க... 'எல்லாம் வல்ல இறைவன்', ஒரு மனித உருவை எடுத்துக் கொண்டு 'மகானாக' அவதாரம் செய்கிறார்.

எவரொருவரின் பக்தி கனிந்து... அவருக்கு ஆத்மஞான தாகம் ஏற்படுகிறோதோ... அப்போது, இறைவன் அந்த ஜீவாத்மாவை ஒரு மகானின் திருவடிக்கு அழைத்துச் செல்கிறார்.

அந்த மகானும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி... வந்திருக்கும் ஜீவனின் 'ஆத்ம ஞான பலத்தை' மட்டும் கருத்தில் கொண்டு... அந்த 'ஜீவனை...' ஒரு 'சாதகனாகவும்...' பின்னர் ஒரு 'ஜீவன் முகதனுமாகவும்...' மாற்றி விடுகிறார்.

எந்தக் கடலும் அதை நாடி வரும் நதியை புறந்தள்ளுவதில்லை. அது போல அந்த ஜீவன் எந்த நிலையில் இருந்தாலும்... அதன் நோக்கம் ஆத்ம சாதனையை நோக்கியிருந்தால் மட்டும் போதும்... அதை மட்டுமே, தகுதியாகக் கொண்டு... அந்த ஜீவனுக்கு கடைதேற்றம் தருவதுதான்... மாகான்களுக்கான பொறுப்பும், கடமையும்.

அந்தக் கடமையை நிறைவேற்ற அவர்களுக்கு எந்த கட்டமைப்பும் தேவைப்பட்டதில்லை. அவர்களிருக்கும் நிலையில் இருந்து கொண்டே... அவர்கள் அந்தக் கடமையை பூரணமாக்குகிறார்கள். ஆனால், அவர்களைத் தேடி வரும் பக்தர்கள்... அவர்களின் 'வாழ்வு முறையைக்' கண்டு... அவர்களுக்குத் தொண்டு செய்வதாக நினைத்து... அந்த மகான்களைச் சுற்றி ஒரு வளையத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

மகான்களுக்கு அவர்களது உடலே சுமை. அவ்வாறு இருக்கும் போது உலகியல் தொடர்புகளும், அவற்றை நிர்வகிக்கும் ஒரு அமைப்பபுக்குள் கட்டுப்படுவது... எவ்வளவு சிரமமானதாக இருக்கும்...! இருப்பினும் பக்தர்களின் அன்புக்கு இணங்கி... அவர்கள் அந்த கட்டுக்குள் இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், தமது நிலைப்பாடுகளிலிருந்து எந்நிலையிலும் வலுவாமல்... சதா... ஆத்மஞானத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு...தன்னுடைய 16 ஆவது வயதில் (1954)... 'சிரீடி' என்ற மஹாராஷ்டிர மாநிலத்து குக்கிராமத்துக்கு... ஒரு 'சேத்திர சந்நியாசியாக' ( ஒரு ஸ்தலத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு... அந்த ஸ்தலத்திலேயே வாழும் முறை ) வந்து... 1918 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 15 ஆம் தேதி, வியாழன் அன்று மதியம் 2.40 மணியளவில்; 'மஹா ஸமாதி' நிலை அடையும் வரை தனது வாழ்வை அமைத்துக் கொண்டவர்தான்... 'ஸாயீ பாபா' என்று எல்லோராலும் அன்புடம் அழைக்கப்படும்... சிரீடி ஸாயி மஹான்.

அவர் சிரீடி வந்து அமர்ந்த இடம் ஒரு 'வேப்ப மரத்தடிதான்'. அது இன்றும் சிரீடியில் இருக்கிறது. அவர் தங்கிய இடமோ... 'ஒரு இடிந்த மசூதி'... அது இன்றும் பக்தர்களால் 'துவாரகமாயீ' என்று பக்தியுடன் அழைக்கப் படுகிறது. அவர் அந்த மசூதியில் வளர்த்த 'அக்னி'... 'தூனி' என்ற அணையா விளக்காக இன்றும் எரிந்து கொண்டு இருக்கிறது.

அவர் தனது 70 ஆவது வயதில்... அதாவது 1910 ஆம் ஆண்டு அளவில்தான்... தனது 'அத்யந்த பக்தர்களின்' வழிபாடுகளை... 'ஆரத்தியாக' ஏற்றுக் கொண்டார். சிரீடியில் அவரை நாடி வந்த பக்தர்கள் அளித்த காணிக்கைகள் மற்றும் அன்பளிப்புகள் அனைத்தும்... பக்தர்களுக்கே திருப்பியளிக்கப் பட்டது.

அன்றாட வாழ்வின் இறுதியில்... அவரிடம் மிஞ்சியது... அவரணிந்திருந்த கிழிந்த 'கஃப்னி' என்ற ஆடை, கிழிந்த கோணிப்பைகள் இரண்டு, ஒரு சட்கா, ஒரு தகரக் குவளை தனக்கு முன்னர் எரிந்து கொண்டிருக்கும் அணையாத தூனி... மட்டும்தான்.

அவருக்காக, 'நாக்புரைச்' சேர்ந்த 'பூட்டி' என்ற தனவந்தர்... அன்றைய காலத்திலேயே... 'ஒரு லட்ச ரூபாயைச்' செலவழித்து... ஒரு பளிங்கு மாளிகையை எழுப்பியிருந்தார். பாபாவின் 'மஹா ஸமாதியின்' போது, அவரின் திருவடி படாமலேயே... அந்த மாளிகை வீணாகிவிடும் என்ற மிகப் பெரிய கவலையில் மூழ்கியிருந்தார்.

தனது அத்யந்த பக்தரின் மனதில் இருந்த ஏக்கத்தை அறிந்து... பாபா உதிர்த்த இறுதி வார்த்தைகள்...'என்னை வாதாவில் வையுங்கள்...!' என்பதாக அமைந்தது. தனது உடலை உகுத்தபின்தான்... இந்த 'அற்புத சித்தர்' அந்த 'ஸமாதி மந்திர்' என்ற ஆசிரமத்துக்குள் அடியெடுத்து வைத்தார்.

இதுதான்... இந்த மஹானுக்கும்... ஆசிரமத்துக்கும் இடையேயான தொடர்பு.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...